Saturday, May 26, 2012

அறம் செய விரும்புறதை நிறுத்திட்டு இனி மரம் செய விரும்பு


இது நடந்து ஒரு மாதமிருக்கும்.

‘’ அண்ணே நான் அக்கப்போருராஜா பேசுறேன். யுவகிருஷ்ணா கிட்ட உங்க நம்பர் வாங்குனேன். நானும் மதுரக்காரன் தாண்ணே. உங்க ஓஹோ புரடக்ஷன்ஸ் ஓஹோ…’’ என்று துவங்கி முதல் அழைப்பிலேயே, ஒரு நாற்பது வருட நட்புக்குரலெடுத்து பேசினார் ராஜா.

அதற்கு முன் ராஜாவின்அக்கப்போருப்ளாக்கை நான் அவ்வளவு தீவிரமாக வாசித்திருக்கவில்லை.

அடுத்தும் அவரிடமிருந்து சகஜமான சில அழைப்புகள். நேரில் பார்த்த்தில்லை. பரஸ்பரம் நண்பர்கள் மூலம் அறிமுகமில்லை. ப்ளாக்கில் படித்த சில பதிவுகளைத்தாண்டி என்னைப்பற்றி ஒரு வரித்தகவல் கூட தெரியாமல் எப்படி அவ்வளவு உரிமையாகப்பேச முடிகிறது என்று சற்றே வியந்துகொண்டுதானிருந்தேன்.

போதாக்குறைக்கு ,’’ திருவல்லிக்கேணி ஏரியாப்பக்கம் வந்தீங்கன்னா எங்க மேன்சனுக்கு கண்டிப்பா வாங்கண்ணே’’ என்று சில அழைப்புகளும் விட்டிருந்தார்.

நேற்றைய வெள்ளிக்கு முந்தின வெள்ளியன்று ராஜாவிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு.

‘’அண்ணே வர்ற ஞாயித்துக்கிழமை அன்னிக்கு, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்லயூத் பதிவர்கள் மாநாடுஒண்ணு நடக்குது .நீங்க கண்டிப்பா வரணும்’’

’’ராஜா ஒஹோ புரடக்ஷன்ஸ்ன்னு பேர் வச்சதால நீங்க எனக்கு நாகேஷ் வயசுன்னு நெனச்சிட்டீங்க. எனக்கு அவங்க அப்பா டி.எஸ். பாலையாவோட வயசு. அப்புறம் எப்படி நான் யூத் பதிவர்கள் கூட்டத்துல கலந்துக்க முடியும்’’

கலந்துகொள்ளாமல் தவிர்க்க நான் ராஜாவிடம் அடித்த விதவிதமான பல்டிகள் எந்தவித பலனையும் தரவில்லை.

ஞாயிறு மாலை சுமார் 5 மணி. கூட்டம் நடந்த இட்த்துக்கு கீழே இருந்து நான் போனில் அழைத்தவுடன் வேகமாக கீழே வந்து அழைத்துப்போன ராஜா ஆச்சரியமாய் முதல் சந்திப்புக்கான எந்தவித முகாந்திரங்களையும் என்னிடம் காட்டிக்கொள்ளவில்லை.

மாடியில் ஏறும்வரை யூத் என்ற வார்த்தை நடமாடும் இடத்துக்கு நாம் போவது அராஜகமே என்ற எண்ணத்தோடேதான் போனேன்.

உள்ளே நுழைந்ததும் என் பார்வையில் பட்ட முதல் யூத்தே அண்ணன் கேபிள்சங்கர்தான்.

இவர்ப்ளாக்எழுத ஆரம்பிச்ச காலத்துல எல்லாம் நாம ஸ்கூல்லதான படிச்சிக்கிட்டிருந்தோம் என்ற எண்ணம் தோன்ற என் படபடப்பு சற்றே குறைந்தது.

நான் ஒரு இருநூறு,முன்நூறு பேரை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அங்கே மொத்தமே 25 பேரே இருந்தார்கள். கேபிள்சங்கரைப்பார்த்து நான் தேத்திக்கொண்டதைப்போல், அவர் மனசைத்தேற்றிக்கொள்ளும்படியும் சில ’யூத்ப்ளாக்கர்ஸ் வந்திருந்தார்கள்.

ப்ளாக் எழுதுகிறவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிற ஒரே ப்ளாக்கர் என்று என்னைப்பற்றி நான் கொண்டிருந்த பச்சாதாபமும் சற்றே குறைந்தது என்று சொல்லலாம்.

