‘வேட்டை’ நாளை ரிலீஸாவதை ஒட்டி கிரீன்பார்க் ஓட்டலில் இன்று மதியம் ஒரு பிரஸ்மீட் வைத்திருந்தார் லிங்குசாமி.
பொதுவாக படம் ரிலீசான அன்றோ மறுநாளோ பிரஸ்மீட் நடக்கும். மக்கள் சில கேள்விகளைக்கேட்பார்கள்.முடிவி
படம் போடுவதற்கு முந்தின நாள் என்ன கேள்வி கேட்பது என்ற சரளமான சந்தேகம் பலருக்கும் இருந்துகொண்டுதான் இருந்தது.
சரி, வந்ததுக்கு சமிரா ரெட்டிக்கும், அமலாபாலுக்கும் ஒரு வந்தனம் வச்சிட்டு மனசுக்குள்ள அதையே சந்தனமாப் பூசிக்கலாம் என்று பார்த்தால், அவர்கள் எல்லாம் இல்லாமல் வெறுங்கையை வீசிக்கொண்டு,தனி ஆளாய் வந்தார் லிங்கு.
மைக்கைப்பிடித்து, ‘’ச்ச்சும்மா உங்களைப்பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன் ‘என்று ஆரம்பித்தவர், பேசிய பத்து நிமிடங்களில்,ஒரு பதினந்து முறையாவது’வேட்டை’ இந்திப்படம் மாதிரியே வந்திருக்கு’ என்று தனக்குத்தானே புல்லரித்துக்கொண்டார்.
‘வேட்டை’ தமிழ்ப்படம் தானே பிறகு ஏன் அது இந்திப்படம் மாதிரி வரணும் ? என்று யாராவது கேட்பார்கள் என்று பார்த்தேன். யாரும் கேட்கவில்லை.
அடுத்து இதே ‘வேட்டை’யை ரோனி ஸ்குருவாலா இரண்டு தினங்கள் முன்பு பார்த்துவிட்டு அவரும் இந்திப்படம் மாதிரியே சூப்பரா இருக்கு.இதை நீங்களே இந்தியில ரீ-மேக் பண்ணிக்குடுங்க என்று லிங்குவிடம் போனில் பேசினாராம்.
ரோனி இந்திக்காரர், தமிழ்ப்படங்களை விட இந்திப்படங்கள் மேல் என்று அவர் நினைப்பதில் தவறில்லை. ஆனால் பச்சைத்தமிழர் லிங்குவும் கூட இந்திப்படம் மாதிரி இருக்கு என்று பெருமைப்பட்டுக்கொள்கிற அளவுக்கு தான் ’வளர்ந்திருக்கிறார்’
தமிழ் ரசிகனின் பர்ஸிலிருந்து கோடிகோடியாக கொள்ளையடித்துவிட்டு,இவர்கள் புத்தி முழுக்க ஹிந்தியில் பேர் வாங்குவதிலேயே இருக்கிறதை நினைத்து வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா என்றே தெரியவில்லை.
.
எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் ‘அட தமிழ்ப்படம் மாதிரி சூப்பரா இருக்கு என்று ஏதாவது ஸ்குரு வாலாவோ, ஸ்குரு கழண்ட வாலாவோ சொல்லும் வகையில் லிங்கு ஒரு படம் எடுத்து தமிழை ஒரு அங்கு’ லமாவது உயர்த்துவாரா?
******************************
சில நாட்களில், சொல்லிவைத்தாற்போல் தொடர்ந்து சொதப்பல்களாகவே நடக்கும்.
லிங்குவின் தொடர்ச்சியாக தேவிஸ்ரீதேவி தியேட்டரில் மைனா விதார்த் குருவி’ யாக மாறிய ‘கொள்ளைக்காரன்’ படம் பார்த்தேன்.
விதார்த்,’மைனா’ படத்தின் மூலம் பிரபலமானதால், இந்தப்படத்தில் அவருடைய கேரக்டரின் பெயர் குருவியாம்.
நல்லவேளை இந்தப்படம் கண்டிப்பாக ஓடாது என்பதால் அடுத்தடுத்த படங்களில் அவருக்கு ,காடை, கவுதாரி என்று பெயர் வைக்கமாட்டார்கள் என்று தெம்பாக இருக்கலாம்.
’தொட்டுப்பார்’ மற்றும் ‘மைனா’ பார்த்தபோது, கூத்துப்பட்டறையிலிருந்து வந்த இந்த விதார்த் எதார்த்தமான ஹீரோவாக பிரகாசிப்பார் என்று லேசாக நம்பினேன்.
’நீங்க நம்பினா அதுக்கு நானா பொறுப்பு? என்று ஏ.வி.எம்மின்’முதல் இடம்’ படத்தில் என் நம்பிக்கையில் ஒரு கூடை மண் அள்ளிப்போட்ட விதார்த், இந்தப்படத்தில் அதே மண்ணை கார்ப்பரேஷன் லாரியில் அள்ளி வந்து கொட்டிவிட்டார்.
படத்தின் நாயகி சஞ்சிதா ஷெட்டி, பேக்கரியில் அப்போதுதான் சுட்ட ஃப்ரெஷ் ரொட்டி மாதிரி இருக்கிறார்.’தில்லாலங்கடி’யில் தமன்னாவின் தங்கையாக வந்த இவருக்கு பலர் ஜொள்ளு விட்டது தெரியாமல் ’புதுமுகம்’ என்று ஒரு கார்டு போட்டு கொள்ளைக்காரன் டைரக்டர் தன் பங்குக்கு தில்லாலங்கடி செய்கிறார்.
கதை இதுதான். ஊர்ல ஆடு,மாடு,கோழிகளைத்திருடுற விதார்த்,ஹீரோயினோட மனசைத்திருடன உடனே,இதுக்கு மேல திருட ஒண்ணுமேயில்லைன்னு திருந்திடுறார்.ஆனா இந்த உலகம் அவரைத் திருந்தி வாழ விட்டுச்சா? இதுக்கு மேல உங்களுக்கே தெரியும்.
ரிலீஸுக்கு முன்னாடி, எங்க படத்தோட கதைய 'மலை'மாதிரி நம்பி ரெண்டு பெரிய படங்களோட போட்டி போடுறோம்னு கொள்ளைக்கார கோஷ்டிங்க போட்டி சாப்பிட்டுக்கிட்டே பேட்டி குடுத்தாங்க.
கதையில ’ம’ இருக்கு ஆனா’ லை’ யக்காணோம். கொள்ளைக்காரனை வைத்து பொங்கலுக்கு வீட்டில் வெள்ளை மட்டும்தாம் அடிக்கமுடியும்.
சுமாரான தகவலைகூட , சுவாரஷ்யமான உங்கள் எழுத்து நடையில் படிக்க மிகவும் பிடித்திருக்கு. அசத்துங்க ! இனி அப்பப்போ வந்து போவேன். எனது கருத்தையும் வெளிப்படையா சொல்வேன்.
ReplyDelete