Monday, February 27, 2012

இந்தப்படத்த பாத்த நீங்க, இதுக்கு மேலயும் உயிரோட இருக்கனுமா?

’பாஸ் கடந்த ரெண்டு வாரமாவே, ஒரு தினுஷா,  பேயறைஞ்ச மாதிரியே காட்சி அளிக்கிறீங்களே, இதுக்கு ஏதாவது விஷேச காரணம் இருக்கா ?’ இப்படி   என்னைப்பார்த்து யாராவது கேட்க மாட்டார்களா என்று  ஒரு விதமான ஏக்கமே வந்துவிட்டது எனக்கு.

என் எல்.கே.ஜி. பொடியன் சந்தோஷ் தான் முதலில் கண்டுபிடித்தான். ‘ டேய் நந்து நம்ம டாடிக்கு என்னமோ ஆயிப்போச்சிடா. ஒரு ஐஸ்கிரீம் எக்ஸ்ட்ரா கேட்டதுக்கெல்லாம் ஓவரா கோபப்படுறாரு.நமக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தர்றதுக்கு தானடா அவங்க டாடி நம்ம டாடியைப் பெத்தாரு’

இந்தக்காலத்து சிறுசுகள் இப்படியெல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியப்படவேண்டும்.

என்னை அறைந்தது ஒரு பேயல்ல, நான் கடந்த பத்து நாட்களாக பார்த்த படங்களின் எண்ணிக்கையை வைத்து என்னை அறைந்த பேய்களின் எண்ணிக்கையை நீங்களே கூட்டிக்கழித்து பெருக்கிக்கொள்ளலாம்.

’ சூழ்நிலை’ என்று ஒரு படம். நமது சூழ்நிலை சரியில்லை என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அப்பட பி.ஆர்.ஓ. மேஜர்தாஸன் வற்புறுத்தி அழைத்துப்போய் தியேட்டருக்குள் நம்மை ஒரு இரண்டு மணி நேரத்துக்கு சூழ்நிலைக்கைதி ஆக்கினார்.வாழ்க்கை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் அப்பட இயக்குனர் செந்தூரன் போக்கினார்.

அடுத்து, ‘விளையாட வா’ என்று ஒரு படத்துக்கு அழைத்தார்கள். கல்லூரி காலங்களில் கேரம் ஆடுவதில் பல மாதங்கள் பைத்தியமாக இருந்தேன். இது முழுக்கமுழுக்க கேரம் விளையாட்டைப்பற்றிய படம் என்று ஒரு பெட்டிச்செய்தி படித்திருந்ததால் ஆசையோடு போனேன். படம் ஆரம்பித்த ரெண்டாவது நிமிடமே, நான் படித்தது பெட்டிச்செய்தி அல்ல. எனக்காகவே எழுதப்பட்ட  சவப்பெட்டிச்செய்தி என்பதைப்புரிந்துகொண்டேன்.

 வடிவேலு காமெடியில் வரும் வாள மீன் கிடைக்குது, வஞ்சிர மீன் கிடைக்குது ஆனா ஜாமீன் மட்டும் கிடைக்கல மாதிரி கேரம் போர்டில் ஸ்கொயர் கட்டிங் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... சிசர்ஸ் கட்டிங் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... ஆனால் ஃபிலிம் கட்டிங் என்ற ஒன்றை மட்டும் சுத்தமாகக் கோட்டை விட்டுவிட்டார்கள்.

இதற்கு அடுத்து வெளியே சொன்னா வெக்கக்கேடு என்கிற மாதிரி’விருதுநகர் சந்திப்பு’ சிவகாசி மத்தாப்பு, ராஜபாளையம் கித்தாப்பு’ எண்று  மேலும் நான்கு படங்கள். நான்கு படங்கள் என்றவுடன் ‘நான்கு சாரல் ஒரு மழை’ என்ற அருவா மனை படம் ஞாபகத்துக்கு வருகிறது.இந்தப்பட புரஜக்‌ஷன் போது ரீலுக்கு ஒருவராய் தலை தெறிக்க ஓடியவகையில் ஆறாவது ரீலில் ஆபரேட்டர் மட்டும் தனி ஆளாய் சாரலில் கண்ணீர் ஆறாய் ஓட நனைந்து கொண்டிருந்தார்.

இந்தக்கொடூரங்களுக்கு நடுவே, காட்டுப்புலி’ ஒன்றை வேட்டையாட வந்த அர்ஜுன் நடுக்காட்டில், வெரி  பேட் ஸ்மல்’  வரும்படி ஒரு புளிக்குழம்பு மட்டுமே வத்துவிட்டுப்போனார்.