வந்திருந்தவர்கள் தங்களைப்பற்றி அறிமுகம் செய்துகொள்ள, என் முறை வந்தபோது,’’அலோ நீங்கதானா அது?’’ என்று சற்றே ஜெர்க் ஆனார் அண்ணன் கேபிள். அதன் அர்த்தம் என்னவென்று அடுத்தமுறை சந்திக்கும்போது கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

அந்த பதிவர் சந்திப்பு எதற்காக நடத்தப்பட்டது ? பல ஆயிரங்களில் ப்ளாக்கர்கள் இருக்கும்போது வெறும் 25 பேர் மட்டுமே கலந்து கொண்டதன் காரணம் என்ன? போன்ற சில கேள்விகளோடு,குழம்பிக்கொண்டிருந்தபோது,
விசாலினி என்ற 11 வயதே ஆன சிறுமியை அறிமுகப்படுத்தினார்கள்.

ஐ.கியூ என்று சொல்லப்படும் நுண்ணறிவுத்திறன் அளவு அவருக்கு 225 என்ற அளவில் இருக்கிறதாம். உலக அளவில் நான்கு ரெகார்டுகளை தன்வசம் வைத்திருக்கிறாராம். ஏழாம் வகுப்பே படிக்கும் விசாலினி பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு நுண்ணறிவு படைத்தவராம்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த விசாலினியின் அம்மா இதேபோல் பல தகவல்களை சொன்னபோது எனது சாதா அறிவுக்கு பாதி புரியவில்லை.

அடுத்து ஒரு சக பதிவர், ‘’ அது சரிம்மா நீ உன் வயசுக்குழந்தைகளோட பழகி விளையாடுறியா ?’’ என்று நுணுக்கமான கேள்வி கேட்டதற்கு, ‘’ விளையாடுவேன் ஆனா சீக்கிரமே சண்டை வந்துடும் ‘ என்று சொன்னபோது பாவமாகவே இருந்தது.

ஒன்றை இழந்து ஒன்றைப்பெறுவதுதானே வாழ்க்கை?

விசாலினிக்கு அடுத்ததாக கவுரவப்படுத்தப்பட்ட, பேருந்து நடத்துனரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான யோகநாதன், மரம் வளர்ப்பு தொடர்பாக தான் அனுபவித்து வரும் வேதனைகளை, சோதனைகளை ,ரோதனைகளை, போதனைகள் என்று தோன்றாத அளவுக்கு சுவாரசியமாகவே சொன்னார்.

அவர் பேச்சையும் அனுபவங்களையும் ஒருமுறை கேட்க நேர்ந்தால் ‘அறம் செய விரும்பு’ வை ஒரு ஓரமாய் ஒதுக்கிவிட்டு இனி ‘மரம் செய விரும்பு’ என்று கிளம்பி விடுவீர்கள்.

தனது பேச்சின் நடுநடுவே அரசு அதிகாரிகளையும்,அரசியல்வாதிகளையும் ஒரு பிடிபிடித்தார்.

அவர் அரசியல்வாதிகளை சாடும்போதெல்லாம் எனக்கு இரண்டு சீட் தள்ளி லேசான புகைச்சல் வாடை வந்துகொண்டே இருந்தது.

ராஜாவை கேள்விக்குறியோடு பார்த்தேன். மதுரைக்காரப்பயலுகளுக்கு எந்த சூழலிலும் சாத்தியப்ப்டாத மெல்லிய குரலில் ‘எம்.எம் .அப்துல்லா’ என்கிற வருங்கால முதல்வரை, எங்கள் ப்ளாக்கர் இனத்துக்கு ப்ளாக் ப்ளாக்காய் வீடுகட்டித்தரப்போகிற அரசியல்வாதியை அறிமுகப்படுத்திவைத்தார் ராஜா.

யோகநாதனை வாழ்த்திப்பேச மைக்கைக் கைப்பற்றிய அப்துல்லா பாய், ‘’ அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமா தப்புசொல்லாதீங்க. கண்டக்டர்களல எவ்வளவோ கெட்டவங்க இருக்குறப்ப, நீங்க நல்லவ்ரா இல்லையா? அதெ மாதிரி அரசியல்வாதிகள்லயும் சில நல்லவங்க இருக்காங்க’’ என்று சந்தானத்தையெல்லாம் தூக்கிச்சாப்பிட்டார்.

ப்ளாக் எழுதுறவனுக எல்லாம் வெட்டிப்பயலுகன்னு சொன்னது எவண்டா? எங்ககிட்டயும் ஒரு வருங்கால சி.எம். இருக்காருடா என்று உரக்க கூவ வேண்டும் போல இருந்தது.

விமர்சனம் ‘உறுமி’- ஞாபகத்துக்கு வரும் ‘திருவிளையாடல் தருமிகேட்டுக்கோடி உருமி மேளம்பாட்டு கேட்டு வளர்ந்த சனங்களுல் நானும் ஒருவன் என்பதால், தியேட்டரில் டைட்டில் கார்டு பார்ப்பதற்கு முந்தின கணம் வரை உருமியை ஒரு ஒரு தாளக்கருவி என்றுதான் நினைத்திருந்தேன்.

