Sunday, April 21, 2013

விமர்சனம் ‘திருமதி தமிழ்’ – ’செத்துப்பொழைக்க வாரீகளா?’

கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத, பழமொழி ஒன்று உண்டென்றால், அது, கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப் பயலுக நாட்டமைதான்.
இதை முதன் முதலில் உருவாக்கியவர், அது தன்னால்தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான, உரிய ஆதாரத்தோடு வந்தால், நம்ம  செல்லம் நயன்தாராவிடமிருந்து உங்கள் இரு கன்னத்துக்கும் தலா ஒரு கிஸ் வாங்கித்தருவேன் என்று அம்பது ரூபா பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்திடுகிறேன்.
அதுசரி,ராசகொமாரர் ராசா வேஷம் கட்டியதை ஒட்டி ஞாபகத்துக்கு வந்த அந்தப்பழமொழி ஒருபக்கம் இருக்கட்டும். திருமதி ராஜகுமாரன், திருவாளர் தேவயானி அவர்கள் கலந்து கட்டி, நம் கண்ணைக் கட்டியதிருமதி தமிழ்படப் பஞ்சாயத்துக்கு வருவோம்.
நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் இந்தப் படத்தைப் போட்டார்கள். எமன் எருமையைக் கிளப்ப தாமதமானதை ஒட்டி, படம் திரையிடலும் கொஞ்சம் தாமதமாகிக்கொண்டிருக்க, லைட் பிங்க் கலர் ஃபுல் ஹாண்ட் சர்ட்டும், கருப்பு பேண்டுமாய் ஒரு பெண் பிரஸ் ஷோவுக்குள் நுழையஹை ஏதோ ஒரு சூப்பர் ஃபிகர், புதுசா ஒரு பத்திரிகையிலருந்து வந்திருக்கு பாஸ்என்று கொஞ்சம் சவுண்டாகவே கமெண்ட் அடித்து விட்டேன். அந்த ஃபிகர் முன் வரிசையிலிருந்த ஒரு சிலரை நலம் விசாரித்து விட்டு, எங்கள் வரிசையை நெருங்கிய போது, ‘அட தேவயானி’.
எப்படா மாட்டுவான்என்று தவம் கிடக்கும் ஒரு சில நண்பர்கள் என்னை,..’ங்கொய்யால பாட்டிக்கும், பார்ட்டிக்கும் கூட வித்தியாசம் தெரியாத கபோதியா நீ?’ என்று  கேவலமாக திரும்பிப் பார்க்க,  ஒரு சில நொடிகளுக்கு, சீட்டுக்கு அடியில் குனிந்து, கீழே விழாத ஒன்றைத் தேடவேண்டியாதாயிற்று. [ஆனா, வாலிப வயசைத் தாண்டிட்டாலும், தேவயானின்னா உயிரை விடுறதுக்கு இன்னைக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யிது பாஸ்என்று மைண்ட் வாய்ஸில் தோன்றியதை, அதே மைண்டுக்குள் மண் தோண்டிப் புதைத்தேன்].
சரியாக மூன்று மணிக்குத் துவங்கவேண்டிய படம் 3.55 க்கு துவங்கியதால்சென்சார் சர்டிபிகேட் காட்டப்படுவதற்கு முன்பே, சில குறட்டைச் சத்தங்களை கேட்க நேர்ந்தது . வெயிலின் அருமை பிரசாத் லேப் ஏ.சி.யில் தெரியும்.
படத்தின் நீளம் 148 நிமிடங்கள்.
நம்மில் அநேகர் பொழைப்பதற்காக சென்னை வந்திருக்கும் ஜீவராசிகள். ஆனால் ராஜகும்மாளனோ, கதைப்படி, சாவதற்கென்றே சென்னை வந்திருக்கிறார். அப்படி வந்தவர்,காஸ்ட்யூம்களின் நிறத்துக்கு ஏற்றபடி, ஈஸ்ட்மென் கலர்களில் தன் உதட்டில் லிப்ஸ்டிக் பூச ஆரம்பித்ததில் துவங்கி,  என்னென்ன விதங்களில் எத்தனை பேரைச் சாகடிக்க முடியுமோ அப்பெடியெல்லாம் சாகடிப்பதுதான்திருமதி தமிழ்ன் இரு வரிக் கழுதை ஸாரி இருவரிக் கதை.
