Saturday, January 14, 2012

வேட்டை’- 32 கோடி செலவில் போடப்பட்ட கழுதை விட்டை.



நேற்றைய பிரஸ்மீட் பற்றி நான் எழுதி இருந்தது 100 சதவீதம் பலித்து விட்டது.படம் போட்ட யார் முகத்திலும் முழிக்கமுடியாது என்று தெரிந்தேதான் முதல் நாளே பத்திரிகையாளர்களைச் சந்தித்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் லிங்குசாமி.

நேற்று அவர் ‘வேட்டை’ இந்திப்படம் மாதிரியே இருக்கு என்று பீத்திக்கொண்டபோது, அவசரப்பட்டு நான் கொஞ்சம் கோபப்பட்டுவிட்டேன். அதற்காக நான் மும்பை வரை கூட வந்து மன்னிப்பு கேட்கத்தயார்.படம் ரொம்ப கேவலமா இருந்தா இனிமே இந்திப்படம் மாதிரி இருக்குன்னு சொன்னா தமிழர்களுக்கு பெருமை தானே?   சரி விமரிசனத்துக்கு வருவோம்.
சமீபகாலமாக தமிழ்ப்பட டைட்டில் கார்டுகளில் டைரக்டர்களின் பெருந்தன்மை பல்வேறு வழிகளில் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.முன்பெல்லாம்   கதை விவாதத்தில் கலந்து கொள்பவர்களை பெரும்பாலும் இயக்குனர்கள் இருட்டடிப்பு செய்வார்கள்.

யு.டி.வி.மோசன் பிக்‌ஷர்ஸும், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் ‘வேட்டை’ படத்தில்’ கதை விவாதக்குழு’ என்று ஒரு  ஏழெட்டுப்பேருக்கு தனி கார்டே போடுகிறார்கள்.லிங்கு இவர்களுக்கு நல்ல சம்பளம் தந்திருப்பதற்கான வாய்ப்பும் உண்டு. எஃப்.ஐ.ஆர். பிரகாரம் இவர்கள் மூன்றாவது ரக குற்றவாளிகள் என்பதால் இவர்களை கடைசியில் கவனிப்போம்.

பெரிய பங்களா,பி.எம்.டபிள்யு.கார் போன்ற வசதிகள் எல்லாம் வந்த பிறகு, சிலருக்கு, தன்னை இந்த உயரத்துக்கு தூக்கிவிட்ட சினிமா கலை வடிவத்தை ஒரு இன்ச்சாவது உயர்த்துவோம் என்று தோணாமல், இஷ்டத்துக்கு  கூத்தடிக்கும் மனோபாவம் வந்து விடுகிறது.

’வேட்டை’ பார்க்கும்போது அப்படி கூத்தடிப்பதான உச்சக்கட்ட ஃபார்மில் லிங்குசாமி இருப்பது நன்றாகவே தெரிகிறது.

பார்த்துப்பார்த்து சலித்துப் போன போலிஸ் கதையை மீண்டும் கையில் எடுத்ததற்காகவே எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக லிங்குசாமியை சேர்க்கலாம். 64 சீன்கள் அடங்கிய இந்தப் படத்தைப்பார்க்குபோது, எம்ஜிஆரின் ‘நீரும்நெருப்பும்’ நாடோடிமன்னன்’ பார்த்தால் பசிதீரும்,தொடங்கி, பாக்யராஜின் ‘அவசர போலிஸ்115’ வரை குறைந்தது 64 படங்களாவது ஞாபகத்தில் வந்து போகின்றன.

அண்ணன் மாதவன் சரியான பயந்தான்கோழி, தம்பி ஆர்யாவோ அடிதடியில் கில்லாடி.தாத்தா போலிஸ், அப்பா போலிஸ் வரிசையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாதவனும் போலிஸாகி , ரவுடிகள் நிறைந்த தூத்துக்குடியில் டூட்டியில் ஜாயின் பண்ணுகிறார். சமீரா ரெட்டியும், அமலா பாலும் அக்கா தங்கைகள். அண்ணன் மாதவனுக்கு சமீரா ரெட்டியை பொண்ணு பாக்கப்போன இடத்தில் ஆர்யா அமலாபாலை டாவடிக்க ஆரம்பித்துவிடுகிறார்...

இதற்கு மேல் கதையைச் சொல்லி  உங்களுடனான சுமுகமான உறவைத் துண்டித்துக்கொள்ள விரும்பவில்லை.

முதல் ரீல் முடிவில் ஒரு பாட்டு, ரெண்டாவது ரீல் முடிவில் ஒரு ஃபைட்டு, என்று ரெகுலர் மசாலாவை நூல் பிடித்து வேட்டையில் அளந்திருக்கிறார் லிங்கு.படம் பாக்கையில  நெஞ்சு வலிக்குது பங்கு.

