Showing posts with label என் கதை. Show all posts
Showing posts with label என் கதை. Show all posts

Thursday, January 19, 2012

நக்கீரனில் ஆபிஸ் பாய்- என் கதை- 7




எந்த வேஷத்துக்கும்
பொறுத்தமற்றது  என் முகம்
சுற்றிச்சூழ
நடக்கிறது நாடகம்
 -வித்யாஷங்கர்.




நேற்று ஒரு நண்பர் போனில் ‘அட போங்கங்க நீங்க,நம்ம டைமிங்குக்கே ஒத்துவர மாட்டேங்குறீங்க. என்னத்தையாவது எழுதீட்டு பாதியில விட்டுட்டுப்போயிடுறீங்க’ என்று ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் தராசு, படிக்கல் திருடும் வடிவேலு மாதிரியே கோபித்துக்கொண்டார்.

என் கதையில், கடைசியாக நம்பிராஜனின் மோதிரங்கள் கவிதை
படித்துவிட்டு மோதிரங்களை கோபால்  கழட்டி எறிந்திருப்பார், அதில்  நான், துரை மற்றும் நம்பிராஜன் ஆகியோர் ஆளுக்கு ஒன்றாக பொறுக்கி எடுத்திருப்போம் என்று நினைத்திருப்பீர்களேயானால் அது ரொம்ப தப்பு.

அந்த கவிதை ஒரு எறும்புக்கடி அதிர்ச்சியைக் கூட கோபாலுக்கு ஏற்படுத்தவில்லை. இதோ இன்னும் ரெண்டு மோதிரம் வாங்கி மாட்டப்போகிறேன் என்கிற மாதிரி வெளியே கிளம்பி போய்விட்டார்.
பெரிய சேதாரமில்லாமல் தப்பியதில் துரைக்கும் எனக்கும் சந்தோஷம்.

நம்பிராஜ் எனப்பட்ட அண்ணாச்சி ஆகிய விக்ரமாதித்யன் ஆரம்ப கால நக்கீரனில் சில மாதங்களே வேலை பார்த்தாலும் அவர் எங்களுக்கு கொடுத்த அதிர்ச்சிகள் ஏராளம்.
'தேவாங்கு வாழும் முடி கயிறுக்காக' அண்ணாச்சி எழுதிய கவிதை போலவே அண்ணாச்சியைப்பற்றி எழுதுவதென்றால்,  அண்ணாச்சி வாழ்வது சரக்கடிப்பதற்காக’ என்றால் மிகையில்லை.

தம்பி, நான் கவிஞன். நான் சொன்னா அது நடக்கும். சாய்ங்காலம் பெரிய புயல் மழை வந்து ’கடை’யெல்லாம் அடைச்சிருவாங்க போல தெரியுது. இப்பவே வாங்கி வச்சிக்கிட்டம்னா நல்லது. சரக்கை ஸ்டாக் பண்ணி வைத்துக்கொள்வதற்கு சகல வித்தைகளையும் கையிலெடுப்பார் அண்ணாச்சி
.
இவர் நக்கீரனில் இருவேறு உலகம்’ என்ற பெயரில் வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன் போன்றவர்களிடம் பேட்டி எடுத்து எழுதி வந்தார்.

இந்தப்பய வேற எதோ ஒரு நக்கீரனைப்பத்தி எழுதி நம்மள கன்ஃபியூஸ் பண்ணப்பாக்குறான் போல இருக்கு’ என்று  நீங்கள் கண்டிப்பாக நினைக்கக்கூடும். அடுத்து எழுதும்போது இதழை ஸ்கேன் பண்ணிப்போட்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துவைக்கிறேன்.ஆரம்ப கால நக்கீரன் இதழ்களை சேர்த்து வைத்திருக்கும்  சில நண்பர்களை நெருங்கிவிட்டேன். நக்கீரனின் பழைய இதழ்கள் என் கைக்கு வந்து சேராததாலேயே ஆர்டராக என்னால் எழுதமுடிவில்லை.

சமீபத்தில் மக்கள் தொடர்பாளர் ஒருவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த நக்கீரன் கோபால், அவரது வீட்டில் மக்கள் தொடர்பாளர் சங்க ஆண்டு மலர் ஒன்றை தற்செயலாகப்பார்த்திருக்கிறார். அதைப்புரட்டிக்கொண்டிருந்தவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
மலரில் ஒரு பக்கத்தைப்புரட்டி, ‘முத்துராமலிங்கம்   உங்க சங்கத்துல மெம்பரா?, இவன நான் எப்பிடி வச்சிருந்தேன்.ஏரியா ரிப்போர்ட்டரா வந்த பயலை, நக்கீரன்ல இணை ஆசிரியராக்கி, ‘உதயம் ‘ பத்திரிகையில ஆசிரியராக்கி அழகு பாத்தேனே, பிறகு ஏன் நக்கீரன்ல மூன்றரை வருடங்கள் ஆபீஸ் பாயாக வேலை பார்த்தேன்னு எழுதியிருக்கான்.

இத எப்பிடி நீங்க எங்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம போட்டீங்க’லேசாக படபடப்பானார் கோபால். அந்த நண்பர்களுக்கு கோபால் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. உங்களுக்கும் புரிய வாய்ப்பில்லை? [ தொடரும்]


திண்டுக்கல்லுக்கு மாலன் ஏன் போனார்? என்கதைஎழுதும் நேரம் இது-2
 நானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை-4


Wednesday, January 11, 2012

முதலாளிமார் விரலெல்லாம் மோதிரங்கள், மனசெல்லாம் தந்திரங்கள்’ -என் கதை 6*



****ஞாபக மறதி என்று எதுவும் கிடையாது. எல்லா ஞாபகங்களும் பதுங்கிப்பாய காத்திருக்கும் புலிகளே
..எழுத்தாளர் மெளனி.

நான் ப்ளாக் எழுத ஆரம்பித்தபோது, இவ்வளவு மட்டமான ஞாபக சக்தியை வைத்துக்கொண்டு என்னத்த எழுதி கிழிக்கப்போறோம் என்றுதான் என் குலதெய்வம் அக்கம்மா அழகம்மா மேல் சத்தியமாய் நினைத்தேன்.

ஆனால்  கம்ப்யூட்டரின் எதிரே அமர்ந்தவுடன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து சகலமும் ஞாபகத்தில் வந்து தொலைக்கின்றன.

பழையபடி ‘தஞ்சை ஒயின்ஸுக்குள் போவோம். ஆசிரியர் துரை, கவிஞர் அண்ணாச்சி விக்ரமாதித்யன் மற்றும் நானும் குடித்துக்கொண்டிருந்த இடத்தில் ,இரண்டாவது பீரைத்தொட்ட இடத்தில் நேற்று விட்டிருந்தேன்.

ஒரு நிருபரைக் கட்டி வைத்து அடித்த கதையை துரை சொன்னவுடன் கொஞ்சம் வெலவெலத்துதான் போனேன்.

நிருபர்கள் ‘கவர்’ வாங்கும் மேட்டரை நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருந்தேனே தவிர, எனக்கு அதற்கு அப்படி ஒரு வாய்ப்பு வாய்த்திருக்கவில்லை.