ஒரே ப்ரேமில் ஏழெட்டு ரவுசுகுமாரன்கள் தோன்றி, ஆர்கெஸ்ட்ராவில் உள்ள அனைத்து இன்ஸ்ட்ருமெண்ட்களையும் வாசித்து, காதலை யாசிப்பது, ஒரிஜினல் மனைவி தேவயானி, சினிமா காதலி கீர்த்தி பாவ்லா இருவருடனும் கொஞ்சிக்குலாவும் டூயட்கள், திகுடுமுகுடான வில்லன்களை வெறும் கையால் அடித்து விளாசுவது, ரேப்பு சீன்களை விட கேவலமாக, ரோப்பு கட்டி இவர் அந்தரத்தில் அட்டகாசம் செய்வது என்று இந்தியன் பீனல் கோட்-ல் எத்தனை செக்ஷன்கள் இருக்கின்றனவோ அத்தனையிலும் வழக்குப் போடும் அளவுக்கு அட்ராசிட்டிகள் புரிகிறார் ராஜகொமாரன்.
கர்ப்பிணிப் பெண்கள், திருமணமாகாத இளம்பெண்கள், கல்லூரி மாணவ,மாணவிகள்,பெரியவர்கள், குழந்தைகள், நகரத்தவர், கிராமத்தவர், நோயுற்றிருப்போர், உடல்நலமுடன் இருப்போர்,… அதாவது சுருக்கமாக சொல்வதென்றால் மனித ஜீவராசிகள் யாரும் பார்க்கக்கூடாத காலியம் இது.
படத்தின் ஒரே ஆறுதலான அம்சம் தனது மனைவி தேவயானியை மனதில் வைத்துஇந்தியாவில் எத்தனையோ பொண்ணுங்க, விருப்பமில்லாத புருஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, தற்கொலை மாதிரி வாழ்க்கையை வாழ்றாங்கஎன்கிற கருத்தை, படம் நெடுக,  அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது.
மற்றபடி, இதற்கு மேலும், இதைப்பற்றி விலாவாரியாக விமர்சித்துக்கொண்டிருப்பது, வனக்கொரங்கை பிடித்து வந்து, அதன் வறண்ட தலையில் பேன் பார்ப்பதற்கு இணையானது.
ஆதலினால் மற்ற மனித இனங்கள் ஒதுங்கிக்கொள்ள, ’வாழ்ந்து இனி என்ன ஆகப்போகிறது,.. செத்துத் தொலைக்கலாம்என்று தற்கொலை முடிவில் தீவிரமாக இருப்பவர்கள், இதைப் படித்த ஓரிரு மணிநேரத்திற்குள் தியேட்டர்களுக்கு வேகவேகமாக ஏகும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு பிறாண்டல் குறிப்பு:
ஏற்கனவே தந்த டுபாக்கூர் படங்களையும் தாண்டி, ராஜகொமாரன், அவரே கீரோவாக நடித்து மேலும் ஒரு படம் இயக்கமுடிந்ததென்றால், அதற்கு முன்னூறு சதவிகிதம் காரணம், அவரது நடிகை மனைவி தேவயானி என்பதை எல்.கே.ஜி. குட்டீஸ்களும் அறியும். இதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும், தியேட்டரில் முதல் நாள் காட்சிகளில் ஆபரேட்டர் தவிர்த்து யாரையும் காணமுடியாமையும், ராஜகுமாரனை என்னவாக ஆக்கிவிட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன சம்பவம் கேளுங்கள்.
பிரசாத் லேப்பில் படம் முடிந்ததும், ஒரு சில பத்திரிகையாளர்கள் தேவயானியை கையைப்பிடித்து வாழ்த்திக்கொண்டிருக்க, ராஜகொமாரனை நெருங்கிய, ஒரு மூத்த பத்திரிகையாளர், ‘லெங்க்த் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. கொஞ்சம் குறைச்சா நல்லாருக்கும்என்றார்.