எஃப். ஐ. ஆரில் இரண்டாவது குற்றவாளியாகப் பதிய வேண்டியவர்கள், லிங்குவிடம் இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாகக் கரம் கோத்திருக்கும் யு.டி.வி.மோசன் பிக்‌ஷர்ஸ். பாத்துடி, மாப்ளைங்களா இது மாதிரி இன்னும் ஒரு ரெண்டு படத்துல குனிஞ்சீங்கன்னா உங்க கம்பெனி பேரு யு.டிவி மோசம்போன பிக்‌ஷர்ஸா மாறி அதுக்கு அப்புறம் இன்னும் ரெண்டு படத்துல குனிஞ்சீங்கன்னா லூஸ் மோஷன் போற பிக்‌ஷரா மாற வேண்டி வரும்.

நடிகர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.போட வேண்டியதில்லை. மாதவனிடம் ஹீரோ லுக் போய் ‘அங்கிள்’ மாதிரி காட்சி அளிக்க ஆரம்பித்துவிட்டார். ஆர்யாவுக்கு வெறும் கையால் நூறு ரவுடிகளை அடிக்கும் ‘ஷேம்’ பப்பி ஷேம்  வேலை.கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் செய்திருக்கிறார்.

சமீரா ரெட்டியும், அமலா பாலும்,ரொம்ப சுத்தபத்தம் பார்க்கிறவர்கள் என்று நினைக்கிறேன். படத்தில் அடிக்கடி குளித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ரசிகர்களை ரவுண்டு கட்டி வேட்டை ‘ஆடும் இவர்களுக்கு மத்தியில்  யுவன் கொஞ்சம் தேவலாம். ஆனால் பாடல்கள்  படமாக்கப்பட்ட விதம் லிங்குவின் பழைய பட பாடல்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.

நா.முத்துக்குமார் தன் பங்குக்கு ‘ஆத்தாடி, காத்தாடி என்று கூத்தாடியிருக்கிறார்.

இப்போது மூன்றாவது ரகக்குற்றவாளிகளுக்கு வருவோம். ’கதை(?) விவாதக்குழுவில் இடம் பெற்ற மகாஜனங்களே...
லிங்குசாமி எவ்வளவு பெரிய டைரக்டர்? உங்களை நல்ல எழுத்தாளர் என்றோ கதை சொல்லி அல்லது நல்ல சீன் சொல்லி என்றோ நம்பித்தானே, சம்பளம் கொடுத்து,டைட்டில் கார்டில் தனியாக பேர் போட்டும் கவுரவித்திருக்கிறார். இவ்வளவு நடந்தும்  எல்லாருமா சேர்ந்து  ஏம்பா  சொந்தமா ஒரு நல்ல சீன் கூட சொல்லாம ஓ.பி அடிச்சீங்க? [இதை மட்டும் தங்கப்பதக்கம் சிவாஜி குரலில் படிக்கவும்]

படத்தின் பட்ஜெட் 32 கோடியாம். அப்ப ‘வேட்டை 32 கோடி செலவில் போடப்பட்ட கழுதை விட்டை.
ஒரு ஆறுதலான பின்குறிப்பு; வேட்டை’ படம் தொடங்குவதற்கு முன்னர், இயக்குனர் பாலாஜி சக்திவேல், லிங்குவின் திருப்பதி பிரதர்ஸுக்காக இயக்கியிருக்கும் ‘வழக்கு எண் 33\9 படத்தின் ட்ரைலர் போட்டார்கள். இனம் புரியாத ஏதோ ஒன்றை உண்டாக்குகிறது அந்த ட்ரைலர். தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதுமையான படைப்பை பாலாஜி சக்திவேல் தரக்கூடும் என்று கட்டியம் கூறுகிறது அந்த ட்ரைலர். சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க பிரதர்ஸ்.














2 comments:

  1. விமர்சனம் நச்சன்னு இருக்கு

    //பெரிய பங்களா,பி.எம்.டபிள்யு.கார் போன்ற வசதிகள் எல்லாம் வந்த பிறகு, சிலருக்கு, தன்னை இந்த உயரத்துக்கு தூக்கிவிட்ட சினிமா கலை வடிவத்தை ஒரு இன்ச்சாவது உயர்த்துவோம் என்று தோணாமல், இஷ்டத்துக்கு கூத்தடிக்கும் மனோபாவம் வந்து விடுகிறது.///

    you just reflected what i have been feeling

    note:pls remove word verification

    ReplyDelete
  2. அவ்வளவு மோசமாவா இரூக்கூ... (வடிவேலின் வரும் வராது காமெடி பாணியில் படிக்கவும்) எனக்கு அப்படி தெரியிலயே.. நல்லாத்தானே பொழுது போக்குறாங்க நம்ம மக்கள்!

    ReplyDelete