மும்பையில் நான் வேலை செய்த ‘போல்டு இந்தியாவில் ரிப்போர்ட்டிங் போகும் நிருபர்களே கிடையாது.டெஸ்கில் உட்கார்ந்து யூ.என்.ஐ. பி.டி.ஐ. நிறுவனங்கள் அனுப்பும் செய்திகளை முழிபெயர்த்து போடுவதோடு எங்கள் வேலை முடிந்தது.

சில சமயங்களில் தமிழ்ச்சங்கங்களிலிருந்து கூட்ட நிகழ்ச்சி நியூஸ் போடச்சொல்லி சில நண்பர்கள் வருவார்கள். அவர்கள் சாப்பிடும் டீக்கும் பாவ்பாஜிக்கும் பெரும்பாலும் நாம் தான் பே பண்ண வேண்டி வரும்.

சரி தஞ்சை ஒயின்ஸுக்கு வருகிறேன்.

அண்ணாச்சிக்கு சுதி நன்றாக ஏற ஆரம்பித்துவிட்டால் கவிதையை அருவியாய்க்கொட்டுவார் என்று சற்று நேரத்திலேயே தெரிந்துகொண்டேன்.

இவரைப்பற்றி எழுத  மட்டுமே  தனியாக ஏழெட்டு சாப்டர்கள் வேண்டும். அதில் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லி இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

நக்கீரன் இன்னும் சரியாக பிக்கப் ஆகாத சமயத்தில், அண்ணாச்சி தான் எழுதிய கவிதைகள் புத்தகமாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால் குவார்ட்டருக்கே கோபாலை எதிர்பார்த்து க்காத்திருக்க வேண்டிய நிலை. இது நடந்த சமயத்தில் எல்லாம் நான் கோபாலின் சொந்தத்தம்பியை ஓவர்டேக் பண்ணி பந்தத்தம்பியாகிவிட்டேன்.

எனவே என்னையும் துரையையும் அண்ணாச்சி கவிதைத்தொகுப்பு தொடர்பாக நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்.

‘அண்ணன் பத்திரிகை நடத்தவே காசில்லாம கஷ்டப்படுறாரு, இதுல கவிதைத்தொகுப்பு ஒரு கேடா? என்று நினைத்தபடி கோபாலிடம் தலையைச்சொறிந்தோம்.

கோபால் தன்னை எப்போதுமே ஒரு புரவலராக ஃபீல் பண்ணிக்கொண்டே இருப்பவர். கவிதைத்தொகுப்புக்கு கைவிரித்தால் புரவலர் போஸ்டிங் போய்விடும் என்று நினைத்தோ என்னவோ உடனே கவிதைத்தொகுப்பு வெளிவர உதவி செய்வதாக ஒப்புக்கொண்டு ஒரு வாரத்திற்குள் தொகுப்பையும் கொண்டுவந்து விட்டார்.

நக்கீரனுக்கு தலைப்பு கொடுக்கும்போதாகட்டும், ஏதாவது செய்திகள் தரும்போதாகட்டும் அதைப்படித்துப்பார்க்கிற பழக்கம் கோபாலுக்கு  இருந்தது கிடையாது.

அவ்வாறே கவிதைத்தொகுப்பையும் படிக்காமல் ‘ஆகாசம் நீல நிறம்’ என்ற விக்கிரமாதித்யனின் முதல் தொகுப்பை  அண்ணன் கோபால்  ரெடி பண்ணி கொண்டு வந்துவிட்டார்.

 கவிதைத்தொகுப்பை கையில் வாங்கி  இரண்டாம் பக்கத்தை பிரித்தபோது, கோபால் உட்பட எங்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

தொகுப்பின் முதல் கவிதையே புரவலரை வசமாய் பதம் பார்த்தது.

‘முதலாளிமார் விரலெல்லாம் மோதிரங்கள், மனசெல்லாம் தந்திரங்கள்’ இதுதான் அந்தக்கவிதை.

எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் இரண்டு கைகளிலும் சேர்த்து சுமார் ஐந்து மோதிரங்களாவது அணியும் கோபால் ,அந்தக்கவிதையைப்படித்தவுடன் மோதிரங்கள் அணிவதையே நிறுத்திவிட்டார் என்றுதான் நான் முடிப்பேன் என்று நினைத்திருப்பீர்களேயானால்.....[தொடர்வேன்]