உறுமி என்பது ஒருவிதமான உறைவாள்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இயக்கத்தில், சுமார் பத்து வாரங்களுக்கு முன்பே மலையாளத்தில் உறுமி விட்டு அடுத்த சிலதினங்களில் தெலுங்கில் பொறுமிவிட்டு ,கலைப்புலி எஸ். தாணுவின் வெளியீட்டில் தமிழில் செறும  வந்திருக்கிறது.

ஆர்யா, பிரபுதேவா,பிருத்விராஜ், ஜெனிலியா,நித்யாமேனன்,வித்யாபாலன்,தபு என்று ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் உறுமியில் குழுமியிருக்கிறார்கள்.

அதிலும் வித்யாபாலனும் தபுவும் எதற்காக இந்தப்படத்தில் வந்தார்கள், என்ன செய்தார்கள் என்பது  ’சந்தோஷசிவனிடம் ஒரு விசாரணைக்கமிஷன் வைத்து ஆராயவேண்டிய கேள்வி.

சமீபத்தில் திரையுலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பீரியட் பிலிம் மோகத்தின் இன்னொரு அத்தியாயம்தான் சந்தோஷ் சிவனின் உறுமல்.

கதை 1502-ம் ஆண்டு நடக்கிறது. கேரளாவுக்கு மிளகு வியாபாரம் செய்ய வந்த வாஸ்கோ-- காமா, குறுநில மன்னர்களை கைக்குள் போட்டுக்கொண்டு அட்டகாசம் செய்த்தையும், அதை சிராக்கல் கேளு நாயரான நம்ம பிருத்விராஜும்,  அவரது இஸ்லாமிய நண்பரான பிரபுதேவாவும் ஒரு உறுமியை கையில் வைத்துக்கொண்டு எதிர்கொண்டு விரட்டி அடித்ததையும், நிகழ்காலத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது பூர்வீக நிலத்தை விற்கப்போகும் அதே பிருத்விராஜையும், பிரபுதேவாவையும் வைத்து, பூடகமாக கதை சொல்கிறார் சந்தோஷ் சிவன்.
 
 

மசாலா படம் பார்க்கும் வெகுஜன ரசிகர்களை கொஞ்சம் ஓவராகவே குழப்பக்கூடிய கதை என்றாலும், ரியல் எஸ்டேட் என்ற போர்வையில் விவசாய நிலங்களை கொலவெறியுடன் கூறுபோட்டு விற்கும் தற்சமய சந்ததிகளுக்கு அவசியம் சொல்லவேண்டிய சங்கதிதான்.

நவீன நாடகக்கார்ர்கள் உத்தியில் 1502 நடந்த கதையில் வந்த அத்தனை கேரக்டர்களையுமே நிகழ்கால கதையிலும் வைத்திருந்த சந்தோஷ் சிவன், பீரியட் கதை என்பதற்காக பெரிதும் மெனக்கெடாமல் காலமாணி போன்ற ஒன்றிரண்டு அயிட்டங்களோடு, கதையை நகர்த்தியது புத்திசாலித்தனம். இருந்தாலும், அக்காலத்தமிழ் என்ற பெயரில் அனைத்து கேரக்டர்களுமே, ராஜ்கிரண் நல்லி எலும்பைக்கடிப்பது மாதிரி, தமிழைக்கடித்து மென்று துப்புகிறார்கள்.

டர்ட்டி கேர்ள் வித்யாபாலன் பியூட்டியாக ’சலனம் சலனம்’ என்று ஒரு பாடலுக்கு ஆடி, நம் மனசை டர்ட்டி ஆக்கிவிட்டுப்போகிறார்.
 

பால்பாய்ண்ட் பேனா விளம்பரத்தில் வந்த சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே நமக்குத்தெரிந்தவராக இருந்ததாலோ என்னவோ, ஜெனிலியாவின் சண்டைக்காட்சிகளை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் பிருத்விராஜிடமிருந்து உறுமியை நம்ம சிறுமி ஜெனிலியா கையில் வாங்கும்போது, திருவிளையாடல் தருமியைப்பார்க்கும்போது வரும் அளவுக்கு சிரிப்பு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

 […ஸ்… அப்பாடா வரவர டைட்டிலுக்கு லிங்க் புடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துபோயிடுது…]

மலையாளத்தில் ‘பழசிராஜா’வுக்கு அடுத்த படியான, 23 கோடி செலவில் தயாரான இந்த பிரமாண்ட படம் வாஸ்கோ ட- காமாவை கொல்லத்துடித்த கேரள வீர்ர்களின் கதை என்கிற வகையில் அவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சுவாரசியமான படமாக இருந்திருக்கலாம். தமிழில் அது மிஸ்சிங்.

ஒருவேளை, நிகழ்காலக்கதையை அதிகமாக வைத்து, பீரியட் கதையின் நீளத்தைக்குறைத்திருந்தால், படம் தமிழிலும் சுவாரசியமாக இருந்திருக்குமோ என்னவோ?,