Wednesday, December 31, 2014

’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்


ஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி.

தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே  அன்றாடம் சந்திப்போமென்பதால், கடந்த தினங்களை ரீவைண்ட் பண்ணிப்பார்க்கும் கெட்ட பழக்கம் எப்போதும் என்னிடம் இருந்ததில்லை.

புத்தாண்டு சபதங்களை ஒரு வாரத்துக்குக்கூட கடைப்பிடிக்க முடிவதில்லை ஆகையால் அப்படிப்பட்ட சங்கட்டமான சபதச் சனியன்களையும் எடுப்பதில்லை.


டந்த சில வாரங்களாக, மூவி ஃபண்டிங் குறித்து நிறைய எழுதி போரடிக்கிறேன்... என்று நினைப்பவர்கள்,  உடனே இந்தப்பதிவை விட்டுப் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடலாம்.

எனக்கு இது முக்கியமான பதிவு. ’இது நடக்க சாத்தியமேயில்லை’ என்று பலர் என் காது படவே பேசியபோது, ‘நல்ல நண்பர்கள் இருக்கும் போது எதுவுமே சாத்தியம்’ என்று முத்துவுக்கு கெத்து சேர்த்தவர்கள் நீங்கள்.

முதலில் ஜெய்லானி சார். அவர் இல்லாமல் இப்படி ஒரு திட்டம் குறித்து  எனக்கு கனவு காணக்கூட தெரிந்திருக்காது.

அடுத்து என் தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம், பிரபாகர்,பிரபாகர்,பிரபாகர், சூர்யா வடிவேல், மோகன்குமார், சுதர்சன் லிங்கம்,ஆல்ஃபி, குமாரராஜா,பொற்கோ, குழலி புருசோத்தமன், ஷாநவாஸ் ஐயா, இயக்குநர் மீரா கதிரவன், அடுத்து என் பெயர் சொல்லவேண்டாம் என்று உதவிய, உதவக்காத்திருக்கிற இருவர்.... இவர்களுக்கெல்லாம் வெறுமனே நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு நான் கடந்துபோய் விட முடியாது.

அப்புறம் என்னத்தைத்தான் சொல்லிட்டு கடந்துபோகப்போற? என்று ’கேட்டு’ போடாதீர்கள்.

நேற்று பிரசாத் லேப்பில் மூவி ஃபண்டிங் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். விழாவில் பேச யாரை அழைக்கலாம் என்பது குறித்து எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.

தற்செயலாக விஜய் டிவியின்  ’நீயா நானா’ நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குநர் கரு.பழனியப்பனுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.  நிகழ்ச்சி முடிந்து, அவரது காருக்குப் பின்னாலேயே போய் அவரது ஆபிசில் சாப்பிட்டுவிட்டு, ஒரு சின்ன தயக்கத்துடன் அழைப்பையும் விடுத்தேன்.

தயக்கத்துக்கு இருந்த காரணத்தையும் சொல்லிவிடவேண்டும்.

பழனி என் கல்லூரி ஜூனியர், நெருங்கிய நண்பர், உதவி இயக்குநராக நாங்கள் ஒன்றாக பணியாற்றிய காலங்களில் மதிய உணவுக்கு பலமுறை பாண்டிபஜார் பாலாஜி பவனில் டோக்கன் வாங்கி எங்கள் வயிற்றை நிரப்பியவர், என்னைப்பற்றி அநியாயத்துக்கு நல்ல அபிப்ராயங்கள் வைத்திருப்பவர், இப்படி எங்களுக்குள் நூறு பந்தங்கள் இருக்கிறது எனினும் ‘சிநேகாவின் காதலர்கள்’ இயக்க ஆரம்பித்த பிறகு அவரை சந்திக்க நேரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் விதவிதமாக ஒளிந்துகொண்டேன்.

இப்படி ஓடி ஒளிந்த விளையாட்டுக்கு, அவர் நியாயமாக, நிகழ்ச்சிக்கு வருவதை சாக்குபோக்கு சொல்லி தவிர்த்திருக்கவேண்டும்.

‘நினைவூட்டல்லாம் வேண்டியதில்ல பாஸ். 6.30க்கு பிரசாத்ல இருக்கனும் அவ்வளவுதான...நான் வந்துர்றேன்’.


எனக்கு மேடைப்பேச்சு என்றாலே லெஃப்ட், ரைட், செண்டர், பேஸ்மெண்ட் இப்படி சகலமும் ஆட்டம் காண ஆரம்பித்துவிடும்.