Tuesday, January 10, 2012

முதல் நாளே ஒயின்ஷாப் அழைத்துப்போன ஆசிரியர் -என் கதை 6

 
வாசலில் தயங்கி நின்ற என்னை கோபால் பார்த்துவிட்டு வேகமாக வெளியே வந்தார்.
 இப்போதைய நக்கீரன் அலுவலகம் போல் கூர்க்கா கீர்க்கா யாரும் கிடையாது. வெறும் 8 க்கு8 சைசில் ரெண்டே அறைகளைக் கொண்டதுதான் ஆரம்பகால நக்கீரன் அலுவலகம்.
அதனாலே வாசலில் நின்ற என்னைப்பார்த்துவிட்டு கோபால் வேகமாக ஓடி வந்தார்.
அருப்புக்கோட்டையில் சந்தித்த போதே ஒரு மிகச்சிறிய பின்னணியுடன் தான் பத்திரிகையை துவங்கியிருக்கிறேன் என்று அவர் சொல்லியிருந்ததால், அலுவலகத்தைப்பற்றி பெரிய கற்பனை இல்லாமல்தான் வந்திருந்தேன்.[ என் மும்பை தினசரி அலுவலகமோ ‘நாயகனாக்கப்பட்ட வரதராஜ முதலியாரெல்லாம் வந்து போகிற அளவுக்கு பெரிய இடம்]
அலுவலகம் எவ்வளவு சின்னதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்...
ஆனால் யாரையோ அடித்துக்கொண்டிருக்கிறார்களே?
‘’தம்பி அந்த நாயப்பத்தி பிறகு சொல்றேன். முதல்ல நம்ம ஆளுங்க கிட்ட அறிமுகம் ஆயிக்கோங்க’’ என்றபடி ஆசிரியர் துரையில் துவங்கி கோபாலின் தம்பி குருசாமி வரை அறிமுகப்படுத்தி வைத்தார். பெரும் ஆச்சரியமாக அங்கிருந்த எந்த முகமுமே எனக்கு அந்நியமாகத்தெரியவில்லை. நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போலவே தெரிந்தார்கள்.
ஏறத்தாழ பேச்சிலர் அறையைப்போலவே காணப்பட்ட அலுவலகத்தில் சேர், டேபிள் கூட இல்லை. அங்கேயே சமையலும் நடந்தது.
 நடுவே என்னை துரை டீ சாப்பிட கூப்பிட்டுப்போன கேப்பில், அடிவாங்கியிருந்தவரை எங்கோ அனுப்பிவிட்டிருந்தார்கள்.
 அவர்களாகவே சொல்லும்வரை அதுகுறித்து வாயைத்திறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.
பேச்சு பொதுவாக என் கல்லூரிப்படிப்பு, தமிழில் இவ்வளவு ஆர்வம் இருக்கும்போது எதற்காக ஆங்கில இலக்கியம் படித்தேன்,’ஜூனியர்விகடன்’ செளபாவை எப்படித்தெரியும் என்கிற மாதிரியே போய்க்கொண்டிருந்தது.
என்னை வரவேற்று துரையிடம் ஒப்படைத்த பிறகு, கோபாலை நான் பார்க்கவில்லை.மாலை நெருங்கவே ஊருக்குக்கிளம்பலாமா’ என்று துரையிடம் கேட்டபோது, அண்ணன் பிரஸ்ஸுக்கு போயிருக்கார்.இருந்துட்டு நாளைக்குப்போகலாம்யா. அதுசரி உனக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கா? என்றார் துரை.
 ரொம்ப தயங்கி, பீர் மட்டும் சாப்பிடுவேன்’ என்றேன்.அருகிலிருந்த அண்ணாச்சி கவிஞர் விக்கிரமாதித்யன் என்கிற நம்பிராஜன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
’நமக்கு பீர் சாப்பிடுற பழக்கம் இருந்தா இவர் முகத்துல ஏன் லைட் எரியனும் என்று அப்போது விளங்கவில்லை.
சுமார் இரவு 8 மணி அளவில் வந்து சேர்ந்த கோபால், நாங்கள் எத்தனை பேர் நிற்கிறோம் என்று எண்ணிப்பார்த்து விட்டு துரையின் கையில் பணத்தைத்திணித்தார்.
 நக்கீரனுக்கு அப்போதைக்கு இருந்த ஒரே சொத்தான ஆட்டோவில் நாங்கள் அமர்ந்ததும், ‘’வண்டிய தஞ்சை ஒயின்ஸுக்கு விடு மோகன்’ என்றார் துரை.’’ஆமாப்பா சீக்கிரம் போ கடையப்பூட்டிறப்போறான்’’ என்று சற்று பதட்டம் காட்டினார் அண்ணாச்சி. அந்தப்பதட்டம் ஒரு சரித்திரப்பிரசித்தி வாய்ந்தது. அது குறித்து பிறகு பேசுவோம்.
அன்று எனக்கு கிடைத்த அனுபவம் எதுவும் முதல் நாள் போலவே தெரியவில்லை.
ஒரு பத்திரிகை முதலாளி என்னைக்கேட்காமலே, நான் மறுநாள் ஊருக்குப்போகலாம் என்று முடிவெடுக்கிறார்.
 ஒரு பத்திரிகையின் ஆசிரியர் சந்தித்த முதல் நாளிலேயே உரிமையுடன் தோளில் கைபோட்டு ஒயின்ஷாப் அழைத்துப்போகிறார்.
ஆக ஒரு அருமையான டீமிடம்தான் செளபா நம்மை அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
முதல் பீர் முடிந்து ரெண்டாவது பீரை குடிக்க ஆரம்பித்தபோது,சற்று தைரியம் வந்து துரையிடம் கேட்டேன்,’’ காலையில நான் வர்றப்ப ஒருத்தர அடிச்சிட்டிருந்தீங்களே?
‘’அதுவா அந்த நாய்க்கு ஏரியா ரிப்போர்ட்டர் கார்டு குடுத்திருந்தோம்.நியூஸ் போடுறேன்னு சொல்லி ஒரு கட்சிக்காரன்கிட்ட கைநீட்டி காசு வாங்கியிருக்கான்.அதுக்குதான் ரெண்டு சாத்துசாத்தி ஐ.டி கார்டை புடுங்கி அனுப்பிட்டோம்’.
 அவர் சொல்லச்சொல்ல எனது பீர் போதை இறங்க ஆரம்பித்தது.[ தொடர்வேன்]

Monday, January 9, 2012

சந்தித்தேன் ‘நக்கீரன்’ கோபாலை- என் கதை5

      இப்போது அனைவரிடமுமே  கடிதங்கள் எழுதுகிற பழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது.

 நான் மும்பையில் இருந்தபோது ஒரு நாளைக்கு பத்து கடிதங்களாவது நண்பர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். அதே அளவிலோ இன்னும் சற்று அதிகமாவோ எனக்கும் நண்பர்களிடமிருந்து தினமும் கடிதங்கள் வந்துகொண்டேயிருக்கும்.

கடிதங்களில் இலக்கியம்,சினிமா சொந்தக்கதை சோகக்கதைகள்‘கே.ரங்கராஜுன்னு ஒருத்தர் படம் பண்ணிக்கிட்டிருக்காரு .அவரு நம்ம மல்லாங்கிணறுதான்’’ என்று போகும்.

நான் போல்டு இந்தியாவில் சேர்ந்து இரண்டாவது வருடத்தை நெருங்கிக்கொண்டிருந்தவேளையில், நாஞ்சில் நாடனின் உன்னத இலக்கியங்களுல் ஒன்றான ‘மிதவை’ நாவல் வெளிவந்திருந்தது.

மும்பையில் பொதுவாக தமிழர்களும், அவரது நாயகனும் படும்பாட்டை படிக்கிறவர்கள் கண்கள் குழமாகும்படி பதிவு செய்திருந்தார் நாஞ்சில் நாடன்.

.அதைப்படிக்க நேர்ந்த என் நண்பர்கள் என் மேல் பரிதாபப்பட்டு ,அடுத்து எழுதத்துவங்கிய ஒவ்வொரு கடிதத்திலும், கிளம்பி ஊருக்கு வா.இங்கு உனக்காக ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்கின்றன என்று என்னை மும்பையை விட்டு கிளப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