உடனே ராஜகொமாருக்கு பொத்துக்கொண்டு வந்தது, ‘படத்தின் நீளத்தைக் குறைக்கச்சொல்றதுக்கு நீ யாருய்யாஎன்றபடி அவரை நோக்கிக் குரைக்க ஆரம்பித்த ராஜகொமாரன், ஆணவத்தின் உச்சியில் உதிர்த்த வார்த்தைகள் இவை, ‘ என் படத்தை விமர்சிக்கிற தகுதி எவனுக்கும் கிடையாது. அப்படி விமர்சிக்கனும்னு நினைக்கிறவன், நான் விக்ரமன்கிட்ட அசிஸ்டெண்டா வேலை பாத்த மாதிரி, பத்து படத்துல அசிஸ்டெண்டா வேலை பாத்திருக்கனும். அடுத்து பத்து படம் டைரக்ட் பண்ணியிருக்கனும். மத்த எவனுக்கும் என் படத்தை விமர்சனம் பண்ற அருகதை கிடையாது. [ இந்த மாதிரி பத்துப் படம் டைரக்ட் பண்றதுக்குப் பதிலா, அம்மா ஷூட்டிங் போன உடனே வீட்ல இருக்க பத்து பாத்திரங்களை எடுத்து, பத்துப்பாத்திரம் கழுவி பொழைக்கலாம் பாஸ்.]
அட கூறுகெட்ட குக்கரே, பத்து படத்துல  அசிஸ்டெண்டா வேலை பாத்திருந்தா இந்த மாதிரி கன்றாவி கழிசடையெல்லாம் பாத்துத் தொலையனும்னு பத்திரிகையாளர்களுக்கு தலைவிதியா? மீறியும் அப்பிடித்தான்னா, அது கூட தெரியாம, என்ன ……த்துக்கு பிரஸ் ஷோல்லாம் போடுறீங்க பிரதர்?

Friday, April 19, 2013

’ராதாமோகனின் ’கவுரவம்’ போச்சி’

மை டியர் ராதாமோகன் ,
நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் உங்கள் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் தந்த மசால் வடையும், இடியாப்பமும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு ‘கவுரவம்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
அழகிய தியேமுதல்பயணம்வரை தமிழ்சினிமாவுக்கு கவுரமான படங்கள் தந்து, தனித்த ஒரு முத்திரையுடன் திரைப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தவர் நீங்கள். அதிர்வுகள் அதிகமற்று மெல்லிய மனதுடன் உரையாடிய உங்கள் திரைமொழியால் கவர’ப்பட்ட சில லட்சம் ரசிகர்களுள் நானும் ஒருவன். ஆனால் பிரகாஷ்ராஜைப் போல் நெருங்கிய நண்பனோ, உங்களை சதா கக்கத்துள் முடிந்து வைத்துக்கொண்டுவெளியேநடமாட விடாத நண்பனோ அல்ல.
மொழிஉட்பட்ட உங்கள் படங்களை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் சினிமாவில் சம்பாதிக்க ஆரம்பிக்கும் முன்பே, மேல்தட்டு அல்லது நடுத்தர மேல்தட்டு வகுப்பினரைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறேன். யூகிக்கக்கூட தேவையில்லாத இன்னொரு சமாச்சாரம் நீங்கள் கண்டிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரோ அல்லது அவர்களது வலியைச் சற்றேனும் அறிந்தவரும் அல்ல என்பது.
ஏனெனில் தலித் இன மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாவ்லா பண்ணப்பட்டுள்ள கவுரவத்தின் ஒரு ஃப்ரேமில் கூட அவர்களது வலி பதிவு செய்யப்படவில்லை. நீங்கள் தலித்தாய் இருந்திருக்கும் பட்சத்தில் சினிமா மொழியே கைவரப்பெறாதவராய் இருந்திருப்பினும், ஒரு கசப்பான அனுபவத்தின் பகிர்வே கூட மிகப்பெரிய கலைப்படைப்பாய் வந்திருக்கக்கூடும். 
இதை முன்வைத்து தலித்கள் பிரச்சினையை அவர்கள் அல்லாதவர்கள் கையாள முடியாது என்றோ, உண்மையான வலியோடு பதிவு செய்ய முடியாது என்றோ நான் சொல்ல வருவதாக, குறுகிய மனதோடு புரிந்துகொள்ளல் ஆகாது. அப்படிப்புரிந்துகொண்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை என்றே கூறுவேன்.
அடுத்த இன்னொரு பிரச்சினை, ’கவுரவம்’ படப்பிடிப்புக்கு முன்னர் நீங்கள் தற்செயலாகக் கூட எந்த கிராமத்துப் பக்கமும் கூட போயிருக்க வாய்ப்பில்லை என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் பேஸ்மெண்ட் இவ்வளவு வீக்காக இருக்கும்போது, கிராமம், தலித் இனப் பிரச்சினை என்று எப்படி ஒரே நேரத்தில் இரண்டு விஷப்பரிட்சைகளில் இறங்கத்தயாரானீர்கள் அல்லது இறக்கிவிட்டார்கள் என்பது எனக்குப்புரியவில்லை.
சரி, கதைக்கு வருவோம்.
வெண்மணி என்று நிஜ கிராம பெயரைச் சூட்ட திராணியற்று வெண்ணூர் என்று கதை நடக்கும் கிராமத்துக்கு நீங்கள் பெயர் சூட்டியதில் இருந்தே, தலித் சினிமா என்ற பெயரில் ஆட ஆரம்பிக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமாகிவிடுகிறது.
ஊர்ப்பெரியவரான பிரகாஷ்ராஜின் மகளை, அதே ஊரைச்சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஊரை விட்டு ஓடும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில், தலித் இளைஞருடன் கூடப் படித்த நண்பர் [ஆந்திர நாயகன் அல்லுசுரேஷ்] அவரைத்தேடி வெண்ணூருக்கு வந்து நண்பனை தேட ஆரம்பிக்கிறார். இந்த தேடுதல், குழிதோண்டி புதைக்கப்பட்ட தங்கள் கவுரவத்தை மீண்டும் தோண்டி எடுத்து அவமானப் படுத்துவதாக பிரகாஷ்ராஜ் கோஷ்டி நினைத்து, நாயகனுக்கு தொந்தரவு கொடுக்க ஃபேஸ்புக் உதவியுடன், தலித் இளைஞருடன் படித்த அத்தனை நண்பர்களையும், அதே வெண்ணூர் கிராமத்துக்கு வரவழைத்து, காதல் ஜோடிகள் இருவரும் வறட்டு கவுரவத்துக்காக வெட்டிக்கொல்லப்பட்டு, புதைக்கப்பட்ட உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் இணையாடும் நண்பர்களில், சில குழுவினர், சமூக அவலங்களுக்கு எதிரான சிறிய மிரட்டலாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை நிதர்சனமாகப் பயன்படுத்தப்படாமல், ஒரே கலர் ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்து கைகோர்த்துப் பாடி புரட்சி ஏற்படுவதுபோல், ஒரு மாயையை வணிக நோக்கில் மட்டுமே செய்திருக்கிறீர்கள் என்ற சந்தேகத்தை மட்டுமே உண்டாக்குகிறது.