பழனியப்பன் நேரெதிர். கல்லூரி காலத்திலிருந்தே பேச்சுப்புலி. [அது என்ன புலி?’ மனுசனை உங்களுக்கு மனுசனாவே பாக்கத்தெரியாதா?என்பார் ]. ஆனாலும் கிரவுட் ஃபண்டிங் குறித்து என்னத்தைப்பேசிவிட முடியும்? என்றுதான் நான் நினைத்தேன்.

’அரைவட்டி,முக்கால் வட்டி புழங்கிய நாட்களில்,20 ஆயிரம் புரட்டி, புத்தகம் வெளியிடுவதற்காக  இரண்டு வட்டி தருகிறேன்’ என்று நண்பர்களிடம் நூறு ரூபாய்க்கு கையேந்தி கடிதம் எழுதிய மகாகவியை முதல் கிரவுட் ஃபண்ட் அழைப்பாளர் என்று நினைவூட்டி, கலங்கடித்தார்.

‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
 நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்’

என்று, கிரவுட் ஃபண்டிங் குறித்த குழப்பங்களுக்கு, அதே பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, ‘எதுவும் செய்ய விருப்பம் இல்லாட்டி சும்மா இருந்தாலே போதும்’ என்று ஆச்சரியமுடிச்சு போட்டார்.

அவரது பேச்சில், நானே மறந்து போன, எனது பழைய கதைகள் பலவந்துபோயின. ’ரொம்ப வருஷமாவே முத்துராமலிங்கம் ஒரு கோபக்கார பயபுள்ள’ என்றார். சில நிமிடங்கள் இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் போய், திரும்பவும் பிரசாத் லேப் இருக்கைக்கு திரும்புவதுமாக இருந்தேன்.

இளையராஜாவின் வெறிகொண்ட ரசிகர்களாய் நானும் நண்பன் தீஸ்மாஸ் டிசில்வாவும் நாளும் அலுக்காமல் பேசித்திரிந்த காலத்தை ரசிப்பதற்காகவே தானும் பலநாட்கள் தீஸ்மாஸின்  அச்சகத்துக்கு அடிக்கடி ஆஜரானதை நினைவு கூர்ந்தார்.

மொத்தத்தில் நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கினார்.  இதற்காகவே நேற்று இரவு நிகழ்வு முடிந்து பழனியப்பன் கிளம்பிப்போன நிமிடத்திலிருந்தே அவருக்கு நன்றி சொல்ல ஒரு போன் அடிக்கலாமா என்று யோசித்து, ஏனோ இந்த நிமிடம் வரை அதைச்செய்யவில்லை.

Wednesday, December 24, 2014

' மூவி ஃபண்டிங்கின் கிளைமாக்ஸ் வாரம்’

'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்... ஐயனே என் ஐயனே...’ தலைவரின்  பாடல் சதா மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க ...’மூவி ஃபண்டிங்’ தொடர்பான மூவிங்கில் மட்டுமே அலைந்த  இந்த இரண்டு மாதங்களும்,  ஒரு படப்பிடிப்பின் போது மனதில் நிலவும் லேசான படபடப்புடனேயே கழிந்தது.

பிரசாத் லேப்பில்கடந்த அக்டோபர் 16 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டு  துவங்கிய இந்தப்பயணம், ‘மூவி ஃபண்டிங்’ நடந்தது என்ன?’ என்ற அறிவிப்புடன், அதே பிரசாத் லேப்பில் வரும் டிசம்பர் 30 தேதி நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்புடன் நிறைவு அடைகிறது.


ஒரு நூலிழை தவறினாலும் தப்பான ஒரு தோற்றம் தந்துவிடக்கூடிய இத்திட்டத்தை, எங்கள் இருவர் மீது கொண்டிருந்த அன்பினாலும் நம்பிக்கையாலும் மக்களிடம் சரியாய்க் கொண்டுபோய்ச் சேர்த்த நண்பர்களுக்கு நன்றி கூறவும், இத்திட்டத்தில் இணைந்து எங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சக தயாரிப்பு சகோதரர்களை மேடையேற்றவும் திட்டம்.

ஏற்கனவே தெரிந்த நண்பர்களின் உதவியுடன் புதிய நண்பர்கள் சிலர் கரம் கோர்த்தது, ஆச்சரியத்தையும் பெரும் மன பலத்தையும் அளித்திருக்கிறது.