சரி, மும்பைக்கு பிறகு போய்க்கொள்ளலாம். இப்போதைக்கு அண்ணன் நக்கீரன் கோபாலிடம் போவோம்.
விருதுநகரிலிருந்து கோபாலின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை வெறும் அரைமணி நேரப்பயணம்தான். மதுரை போய் செளபாவைப்பார்த்து  விட்டு பிறகு கோபாலை சந்திக்கலாம் என்று பார்த்தால், ‘அண்ணன்  உடனே மெட்ராஸ் கிளம்புறார். கூடவே வாங்க’ என்றார்கள் வந்திருந்தவர்கள்.
 எனக்கு அதற்கு முன்பு கோபாலோடு எந்தவித பரிச்சயமும் இல்லை.
 என்னை மும்பை வேலைக்கு அனுப்பிய ‘பேசும் விழிகள்’ பாக்கெட் நாவலை நடத்திய ரத்தினபாண்டியன் மட்டும் கோபாலைப்பற்றி ஒன்றிரண்டு தகவல்களை சொன்னதாக ஞாபகம்.
 அருப்புக்கோட்டை சென்று முதன்முதலாக அவரது வீட்டில் அவரை சந்தித்த போது ஒரு பத்திரிகை முதலாளிக்கான எந்தவித பந்தாவும் இல்லாமல்,மிக எளிமையாக இருந்தார்.கலகலப்பாக பேசினார்.அதுவரை வெளிவந்திருந்த மூன்று நக்கீரன்’ இதழ்களை எனக்குத்தந்தார்.
ஜுனியர் விகடன் செளபா கிட்ட மதுரை சவுத் ஏரியா பாத்துக்கிறதுக்கு ஒரு ரிப்போர்ட்டர் வேணும்னு நானும் எடிட்டர் துரையும் கேட்டப்ப அவர் உங்களை சிபாரிசு பண்ணார். வொர்க் பண்றீங்களா தம்பி? என்று கேட்டவுடன்,  நான் வேறொரு நண்பர் மூலம் ‘தினமலர்’ போக இருப்பதாக தெரிவித்தேன்.
அவர் அடுத்த பத்தாவது நிமிடம் தினமலர் ஏன் வேண்டாம் என்று பேசி  என்னை கன்வின்ஸ் செய்தார்.
 ‘அப்ப என் கூடவே மெட்ராஸ் வந்திங்கன்னா நம்ம எடிட்டரப் பாத்துட்டு, ஐ.டி. கார்டையும் வாங்கிட்டு நீங்க உடனே வேலையை ஆரம்பிச்சிடலாம்’’ என்றார் கோபால். ‘என்னடா இது விரட்டி விரட்டி வேலை குடுக்குறாங்களே என்று நினைத்தபடி,
நான் மும்பையிலிருந்து திரும்பியிருந்து ஓரிரு தினங்களே ஆகியிருந்ததால் நண்பர்களை சந்திக்க ஏங்கிப்போயிருந்தேன். எனவே ஒரிரு தினங்களில் மெட்ராஸ் வருவதாகச்சொல்லிவிட்டு, அவ்வாறே சென்றேன்.எக்மோரில் இறங்கி கீழ்ப்பாக்கம் கார்டன், நக்கீரன்’ அலுவலகம் நெருங்கி கதவை நெருங்கியபோது ‘’அண்ணே இனிமே அப்பிடி செய்ய மாட்டேன். என்னை அடிக்காதீங்க’’ என்று ஒரு கதறல் குரல் கேட்டது.[தொடர்வேன்]

Saturday, January 7, 2012

நானும் நக்கீரன் தான் ஆனால் பழைய நக்கீரன் -என் கதை


என் கதையை ஒரு ஆர்டரில் எழுத முடியாமல், எவ்வளவோ சதிகள் நடக்கின்றன.
 இன்றைய சதி காலையிலிருந்து ‘நக்கீரன்’ தலைப்புச் செய்திகளில் ’அடிபட்டு’க்கொண்டிருப்பது.
 நானும் நக்கீரனில், அது துவக்கப்பட்ட 5 வது இதழில் இருந்து சுமார் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன்.வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயங்கள் அவை.
இன்று ஃபேஸ்புக்கில்,நண்பர்கள்  காலையிலிருந்து நக்கீரனைக்கிண்டலும் கேலியுமாய் ஓட்டுகிறார்கள். நக்கீரனுக்கு ஆதரவான குரல்கள்  வெகு சொற்பாகவே ஒலித்தன. அதைப்பார்க்கும்போது வேதனையாக இருந்தாலும் உப்பைத்தின்னவன் தண்ணி குடித்தே ஆகணும் என்பதையும் யோசித்தே ஆகவேண்டி இருக்கிறது.
. அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனியும் அளவுக்கு ஊழலில் பத்திரிகையாளர்கள் ஊறிப்போனதைக் கேள்விப்படும்போது, எனக்கு நக்கீரனின் ஆரம்பகட்டவிவகாரம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
 நான் சொல்லப்போகும் விசயத்தை நம்ப, ரொம்ப கஷ்டமாக இருக்கும்.ஆனால் நான் சொல்ல வருகிற செயலில் மும்முரமாக ஈடுபட்ட நக்கீரன் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் [தமிழ்ப்பத்திரிகை உலகில் ‘ஆசிரியர்’ என்று போடும் தகுதி படைத்த வெகுசிலரில் ஒருவரான] துரை எனது, மற்றும் நம்மில் பலரது ஃபேஸ்புக்கில் இருக்கிறார்.அதனால் அவரைத்தொடர்பு கொண்ட பிறகாவது அதை நம்புங்கள்.
நக்கீரனின் ஆரம்ப கால அலுவலகம் நம்பர் 12, மண்டபம் லேன், கீழ்ப்பாக்கத்தில் இருந்தது. வெறும் இரு அறைகளே கொண்ட அந்த அலுவலகத்தின் ஒரு அறையை தவறு செய்யும் நிருபர்களை கட்டிப்போட்டு உதைப்பதற்கென்றே வைத்திருந்தார்கள் நக்கீரன் துரையும், கோபாலும்.
தரமான இலக்கியங்கள் படித்த துரை ஆசிரியராக இருக்க, வண்ணநிலவன்[சில மாதங்கள் மட்டுமே இருந்தார்] வந்தியத்தேவன், ராகரவி,ஜான் ராஜையா,ஐ.எஸ்.இன்பதுரை,கவிஞர் விக்கிரமாதித்யன், மற்றும் முத்துராமலிங்கன் ஆகிய நான் அனைவருமே அரசியல் சார்பற்று ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய யாராக இருந்தாலும் துணிந்து தவறுகளைச்சுட்டிக்காட்டி, தூங்கும் நேரம் போக எல்லா நேரத்திலும் நக்கீரனின் வெற்றியை மட்டுமே சிந்தனையில் நிறுத்தி
வேர்வை சிந்தினோம்.
ஆரம்பத்தில் நான் சந்தித்த கோபாலைப்போன்ற நல்ல அண்ணனை,முதலாளியை நான் இன்னும்கூட வாழ்க்கையில் சந்திக்கவில்லை.
1988 என்று நினைக்கிறேன். மும்பையில் ‘போல்டு இந்தியா’ என்ற தினசரி ஒன்றில்  2 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு என் விருதுநகர்  வீடு திரும்பியிருக்கிறேன். என் அண்ணனின் பலசரக்குக்கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தபோது,   ரெண்டு மூனு பேர் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள் ,’’ஜூனியர் விகடன் சவுபா சொல்லி,
கோபால் அண்ணன் உங்களை கூப்பிட்டுட்டு வரச்சொன்னார் போகலாமா?’’ என்றார்கள்.  

Wednesday, January 4, 2012

குமுதத்தில் மாலனின் கடைசி லஞ்ச்-ம் என் முதல் லஞ்ச்-ம்

 இப்படி ப்ளாக்’ எழுத ஆரம்பித்ததில் நான் கண்ட ஒரே நன்மை
என்னோடு பணியாற்றிய பெரும்பாலான நண்பர்கள் மீண்டும்
தொடர்பு எல்லைக்குள் வர ஆரம்பித்திருப்பது.

 நான் யாருடனும் சண்டை போடுகிற ரகமில்லை எனினும் காரணமே இல்லாமல்  ஏதோ ஒரு இடைவெளி விழுந்திருக்கிறது. இந்த இடைவெளியை சரி
செய்த ப்ளாக்’கே நீ வாழி. 

