துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை என்று எனக்கு நானே பலமுறை சொல்லிக்கொண்டு இன்று ஒரு படம் பார்க்க கிளம்பினேன்.
மாட்டுப்பொங்கலும் அதுவுமாய் நான் எடுத்த முடிவு சரியானதே என்று என் உள் மனசு வேறு உற்சாகப்படுத்திக்கொண்டேஇருந்தது.
ஏனெனில் மாடுகளிடம் அவருக்கு இருந்த நெருக்கம்போல் வேறு யாருக்கும் இருந்ததாய் எந்த ஏடுகளிலும் நான் படித்ததில்லை.
நமது பத்திரிகையாள நண்பர்கள் இருக்கிறார்களே சில நேரங்களில் அவர்கள் பாறாங் கல் நெஞ்சக்காரர்களாக மாறி விடுகிறார்கள். சில பேருக்கு போனைப்போட்டு, புது டைரக்டருங்க சில நேரம் எதிர்பாராம பின்னி எடுத்துடுவாங்க. படம் ‘சேது’ மாதிரி வந்திருக்காம்.மிஸ் பண்ணிடாதீங்க என்று கொஞ்சமும் சிரிக்காமல் கெஞ்சிப்பார்த்தேன். என் பாச்சா பலிக்கவில்லை.
கடைசியில் 90 சதவிகிதம் பேர் ஆப்செண்ட் ஆனநிலையில் மக்கள் நாயகன் அண்ணன் ராமராஜனின் ‘மேதை’ பிரஸ் ஷோ இன்று மாலை 4ஃப்ரேம்ஸ் தியேட்டரில் நடைபெற்றது. யாரும் பயந்து என் ப்ளாக்கை விட்டு எழுந்து ஓடி விடாதீர்கள் . கண்டிப்பாக இந்தப் படத்துக்கு நான் விமரிசனம் என்ற ஒன்று எழுதமாட்டேன். ஆனால் அதற்காக இந்தப்படத்தைப் பற்றி எதுவுமே பேசக்கூடாது என்ற அராஜகப்போக்கையும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.
நான் கெஞ்சிக்கூத்தாடி அழைத்தும் வராமல் போன வஞ்சகர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
படம் போடுவதற்கு 5நிமிடங்கள் முன்னர், லேசாக விந்திவிந்தி நடந்தபடி
ஸ்கிரீன் அருகே வந்த மக்கள் நாயகன், 11 வருட இடைவெளிக்குப்பின் வரும் ‘மேதையை ஆதரித்து எழுதும்படி கேட்டுக்கொண்டு ஒரு மிக சிறிய உரை மட்டுமே நிகழ்த்தினார். அதாவது ‘மேதை’ அண்ணனின் 44 வது படம். இன்னும் அட்லீஸ்ட் 6 படங்களிலாவது நடித்து அரை செஞ்சுரியாவது அடிக்க விரும்புகிறார். [அதை மக்கள் விரும்புகிறார்களா?] என்பது அவரது பேச்சில் தெரிந்தது.
ஒரு வழியாக படம் துவங்கியது.அஜீத் ,விஜய் பாணியில் அண்ணனுக்கு ஒரு பட்டைய கிளப்பும் ஓபனிங் சாங் வைத்திருந்தார் டைரக்டர்.
வயலும் வாழ்வும் புரோக்கிராமே எவ்வளவோ மேல் என்று நினைக்கும்படி காட்சிகளை அவ்வளவு திராபையாக அமைத்திருந்தார் இயக்குனர் சரவணன்.
அண்ணனுக்கு ஜோடியாக நடித்திருந்த அண்ணியின் பெயர் எவ்வளவு யோசித்தும் ஞாபகத்துக்கு வராததால், இப்போதைக்கு அவருக்கு ஹன்சிகா கீத்வானி என்று வைத்துக்கொள்கிறேன்.
