37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்காவது தமிழ் சினிமாவை தனது தினவெடுத்த தோள்களில் சுமப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, நடுவில் ‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ என்று பட்ட காலிலேயே அடிபட்டு, சொந்தமாகவே நடக்க கஷ்டப்பட்ட பாலாவின் ஆறாவது படைப்பு ‘பரதேசி’.
ரிலீஸுக்கு முன்பு எப்போதுமே பாலாவின் படங்களுக்கு பரபரப்புக்கு
பஞ்சமில்லை என்னும் நிலையில், இருதினங்களுக்கு முன்பு, படத்துக்கான
ஓப்பனிங்கை உசுப்பேத்தி விடும் சதித்திட்டத்தில் அவர் வெளியிட்டு, எக்காளச்
சிரிப்பு சிரித்த ’முரட்டு அடி ட்ரெயிலர், ’படம் பாக்க
வரைலைன்னா உங்களையும் வூடு தேடி வந்து உதைப்பேண்டா’ என்று எச்சரிப்பது
போலவே இருந்தது.
அந்த மிரட்டலுக்குப் பணிந்து இன்று, கொடைக்கானல்
மலையிலிருந்து, குரங்காட்டம் இறங்கி வந்து, மதுரை மினிப்ரியா தியேட்டரில் மதியம்
2.30 மணி காட்சிக்கே சரணடைந்தேன்.
‘அவன் இவன்’ படத்துக்கு ‘ஹல்லோதமிழ்சினிமாவில்
எழுதியிருந்த விமர்சனத்தால் பாலா கடுங்கோபத்துக்கு ஆளாகி, என் உருவ
பொம்மையை எரித்த கதையை எல்லாம் கேள்விப்பட்டிருந்ததால், இந்த ‘பரதேசி’ பிரமாதமான
படமாக வந்திருக்கவேண்டும். அதற்கு சிறப்பாக விமர்சனம் எழுதி அவரிடம் சில பொற்காசுகளை
பரிசாக வெல்லவேண்டும் என்று என் குல தெய்வம் உட்பட நான் வேண்டாத தெய்வமில்லை.
ஆனால் நம் விசயத்தில் தெய்வங்கள், சில சமயங்களில்
ஆடுகள். பல சமயங்களில் ஓநாய்கள்.
‘ரெட் டீ’ என்னும் தலைப்பில்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ‘எரியும் பனிக்காடு’ என்று தமிழில்
மொழிபெயர்க்கப்பட்ட நாவலின் தழுவல்தான் இந்தப்பரதேசி என்னும் யூகச்செய்திகளை படத்தின்
டைட்டில் கார்டுகள் எந்த விதத்திலும் தெளிவு படுத்தவில்லை. கதை, திரைக்கதை, இயக்கம்
என்று பாலாவின் பெயரே வருகிறது. ஒருவேளை முன்ஜென்மத்தில் ராசா அதர்வாவாகப் பிறந்திருந்து
குதிகால் நரம்பை அறுக்கக்கொடுத்தவராக இருந்து, அந்த நினைவுகளின்
நீட்சியாக பாலாவே இந்தக் கதையை எழுதியிருக்கக்கூடும்
என்று ஒரு பிரமாதமான லாஜிக் கண்டுபிடித்து நாம் அது பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது
சாலச்சிறந்தது.
சரி, பாலாவின் முன் ஜென்மக் கதைக்கு வருவோம்.
கதை நடக்கும்
வருடம் 1939. உச்சி வெய்யில் மண்டையைப்பொழக்கும் ஒரு மத்தியான வேளை. பாலூரோ,சூலூரோ
என்ற ஒரு கிராமத்தில் வசிக்கிறார் ராசா என்கிற அதர்வா. பாலாவின்
கதாநாயகனாச்சே. கொஞ்சம் மனப்பிசகு, கோணியில்
தைக்கப்பட்ட கிழிஞ்ச சட்டை, லூஸ்த்தனம் என்று சேதுநந்தபிதாமகடவுளவனிவனாக வருகிறார். அவரது லூஸ்த்தனத்துக்கு
கொஞ்சமும் குறைவைக்காத பொண்ணு வேதிகா அவரை சோறு சாப்பிடவிடாமல் பட்டினி போட்டுக் காதலிக்கிறார். ராசா அதர்வா
ஒன்றிரண்டு காட்சிகளில் தண்டோரா போடுவது தவிர்த்து, அந்த ஊர்
ஜனங்கள் அனைவரும் என்ன வேலை செய்கிறார்கள் என்று டைரக்டர் சொல்லவில்லை.