 உங்களிடம்
 இரண்டு விசயங்களுக்காக சாஷ்டாங்க மன்னிப்பு கோருகிறேன்.முதலில் இந்த சப்ப’ மேட்டர் மூனு சாப்டர் வரை இழுவையானதற்காக.இதை நானே எதிர்பார்க்கவில்லை.

 இரண்டாவது இந்தக் க ட்டுரைக்கு நான் பயன்படுத்தியிருக்கும் ஸ்டில்.

சரி, குமுதம் ஆபிஸை கேட்டைத்தாண்டி யாரும் பார்த்திருக்கமாட்டார்களே, அதனால் எடிட்டோரியல் அல்லது புத்தகம் பிரிண்ட் ஆகிற ஏரியா,அட்லீஸ்ட் மதியம் சாப்பிட்டவுடன் சுகமான தூக்கம் வருமே அந்த கேண்டீனின் போட்டோவையாவது போட்டுவிடலாம் என்று கூகுளில் தேடுகிறேன்.அபிராமி தியேட்டருக்கு அந்தப்பக்கம் அப்படி எதுவும் தென்படவில்லை.

சரி தற்செயலாக கிடைத்த வேறு ஒரு ஸ்டில்லைப் போட்டுவிடுவோமே என்று போட்டேனே,தவிர குமுதம் எடிட்டோரியலுக்கும் இந்த ஸ்டில்லுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

சரி, நம்ம மேட்டருக்கு வருகிறேன்.ஆசிரியர் மாலன் அறையை விட்டு வெளியே வந்ததும் கொலவெறியுடன் மணாவைத்தேடிக்கொண்டிருந்தேன். ஒரு சிவத்த நண்பர் தன்னை நோக்கி என்னை அழைத்தார்.[ அவர் பெயர் எஸ்.எஸ்.என்பதும் அந்த ஆபீஸிலேயேகள்ளம்கபடம் இல்லாத ஒரே ஜீவன் அவர்தான் என்பதும் பின்னர் தெரிந்துகொண்டேன்]

.எடிட்டோரியல் உதவியாளராகப்பணியாற்றி வந்த எஸ்.எஸ்.ஸிடம்’ தான் [புள்ள புடிக்கிற வேலையாக]  வெளியே போய்விட்டு மதிய உணவுக்குத்தான் திரும்புவேன் என்றும் அதுவரை ‘நால்வர் அணியை’ ஒவ்வொருவராக நான் சந்திக்க வேண்டும் என்றும் மணா தகவல் சொல்லிவிட்டுப்போயிருப்பது தெரிந்தது.

நான் ஏற்கனவே சொன்னதுபோல், ரொம்ப லேட்டாக வந்திருக்கவேண்டிய குமுதம்’ ஆபிஸுக்கு சீக்கிரமே வந்துவிட்டதால், மாலன் மேட்டரோடு குமுதம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டு பின்னர் வருகிறேன்.

 அப்படி வரும்போது, george orwellன்’ animal farm’ நாவல் ஸ்டைலில் குமுதம் அனுபவத்தை எழுத ஆசை. பார்க்கலாம்.

 நால்வர் அணியை சந்தித்து விட்டு லஞ்ச் க்கு தயாராகும்போது சரியாக மணா வந்து சேர்ந்தார்.எந்த புண்ணியவான் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.குமுதம் எடிட்டோரியலுக்கு எப்போதும் லஞ்ச் இலவசமாக போட்டார்கள்.

 அதை சாப்பிடும் மூடெல்லாம் எனக்கு இல்லை.ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தவனை மாலன் முன்னால் நிறுத்தி அவமானப்படுத்திவிட்டாரே இந்த மணா என்பது மட்டும்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.’’ மணா உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்’’ என்று அழைத்தேன்.

இப்போது அபிராமி தியேட்டர் வளாகம் அடியோடு மாறிவிட்டது என்று சொன்னார்கள். நான் சொல்கிற சமயத்தில் எங்கள் ரகசிய மீட்டிங் எல்லாமே அபிராமி தியேட்டர் கேண்டீனில் வைத்தே நடக்கும்.

இன்று யாரை குமுதத்தை விட்டு அனுப்பப்போகிறார்கள் என்ற தகவல் சம்பந்தப்பட்டவருக்கு முன்பே அபிராமி கேண்டீனில் வேலை செய்கிறவருக்கு தெரிந்துவிடும்.

 மணா என்னை அங்கே அழைத்துப்போய் அப்படி ஒரு தகவலைத்தான் சொன்னார்.உங்க அப்பாயின்மெண்ட் ஆர்டர் ஏற்கனவே ரெடி ஆயிடுச்சி.மாலன் பேசுனதை மனசுல வச்சிக்காதீங்க. அவரு இன்னைக்கு லஞ்சோட வீட்டுக்கு அனுப்புறாங்க.எதையும் தெரிஞ்சமாதிரி காட்டிக்காம வந்து சாப்பிடுங்க’ என்றபடி என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுபோய் சக எடிட்டோரியல் நண்பர்களுடன் உட்காரவைத்தார் மணா.

‘இவன கிளம்பச்சொல்லி ஒரு மணி நேரம் ஆச்சி.இப்படி தெனாவட்டா லஞ்ச்சுக்கு வந்து உட்கார்ந்திருக்கான்’ என்பது போல இருந்தது என் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலனின் பார்வை.

நானோ மவனே நீ கிளம்ப ஒரு மணி நேரம் தான் இருக்கு.கடைசி லஞ்ச நல்லபடியா முடிச்சிக்கோ’ என்று மனதில் நினைத்தபடி சாப்பிட ஆரம்பித்தேன்.


மதியம் 2மணிக்கு வேலையை விட்டுப்போகப்போகிறவருக்கு,அதுவும் பத்திரிகையின் எடிட்டருக்கு,அவர் வேலையை விட்டுப்போகப்போகிற தகவலை 1.59 வரை ரகசியமாய் வைத்திருந்து எப்படி ரெண்டு மணிக்கு திடீரென்று அனுப்பிவிடமுடியும் என்றெல்லாம் எனக்கு அப்போது யோசிக்கத்தோணவில்லை.

சிங்கங்களும், புலிகளும் சிறுத்தைகளும், குரங்குகளும் வாழும் குமுதம் அலுவலகத்தில் நானும் முத்துராமலிங்கன் என்ற குரங்காய் முதல் நாள் அடியெடுத்துவைத்தேன். [ இந்தக்கதையை பின்னர் தொடர்வேன்]

Thursday, December 29, 2011

    குமுதத்தில் என் முதல் நாளும் மாலனின் கடைசி நாளும்
    
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்புவரை இந்த ப்ளாக்’குகள் குறித்து யாராவது பேச ஆரம்பித்தால் அது ஏதோ ஒரு
’காத்து கருப்பு’ சமாச்சாரம் போல என்று கருதி, ஒரு எட்டடி தள்ளி நிற்பேன்.


 இப்போது விதிவசத்தால் நானாக
வலியவந்து மாட்டிக்கொண்டேன்.


