கடந்த ஜனவரி மாதத்தின் இறுதி தேதிகளில் ஒரு நாள்,.. நண்பர்
’ஜீதமிழ்’ சுரேஷ் என்னை அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து, ஜீ’யில் ஞாயிறு தோறும் ‘ஸ்டுடியோ
6’ என்ற ஒரு சினிமா நிகழ்ச்சி வழங்க முடிவு செய்துள்ளோம். அந்நிகழ்ச்சிக்கு நீங்க ஸ்கிரிப்ட்
எழுதித்தர்றீங்களா?’ என்று கேட்டார்.
நண்பர் சுரேஷ் ‘ஓஹோ புரடக்ஷன்ஸ்’ படிக்கத்துவங்கி, நம்ம
வண்டவாளங்கள் அனைத்தும் தெரிந்திருந்தும் துணிந்து நண்பரானவர். கேட்டில் நிறுத்திப்பேசி
திருட்டுத்தனமாக ஸ்கிரிப்ட் கேட்காமல், மூத்த அதிகாரிகளிடமும் என்னையும், நமது ஓஹோ
புரடக்ஷன்ஸையும் அறிமுகப்படுத்தி எழுதச்சொன்னது, சமீப காலத்தில் நான் சந்தித்த மனதுக்கு
நிறைவான சம்பவங்களில் ஒன்று.
‘உங்க ப்ளாக்ல எழுதுற மாதிரி காண்ட்ரவர்ஸிகள் எல்லாம் வேண்டாம்.
நகைச்சுவை பிரதானமாக இருக்கட்டும்’ என்று சொல்லியபடி நிகழ்ச்சியை இயக்கப்போகும் ஸ்ரீனிவாஸ்
அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ‘இவர்தான்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறவர் ‘ என்று பெண்மணியாகிய ஒரு கண்மணியை அறிமுகப்படுத்தி
வைத்தார்கள்.
அவரைப் பார்த்ததும் நான் அடைந்த ஜெர்க்’கிற்கு அளவே இல்லை.
பிக் எஃப்.எம். ரேடியோவில் அண்டசராசரத்தையும் கண்டபடி அலசி ஆராய்ந்து பிழிந்து தொங்கப்போடுவாரே
அந்த இம்சை அரசி என்ற ஒப்பாரும் மிக்காரும் அற்ற ஒபீலியா.
ரேடியோவில் அவர் அடிக்கிற கமெண்ட்கள் கேட்டு பலமுறை நான்
கதி கலங்கிப் போயிருக்கிறேன். அன்று நேரில்
சந்திக்கும் வரை கண்டிப்பாக தூள் சொர்ணாக்கா மாதிரியான ஒரு தோற்றத்தில்தான் அவரை கற்பனை
செய்து வைத்திருந்தேன். ஆனால் நேரில் நேரு மாமி மாதிரி டீஸண்டாக இருந்தார்.
அக்காவுக்கு தமிழ் படிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை என்பதால்
ஒன்றிரண்டு சந்திப்புகளிலேயே என்னைப் புலவனாக ஏற்றுக்கொண்டு என் ஸ்கிரிப்டை அங்கீகரித்து,
காகிதத்தில் சிறு குறிப்புகளாய் எடுத்துக்கொண்டு தனது சடசடசட லாங்குவேஜில் கலக்க ஆரம்பித்தார்.
பவர் ஸ்டாரில் துவங்கி, விஜய் சேதுபதி, நீது சந்திராக்கள்
வழியாக ஒருவழியாக வரும் ஞாயிறன்று பத்தாவது நிகழ்ச்சியைத் தொடுகிறோம். ஒரு வெளம்பரமாக
நாங்கள் வெளியில் அவ்வளவாக இதை சொல்லிக்கொள்ளவில்லையென்றாலும், நிகழ்ச்சி ஓரளவு சூடு
பிடிக்க ஆரம்பித்திருப்பதை கடந்த முறை செக் வாங்க சென்றிருந்தபோது தெரிந்துகொண்டேன்.
