Wednesday, December 21, 2011

என் கதை எழுதும் நேரம் இது

சுமார் ஒரு மாத காலமாக ’எவண்டா இவன்’ என்று என்னைத்தெரியாமலேயே என் ‘பளாக்’ படித்து வரும் நண்பர்களே, என்னை மன்னியுங்கள்
.பெயரையும்,என்னைப்பற்றிய விபரங்களையும் மறைத்து, மறைந்திருந்தே பார்க்கும் மர்மமும் எனக்குத்தேவையில்லை.

என் கதையை எங்கே இருந்து துவங்குவது என்று தெரியவில்லை.அதனால் சற்றே தாமதம்.

'forrest gump' படத்தில் டாம் ஹேங்ஸ், பஸ்  ஸ்டாப்பில் அமர்ந்தபடி, பலபேர் நம்பாத, தனது சொந்தக்கதையைச்சொல்லிக்கொண்டிருப்பார்.

 எனக்கு நெருக்கமான நண்பர்களைத்தவிர, வேறு யாருமே நம்ப முடியாத என் கதைகள் என்னிடம் ஏராளம்  இருக்கின்றன.

நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கி, மும்பை வரை சூடான என் கால் அடிபட்ட இடங்கள் ஏராளம்.

உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, ஒரு வயதிலேயே சுடுகாட்டில் புதைக்க,  குழி தோண்டப்பட்ட குழந்தை நான்.

எனது 46 வயதில், அந்தக்கதையை எழுதவேண்டியிருந்து, நான் அப்போது பிழைத்திருக்கிறேன்’ என்றுதானே  இன்று நினைக்கவேண்டி இருக்கிறது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘குமுதத்திலிருந்து’ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தவுடன் நான் செய்த முதல் காரியம். என்னிடமிருந்த பேனாவை மூன்றுமுறை தலையைச் சுற்றி வீசி எறிந்ததுதான். இனிமேல் பேனா எடுத்து எழுதும் வேலை மட்டும் வேணா’ என்று நான் நம்பாத ஆண்டவனிடம் வேண்டுகோள் வைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

அதை எட்டு வருடங்களாக கட்டிக்காத்து வந்த என்னால்,தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை. என்ன செய்வது நான் படங்களில் வேலை பார்க்கப்போனால் ‘பாம்புகள்’ என்னை நோக்கி படமெடுக்கிறது.

 பட்டாசு விக்கபோனால், தீபாவளிக்கு பதினாறு மணி நேரம் மழை பொழிகிறது?
[ஆரம்பத்துல இப்பிடி கொஞ்சம் குழப்பமா இருக்கும்..போகப்போக அதுவே உங்களுக்குப்பழக்கமாயிடும்]      தொடருவேன்....

1 comment:

  1. நல்லா இருக்கு தொடர்ந்து எழுது நான் சொல்லி அமரன் இயக்குனர் ராஜேஸ்வர் போன்ற பலரும் படிக்கிறார்கள்-durai

    ReplyDelete