மட்டனும், சிக்கனும் சாப்பிடும் பிராமின்கள் பயங்கர புரட்சிகரமான சிந்தனை கொண்டவர்கள் என்கிற மொக்கையான சிந்தனையை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்களோ தெரியவில்லை.[ விசனம் விஜி ]
நாயகன் அல்லு சிரிஷ் பணக்கார வீட்டுப் பிள்ளையாக இல்லாதிருந்தால், அவரை ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கூட்டத்தில் முதல் வரிசையிலாவது நிறுத்தியிருப்பார்களா என்பதே சந்தேகமே? அப்படி ஒரு முக லட்சணம். முக லட்சணத்தை விட்டுவிடுவோம். முகபாவம் எதையும் வெளிப்படுத்த்த் தெரியாமல் படம் முடியும் வரை, பாவமாக வந்து விட்டுப்போகிறாரே, அது யார் செய்த பாவம்? உங்கள் தயாரிப்பாளர் எவ்வளவு வாங்கிக்கொண்டு அவரை ஹீரோ ஆக்கினார்? அதற்கு உடன்பட்டதற்கு உங்கள் பங்கு என்ன? [அதில் எனக்கு வரவேண்டிய ‘கட்டிங்’ ஏன் இன்று வரை வந்து சேரவில்லை]
நாயகி யாமி கவுதமுக்கு யாழினி என்று அழகிய பெயர் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்கள். புடலைங்காய்க்கு புடவை கட்டிவிட்டமாதிரி, அதை பொறியல் செய்து சாப்பிடலாம் போல புதிரான ஒரு அழகாய் இருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் வழக்கமான மிகைநடிப்பு. இன்னொரு பக்கம் நாசர் குட்டி வேடத்தில் வந்தாலும் பிரகாஷுக்குப் போட்டியாக நடிப்பில் நெஞ்சை நக்குகிறார். நூற்றுக்கணக்கான படங்களில் இதே போன்ற பாத்திரங்களில் நடித்த பிறகும், இந்த குணவிசித்திர நடிகர்கள் நம்மை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்க காரணம் என்ன என்று, ஒரு காமெடி கதையாக யோசித்து, நல்ல நடிகர்களாகப் போட்டு அடுத்த படம் இயக்குங்களேன். கண்டிப்பாக அது உங்களுக்கு நன்றாக வரும்.
ப்ரீத்தியின் ஒளிப்பதிவிலும், எஸ்.எஸ். தமனின் இசையிலும் வில்லேஜ் எஃபெக்ட் விழலுக்கு இரைத்த வெந்நீர்.
பாடல்களுக்கான சூழலும் அதைப் படமாக்கியிருக்கும் விதமும் கூட கவுரமாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இப்போதும் நீங்கள் எனக்குப் பிரியமான இயக்குனர்தான். ஒரு சமூகப் பிரச்சினையை கையில் எடுத்து, அதை வியாபாரம் மட்டுமே ஆக்க முயன்றதால் வந்த கோபமே இது.
இனி கிராமங்களை படங்களில் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டு, உங்களைச் சுற்றியுள்ள வாழ்வியலைப் படமாக்க முயலுங்கள். இது ஆலோசனை அல்ல சுயநலம்.
தமிழில் நல்ல இயக்குனர்கள் என்று நம்பப்பட்டவர்கள் எல்லாம் நாறிக்கொண்டு வரும் வேளையில் உங்களையும் இழக்க நாங்கள் தயாரில்லை.
‘கவுரவம்’ ஆச்சாரமான சாத்தான்கள் ஒன்றிணைந்து ஓதிய வேதம்.

Thursday, April 18, 2013

‘அவர் பறந்து போனாரே’


கடந்த ஜனவரி மாதத்தின் இறுதி தேதிகளில் ஒரு நாள்,.. நண்பர் ’ஜீதமிழ்’ சுரேஷ் என்னை அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து, ஜீ’யில் ஞாயிறு தோறும் ‘ஸ்டுடியோ 6’ என்ற ஒரு சினிமா நிகழ்ச்சி வழங்க முடிவு செய்துள்ளோம். அந்நிகழ்ச்சிக்கு நீங்க ஸ்கிரிப்ட் எழுதித்தர்றீங்களா?’ என்று கேட்டார்.
நண்பர் சுரேஷ் ‘ஓஹோ புரடக்‌ஷன்ஸ்’ படிக்கத்துவங்கி, நம்ம வண்டவாளங்கள் அனைத்தும் தெரிந்திருந்தும் துணிந்து நண்பரானவர். கேட்டில் நிறுத்திப்பேசி திருட்டுத்தனமாக ஸ்கிரிப்ட் கேட்காமல், மூத்த அதிகாரிகளிடமும் என்னையும், நமது ஓஹோ புரடக்‌ஷன்ஸையும் அறிமுகப்படுத்தி எழுதச்சொன்னது, சமீப காலத்தில் நான் சந்தித்த மனதுக்கு நிறைவான சம்பவங்களில் ஒன்று.