 தற்போது ஷூட்டிங் கிளம்ப நேரமாச்சி.  சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. நாளை எனது அண்ணன் ஒருவர் அளிக்கும் நான்கு லட்சம் ரூபாயுடன் சேர்த்து, மொத்த வரவு அறுபது லட்சமாக ஆகி, எனது’ரூபச்சித்திர மாமரக்கிளியே’  படத்துக்கான தேவை 85 சதவிகிதம் நிறைவுபெறுகிறது.

இன்னும் தேவை சரியாக பத்து லட்சம். இதை நான் ஏற்கனவே சொன்னபடி சிறு முதலீடுகளாக, அதாவது தலைக்கு பத்தாயிரம் வீதம் நூறு பேரிடம் பெற்று அவர்களையும் இணைத் தயாரிப்பாளர்களாக்கிக் கொள்ளத்திட்டம். 



இந்தத்தொகையை, சிரமமில்லாமல், உதவக்கூடிய நண்பர்களது பட்டியலை நான் எழுதத்துவங்கியபோது சுமார் 70 பேர் வரை மட்டுமே தேறியிருக்கிறது என்பதால், புதிதாய் இந்தத்திட்டத்தில் இணையும் நண்பர்கள் சிலரையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ‘ஓஹோபுரடக்‌ஷன்ஸை’ ரெகுலராக வாசிக்கும் நேசிக்கும் நண்பர்களிடமிருந்து.

இந்தப்பணத்தை  திரும்ப கொடுப்பது பெரும்பொறுப்பு என்பது மட்டுமின்றி, நீங்கள் இந்த சமயத்தில் செய்த உதவியை எப்படியெல்லாம் கவுரப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் கவுரப்படுத்த, என் உழைப்பை செலுத்துவேன்.

நீங்கள்  உதவ அவகாசம் கொடுக்கும் வகையில் மூவி ஃபண்டிங்கில் எனது படத்துக்கான கெடு தேதியை மேலும் 5 நாட்கள் அதிகரித்திருக்கிறோம்.

கேள்விகள், சந்தேகங்களுக்கு, உதவுவதற்கு எனது அலைபேசி எண் 98409 14026,  மெயில் ஐடி [muthuramalingam30@gmail.com] மற்றும் கமெண்ட் பெட்டி வழியாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த ஐந்து நாட்களும் உங்களுக்காகவே காத்திருக்கிறேன்.


Monday, December 22, 2014

’இப்ப திடீர்னு என்னத்துக்கு இவ்வளவு ஃபீலிங்ஸ்?’

வடிவேல் சூர்யா Surya Vadivel சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர். கொஞ்சம் நடிப்பு ஆர்வம். நான் ‘சிநேகாவின் காதலர்கள்’ படம் இயக்குவது அறிந்து அவ்வப்போது வாய்ப்புக்கேட்டு மிக நாசூக்காக தொடர்புகொண்டேயிருந்தார். ’வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன்’ என்பது தாண்டி நான் அவருக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை.

இந்நிலையில் படம் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து பெண்டிங் விழுந்துகொண்டிருந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளை வடிவேல் சூர்யா அவர்களின் சொந்த ஊரான ஈரோடு அரச்சலூரிலேயே எடுத்துவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் அவரை ‘அவசரத்துக்காக தொடர்புகொண்டு, அவர் தந்த வார்த்தைகளை நம்பி, ஈரோடு கிளம்பி 11,12,13 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டேன்.


அவரும், அவரது நண்பர்களும் மற்றும் கிராம மக்களும் காட்டிய பாசத்தையும், ஒத்த்ழைப்பையும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.


உங்களுக்கு வெறுமனே தேங்க்ஸ் மட்டும் சொல்லி தப்பிச்சிடமுடியாது சூர்யா சார்.


வயலட் கலர் சட்டையில் வடிவேல் சூர்யா சார்.




[ஃபேஸ்புக்கில் கடந்த ஆண்டில் நான் எழுதியிருந்த பதிவு இது]

ன் நண்பர்கள் எண்ணிக்கை குறித்து எப்போதுமே எனக்கு எப்போதுமே அளவு கடந்த கர்வம் உண்டு.

நான் பிறந்த நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கி, பத்தாம் வகுப்பு வரை படித்த சத்திரரெட்டியபட்டி, ப்ளஸ்டூ படித்த விருதுநகர் கே.வி.எஸ், ஆங்கில இலக்கியம் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரி, ‘போல்டு இந்தியா’ நாளிதழில் வேலைபார்த்த மும்பை, அடுத்து சென்னையில் நான் தொடர்ந்து குப்பை கொட்டிய’ நக்கீரன்’ சத்திரியன்’ ’நெற்றிக்கண்’ ‘சினிமாடுடே’ ஸ்டார்’ ‘குமுதம்’ நான் வேலை பார்த்த சினிமா நிறுவனங்களில் சந்தித்தவர்கள் என்று எங்கும் என் நண்பர்கள் எண்ணிக்கை, ஆகப்பெரிய அண்டாவில் போட்டாலும் நிரம்பி வழியக்கூடியது.