கடைசியாய் நம்மை கருணைக்கொலை செய்ய வந்த படம் ‘காதல் பாதை’. மன்சூர் அலிகான் படத்தில் நடித்திருப்பது தெரிந்திருந்தால் நான் அந்த தியேட்டர் இருக்கும் தெரு வழியே கூட போயிருக்க மாட்டேன்.விதி நம்மை சும்மா விடுமா?

மேற்படி படங்கள் எதனுடைய கதையையும் சொல்லி உங்களை அவஸ்தைப்படுத்தவில்லை என்ற உரிமையில்’காதல் பாதை’யின் கதையை மட்டும் ஒரு இரண்டு வரி சொல்லி விடுகிறேன். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை  பணக்கார ஹீரோயின் காதலிக்கிறார்.ஹீரோயின்  வீட்டில் அனுமதியில்லை. உடனேஹீரோ ஹீரோயினை கொடைக்கானலிலிருந்து  ஒரு சைக்கிளில் அழைத்துக்கொண்டு காதல் சின்னமான தாஜ்மஹாலைக் காட்டிவிட்டு ஹீரோ சாக கூடவே ஹீரோயினும் சாக , இதுக்கு மேல இந்தப்படத்த பாத்த நீங்க  உயிரோட இருக்கனுமா? என்ற கேள்வியுடன் நம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் 'die'ரக்டர்.

இத்தனை அவஸ்தைகளையும் ஒத்தை ஆளாய் தாங்கிக்கொண்டு விமரிசனம்கிமரிசனம் என்று எதுவும் எழுதாமல் இருந்த நான்,  ரொம்ம்ம்ம்ப நல்லவன்ங்கிறதை நீங்க இப்பவாவது புரிஞ்சிக்கிட்டா சரி.


Saturday, February 25, 2012

‘தில்லானா மோகனாம்பாள்’ ரீமேக்- சிக்கல் சண்முகசுந்தரமாக சேரன்

 

கடந்த வாரம் நடந்த  புதிய தொழில் நுட்ப வடிவிலான ‘கர்ணன்’ ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகரும்,இயக்குனருமான சேரன், வழக்கம் போலவே உணர்ச்சியால் உந்தப்பட்டு,’’ஐயா தயாரிப்பாளர்களே,தெய்வமகன்,நவராத்திரி’ தில்லானா மோகனாம்பாள்’ போன்ற காவியங்களை யாரும் ரீமேக் பண்ணி விடாமல் தடை விதித்து விடுங்கள். தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி வாசித்த நாதஸ்வரத்தை, இன்றைக்கு இருக்கிற நடிகர்கள் வாயில் வைத்து வாசிப்பது போன்று என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை.அப்படியே யாராவது வாசிக்க நினைத்தாலும், அந்த நாதஸ்வரம் வாய்விட்டு அழுது விடும்’ என்றார்.

சேரனின் இந்த காமெடிப்பேச்சை பார்வையாளர்கள் பெரிதும் ரசிக்கவே, தன்னிலை மறந்த சேரன், அடுத்த கட்டமாக, இனிமேல்எடுக்கப்படும்  படங்களுக்கு கூட எம்.ஜி.ஆர், சிவாஜி படத்தலைப்புகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஒரு சேரனின் படத்துக்கே, ‘ராமன் தேடிய சீதை’ என்று எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டிருந்ததே? என்று யோசித்தபோதுதான், அப்படத்தின் இயக்குனர் ஜெகன், சில இணையதளங்களுக்கு சேரனை தோலுரித்து பேட்டி கொடுத்தார்.

இயக்குனர் ஜெகன், தன்னை வற்புறுத்தி,அப்படி ஒரு தலைப்பை வைத்ததே சேரன் தான் என்று சொன்னதோடு நில்லாமல், ‘’கையில நீங்க ஒரு கோடி ரூபாய் எடுத்துட்டுப்போய், படத்தோட தலைப்பு, ‘குற்றாலத்தில் ஒரு குரங்கு’ அந்தக்குரங்கு நீங்கதான்னு சொன்னாலும், எனக்கு எத்தனை டூயட்டு, ஜோடிக்குரங்கு யாருன்னு கேட்டுட்டு உடனே ஒத்துக்குவாரு’ என்று சேரனின் வெட்டி வீராப்புக்கு விளக்கம் கொடுத்தார்.