‘உங்க ப்ளாக்ல எழுதுற மாதிரி காண்ட்ரவர்ஸிகள் எல்லாம் வேண்டாம். நகைச்சுவை பிரதானமாக இருக்கட்டும்’ என்று சொல்லியபடி நிகழ்ச்சியை இயக்கப்போகும் ஸ்ரீனிவாஸ் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ‘இவர்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறவர் ‘ என்று பெண்மணியாகிய ஒரு கண்மணியை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
அவரைப் பார்த்ததும் நான் அடைந்த ஜெர்க்’கிற்கு அளவே இல்லை. பிக் எஃப்.எம். ரேடியோவில் அண்டசராசரத்தையும் கண்டபடி அலசி ஆராய்ந்து பிழிந்து தொங்கப்போடுவாரே அந்த இம்சை அரசி என்ற ஒப்பாரும் மிக்காரும் அற்ற ஒபீலியா.
ரேடியோவில் அவர் அடிக்கிற கமெண்ட்கள் கேட்டு பலமுறை நான் கதி கலங்கிப் போயிருக்கிறேன்.  அன்று நேரில் சந்திக்கும் வரை கண்டிப்பாக தூள் சொர்ணாக்கா மாதிரியான ஒரு தோற்றத்தில்தான் அவரை கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் நேரில் நேரு மாமி மாதிரி டீஸண்டாக இருந்தார்.
அக்காவுக்கு தமிழ் படிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை என்பதால் ஒன்றிரண்டு சந்திப்புகளிலேயே என்னைப் புலவனாக ஏற்றுக்கொண்டு என் ஸ்கிரிப்டை அங்கீகரித்து, காகிதத்தில் சிறு குறிப்புகளாய் எடுத்துக்கொண்டு தனது சடசடசட லாங்குவேஜில் கலக்க ஆரம்பித்தார்.
பவர் ஸ்டாரில் துவங்கி, விஜய் சேதுபதி, நீது சந்திராக்கள் வழியாக ஒருவழியாக வரும் ஞாயிறன்று பத்தாவது நிகழ்ச்சியைத் தொடுகிறோம். ஒரு வெளம்பரமாக நாங்கள் வெளியில் அவ்வளவாக இதை சொல்லிக்கொள்ளவில்லையென்றாலும், நிகழ்ச்சி ஓரளவு சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பதை கடந்த முறை செக் வாங்க சென்றிருந்தபோது தெரிந்துகொண்டேன்.
முன்பே இதுகுறித்து ஓஹோவில் ஒரு பதிவு எழுதிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.
சரி பத்து வாரங்கள் கழித்து இப்போது எழுதக் காரணம்? என் இதயம் தொட்ட பாடகர் பி.பி.எஸ்ஸின் மறைவு குறித்து, வரும் ஞாயிறு ‘ஸ்டுடியோ6’ நிகழ்ச்சியில் பின் இணைப்பாக கொஞ்சம் பேசலாம். எழுதி அனுப்புகிறீர்களா? என்று ஜீ தமிழில் இருந்து வந்த அழைப்பு.
இதை மட்டும் ப்ளாக்கில் போட்டுக்கொள்ளலாமா என்று சுரேஷ் சாரிடம் அனுமதி கேட்டு வெளியிடுகிறேன்.
வரும் ஞாயிறு இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் ‘ஸ்டுடியோ 6’ நிக்ழ்ச்சியில், இதை நீங்கள் சில விஷுவல்களுடன் பார்க்கலாம்.