 கடந்த மூன்று நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை எனும்போது கொஞ்சம்
சலிப்பாக இருக்கிறது.


 எந்த பத்திரிகையைத் திறந்தாலும் ‘கொலவெறி’செய்தியே முன்னால் வந்து நிற்கிறது.

நேற்று
ரத்தன் டாடாவுடன் விருந்து சாப்பிட்ட தனுஷ், இன்று இந்திய மற்றும் ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து
சாப்பிடுகிறார் என்று விழுந்துவிருந்து எழுதுகிறார்கள்.
நமக்கெல்லாம் விருந்து கொடுக்க யாருமில்லை என்ற
வயித்தெரிச்சலுடன், பழைய சோறும் பக்கோடாவும் சாப்பிட்டபடியே நான் கேட்கிறேன்,

’’ஒரு கொலவெறி’
ஹிட்டுக்காக இந்தியா முழுக்க இத்தனை இடங்களில் விருந்து சாப்பிட்டீர்களே தனுஷ், இதன் பிறகாவது உங்களால் ஒரு
நூறு கிராம் ஆவது வெயிட் ஏறமுடிந்ததா? இப்போதும் அதே முப்பத்து மூனுகிலோ முன்னூறு கிராம்தானே நீங்க?

சரி,நம்ம கதையே நாறிக்கெடக்கு. ஊர்க்கதை நமக்கெதுக்கு?
என் கதை எழுத ஆரம்பிக்கிறப்ப தொடக்கத்திலெயே நான் சொல்லியிருந்தமாதிரி,எங்க ஆரம்பிச்சி
எது வழியா போறதுன்னு இன்னும் விளங்கலைதான்.  குமுதம்’ ஆபிஸ் பக்கம் நான் இவ்வளவு
சீக்கிரம் வந்திருக்கக்கூடாது. அவங்க ரொம்ப கோவமா இருக்கங்க.


 அண்ணன் நக்கீரன் கேபால் கூட இருந்த மூன்றரை வருஷங்கள மறக்க
முடியுமா? ‘சத்திரியன்’ நடத்தி பட்ட கஷ்டங்களை,50 ஆயிரம் பிரதிகள் வித்த பத்திரிகைக்கு பூட்டு போட்டதை
எழுதாம இருக்க முடியுமா?

ஆனாலும் இதுக்கு முந்தின சாப்டர்ல  அறிவிச்சிட்டோமேங்கிற ஒரே காரணத்துக்காக குமுதத்தை எட்டிப்பாத்துட்டே வெளிய போவோம்....
...ஒரு கேபினைக்காட்டி உள்ளே போகச்சொன்னார்கள். அங்கே மாலன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்
அல்லவா?

 இதற்கு முன்பு மும்பையில்’ போல்டு இந்தியா’ என்றொரு தமிழ் தினசரி,நக்கீரன்’உட்பட ஏழெட்டு
பத்திரிகைகளில் குப்பை கொட்டியிருந்த நான் ஒரு ஆசிரியர், அதுவும் ஒருகாலை  வேலை நேரத்தில், இவ்வளவு
கம்பீரமாக தூங்கியதை அதுவரை பார்த்ததில்லை என்பதால் சற்று அதிர்ச்சிதான் அடைந்தேன்.

 இவரை எப்படி எழுப்புவது? நமக்கு ‘குமுதம் ‘ஓபனிங்கே ரொம்பக்கேவலமா இருக்கே என்னசெய்வது என்று விழித்துக்
கொண்டிருந்தேன். என் கையிலிருந்த என்குறிப்பு ஃபைலை அவரது டேபிளில் வைத்தேன். அவரது சங்கீத
குறட்டைக்கு முன்னால் நான் ஃபைல் வைத்த சத்தம் கொசு குறட்டை விடுவது போல் பிசுபிசுத்தது.

லேசாக கனைத்துப்பார்த்தேன். கச்சேரி மேலும் களை கட்டியதே தவிர மாலன் எழுந்திருக்கிறபாடாயில்லை.

சரி, ஊருக்கு கட்டின பொட்டிபடுக்கைய பிரிக்காமதான வந்திருக்கோம்.ஆனது ஆகட்டும் என்று சற்று
சத்தமாகவே எழுப்பினேன். ரெண்டு கண்களும் விஜயகாந்தாய் சிவந்திருக்க எழுந்தார் மாலன்.

எதிரில் ஒருஜந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறது என்பது அவருக்கு
தெரிவிக்கப்படவில்லை என்பதை உடனே புரிந்து கொண்டேன்.

‘’ரிப்போர்ட்டர் வேலைல ஜாயின் பண்றதுக்காக இன்னைக்கு வரச்சொல்லியிருந்தாங்க.’’
இதற்குள் எனது தன்குறிப்பு அவர் கைக்கு போயிருந்தது.சற்று நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவரின்முகம் இறுக்கமாகியது
.

’நக்கீரன்ல குமுதத்தையும்,பிராமிண்ஸையும் அடிக்கடி திட்டி எழுதுறது நீங்களும்’ துரையும்தான்னு சொல்லுவாங்க
. பிறகு எந்த முகத்த வச்சிக்கிட்டு இங்க வேலைக்கு வர்றீங்க?’’இது மாலன்.
கேள்வி நியாயமானதுதான் என்றும், இது எல்லாம் தெரிந்தேதான், மணா என்னை அழைத்து வந்தார் என்றும் .நான்
அவரிடம் வேலை கேட்டுப்போகவில்லை. குமுதத்துக்கு புள்ள புடிக்கும் வேலையின் ஒரு பகுதியாகவே
மணா என்னை அழைத்து வந்ததையும் நான் சொல்லமுயல, அதை அரைகுறையாகக் கேட்டுவிட்டு,
‘இங்க ஒரு ப்ரூப் திருத்துறவர் வேலைதான் பாக்கி இருக்கு.அதுக்கு ஒகேன்னா சொல்லி அனுப்புறேன்’என்றபடி என்னை வெளியே அனுப்பினார்.
.
அதற்கு முன், பத்திரிகை நிருபராக.இணை ஆசிரியராக, ஆசிரியராக  நான் எதுவும் சாதிக்கவில்லை எனினும் மாலன்
அளவுக்கு நான் மங்குனி இல்லை.

 இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் உணர்வாளர்கள் பொங்கி வழிகிறார்கள்.
ஆனால் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சமயம்.புலிகளுக்கு ஆதராவாக செய்தி வெளியிட்டால் ஏழு
ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று அரசு அறிவித்திருந்த போது, நான் ஆசிரியராக இருந்த’சத்திரியன்’
 பத்திரிகையில் நெடுமாறன் அவர்களை’ வைத்து  ‘மாவீரன் பிரபாகரன்’ என்றதொடரை வெளியிட்டவன் நான். அதனால்தான் சொன்னேன் நான் மாலன் அளவுக்கு மங்குனி இல்லை.

‘ப்ரூப்’ திருத்தும் பணி சாதாரண பணி இல்லை .ஆனால் அதை மாலன் சொன்ன பாணி,எனக்குள் கொந்தளிப்பை
உண்டாக்கியது.