உடனே குரங்கு கிரங்குன்னு ஏன் ரொம்ப இறங்கிப்போகனும் என்று யோசித்து, பேசாம ‘தில்லானா மோகனாம்பாளையே’ ரீமேக் பண்ணினா என்ன என்ற முடிவுடன் ,பெட்டியில் ஒரு கோடி அட்வான்ஸுடன்,களி மண்பாண்டம் ஃபிலிம்ஸ் உரிமையாளர் கேனப்பன் அவர்களை சேரனிடம் அனுப்பி வைத்தோம்.

இனி நடக்கப்போவது கேனப்பன் பாடு சேரன் பாடு. நீங்க படப்போறீங்க படாத பாடு.

சேரன் அலுவலக ரிஷப்சன்.உதவி இயக்குனர் ஒருவர் சாப்பிட்டு ஒரு வாரம் ஆன அசதியில்,நிற்பதுவா, அமர்வதுவா என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்.

உள்ளே நுழையும் திரு.கேனப்பன் தான் சேரனைப்பாக்க வந்த விசயத்தை அந்த உதவி இயக்குனரிடம் சொல்ல...

உ.இ: சார் ரொம்ப பிஸியா இருக்காங்களே இப்ப பாக்க முடியாதே..

கேனப்பன்: கடைசியா உனக்கு அவர் கடலமிட்டாய் வாங்க காசு குடுத்தே ஆறு வாரமாச்சி. ஓவரா பில்டப் பண்ணாத . ஓடிப்போயி அவரக்கூப்பிட்டுட்டு வந்துட்டா உனக்கும் நல்லது.அவருக்கும் நல்லது.

உடனே இண்டர்காமில் கால் வருகிறது.சேரன்: டேய் முட்டாள் ஒரு தெய்வம் நம்மளை தேடி வந்திருக்கு.ரிஷப்சன்ல நிக்க வச்சிப்பேசிக்கிட்டிருக்கியே. அதனாலதான் நீ டைரக்டரா ஆக முடியாம எங்கிட்ட குப்பை கொட்டிக்கிட்டு இருக்க. முட்டாள் முட்டாள்  மனசு மாறுறதுக்குள்ள  சீக்கிரம் அவர மேல கூப்பிட்டுட்டு வாடா.

சேரன் அறை.


சேரன்
: நீங்க வர்ற மேட்டரை அண்ணன் புரடக்‌ஷன் பொன்னுச்சாமி எங்கிட்ட சொன்னாரு.நான் சத்யம் தியேட்டர்ல பேசினப்ப தெறிச்ச எச்சில் கூட இன்னும் காஞ்சிருக்காது. அதுக்குள்ள தில்லானா மோகானாம்பாள்ல நடிச்சா சரியா இருக்குமா? அட சரியா தான் இருக்கும். சரியா இருக்காதுன்னு தெரிஞ்சிருந்தா நீங்க எங்கிட்ட அட்வான்ஸோட வந்திருப்பீங்களா? அமெளண்ட் எல்லாம் சரியா இருக்குங்களா ..ஏன்னா நாள் இன்னைக்கே நல்லா இருக்கு. பசங்கள கூப்பிட்டுட்டு டிஸ்கசன் கிளம்பிடுவேன்.

கேனப்பன்:[மைண்ட் வாய்சில்] ...ங்கொய்யால ஜெகன் சொன்னது சரிதான். நீ காசு குடுத்தா குற்றாலத்துல வெறும் குரங்கா இல்ல, சிரங்கு வந்த குரங்கா கூட நடிப்ப போல இருக்கு.

சேரன்
:[வழிந்தபடி]: அண்ணே கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்ட வேலை பாத்த காலத்துலருந்தே நான் மைண்ட் வாய்சை கேட்ச் பண்றதுல கெட்டி.நீங்க மனசுல நினைச்சதுல தப்பு என்னண்ணே இருக்கு. கொஞ்சம் க்ரீம் தடவி நடிச்சிட்டு அருவியில குளிச்சிட்டாபோதும்ணே...

கேனப்பன்
:அட ஆண்டவா அத விடுங்க தம்பி.நம்மளையும் விட மாட்டாங்களா அந்த குரங்குங்க கோவிச்சுக்கும். நடிப்புல நீங்க சிக்கல் சண்முகசுந்தரமா பாக்குறவங்களை விக்கல் எடுக்க வச்சிருவீங்க. அதுல எனக்கு சந்தேகமே இல்ல. ஆனா அந்த நாதஸ்வரத்தை எப்பிடி சிவாஜி மாதிரி தத்ரூபமா வாசிக்கப்போறீங்கன்னுதான் புரியலை.