இவர்களில் பலபேருக்கு நான் சவலைப்பிள்ளை போல. மரத்துக்கு மரம் தாவும் குட்டிக்குரங்கு போல, ஒரு இடத்தில் ஒரு உருப்படியான வேலையில் நீடித்ததில்லை என்பதால், என் நலம் குறித்து, எப்போதும்  அக்கரையுடன் விசாரித்தபடியே இருப்பார்கள்.

சற்றே சோர்ந்திருக்கும் வேலைகளில் ‘டேய் முத்து நல்லாருக்கியாடா?’ என்று விசாரிப்பு வந்தாலே போதும் நான் யானை பலம் பெற்று எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கடந்த ஒரு ஆண்டு பழக்கத்திலேயே அப்படிப்பட்ட என் நண்பர்களில் ஒருவராகிப்போனவர்தான் இந்த வடிவேல் சூர்யா.


’சிநேகாவின் காதலர்களில்’ நடித்த நூறுபேர்களில் ஒருவரல்ல சூர்யா.

படம் ரிலீஸாகி, மற்ற ஊர்களைப் போலவே ஈரோட்டிலும் தியேட்டர் கிடைக்காமல் போனபோது, அவர் துடித்த துடிப்பை சென்னையிலிருந்தபடியே நான் அனுபவித்தேன்.

ஒரு பொறுப்பான குடும்பத்தலைவர், ஆசிரியர், ஓவிய ஆசிரியர், ‘தினமலர்’ நிருபர், விளம்பர ஏஜெண்ட், சுயதொழில் முனைவர், சமூக சேவகர் என்று ஏகப்பட்ட முகங்களுண்டு சூர்யாவுக்கு.

 காலை எழுந்தவுடன், கைவசம் இருக்கும் வேலைகளை நினைத்து, ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்று இருப்பதை 48 மணி நேரமாக ஆக்கக்கூடாதா?’ என்று தவித்துக் கொண்டிருப்பவர். [ இந்த டிபார்ட்மெண்டுக்கு இன்சார்ஜ் யாருன்னு தெரிஞ்சா அப்பிடியே பண்ணிரலாம் ஐயா. நாங்களும் எட்டு மணி நேரத்துக்குப் பதிலா 16 மணிநேரம் தூங்கினா மாதிரி இருக்கும்]

மூவிஃபண்டிங் குறித்து நானும் ஜெய்லானிசாரும் பேசிமுடித்தவுடன், நான் முதன்முதலாக ‘இது சாத்தியமாகுமா?’ என்று இவரிடம் முதல் ஆளாக, விசாரித்தபோது, ‘ஐயா என் பங்களிப்பு எவ்வளவு வேண்டும்’ என்று பதில்கேள்வி கேட்டவர்.  அவ்வாறே ஒரு நல்ல பங்களிப்பையும் செய்திருக்கிறார்.
’இப்ப திடீர்னு சூர்யாவப்பத்தி இவ்வளவு ஃபீலிங்ஸ்?’
இன்று இந்த இனிய மனிதருக்குப் பிறந்தநாள்.
எல்லா வளங்களும் பெற்று, எனது அடுத்த படத்துக்கு தனித்தயாரிப்பாளராகும் அளவுக்கு செல்வங்களும் செழிக்க வாழ்த்துகிறேன் சூர்யா ஐயா. அவ்வ்வ்வ்வ்வ்.......

’அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா மேட்டருக்கு கனகச்சிதமா வந்து சேந்துர்றான்யா’

Saturday, December 20, 2014

’ஸோலோ வில்லன் கேரக்டர் இருந்தா சொல்லி அனுப்புங்க சார்’


சிங்கப்பூர் பயணத்துக்கு பத்து தினங்கள் முந்தி, வழக்கம்போல் முகநூல் சாட்டிங் மூலம் நண்பரானவர் தான் குமாரராஜா.