கதைப்படி ஒரு கபடி பிளேயரான கீத்வானி அண்ணன் ராமராஜனின் வாழ்க்கையில் கபடி விளையாடுவதற்காக அவரது வீட்டுக்கு வருகிறார். அண்ணனின் நடவடிக்கைகளைப்பார்த்து அவர் மீது நாட்டம் கொள்ளும் அண்ணி,’உன்னை என் மனசு தொத்திக்கிச்சி என் அந்தரங்கம் பத்திக்கிச்சி’ [ஃபயர் சர்வீசுக்கு போன் பண்ணுவமா?] என்று ஒரே ஒரு டூயட் மட்டும் பாடி விட்டு உடனே திருமணம் செய்து கொள்கிறார்.
உன் குழந்தைகளும், என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகின்றன என்று ஆகிவிட்ட சமூகத்தில், சமீபகாலமாக தமிழ்சினிமாவில் என்ன உலக சினிமாவிலேயே முதலிரவு காட்சியைப்பார்த்து ரொம்ப நாளாச்சி.
அண்ணன் ராமராஜன் மாதிரி ஒரு யூத் ஹீரோவை வைத்துக்கொண்டு முதலிரவு காட்சியை வைக்காமல் போனால் எப்படி என்று டைரகடர் நினைத்தாரோ என்னவோ சுமார் 500 அடி நீளத்துக்கு ஒரு முதலிரவு காட்சியை 'மேதை' யில் வைத்திருக்கிறார்கள். அதை மட்டும் விளக்கிவிட்டு விடைபெறவிரும்புகிறேன்.
கதைப்படி பள்ளிக்கூட வாத்தியாரான அண்ணன், தனது திருமண நாளன்று தனது முதலிரவையும் மறந்து, மறுநாள் பரீட்சை எழுதப்போகும் மாணவர்களுக்கு டியூசன் எடுத்துக்கொண்டிருக்கிறார். பால் சொம்புடன் இதை பலமுறை எட்டிப்பார்க்கும் அண்ணி, கலவிக்கு வரவேண்டிய அண்ணனின் கல்விச்சேவையை ரசிக்கிறார். ஒருவழியாக மாணவர்களை அனுப்பிவிட்டு முதலிரவுக்கு வந்து சேரும் அண்ணன் அண்ணியிடம் பால் சொம்பைக்கேட்க அண்ணி பாலை டம்ளரில் ஊற்றும்போது, ஏழே பேரைக்கொண்ட மொத்த தியேட்டரும் அதிர்ச்சியில் உறைகிறது.
ஏனென்றால் அண்ணன் அண்ணியைக் காக்கவைத்த நேரத்தில் பாலும் அண்ணனின் கல்விச்சேவைப்பார்த்து உறைந்து போய் தயிராக மாறி விட்டதாம்.
மேலும் தொடர்ந்த இந்த முதலிரவு காட்சியைப் பார்த்தவுடன், எனக்கு இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் ஆசையே வந்துவிட்டது. மனைவியும் பிள்ளைகளும் ஒத்துக்கொள்வார்களா என்றுதான் தெரியவில்லை.
இந்த டைட்டிலுக்காக மட்டுமே...’2012ன் மிகச் சிறந்த நக்கல் எழுத்து நாயகன்’ பட்டத்தை (இன்னமும் தீராத சிரிப்போடும், சிலிர்ப்போடும்) திரு.முத்துராமலிங்கன் அவர்களுக்கு சக பத்திரிகையாளர்கள் சார்பாக வழங்குகிறேன்! ஆஹா...என்ன ஒரு பஞ்ச்!
ReplyDeleteதூக்கு மேதை பஞ்சு மேதை என ஓப்பனிங்லேயே சிக்ஸர் அடிக்கிறது உங்கள் எழுத்துக்கள்.. ஹலோ.. நல்லா கலக்குறீங்க.
ReplyDeleteதூக்கு மேதை பஞ்சு மேதை என ஓப்பனிங்லேயே சிக்ஸர் அடிக்கிறது ரிவ்வ்வ்யூ..கலக்குறீங்க பாஸ்
ReplyDelete