ஸ்டுடியோ6’- பி.பி.ஸ்ரீனிவாஸ்
சில மரணச்செய்திகள் வெறுமனே நமக்கு செய்திகள் மட்டுமே. ஆனால் சில மரணச்செய்திகள் நம்மை நிலைகுலையச்செய்யும். அப்படி தமிழக மக்கள் அனைவரையும் இதயம் கலங்க வைத்த மறைவு, பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுடையது.,,
70 களில் வந்த பாடல் என்றாலும்காலங்களில் அவள் வசந்தம் பாடலை உச்சரிக்காத ஏ.ஆர்.ரஹ்மான் ரசிக உதடுகள்  கூட எதாவது இருக்கமுடியுமா?
1930-ல் ஆந்திரமாநிலம் காகிநாடா அருகிலுள்ள கொல்லபுரில் பிறந்த பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் எட்டுமொழிகளில் [கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், மற்றும் துளு] 3000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய அசுர சாதனைக்கு சொந்தக்காரர்.
எட்டு மொழிகள் என்றால் வெறுமனே அம்மொழியின் கவிதை வரிகளைத் தனது தாய்மொழியில் எழுதி வைத்துக்கொண்டு பாடுவதல்ல.
நான் பாடல்கள் பாடிய எல்லா மொழிகளும் எனது தாய்மொழிகளேஎன்று உரிமை கொண்டாடும் அளவுக்கு அனைத்து மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றிருந்தார் ஸ்ரீனிவாஸ்.
பாடல்களில் கஷ்டமான சங்கதிகளைப் போட்டுநீ வெறுமனே கேட்பவனாய் மட்டும் இருஎன்று ரசிகர்களை சங்கடப்படுத்தாமல் அவள் பறந்து போனாளேஎன்று யார் வேண்டுமானாலும் பாடமுடிந்து விடுகிற எளிமையான பாடும்பாணி அவருடையது.
கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்’ ‘நிலவே என்னிடம் நெருங்காதே என்று அவர் பாடிய காதல் தோல்விப் பாடல்கள், காதலில் தோல்வியுற்றவர்களின் இதயத்தை மயிலிறகால் வருடிக்கொடுக்கும் ரகம்.
60, 70 களில் எம்ஜியாரும், சிவாஜியும் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்றவர்களுக்கு பின்னணி பாடி, அவர்களையும் முன்னணியில் இருக்க வைத்ததில் பெரும்பங்கு ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலுக்கு உண்டு. ‘திருடாதேபடத்தில் பாடிய உன்னருகே நானிருந்தால் போன்ற வெகு சில பாடல்களே எம்ஜியாருக்குப் பாடியிருந்தார் பி.பி.எஸ்.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?’ பாட்டை நாம் எத்தனை தலைமுறை கடந்தும் மறப்போமா? மறந்தால் இருப்போமா??
தெலுங்கில் சில கஜல் பாடல்களை இயற்றியுள்ள பி.பி.எஸ். ஒரு கைதேர்ந்த கவிஞரும் கூட.
சென்னை ட்ரைவ்-இன் ஓட்டல் அப்புறப்படுத்தப்பட்டபோது, இதயம் நொறுங்கிப்போன ஆத்மாக்களில் முக்கியமானவர் பி.பி.எஸ். ஏனெனில் தனது இறுதி தினங்களை அங்கே அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டும், தன்னிடம் பேசவிரும்பும் ரசிகர்களிடம் தனது பழைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டும், இன்று வரை நமது இதயங்கள் முனுமுனுக்கும் சின்ன சின்னக் கண்ணிலே வண்ணவண்ண ஓவியம்போன்ற பாடல்களை முனுமுனுத்துக்கொண்டும் கழித்து வந்தார்.
மனைவி,4 மகன்கள், ஒரு மகள், அவர்களது வாரிசுகளுடன் பெருவாழ்வு வாழ்ந்த பி.பி.எஸ். தனது 83வது வயதில், நம்மை விட்டு விடைபெற்றுக்கொண்டார். மனிதர்களாகிய நம்மால் எரிக்க முடிந்தது அவரது உடலை மட்டும்தான்.
எந்த நெருப்பால் எரிக்க முடியும் அவரது குரலை?
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நன்றி; ஜீ தமிழ் தொலைக்காட்சி