‘சார் நான் ‘ஓஹோ’வுக்கு ரெகுலர் வாசகர். நீங்க இப்ப சிங்கப்பூர் வர்ற பயணத்துக்கான விசா, டிக்கெட் செலவுகள் தொடங்கி, மூவி ஃபண்டிங்குக்கும் என்னால முடிஞ்ச உதவிகள் செய்றேன். ஆனா என் பெயர் வெளியில தெரிய வேண்டாம்.’

’எதாவது இன்கம் டாக்ஸ் பிரச்சினை வரும்னு பயப்படுறீங்களா?’

‘அய்யய்யோ அதெல்லாம் இல்ல சார். நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல சார்’

’அப்புறம் ?’

‘அது வந்து... நான் எதாவது சொல்லிட்டு பண்ணுனா அது பலிக்க மாட்டேங்குது சார்’

’பாத்தா ரொம்ப நல்ல மனுசனாட்டம் தெரியிறீங்க. உங்களுக்குள்ள இப்பிடி ஒரு மூடநம்பிக்கையா?’

பாதி சவுண்டும், மீதி மைண்ட்வாய்ஸுமாக குமாரராஜாவை மெல்ல பற்றிக்கொண்டேன்.


சிங்கப்பூரில் அவரை சந்தித்த கதை தனிக்கதை. அதை அப்புறம் பார்ப்போம்.

கடந்த பதிவில் ஒரு கெடா வெட்டுக்கு உற்சாகமாய்க் கிளம்பிப்போனேனே அது இவர் வீட்டு விஷேசம்தான்.

‘என் உறவினர்கள் சுமார் 50 பேர்வரை வருகிறார்கள். நண்பர் என்று பார்த்தால் நீங்கள் ஒருவர் மட்டும்தான். தங்குறதுக்கு பெரிய வசதியெல்லாம் இருக்காது. கோவில் பக்கத்துலயே ஒரு கொட்டாய் போடச்சொல்லியிருக்கேன். நீங்க வேணும்னா, நாம போற கார்ல படுத்து தூங்கிக்கலாம்’.

‘பாஸ் நாங்கள்லாம் ஹாஸ்டல்ல  சுவரேறி குதிச்சி, செகண்ட் ஷோ பாத்துட்டு, ‘தினத்தந்தி’ பேப்பர்ல மதுரை பஸ் ஸ்டாண்டுல பல நாட்கள்  தூங்கி பழக்கப்பட்டவங்கதான். அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. கெடாவெட்டி சோறுபோடுற வேலையை மட்டும் பாருங்க’.

யில் பயணம் என்றால் மனது றெக்கை கட்டிப்பறக்க ஆரம்பித்துவிடும் என்பதால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸின் 17 மணிநேரப்பயணம் கொஞ்சமும் அலுக்கவில்லை.

அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்திலிருந்து உற்றார் உறவினர் சூழ குமாரராஜா என்னை திருச்செந்தூரில் பிக்-அப் பண்ணும் வரை , நான் ஒரு பரவசமான பயணதுக்குப்போகிறேன் என்பது எனக்கு தெரியாது.

திருச்செந்தூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலிருக்கும் காயாமொழி கிராமத்துக்கு எங்கள் வாகனங்கள் பறந்தன.  அதுவரை குமாரராஜா வீட்டு விஷேசம்  மட்டுமே என்று நினைத்திருந்த எனக்கு, வருடா வருடம் நடக்கும் ஒரு பெரிய திருவிழாவுக்கு ஆஜராகியிருக்கிறோம் என்பது தெரியாது.

விழாவின் பெயர் கற்குவேல் அய்யனார்  கள்ளர்வெட்டுத்திருவிழா.

முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளைக் கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கமாம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தாராம்.

வருடா வருடம் கார்த்திகை மாதம் ஆறுநாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் ஐந்துநாட்கள் சைவ விஷேசங்களும் கடைசி நாள் கிடாவெட்டுமாக லட்சக்கணக்கில் ஜனங்கள் திரளுவார்களாம்.

நாங்கள் இறங்கியிருந்தது கிடாவெட்டுக்கு முந்தினநாள். ஜனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும். 
நம்ம குமாரராஜா போட்டிருந்த கொட்டாய் போல் பல நூறு தற்காலிக கொட்டாய்கள் அந்த திருவிழாவுக்காகவே ஆங்காங்கே முளைத்திருந்தன. 

கோயிலையும், அங்கிருந்த ஒன்றிரண்டு கட்டிடங்களையும் தவிர்த்துப் பார்த்தால் அது ஒரு பெரும் செம்மண் பொட்டல்காடு. பக்தர்கள் குளிக்க ஒன்றிரண்டு இடங்களில் தொட்டிகள் இருந்தன.
பெரும் மழை பெய்தால் ஒரு சில நூறுபேர் மட்டுமே ஒதுங்குவதற்கு வசதியுள்ள அங்கே லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தது பெரும் வியப்பானதாயிருந்தது.