கேபினை விட்டு வேகமாக வெளியே வந்து மணாவைத்தேடினேன்.

[கொஞ்சம் கருணை காட்டுங்கள். எனக்கும்
மாலனுக்குமான கட்டப் பஞ்சாயத்தை நாளை அல்லது மறுநாள்  கண்டிப்பாக முடித்து விடுகிறேன். ]
                    **********************************************************************
நண்பர்களுடன் இன்னொரு முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.தொடர்ந்து
எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றி.ஆனால் நான் சொந்தமாகத்துவங்கியிருக்கும் வெப்சைட்’
பணிகள் என்னைத் தின்றுதீர்க்கின்றன.

 ப்ளாக் பொழுதுபோக்கு என்றால் அது பொழப்பு.இதுவரை நிறைய பேருக்கு
நிறைய நிறைய உழைத்து சம்பளம் அனுபவிக்காமல் வந்த சவலைப்பிள்ளை நான்.

காரை சம்பளமாக வாங்க வேண்டிய இடத்தில்
நான் வெறும் சைக்கிளோடு திரும்பிய கதைகள் ஏராளம்.

இப்போதுதான் முதன்முறையாக எனக்கே எனக்கு என்று
ஒரு வெப்சைட் துவங்கியிருக்கிறேன். அதன் முகவரி hellotamilcinema.com.இனி இதில் நிறைய எழுதுவேன்.’ப்ளாக்’கில்
கொஞ்சமாக எழுதுவேன்.

Sunday, December 25, 2011

திண்டுக்கல்லுக்கு மாலன் ஏன் போனார்?என்கதைஎழுதும் நேரம் இது-2

 ஞாபக சக்தி விஷயத்தில் நான் ரொம்ப பரிதாபமான ஆள்.

அமெரிக்கன் கல்லூரியில் டிகிரி முடித்த வருடம் [1985 ] தவிர வேறு எதுவுமே அவ்வளவு சுலபத்தில் ஞாபகத்துக்கு வருவதில்லை.என் முன்னாள் நண்பர் ஒருவர் இருக்கிறார்.  ஞாபகத்திலகம் என்றே கூட அவரை அழைக்கலாம். தன் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை தேதி வாரியாக, இடம் வாரியாக, நேரம் வாரியாக , சம்பவத்தன்று போட்டிருந்த ஜட்டியின் நிறம் வாரியாக எல்லாவற்றையும் சரியாகச் சொல்லுவார். நான் எழுதப்போகும் சம்பவம் நடந்த வருடம் ஞாபகம் இல்லை.அநேகமாக 98 ஆக இருக்கக்கூடும்.
 சம்பவத்துக்குப் போகுமுன், கடந்த வாரம் நடந்த ஒரு சர்ச்சைக்குள் போய்விட்டு வருவோம். சர்ச்சைக்குள் போவதற்கு முன் ஒரு சிறு சந்துக்குள் போய்விட்டு வருவோம்.
 அது எழுத்தாளர் மணாவின் சந்து.
. ‘அகிலா நியூஸ் ஏஜென்ஸி’ என்று ஒன்று வைத்துக்கொண்டு ஏறத்தாழ தமிழகத்தின் அத்தனை பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர் நம்ம மணா.  எங்கேயும் எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டே இருப்பார். துக்ளக் தொடங்கி குமுதம் வரை கடந்த 26 ஆண்டுகளில்  ஆண்டுக்கு ஆயிரம் வீதம் சுமார் 26000 கட்டுரையாவது எழுதியிருப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவர் தனது அயராதஉழைப்பால், கமலைப்பற்றி இதுவரை எல்லாபத்திரிகைகளிலும் வந்த செய்திகளைத் தொகுத்து கடந்த வாரம் ‘நம் காலத்து நாயகன்’ என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் எழுத்துலக மேதை, மாலன், கமலைப் பற்றி எழுதியதை மட்டும் மணா போடாமல் விட்டுவிட்டாராம். இதைப் பற்றி மாலன் ஒன்றும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று நினைத்த மணா, மாலனையும் புத்தகத்தை பாராட்டிப் பேச தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருக்கிறார்,.

ஒரு எடிட்டருக்கான அடிப்படைத் தகுதி நீளம் கால அளவு பற்றிய அறிவு இருப்பது தான். அதுவும் ஒரு விழாவில் பேச வரும் போது மொத்தம் எத்தனை  பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அதில் தான் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று உணர்ந்து நேரம் எடுத்துக் கொள்வது தான் பொது அறிவு. பொது அறிவும் அதுதான். பொதுவாவே அறிவும் அதுதான். ஆனால் மாலனுக்கு இந்த அறிவு துளியும் கிடையாது. சமீபத்தில் பன்னிரெண்டு விஐபிக்கள் பங்கெடுத்த இறையன்பு அவர்களின் புத்தக வெளியீட்டில் இவர் ஒருவர் மட்டுமே நாற்பது நிமிடங்களை எடுத்துக் கொண்டு பத்திரிக்கைகளில் இழவுச் செய்தி என்று அவராகவே ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு மொத்த அரங்கத்தையுமே இழவு வீடாக்கினார்.

அந்த அனுபவத்தில் மணா நிகழ்ச்சியிலும் , அடுத்து மாலன் பேசப்போறார், எப்பவும் போல ஒரு மணி நேரம் தூங்கி முழிக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கொடுத்தார் மாலன். ’வெகுஜன ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கிடயாது. அந்த வகையில்  இந்த புத்தகம் ஒரு குப்பை’ என்று மாலன் பேச ஆரம்பிக்க, புத்தக வெளியீட்டாளர் மனுஷ்யபுத்திரனுக்கு அதிர்ச்சி. மணாவுக்கோ பேரதிர்ச்சி. அடுத்து கொஞ்ச நேரத்துக்கு ஆளாளுக்கு பார்வைகளாலேயே கெட்ட வார்த்தைகளைப் பரிமாரிக்கொண்டு விழாவை முடித்தனர்.

மாலன் பத்திரிகை உலகில் ஒரு புண்ணாக்கும் சாதிக்காதவர். சுமார் இரண்டு டஜன் பத்திரிகைகளுக்காவது எடிட்டராகப் பொறுப்பேறறிருக்கிறார். புதிதாக ஒரு பத்திரிகையில் எடிட்டராகப் பதவி ஏற்பதற்கு முன்னர் அந்த நிர்வாகத்திடம் வேலையில் சேர்ந்து கொள்ள ஒரு நாள் அவகாசம் கேட்பாராம் மாலன்.அந்த ஒரு நாள் அவகாசம் எதற்கு என்பது பத்திரிக்கை உலகத்துக்கு நீண்ட நாள் புரியாத புதிராக இருந்ததாம். பிறகு ஒரு நிருபர் அந்த ஒரு நாள் அவரை விடாமல் ஃபாலோ பண்ணியபோதுதான், திண்டுக்கல்லில் போய் பூட்டு வாங்கி விட்டுத்தான் வேலையிலேயே சேருகிறார் என்கிற சீக்ரெட் வெளியே வந்தது.