முன்பே இதுகுறித்து ஓஹோவில் ஒரு பதிவு எழுதிருக்கலாமோ என்று
இப்போது தோன்றுகிறது.
சரி பத்து வாரங்கள் கழித்து இப்போது எழுதக் காரணம்? என் இதயம்
தொட்ட பாடகர் பி.பி.எஸ்ஸின் மறைவு குறித்து, வரும் ஞாயிறு ‘ஸ்டுடியோ6’ நிகழ்ச்சியில்
பின் இணைப்பாக கொஞ்சம் பேசலாம். எழுதி அனுப்புகிறீர்களா? என்று ஜீ தமிழில் இருந்து
வந்த அழைப்பு.
இதை மட்டும் ப்ளாக்கில் போட்டுக்கொள்ளலாமா என்று சுரேஷ் சாரிடம்
அனுமதி கேட்டு வெளியிடுகிறேன்.
வரும் ஞாயிறு இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் ‘ஸ்டுடியோ
6’ நிக்ழ்ச்சியில், இதை நீங்கள் சில விஷுவல்களுடன் பார்க்கலாம்.
ஸ்டுடியோ6’- பி.பி.ஸ்ரீனிவாஸ்
சில மரணச்செய்திகள்
வெறுமனே நமக்கு செய்திகள் மட்டுமே. ஆனால் சில மரணச்செய்திகள்
நம்மை நிலைகுலையச்செய்யும். அப்படி தமிழக மக்கள் அனைவரையும் இதயம் கலங்க வைத்த மறைவு, பாடகர்
பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுடையது.,,
70 களில் வந்த பாடல் என்றாலும் ‘காலங்களில்
அவள் வசந்தம்’ பாடலை உச்சரிக்காத ஏ.ஆர்.ரஹ்மான் ரசிக
உதடுகள் கூட எதாவது
இருக்கமுடியுமா?
1930-ல் ஆந்திரமாநிலம் காகிநாடா அருகிலுள்ள கொல்லபுரில் பிறந்த
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் எட்டுமொழிகளில் [கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், மற்றும்
துளு] 3000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய அசுர சாதனைக்கு சொந்தக்காரர்.
எட்டு மொழிகள் என்றால் வெறுமனே அம்மொழியின் கவிதை வரிகளைத்
தனது தாய்மொழியில் எழுதி வைத்துக்கொண்டு பாடுவதல்ல.
‘நான் பாடல்கள் பாடிய எல்லா மொழிகளும் எனது தாய்மொழிகளே’ என்று உரிமை
கொண்டாடும் அளவுக்கு அனைத்து மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றிருந்தார் ஸ்ரீனிவாஸ்.
பாடல்களில் கஷ்டமான சங்கதிகளைப் போட்டு ‘நீ வெறுமனே
கேட்பவனாய் மட்டும் இரு’ என்று ரசிகர்களை சங்கடப்படுத்தாமல் ‘ அவள் பறந்து
போனாளே’ என்று யார் வேண்டுமானாலும் பாடமுடிந்து விடுகிற எளிமையான
பாடும்பாணி அவருடையது.
‘கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்’ ‘நிலவே என்னிடம்
நெருங்காதே’ என்று அவர் பாடிய காதல் தோல்விப் பாடல்கள், காதலில்
தோல்வியுற்றவர்களின் இதயத்தை மயிலிறகால் வருடிக்கொடுக்கும் ரகம்.
60, 70 களில் எம்ஜியாரும், சிவாஜியும்
சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர்
போன்றவர்களுக்கு பின்னணி பாடி, அவர்களையும் முன்னணியில் இருக்க வைத்ததில் பெரும்பங்கு ஸ்ரீநிவாஸ்
அவர்களின் குரலுக்கு உண்டு. ‘திருடாதே’ படத்தில் பாடிய
‘உன்னருகே நானிருந்தால்’ போன்ற வெகு
சில பாடல்களே எம்ஜியாருக்குப் பாடியிருந்தார் பி.பி.எஸ்.
‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?’ பாட்டை
நாம் எத்தனை தலைமுறை கடந்தும் மறப்போமா? மறந்தால் இருப்போமா??
தெலுங்கில் சில கஜல் பாடல்களை இயற்றியுள்ள பி.பி.எஸ். ஒரு கைதேர்ந்த
கவிஞரும் கூட.
சென்னை ட்ரைவ்-இன் ஓட்டல் அப்புறப்படுத்தப்பட்டபோது, இதயம் நொறுங்கிப்போன
ஆத்மாக்களில் முக்கியமானவர் பி.பி.எஸ். ஏனெனில் தனது இறுதி தினங்களை அங்கே அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டும், தன்னிடம்
பேசவிரும்பும் ரசிகர்களிடம் தனது பழைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டும், இன்று வரை
நமது இதயங்கள் முனுமுனுக்கும் ‘சின்ன சின்னக் கண்ணிலே
வண்ணவண்ண ஓவியம்’ போன்ற பாடல்களை முனுமுனுத்துக்கொண்டும் கழித்து வந்தார்.
மனைவி,4 மகன்கள், ஒரு மகள், அவர்களது
வாரிசுகளுடன் பெருவாழ்வு வாழ்ந்த பி.பி.எஸ். தனது 83வது வயதில், நம்மை விட்டு
விடைபெற்றுக்கொண்டார். மனிதர்களாகிய நம்மால் எரிக்க முடிந்தது அவரது உடலை மட்டும்தான்.
எந்த நெருப்பால் எரிக்க முடியும் அவரது குரலை?
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’
நன்றி; ஜீ தமிழ் தொலைக்காட்சி
எத்தனை எத்தனை இனிய பாடல்கள்... பலர் உள்ளத்தில் என்றும் பாடிக் கொண்டிருப்பார்...
ReplyDelete/// பாட்டை நாம் எத்தனை தலைமுறை கடந்தும் மறப்போமா...? மறந்தால் இருப்போமா...? ///
நன்றி...
நன்றி அண்ணே,..
Deleteகண்களில் நீரை வரவழைத்த அஞ்சலி .அவர் புகழும் பாடல்களும் என்றும் நிலைக்கும் .
ReplyDeleteநன்றி ஆல்ஃபி,..
Delete:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ReplyDeleteநன்றி அக்கா நன்றி,,))))))))))))))
Deleteரொம்ப அருமை. மறக்க முடியுமா அந்த காவிய பாடல்களை ! ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள் . உங்க நண்பர்ட்ட சொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி ஏன் இப்ப நிகழ்ச்சி பண்றது இல்லன்னு கேட்டு சொல்ல முடியுமா சார் .
ReplyDeleteஅப்படியே சொன்னாலும் ‘அவர் சொல்றதெல்லாம் உண்மைன்னு எப்பிடி நம்புறது. இருந்தாலும் உங்களுக்காக கேட்டு வைக்கிறேன்.
Deleteசின்ன சின்ன கண்ணிலே A .M.ராஜா பாட்டு...திருத்திக்கொள்ளவும்.
ReplyDeleteஎன்னைக் காப்பாத்துறதுக்காக அடுத்த கடிதத்துல ஒரு தோழர் காத்திருக்காங்க. இருந்தாலும் நிகழ்ந்த தவறுக்கு வருத்தம்,...
Deletejeevasundari Balan
ReplyDelete’சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ பாடலைத்தான் அப்படி மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
என்னதான் புன்னகையோ,...
Deleteஒஃபி மேல இவ்ளோ அன்பா??,.
ReplyDeleteஅட நண்பா,..’குமுதம்’ பத்திரிகையில உங்கள கிசுகிசு எழுத தேடுறாய்ங்க. டிக்கட் எடுத்துட்டு உடனே கிளம்புங்க,..
Delete