திருச்செந்தூரில் வண்டி கிளம்பியதிலிருந்தே  ‘‘கள்ளர்வெட்டை’ மிஸ் பண்ணிடக்கூடாது சார்’ என்று குமாரராஜா கூறிக்கொண்டே இருந்ததால் எனக்கும் அதன் மேல் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியிருந்தது. [கூட்டத்தை ஸ்டில் எடுக்கத்தவறி விட்டேன். வீடியோ மட்டும் இருக்கிறது. யாராவது விரும்பிக்கேட்டால் இணைக்கிறேன்]

கோவிலுக்குப் பின்புறம் ஏறத்தாழ ரத்தச்சிவப்பில் மண்மேடு. நாங்கள் போவதற்கு முன்பே அந்த இடம் லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனங்களின் பாதம் பட்டு மேலும் சிவந்திருந்தது.


படத்தில் காணப்படும் கெட்டப்பில் இருந்த பெருசுகள்’கள்ளர் வெட்டு’ நடைபெற இருந்த இடத்திற்கு உள்ளே வரவர ஆரவாரங்களும், குலவைச்சத்தங்களும் விண்ணைக்கிழித்தன.

இந்த ஆண்டு கள்ளர்வெட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியவர் உள்ளே வந்து, தான் நின்ற இடத்திலிருந்து மூன்று சுற்று சுற்றி விட்டு ஒரு இளநீரை வெட்டிவிட்டு ஓட, மிகவும் சக்தி வாய்ந்தது என்று கருதப்படும் அந்த இளநீரின் ஒரு துணுக்கையாவது கைப்பற்றிவிட, கூட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பாய, அங்கிருந்த பெருசுகளும் போலீஸாரும் தலைதெறிக்க தப்பி ஓடியது கண்கொள்ளாக்காட்சி. இளநீரின் பாகங்கள் கிடக்காதவர்கள் அங்கிருக்கும் செம்மண்ணையே பிரசாதமாக பயபக்தியுடன் எடுத்து முடிந்துகொள்கிறார்கள்.

ஒருவழியாக கள்ளர்வெட்டு பரபரப்பிலிருந்து கடாவெட்டு மூடுக்கு மாறி கூடு திரும்பினோம்.



மறுநாள். மிட்நைட் 5 மணிக்கே எழுப்பப்பட்டு,  பலநாள் தரிசிக்க மறந்த அதிகாலை தரிசனத்துடன், திறந்தவெளி நடைப்பயணம், திறந்தவெளி குளியல்களுடன் மூன்று கைதேர்ந்த சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ஆகச்சிறந்த மட்டன் சாப்பாடுடன் என் பொழுது இனிதே  கழிந்தது. [ விலா எழும்பு கடித்ததையெல்லாம் விலாவாரியாக எழுதி, யாருடைய வயித்தெரிச்சலையும் கிளப்பவேண்டாமே என்றுதான் இதை சுருக்கமாக முடிக்கிறேன்.

இங்கிருந்த இரண்டு தினங்களுமே செல்ஃபோன் டவர் சுத்தமாக வேலை செய்யாமலிருந்தது சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்த விசயம். 
 
 அன்று மாலையே, குமாரராஜா மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் நோக்கி கார் மற்றும் வேன்களில் விரைய, அதே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் பிடித்து
மீண்டும் சென்னை பயணித்தேன்.

பொதுவாக தயாரிப்பாளரை படம் முடியும் தறுவாயில்தான் மொட்டை போடுவார்கள். ஆனால் நாம், எப்போதும் போல் விஷேசமாக படம் துவங்குமுன்பே போட்டுவிட்டிருக்கிறோம்.

நண்பர் குமாரராஜா என் படத்துக்காக மூவிஃபண்டிங்குக்கு அளித்த தொகை விபரம் நமது இணையத்தில் இடம்பெற்றுள்ளது.

‘சரி என் படத்துக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. எதாவது ஒரு வில்லன் கேரக்டர்ல நடிக்கிறீங்களா ராஜா?’என்றேன் கிளம்புகையில்.
’படத்துல நாலைஞ்சி வில்லன்கள் இருக்காங்கங்குறீங்க. ஸோலோ வில்லன் கதை பண்றப்ப சொல்லி அனுப்புங்க சார்’ 



Sunday, December 14, 2014

‘சார் மொட்டை போட்டாச்சி. காது குத்தியாச்சி.. கிடா எப்ப சார் வெட்டுவீங்க...?

