Saturday, March 15, 2014

'படத்துல கதையே இல்லைங்குறேன்?’




 'படம் முடிந்து இன்னும் ஒரு சில வாரங்களில் ரிலீஸை நெருங்கும் வேளையில், நம்ம ‘சிநேகாவின் காதலர்கள்’ அனுபவம் குறித்து கொஞ்சமாவது ரீல் விடலைன்னா நல்லாருக்குமா?

முதல்ல பாடல்கள் பிறந்த கதை.

நானே ஒரு பாட்டாளிங்கிறதால, பாட்டுக்கள் இல்லாம படம் பண்றதைப் பத்தி, ஒரு சின்ன சிந்தனைகூட இல்லை.

தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம் நம்ம படவேலைகள் எதுலயும் தலையிட, ஆலோசனை சொல்லக்கூட விரும்பாததுனால, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாமே நம்ம சாய்ஸ்.  அந்த வகையில படத்தின் முதல் தொழில்நுட்பக்கலைஞர், என்னுடைய 32 ஆண்டுகால நண்பர் இரா.ப்ரபாகர். [இதை வச்சி எங்க வயசைக் கணக்குப்போடாதீங்க. அப்பிடியே கணக்குப்போடுறதா இருந்தா, சந்தானமும், உதயநிதி ஸ்டாலினும் மாதிரி, ’குவாகுவா’ காலத்துலருந்து நண்பர்கள்னு புரிஞ்சிக்கிட்டா சந்தோஷம்]

‘நல்லா யோசிச்சிக்கோ நீ ‘ராஜா’ வெறியன். புரடியூசர் கையிலகால்ல விழுந்து, அவர் மியூசிக்லயே படம் பண்ணி ஜென்மசாபல்யம் அடையிற வழியப்பாரு’ என்பதில் தொடங்கி, எனக்கு வேறு ஏதாவது உத்தேசங்கள் இருந்தால், வழக்கமான புன்னகையோடு எனக்கு வழிவிட அவர் தயாராகவே இருந்தார். [அது என்ன வழக்கமான புன்னகை என்பது தனிக்கதை. அதைப் பின்னர் செப்புகிறேன்.] எனக்கோ வேறு யோசனைகள் இல்லவே இல்லை.

ஆனால் ஒரு சிறு தயக்கம் மட்டும் இருந்தது. தயாரிப்பாளர் என்ன நினைப்பார்? வேறு யாரோ என்றால் கூசாமல் சொல்லிவிடலாம். எனது நீண்டகால நண்பர் ஒருவரை இசையமைப்பாளராக நியமிக்கும்பொழுது, தயாரிப்பாளருக்கு, அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அவருக்கு தரப்படும் இசையமைப்பாளர் வாய்ப்பு என்பது, நட்புக்காக அன்றி, அவரது திறமைக்காகவே தரப்படுகிறது என்பதை எப்படிச்சொல்வது?. ஏனென்றால் இது ஒன்றை ‘போட்டுவிட்டே’ படத்தையே இல்லாமல் ஆக்கிவிடும் வல்லுநர்கள் நிரம்பியது நமது கோடம்பாக்கம்.

 ப்ரபாவை இசையமைப்பாளராக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று தயாரிப்பாளர்  கலை அவர்களுக்கு விளக்க முயன்றபோது, ‘எல்லாமே உங்க மேல உள்ள நம்பிக்கையில செய்றப்போ, இதுமட்டுமில்ல இனி எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியமில்லை’ என்று எனக்கு 70 எம்.எம். சைஸில் க்ரீன் சிக்னல் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்த சில தினங்களில் நமது அலுவலகத்திலேயே கம்போஸிங் தொடங்கியது.

‘படத்துல எத்தனை பாட்டு வைக்கிறோம். என்னமாதிரி சிச்சுவேஷன்ஸ்?’- ப்ரபா.

‘படத்துல கதையே இல்லைங்குறேன். அப்புறம் எங்க சிச்சுவேஷன்ஸ் சொல்லுறது. ஒரு அஞ்சு பாட்டு போட்டுக்குடுங்க. ஆடியோ ரிலீஸைன்னைக்கு நெஞ்சைத்தொடும் அஞ்சு பாடல்கள்னு விளம்பரம் பண்றதுக்கு ஏத்தமாதிரி’.

இப்பிடித்தாங்க ‘சிநேகாவின் பாடல்கள்’ கம்போஸிங்கை நான்சிங்கா ஆரம்பிச்சோம்.

முன்னமாதிரி எஸ்கேப் ஆகமுடியாது. ரெண்டேநாள்ல தொடருவேன். அதுவரைக்கும் யூடுப்ல போய் நம்ம முதல் பாட்டைக்கேட்டுக்கிட்டிருங்க.

http://www.youtube.com/watch?v=SBCw1A_2Mm8.


[ப்ரபாவும் நானும் சேர்ந்து இருக்குற ஸ்டில்ஸ் வச்சிருக்குற  அமெரிக்கன் காலேஜ் புண்ணியவான்கள் அனுப்பி வையுங்கப்பா]

1 comment:

  1. வணக்கம் நண்பர்களே
    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete