Wednesday, December 14, 2011

உச்சிதனை முகர்ந்தால்..விமரிசனம்..தமிழுணர்வு வியாபாரம்?


ஈழத்தமிழர்களின் மீது பரிவு பாராட்டி ஏற்கனவே,’காற்றுக்கென்ன வேலி’ எடுத்த புகழேந்தி தங்கராஜின் மற்றுமொரு தமிழுணர்வுப்படம்' உச்சிதனை முகர்ந்தால்’.

நடந்தது ஒரு நிஜ சம்பவம் என்பதற்கு அழுத்தம் தரும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றோடுதான் கதையே துவங்குகிறது. ஈழத்தமிழ் உணர்வாளரான நடேசன் (சத்யராஜ்) அவரது மனைவி சங்கீதா மற்றும் அவர்களது குடும்ப டாக்டர் மூவரும் அமர்ந்து நடந்ததை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

லட்சக்கணக்கான தமிழர்கள் சிங்களவெறியர்களால் கொல்லப்பட்ட முல்லிவாய்க்கால் கோரத்தில்,  ஒரு இளம் சிறுமிக்கு என்ன நடந்தது என்பதை மட்டும் சொல்லத் துவங்குகிறார் இயக்குனர் புகழேந்தி.பதின்மூன்று வயதே ஆன சிறுமி புனிதவதி.,சிங்களவெறியர்களால் கும்பலாகக் கற்பழிக்கப்பட்டு, கர்ப்பிணி ஆகிறாள். இந்த கர்ப்பத்தை கலைக்கும்பொருட்டு, புனிதவதியும் அவளது தாயாரும் கள்ளப்படகில் தமிழகம் வந்து சத்யராஜிடம் தஞ்சமடைகிறார்கள். சத்யராஜின்,குடும்ப டாக்டரோ,புனிதவதி கர்ப்பமடைந்து 4 மாதத்துக்கும் மேல் ஆகியிருப்பதால்.கலைப்பது புனிதாவின் உயிருக்கு ஆபத்து என்கிறார். அதேசமயம், இந்தக்குழந்தையைப் பிரசவிக்கும் சக்தியும் புனிதாவுக்கு இல்லை என்றும் டென்சன் ஏற்றுகிறார்..
இதே நேரத்தில் சத்யராஜின் மனைவி சங்கீதாவும் கர்ப்பமாக இருக்கிறார்.20 வருடங்களுக்கு முன்பே,(திருமணம் ஆகாமல் கர்ப்பமானதால்),தனது தாயால் வலுக்கட்டாயமாக அபார்ஷன்’ செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட கர்ப்பமாம் இது.
இந்த இரண்டு கர்ப்பவதிகளையும் வைத்துக்கொண்டு சத்யராஜ் படாதபாடு படுகிறார். இந்த சோதனை போதாதென்று இடைவேளை விடும்போது, புனிதாவுக்கு எய்ட்ஸ் இருப்பதாக இன்னொரு குண்டைத்தூக்கிப் போடுகிறார் இயக்குனர்.

இடைவேளைக்குப்பிறகு வேதனைமேல் வேதனையாக காட்சிகள் நகர்கின்றன. க்ளைமேக்ஸில் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தையைப்பெற்றுவிட்டு புனிதா இறந்துவிடுகிறார்.அந்தக்குழந்தைக்கும் எய்ட்ஸ் இருந்தது என்று முடிக்கிறார்கள்.

ஈழத்தமிழன் மீது உணர்வு இல்லாதவன் ஒரு தமிழனாகவே இருக்கமுடியாது என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த ’7ம் அறிவு’ ஈழ உணர்வு வியாபாரத்தை சிறப்பாக செய்தது.
 இந்தப்படமும் அப்படிப்பட்ட முயற்சியோ என்று சந்தேகிக்காமல் இருக்கமுடியவில்லை.

இந்த சூழலில் தமிழச்சி ஒருத்தி சிங்களகும்பலால் கற்பழிக்கப்பட்டதை காட்டுவதனால் என்ன பயன்? உண்மைச்சம்பவம் என்றாலும் நாம் கேவலப்பட்டதை 2/30 மணி நேரம் பிடில் வாசிப்பதால் (அதுவும் ஈழத்தமிழர்கள் செலவிலேயே) என்ன பிரயோசனம்?

இதற்குப்பதில் ,கற்பனையாகக்கூட இருந்து விட்டுப் போகட்டும், இப்படி தன்னைக் கற்பழித்த சிங்கள வெறியர்களைத் தேடிக் கண்டுபிடித்து,அவர்களின்......சை அறுத்தாள் நம் தமிழச்சி என்று எடுத்திருந்தால் கூட பாராட்டியிருக்கலாம்.

இயக்குனருக்கு இது நாலாவது படம் என்கிறார்கள்.70 வதுகளுக்குப்பின் வந்த படங்கள் எதையும் பார்க்கும் வழக்கம்  இல்லை போலிருக்கிறது இயக்குனருக்கு .அவ்வளவு பழைய டைப்பில் இருக்கிறது படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை எதிலும் சமீபத்திய கால படத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை.

. பாடல்கள் படுகுப்பை.பெண்புலிகள் ஆடிப்பாடுவதாகக்காட்டி வதைப்பது என்னநியாயம்?

படத்தின் ஒரே ஆறுதல் புனிதா.தெத்துப்பல் தெரிய அவள் சிரிக்கும் சிரிப்பில் உள்ளம் கொள்ளை போகிறது. ஆனால் இவளுக்கா இப்படி ஒரு பயங்கரம் நடந்தது என்ற உணர்வை துளி கூட கொண்டுவரத்தவறி விட்டார் இயக்குனர்.
புனிதாவின் நடிப்பும் அபாரம்.

சீமானும்,நாசரும் சிறுபாத்திரங்களில் வந்துபோகிறார்கள்.

 மேடைப்பேச்சாளர் தமிழருவி மணியன் வசனம் எழுதியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் சீமானின் மேஜையில் அசோக சக்கரத்தைப்பார்த்து,’’அங்கிள் இந்த பொம்மையை நான் எடுத்துக்கட்டுமா?’’என்ற உச்சபட்ச நக்கல் வசனத்தை தமிழருவிமணியனைத்தவிர வேறு யாரும் எழுதியிருக்கமுடியாது. தியேட்டரில் விசிலையும் கைத்தட்டல்களையும் அள்ளப்போகும் வசனம் இது(,யாராவது வந்தால்..)

ஒருவேளை,தலைப்புக்கு அர்த்தம் விளங்காமல் போய்விடும் என்றபயத்திலோ என்னவோ படம் முழுக்க யாராவது ஒருத்தர் புனிதாவின் உச்சிதனை முகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

உச்சிதனையில்’ மெச்ச எதுவுமில்லை. 

No comments:

Post a Comment