இந்நிலையில், அந்த ஊர் ஜனங்களை
டீ எஸ்டேட் ஒன்றுக்கு தொழிலாளிகளாக ஏமாற்றி அழைத்துப்போகும் கங்காணி, வெள்ளைக்கார
துரைகளின் மனம் நோகாமல் நடக்க இவர்களைப் படாத பாடு படுத்துகிறார். ட்ரெயிலரில் பார்த்து மிரண்ட முரட்டு விளக்குமாத்து அடிகள், விரும்பிய
பொண்ணை துரைமார்கள் கற்பழிப்பது, எஸ்டேட்டை விட்டு தப்ப முயன்றால் குதிகால் நரம்பை வெட்டுவது
போன்ற மயிர்க்கூச்செரியும் காட்சிகள் சீன் ஒன்றில் துவங்கி எண்ட் கார்டு வரை ஏராளம்
உண்டு.
இதுவே வேறு ஒரு இயக்குனரின் படமாக இருந்தால், சிறப்பான
அம்சங்கள் என்று சிலாகித்துக்கூறும்படி படத்தில் சில சமாச்சாரங்கள் உண்டுதான். ஆனால் ‘சேதுவில்
துவங்கி ‘அவன் இவன்’ வரை பார்த்துச்
சலித்த ஷேம்ஷேம் பாலா ஷேம் பார்முலா.
1939-ல் அதர்வாவும்,மற்றவர்களும் பேசிய
இதே இழுவைத் தமிழைத்தான் அவர்கள் பேசினார்கள் என்பது உண்மை என்றால், தேயிலைத்தோட்டத்தில்
அவர்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக சித்திரவதை செய்திருக்கலாம் என்பது என் தாழ்மையான
அபிப்ராயம். வேதிக்கா நீ ஒரு வேஸ்டுக்கா. தன்ஷிகா
நீ ஒரு தண்டம்க்கா.
தமிழின் பத்து தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான நாஞ்சில்
நாடன் வசனம் எழுதியிருக்கிறார். படம் முழுக்க இடம் பெற்ற தரமான கெட்ட வார்த்தைகளை வைத்துப்
பார்க்கும்போது, அவர் சரக்குக்கு வெறும் ஊறுகாயாக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை
உணர முடிகிறது. கலெக்டரிடம் கூறி இவர் இனி கோவையை விட்டு வெளியே செல்லமுடியாதபடி, அதிலும்
குறிப்பாக பாலாவாக்கம் செல்லமுடியாதபடி, ஏதாவது சிறப்பு
சட்டம், சதித்திட்டம் தீட்டமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
பாடல்களே தேவைப்படாத ஒரு கதையில் ஒரு ஜீசஸ் குத்துப்பாட்டு
உட்பட ஆறு பாடல்களை செருகியிருப்பதை ஒரு வகையில் பாலாவின் சாமர்த்தியம் என்றே சொல்லவேண்டும். ஓலைப்பாயில்
எதுவோ என்னவோ செய்ததுபோல், ஓயாமல் வாசிக்கப்பட்ட பின்னணி இசை, சில இடங்களில்
காட்சிகளை விட முன்னணியில் இருந்து காதுகளை சேதுகளாக்குகிறது.
செழியனின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆனால் உலகப்படங்கள்
எல்லாம் பார்த்துக்கொழுத்துச் செழித்த செழியன் போன்ற ஒரு நல்ல ஒளிப்பதிவாளருக்கு அழகு, வேதிகா
மாதிரி செவத்த பொண்ணுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து, இயக்குனர்
அழைத்து வரும்போது,’ நாட்டாமை ஃபிகரை மாத்து’ என்று அதை
நிராகரிக்கவேண்டும்.
காட்சிகள் அனைத்துமே ஒரே ஒப்பாரி ரகமாக இருப்பதால், ரெண்டு
மணி நேரப்பட முடிவில் நமக்கு பெண்டு கழண்டுபோன ஃபீலிங்.
க்ளைமாக்ஸ் காட்சியில் அதர்வா ஒரு பாறைமேல் ஏறி நின்றுகொண்டு,’
’நியாயமாரே எங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா?’ என்று கதறும்போது, ஏனோ கங்காணி
ஸ்தானத்தில் பாலா நிற்பதாக சிந்தனை ஓடி, ரசிகர்கள் அவ்வளவு
பேரும் குதிகால்
நரம்பு அறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய தொழிலாளர்களாக காட்சி அளிக்க,’ மறுபடியும்
மறுபடியும் ஒரே மாதிரி படம் எடுத்துக்கொல்லாம, ரசிகருங்க
மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா பாலாமாரே’ என்று கதறி
அழத்தோன்றுவது நிஜம்.