தமிழகம் வந்திருக்கும் சிங்கப்பூர் நண்பர் ஒருவரிடமிருந்து நேற்று ஒரு அழைப்பு.

’‘சார் ஊர்ல, கோயில்ல ஒரு விஷேசம் வச்சிருக்கோம். வந்தா சந்தோசம்’’

‘’கெடா வெட்டு இருக்குங்களா?’’

‘ஆமா சார்.அது இல்லாம நாங்க  எந்த விஷேசமும் வைக்கிற வழக்கமில்ல’’

‘ஏங்க நான் ஏற்கனவே கிளம்பி பாதி தூரத்துல வந்துக்கிட்டிருக்கேன். அப்புறம் வந்தா சந்தோசம்  வரலைன்னா தோஷம்னுக்கிட்டு’’

நீண்ட நாட்களுக்கு அப்புறம் உற்சாகமான கிடாவெட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு நாளை, திருச்செந்தூர் நோக்கி பயணம்.  வந்ததும் துள்ளலான ஒன்றிரண்டு பதிவுகள்  உறுதி.

’நெனப்புதான் பொழப்பைக்கெடுக்குமாம்னு சும்மாவா சொல்லிவச்சாங்க’


சிங்கப்பூர், மலேசியப்பயணம் குறித்து சென்னை வந்து சேர்ந்தவுடன் பதிவிடமுடியவில்லை.  எழுத நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டது பற்றி   இப்போதும் கூட எழுதப்போவதில்லை.  

சிங்கையில் இருந்த 4 நாட்களும், மலேசியாவில் இருந்த 3 நாட்களும், ஒருநாள் இரவு கேசினோ போனது தவிர்த்து,  நண்பர்களை சந்தித்து உரையாடியதிலேயே  பெரும்பொழுது கழிந்தது.

முகநூல் மூலம் நாங்கள் விடுத்திருந்த சந்திப்புக்கு  வெகுசில நண்பர்களே வந்திருந்தனர். அது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.  ஆர்டர் செய்த சில உணவுப்பொருட்கள் வீணாகப்போக இருப்பதை ஜெய்லானியின் நண்பர்கள் இருவர் கவலையோடு பார்த்தனர்.
’என் படத்துல நீங்க ஹீரோ உங்க படத்துல நான் வில்லன் டீல் ஓகேவா?”  

‘உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்முத்துராமலிங்கம்’ என்றபடி என்னைத்தனியே அழைத்துப்போனார்கள் இருவரும்.

ஆச்சரியங்கள் என்றும் இழுபறியாக நடப்பன அல்ல. அவை சட்டென நிகழ்ந்து விடும்.

‘ஜெய்லானி புராஜக்டுக்கு இன்னும் எவ்வளவு தேவைப்படுதோ.அவ்வளையும் நாங்களே முதலீடு செய்றோம்’ என்றனர்.

எனக்கு அவர்கள் அதைச்சொன்ன விதத்தில், அவர்கள் மேல் நூறுசதவிகிதம் நம்பிக்கை இருந்தது. நான் அதை சற்றுநேரத்தில் ஜெய்லானியிடம் சொன்னபோது, கொஞ்சம் நம்பத்தயங்கி பின்னர் ரொம்பவே நெகிழ்ந்தார்.

இந்த நிகழ்வுகளின் பின்னணி நாயகன் ஜெய்லானியின் மனதுக்கு நெருக்கமான நண்பர் குழலி புருஷோத்தமன்.   பயணம் முழுக்க அத்தனை அக்கரையுடன் எங்களை அரவணைத்துக்கொண்டார்.

குழலி த கிரேட்  

அவருடன் முகநூல் மூலமாக சாட் செய்தது தவிர்த்து, ஒரே ஒருமுறை, அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே, சென்னையில் சந்தித்திருக்கிறேன்.

சரியான நடைமன்னன். நல்ல மீட்டிங் ஹால் புக் பண்ணுவதற்காக மனிதர் நடந்தார் பாருங்கள்...யப்பப்பா கூடவே அழுதுகொண்டே நடந்தேன்.

பலரையும் போல் எனது  ‘சிநேகாவின் காதலர்கள்’  படத்தை அவரும் பார்த்திருக்கவில்லை.  பார்த்திருந்தால் ஒருவேளை இவ்வளவு பாசம் காட்டியிருக்கமாட்டாரோ என்னவோ?

