Tuesday, January 24, 2012

'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் அண்ணனே என் அண்ணனே'- நக்கீரனில் என் கதை-8

திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்க மலரில் நக்கீரனில் நான் ஆபீஸ் பாயாக வேலை பார்த்ததாக  எழுதியிருந்ததைக் கண்டு கோபால் ஆச்சர்யப்பட்டதில், பதிலுக்கு நாமும் ஆச்சரியப்பட்டுக்கொள்வதைத்தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஏனெனில் நான் மக்கள் தொடர்பாளராக வேலை பார்த்தது ஒரே ஒரு   படம். பாலா இயக்கியபிதாமகன்தான் அந்தப்படம். டாக்டராக, எஞ்சினீயராக ஆகியிருக்க வேண்டிய ஒரு சிலர் எதிர்பாராத விபத்தால் நடிகர், நடிகை ஆனமாதிரி ஒரு படத்தில் அதுவும் ஒரேஒரு படத்தில் நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியதும் ஒரு விபத்தே. அப்படி 'பிதாமகனில்' மக்கள் தொடர்பாளராக பணியாற்றாமல் போயிருந்தால், இன்று பவர் ஸ்டார் சீனிவாசன், பாபுலர் ஸ்டார் டி.ராஜேந்தர் மாதிரி நானும் பெரிய நடிகர் ஆயிருப்பேன். 

அந்த வாய்ப்பில் மண் அள்ளிப்போட்டவர் என் அமெரிக்கன் கல்லூரி ஜுனியர் மாணவரான இயக்குனர் பாலா. அந்தக்கதைக்கு அப்புறம் போவோம். முதலில்  கோபால் அண்ணன் கதைக்கு வருவோம்.

கோபாலை சந்தித்த மறுதினம் கோபால் என்னைப்பற்றி அடித்த கமெண்ட்களை சொன்ன நண்பர், எனக்கே நீங்கள் ஏன் அவ்வாறு எழுதினீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.இணை ஆசிரியராக இருந்துவிட்டு உங்களை நீங்களே மட்டம் தட்டிக்கொண்டு ஆபிஸ் பாயாக வேலை பார்த்ததாக எழுதியது ஏன் என்று கேட்டார்.

பதிலுக்கு அவரிடம் நக்கீரனில் வரும்சேலஞ்ச்தொடரை என்றாவது படித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். [சேலஞ்ச்தொடரானது நக்கீரன்என்னத்தை சாதித்தது என்பது மாதிரியான கோபால் மற்றும் காமராஜின் தம்பட்டங்கள் மட்டும்]

 நான் வேலை செய்யும் படம் தொடர்பான செய்திகள் வந்தால் அதை மட்டும் படித்துவிட்டு செய்தியை சம்பந்தப்பட்டஇயக்குனர்களிடமோ, நடிகர்களிடமோ  சேர்த்து விடுவேன். அதைத்தாண்டிசேல்ஞ்ச்படிக்கிற தில்லெல்லாம் எனக்கு கிடையாது ‘’என்றார்.

நக்கீரனில் நான் வேலைக்கு சேர்ந்த தினத்திலிருந்து வேலையை விட்டு நின்ற கடைசி நாள் வரை என் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் எவ்வளவு என்பது ஒரு சிறிய கூட்டத்துக்குத்தானே தெரியும். அவர்களும் கண்டுகொள்ளவா போகிறார்கள் என்று நினைத்து சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு கொடுத்த இடத்தைகூட எனக்கும் ஆசிரியர் துரைக்கும்  அந்தத்தொடரில் அவர்கள் கொடுக்காத போது நான் ஏன் ஆபிஸ் பாயாகத்தான் வேலை பார்த்தேன் என்று ஒரு இடத்தில் பதிவு செய்து மேலும் கோபாலை சந்தோஷப்படுத்தக்கூடாது என்று நினைத்துதான் அவ்வாறு எழுதினேன் என்றேன். நண்பர் உங்க பஞ்சாயத்தப்பத்தி பேச நான் யார் என்பது போல் பார்த்துவிட்டு அடுத்த டாபிக்குக்கு தாவி விட்டார்.

மற்றபடி, அண்ணனாக பத்திரிகையை ஆரம்பித்தவர் ஒருதரமானமுதலாளியா மாறிவிட்டாரே? என்ற சிறு மன வருத்தத்தோடு மட்டுமே நான் நக்கீரனை விட்டு நின்றேன்.

அப்படி வேலையை விட்ட நின்ற நாளில் கூட ஒரு பகீர் நிகழ்ச்சி நடந்தது.

இப்போது பிரபலமாகிவிட்ட பர்வீன் ட்ராவல்ஸ்க்கு அப்போது ஒரேஒரு பஸ்தான் இருந்தது.சென்னை டு மதுரை டு சென்னை டிக்கட் விலை 30ரூபாய் என்று ஞாபகம்.
நக்கீரனுக்கு மிக நெருக்கமான டிராவல்ஸாக பர்வீன் விளங்கியது.
 ஆபிசில் கணக்கு எதுவும் முடிக்காமல் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இன்றுதான் நக்கீரனில் கடைசி நாள் என்று நினைத்தபடி பர்வீனில் எனது உடை மற்றும் கேமராவோடு ஏறிக்கொண்டேன்.
 எடிட்டர் துரையிடம் மட்டுமாவது சொல்லியிருக்கலாமோ?  அவர் நம் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளை, பஸ் தேனாம்பேட்டை சிக்னல் அருகே திடீர் பிரேக் போட்டு நின்றது.
எட்டிப்பார்த்தால் நடு ரோட்டில் பஸ்ஸை மறித்தபடி நக்கீரன் ஆட்டோ.................................. [பயணம் தொடரும்]

1 comment:

  1. கதை செம திரில்லிங்கா போகுது!

    ReplyDelete