’பர்தேசி, பர்தேசி ஜானா நஹி’
அண்ணே நீங்க ஒரு ஆளு தான் உருப்புடிய விமர்சனம் எழுதி இருக்கீங்க மத்த எல்லாம் இது பெரிய உலக பட ரேஞ்சுக்கு பேசுறாங்க நல்ல இல்லன்னு சொல்றவன் கொட்டிய அருங்காட அப்டின்னு ஒரு பதிவர் எழுதுறாரு என்னத்த சொல்றது
ReplyDeleteஎன்னத்தச்சொல்றது கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப்பயலுக நாட்டாமைன்னு ஷேக்ஸ்பியர் சும்மாவா சொல்லிவச்சாரு?,...
Deleteபடம் ஆழ்ந்த பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது..கோவையில் தியேட்டரில் படம் முடிந்தவுடன் எழுந்துநின்று கைதட்டினார்கள் ரசிகர்கள்..
ReplyDeleteமதுரைக்காரனுங்கள கோயமுத்தூர்க்காரவங்க ஆதரிக்கனும்னு முடிவு பண்ணீட்டீங்க,.. ரெம்ப சந்தோஷம்.
Deleteபவர் ஸ்டார் ஃபார்முலா?
Deletepoya loosu...
ReplyDeleteதேங்ஸ் பாஸு,...போய்யா பாலான்னு திட்டிருந்தாதான் வருத்தப்பட்டிருப்பேன்,..
Deleteசூப்பர் ரிப்ளே தல
Deleteபடம் உங்களுக்கு பார்க்க தெரியுமா முதலில் சொல்லுங்கள் .டைட்டிலில் ரெட் டீ நாவலின் இன்ஸ்பிரேசன் என போட்டு நன்றி கார்ட் போடுவதை பார்க்கவில்லையோ .படம் பார்க்க தெரிந்தால் விமர்சனம் எழுதுங்க .இல்லாட்டி சும்மா இருப்பது உத்தமம்
ReplyDeleteயாரும் கவனித்துவிட முடியாதபடி 5 ஸெகண்ட் டைட்டில் போடுவதை விட இருட்டடிப்பு எவ்வளவோ மேல்,..
Deleteமறுபடியும் பாருங்க. ஒரு முழுப்பக்க கடிதம் போல் திரையில் சில நிமிடங்களுக்கு அதன் வாசகத்தோடு வரும். கதையின் பெயர், ஆசிரியரின் பெயர், ஒவ்வொரு டீ பற்றிய குறிப்பு .. என்று ஏகப்பட்டவைகள் உண்டே.
Deleteதருமி அவர்களே உங்களுக்கு மட்டும் தனி பிரிண்ட் எதாவது போட்டாங்களா?
Delete//யாரும் கவனித்துவிட முடியாதபடி 5 ஸெகண்ட் டைட்டில் போடுவதை விட இருட்டடிப்பு எவ்வளவோ மேல்,..//
Deleteஆமாங்க...ஒரு கால் மணிநேரமாவது டைட்டிலை ஸ்டில் போட்டிருக்கனும்.. பாலாவுக்கு அறிவே இல்லை
ஓஹோ சாரே,
ReplyDeleteஎல்லாம் ஒலகப்படம்னு சொல்றாங்களே அது எப்படி?
நீங்க எப்படியும் குத்து விடுவீங்கன்னு தெரியும்,ஆனால் கொலக்குத்தாயில்ல இருக்கு விமர்சனம்.
ரெட் டீ நாவல் தான் மூலம்னு கிளப்பிவிட்டுவிட்டு ,கதைக்கான கிரெடிட் கொடுக்கலையா? செம போங்காட்டமா இருக்கே.
விடியல் பதிப்பகம் தான் தமிழில் எரியும் பனிக்காடுனு வெளியிட்டது,விடியல் சிவா அவர்களும் சமீபத்தில் காலமாகிட்டார்,அதனால யாரும் கேஸ் போட மாட்டங்கன்னு பாலா நினைச்சுட்டாரா?
இப்படி கதை திருடி எடுக்கப்பட்ட படத்துக்கு நாஞ்சில் நாடன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் எப்படி வசனம் எழுதிட்டு அமைதியா இருக்காங்க?
என்ன நடக்குது இங்கே?
நானும் அதையேதான் கேக்குறேன். என்னதான் நடக்குது இங்கே?
Deleteமலை மேலே சாமி தெரியுதுன்னு நாமும் சொல்லிடலாம் இல்லன்ன நம்ம பெண்டாட்டி பத்தினி இல்லைன்னு பழியேற்க வேண்டுமே என்று எல்லோரும் பயந்து நாமும் இது உலக படம் ஆஹா ஓஹோன்னு சொல்லிப்புடுவோம்னு எல்லோரும் கச்சைக் கட்டிக் கொண்டு விமர்சனம் எழுத. வித்தியாசமாக யதார்த்தை எழுதியுள்ளீர்கள். உங்க கண்ண பாலாசாமி குத்த போவுது உறுதி. வேதிகாவுக்கும் தன்ஷிக்காவுக்கும் கருப்பு பெயிட்ட அடிச்சி ரசிக்கும் அதர்வாவை அரை கிறுக்கனாக அலயவிடும் பாலா உண்மையிலே சைக்கோ தானா? சேதுவில் விக்ரமை பைத்தியம்மாக்கி பிதாமகனில் மறுபடியும் கிறுக்காக்கி நான் கடவுளில் ஆர்யாவும் கிறுக்கு சாமியார், நந்தாவில் சூர்யா சைக்கோ ஏன் இப்படி எல்லோரையும் சைக்கோவாகவும் பைத்தியமாகவும் தன் ஹீரோக்களை ஆக்கிவிடுகிறார் பாலா. ஒரு வேளை தன்னையே திரையில் தத்ரூபமாக பிரதிபலிக்க நினைக்கிறாரோ?