அடுத்த முக்கியமான சந்திப்பு எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களுடனானது.  முகநூல் நட்பு ஒருவர்தான், ‘ ஷாநவாஸ் அவர்களையும் சந்தித்து விட்டு வாருங்கள். எதாவது ஒரு சரியான சந்தர்ப்பத்தில்  உங்களுக்கு உதவுவார்’ என்று எனக்குச்சொல்லியிருந்தார்.
உணவுக்கலைஞர் ஷாநவாஸ்

என்னையும், ஜெய்லானியையும் அவ்வளவு நட்புடன் ஏந்திக்கொண்டார்.  தொழில்முறையாக ரெஸ்டாரெண்ட் நடத்திக்கொண்டிருந்தாலும், அவர் இதயத்துடிப்பு இலக்கியமாகவே இருக்கிறது.

இன்னொரு முக்கியத்தம்பி, எனக்கு ஃப்ளைட் டிக்கட் போட்டவரே அவர்தான். ‘உங்க அடுத்த படத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் சார். ஆனா அதைப்பத்தி எழுதாதீங்க’ என்று லிங்கா அணை கட்டியிருக்கிறார்.
அந்த அணையை விரைவில் உடைப்போம்.

இப்போதைய நிலவரப்படி, மூவிஃபண்டிங் தேதிகள் முடிவடைய இன்னும் பதினோரு நாட்களே உள்ள நிலையில், எனக்கு உதவ சம்மதித்திருக்கும் மேலும் ஐந்து பேரையும் அவர்கள் தொகையையும் அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு அறிவித்து விட்டு, மொத்த  பட்ஜெட் தொகையை எப்படியும் எட்டிவிடுவதற்கு இரண்டு வழிகளை யோசித்திருக்கிறேன்.

ஒன்று ஃபேஸ்புக், ட்விட்டர்,வாட்ஸ்-அப் போன்ற சமாச்சாரங்களின் வாசனையே தெரியாமல் நடமாடுகிற சில உறவினர் நண்பர்களை சந்திப்பது.

இரண்டாவது, எனக்கு தகவல் கூட சொல்லாமல் அமெரிக்காவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் போட்டாரே, எனது கல்லூரி சீனியர் ஆல்ஃபி, அவரைப்போல் நூறு பேரைப்பிடிப்பது.

சிரமம் ஏதுமின்றி, என் படத்துக்கு 10,000 ரூபாய் உதவி, என் இரண்டாவது படத்தை கரைசேர்க்கக்கூடிய நண்பர்கள் நூறுபேர்  எனக்கு கண்டிப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அனைவர் பெயரும் இணைத்தயாரிப்பாளர்கள் என்று டைட்டிலில் இடம்பெறும்.

நேற்று புதிதாக வாங்கிய, 2015-ம் ஆண்டு டைரியில், அவர்கள் பெயரைப்பட்டியலாக சேகரிக்க ஆரம்பித்தும் விட்டேன்....

நான் உங்களுக்குப் பண்ணுகிற அடுத்த போன் ‘அந்த பத்தாயிரம்’ குறித்தே இருக்கும்.

பதட்டப்பட்டு  இன்னைக்கே போனை ’ஸ்விட்ச் ஆஃப்’ பண்ணாதீங்க. கிடா வெட்டுக்குப் போயிட்டு வந்துதான் போன் பண்றதா உத்தேசம்.

‘சார் மொட்டை போட்டாச்சி. காது குத்தியாச்சி.. கிடா எப்ப சார் வெட்டுவீங்க...?








Thursday, December 11, 2014

விகடன்.காமில் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’

பயணக்கட்டுரை எழுதி பயமுறுத்தமாட்டேன் என்று ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக இல்லை. ஆனால் போனகாரியம் என்ன ஆனது என்று எழுதியாகவேண்டுமே?

நாளை அதை பதிவிடுகிறேன்.

இது சற்றுமுன் விகடன்.காமில் வந்த நமது பேட்டி. 

கூடவே வேடியப்பனின் பேட்டியும் வந்திருந்தது.  அவரது அனுமதியின்றி அதைப்பிரசுரித்தால் காப்பிரைட்ஸ் சிக்கல் எதுவும் வந்து வேடியப்பன் நமக்கு வெடியப்பனாக மாறிவிடாமல் இருக்க, அதை கட் பண்ணி அவருக்கு மட்டும் தனியாக  மெயிலில் அனுப்பிவிட்டேன்,