சுவாரசியமாக ஒரு கட்டுரை எழுதத்தெரியாது. ஒரு தலைப்பு வைக்கத்தெரியாது. ஆனால் பத்திரிகை ஆபிஸில் பிரமாதமமாக சுதிபிசகாமல் சங்கீதக்குறட்டையோடு தூங்குவார்.  பக்கத்தில் ராவ் இருந்தாரானால் இவர் ஆரோகணமென்றால் அவர் அவரோகணம்.
 எனக்குத்தெரிந்து ஞானமே சற்றும் இல்லாதவர்கள் அதிகம் ஆசிரியராக இருப்பது நம் தமிழ் நல்கூறு பத்திரிகை உலகில்தான் என்று நினைக்கிறேன்.
முதலாளிகளே தங்களை ஆசிரியர் என்று போட்டுக்கொள்ளும் மூடத்தனமும் இங்கேதான் அதிகம் என்று நினைக்கிறேன்.
ஒரு அரசியல் பத்திரிகையின் ஆசிரியர் பத்திரிகை ஆரம்பித்த முதல்
 ஆறு மாதங்களுக்கு தன் கையெழுத்தைக் கூட கேபால் என்றே போட்டுவந்தார்.

சரி அதப்பத்தியெல்லாம் பிறகு பேசலாம்’

சம்பவத்துக்கு வருவோம். அண்ணே சம்பவம் சம்பவம்னு ஏதோ சொல்ல வர்றீங்க .அப்புறம் குறுக்க நீங்களே புகுந்து உங்களையும் குழப்பி எங்களையும் குழப்புறீங்களே? என்ற உங்க மனக்குமுறல் கேக்கத்தான் செய்யுது.

அது நடந்தது 98 ல் தான் என்று மீண்டும் நினைக்கிறேன். இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து என்னிடமிருந்த‘ திலகாஷ்ட மகிஷ பந்தனங்களை ’பேக் அப் பண்ணி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஊரில் போய் ஒரு அஞ்சு வருஷத்துக்கு பலசரக்கு கடைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல், நன்றாகச் சம்பாதித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி வந்து பட வாய்ப்புகள் தேடி பழையபடி சீரழிவது என்பது அப்போதைய உத்தேசம். இதை  எப்படியோ கேள்விப்பட்டு மனஉணர்ச்சிக் கொந்தளிப்பு நிலையை அடைந்த மணா என்னை அழைத்தார். பிரித்திஷ் நந்தியோ,குஷ்வந்த் சிங்கோ,பத்திரிகை துறையை விட்டுவிட்டு, பலசரக்குக் கடைக்கு போவது போல கொஞ்சம் ஓவராகவே இருந்தது அவரது ஃபீலிங்ஸ். பட் ஐ லைக் தேட்.
அவரே எனக்காக ஒரு ‘என்குறிப்பு’ தயாரித்தார். வேற எதுவும்  பேசக்கூடாது. நாளைக்குக் காலைல என்னை ‘குமுதம் ‘ ஆபிஸ்ல வந்து பாருங்க’ என்றபடி
கிளம்பினார். நான்கொஞ்சம் குழம்பினேன்.மறுநாள்,  குமுதம்  அலுவலகம். கேட்டில் காத்திருந்து என்னை அழைத்துப்போனார் மணா. கொஞ்ச காலமாக எழுதுகிற வேலையை விட்டுவிட்டு  இப்படி குமுதத்துக்கு இந்த ‘புள்ள புடிக்கிற’ வேலையை மட்டும்தான் பார்க்கிறார் என்பது அப்போதுதான் தெரிந்தது.
 ரிஷப்சனில் உட்கார வைத்து, எனக்கு ,குமுதத்தில் என்ன மாதிரி பாலிட்ரிக்ஸ் நடக்கும் அதை சமாளிப்பது எப்படி என்று பாடம் நடத்தினார் மணா.
ஒரு வழியாக  ஆசிரியரை சந்திக்க அழைப்பு வந்தது.ஒரு கேபினைக்காட்டி உள்ளே போகச்சொன்னார்கள்.உள்ளே போனால் ஆசிரியர் மாலன் அயர்ந்து
நான்


மணா

[மாலன்]
தூங்கிகொண்டிருந்தார்....[தொடரும் போடுவதற்கு இதுவே சரியான இடம் என்று நினைக்கிறேன்.அடுத்த கட்டுரை குமுதத்தில் என் முதல் நாளும் மாலனின்  கடைசி நாளும்].

Wednesday, December 21, 2011

என் கதை எழுதும் நேரம் இது

சுமார் ஒரு மாத காலமாக ’எவண்டா இவன்’ என்று என்னைத்தெரியாமலேயே என் ‘பளாக்’ படித்து வரும் நண்பர்களே, என்னை மன்னியுங்கள்
.பெயரையும்,என்னைப்பற்றிய விபரங்களையும் மறைத்து, மறைந்திருந்தே பார்க்கும் மர்மமும் எனக்குத்தேவையில்லை.

என் கதையை எங்கே இருந்து துவங்குவது என்று தெரியவில்லை.அதனால் சற்றே தாமதம்.

'forrest gump' படத்தில் டாம் ஹேங்ஸ், பஸ்  ஸ்டாப்பில் அமர்ந்தபடி, பலபேர் நம்பாத, தனது சொந்தக்கதையைச்சொல்லிக்கொண்டிருப்பார்.

 எனக்கு நெருக்கமான நண்பர்களைத்தவிர, வேறு யாருமே நம்ப முடியாத என் கதைகள் என்னிடம் ஏராளம்  இருக்கின்றன.

நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கி, மும்பை வரை சூடான என் கால் அடிபட்ட இடங்கள் ஏராளம்.

உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, ஒரு வயதிலேயே சுடுகாட்டில் புதைக்க,  குழி தோண்டப்பட்ட குழந்தை நான்.

எனது 46 வயதில், அந்தக்கதையை எழுதவேண்டியிருந்து, நான் அப்போது பிழைத்திருக்கிறேன்’ என்றுதானே  இன்று நினைக்கவேண்டி இருக்கிறது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘குமுதத்திலிருந்து’ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தவுடன் நான் செய்த முதல் காரியம். என்னிடமிருந்த பேனாவை மூன்றுமுறை தலையைச் சுற்றி வீசி எறிந்ததுதான். இனிமேல் பேனா எடுத்து எழுதும் வேலை மட்டும் வேணா’ என்று நான் நம்பாத ஆண்டவனிடம் வேண்டுகோள் வைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

அதை எட்டு வருடங்களாக கட்டிக்காத்து வந்த என்னால்,தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. என்ன செய்வது நான் படங்களில் வேலை பார்க்கப்போனால் ‘பாம்புகள்’ என்னை நோக்கி படமெடுக்கிறது.

 பட்டாசு விக்கபோனால், தீபாவளிக்கு பதினாறு மணி நேரம் மழை பொழிகிறது?
[ஆரம்பத்துல இப்பிடி கொஞ்சம் குழப்பமா இருக்கும்..போகப்போக அதுவே உங்களுக்குப்பழக்கமாயிடும்]      தொடருவேன்....