ReplyDeleteமொத்த தமிழ்நாட்டு ஜனங்களையும் மெண்டலாக்குற வரைக்கும் ஓய்வறியேன் பராபரமேன்னு சலம்பிக்கிட்டுத் திரியிறாராம் பாலா. மனசிலாயோ?
Deleteகரெக்டுதான்...இந்த கதையை அவருதுன்னு போட்டது தப்புதாங்கோ...டைட்டிலில் டேனியல் பேரு போட்டாலும். நான் கடவுள்லேயே ஜெயமோகனோட பாதி கதையை எடுத்துட்டு தன் பேரை மட்டும் போட்டுக்கிட்டாரு.ஆனாலும் இந்த படம் முக்கியமானதா எனக்கு படுது...முதல் பாதியில் வேதிகா பாத்திரம் செயற்கையானது என்றாலும் தன்ஷிகா காப்பாத்திட்டாங்க...
ReplyDeleteபடத்தை இந்த குத்து குத்தியிருக்கீங்க...பாலா உங்களுக்கு சம்பளபாக்கி ஏதாச்சும் வச்சிருக்காரா...அவரு நான் கடவுள்லே நடிச்ச பாகவதருக்கு முழுசா சம்பளம் தரலேன்னு பேசினாங்க...
நம்பள பாக்கியா விட்டு வச்சிருக்காரேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதை விட்டுட்டு,...
DeleteVery good unbiased review. Thanks.
ReplyDeleteநன்றி கரிகாலன்மாரே,..
Delete37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும்..
ReplyDeleteபாலா ஐந்தரை அடி உயரம் இருப்பார் என்று நினைக்கிறேன்.
அப்படி இருந்தால், அவர் எடை 37 கிலோ இருக்காது; 57 கிலோவாகவாவது இருக்கும்..at least 50 கிலோ எடையாவது இருக்கும்!
சாகும் தருவாயில் இருக்கும் கேன்சர் நோயாளிகளே, இந்த உயரத்திற்கு, இதை விட அதிக எடை இருப்பார்கள்...நான் இந்தியர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்...
அவர் 37 கிலோ எடை என்பது உண்மையா? இல்லை சும்மா எடுத்து உட்டதா?
உங்க முகவரி அனுப்புங்க,.. கடைசியா அவர் மெஷின்ல எடை பாத்த சீட்டை அனுப்பி வைக்கிறேன்,,..
ReplyDeleteராஜா இல்லாததால் படத்தை தியேட்டரில் பார்க்கக்கூடாது என ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன். நெட்டில் இப்போதான் நல்ல பிரிண்ட் வந்தது, இன்று தான் பார்த்து தொலைத்தேன்.
ReplyDelete"பால்நிலா பாதையில்" ராஜா தேயிலை தோட்ட அனுபவங்களை சில பக்கங்கள் விவரித்திருப்பார்; அது கொடுத்த வலியைக்கூட 2 மணி படம் தரவில்லை.
கதை சரியாக படமாக்கப்படவில்லை அல்லது உயிரறற்ற ஜடமாய் படம் கிடக்கிறது. விகடன் கொடுத்த மார்க் எல்லாம் அநியாயம்.
பிதாமகன்; நான் கடவுளுக்கு வாசித்த நோட்ஸையே திருடிக்கொண்டு வந்து வாசிக்க சொல்லியிருப்பார் போல பாலா, பயபுள்ள நோட்ஸ் கிடைச்ச சந்தோஷத்தில் விடாம வாசிச்சி வாசிச்சி வெறுப்பேத்துது. இதோட கதைக்களமே வேறு இதன் இசை வேறு மாதிரியாக இருந்திருக்க வேண்டும்.
பாலா முடிவுக்கு வருகிறார்.
விகடன் பத்தி எல்லாம் யாரும் இப்ப பொருட்படுத்துறது இல்ல. அவிங்க அம்பது மார்க்குக்கு மேல போட்டா படம் கன்ஃபர்மா ஊத்திக்கப்போகுதுன்னு அர்த்தம்.
Delete