சேரன்
: அட போங்கண்ணே  ஆலமரத்து இலையில பீப்பீ செஞ்சி ஊதுறதுல மேலூர் ஏரியாவுல என்ன அடிச்சிக்க ஆளே இல்ல.. காதை கிட்டத்துல கொண்டு வாங்க இன்னொரு ரகஸியம் சொல்றேன்.ஆக்சுவலா நம்ம ஸ்கிரிப்ட்ல நாதஸ்வரத்தை பீப்பீ யாதான் மாத்தப்போறேன். ஒருவேளை பழையபடி, சிவாஜியே எழுந்திரிச்சி வந்து, தில்லானா மோகனாம்பாள் பார்ட்-3 ல நடிச்சாக்கூட பீப்பீ வாசிக்கிறதுல என்னய பீட் பண்ண முடியாது.

இவிங்கள திருத்தவே முடியாது என்ற நினைப்புடன் திரு.கேனப்பனிடமிருந்து சேரனுக்கு ஒரு கோடி கைமாற மறுநாள் உதவியாளர்களுடன் டிஸ்கசன்.

சேரன்:அசிஸ்டெண்ட்ஸ் நல்லா கவனிங்க, ஒரு ரிஸ்கான சப்ஜெக்டை நல்ல சமூக நோக்கத்தோட கையில எடுத்திருக்கோம்.உங்க கிட்ட கேக்காமயே நான் கதைப்படி வர்ற நாதஸ்வரத்தை பீப்பீயா மாத்திட்டேன்.அப்ப பத்மினி அம்மா ஆடுன பரதநாட்டியத்தை இப்ப என்னவா மாத்தலாம்? ஹீரோயினா யார் சூட் ஆவாங்க ? கதையில வேற என்ன மாத்தலாம்? கமான் ஒவ்வொருத்தரா எடுத்துவிடுங்க.

மிஸ்டர் பழையபாரதி
: [மைண்ட் வாய்சில்] கதையில முதல்ல உங்களத்தான் மாத்தனும் நாகேஷ்  நடிச்ச வைத்தி கேரக்டருக்குத்தான்  நீங்க எல்லாவகையிலயும்  ரொம்ப பொருத்தமாஇருப்பீங்க.

சேரன்: முதல்ல மைண்ட் வாய்சை வைண்ட் அப் பண்ணுங்க.பேட்டா வேணும்னு நினைக்கிறவங்க நீட்டா பேசுங்க.

குகன்
: சார் ஏற்கனவே விஜயோட குச்சிப்புடி ஆடுன அனுபவம் இருக்கிறதால.,,பரத நாட்டியத்தை குச்சிப்புடியா மாத்திட்டு, த்ரிஷாவ அம்பாளா அப்பாயிண்ட் பண்ணிட்டோமுன்னா படத்தோட டைட்டிலை,’தில்லானா த்ரிஷாம்பாள்’னு மாத்திட்டு கலெக்‌ஷனை அள்ளிறலாம் சார்.

மற்ற இரு உதவி இயக்குனர்கள்;
[ ஒரே குரலில்] சார் த்ரிஷா சார். இல்லைன்னா அட்லீஸ்ட் சிநேகா சார்..

சேரன்: த்ரிஷா இப்பல்லாம் ரொம்ப திகட்ட ஆரம்பிச்சிட்டாங்க. சிநேகா அநேகமா பிரசன்னாவைக்கட்டிக்கிட்டு ரிடையர் ஆகப்போறாங்க. ஏன் நவ்யாவப்போட்டா ஜனங்க வேண்டான்னா சொல்லப்போறாங்களா?. அவங்க ஏற்கனவே டான்ஸ்ல ஏகப்பட்ட டாக்டர் பட்டம் வாங்குனவங்க.படத்துக்கு டைட்டிலைக்கூட,’தில்லானா நவ்யாம்பாள்’னு வச்சிட்டாப்போச்சி.

[அறையின் வெளியிலிருந்து புரடக்‌ஷன் பொன்னுச்சாமி]:
நவ்யான்னா நண்டு சூப் கேட்டே என்ன பெண்டு எடுப்பாங்க சார்.

சேரன்; சீனியர்னு ஒரு மரியாதைக்காக வேலைக்கு வச்சா, நம்ம தலை மேல ஏறி உட்கார்ந்துக்கிட்டு பேன் பாக்க ஆரம்பிச்சுடுவாங்க.

பழையபாரதி[மீண்டும் மைண்ட்வாய்சில்
] அப்பிடி பேன் பாத்தா நல்லதுதான சார்.நமக்கு ஷாம்பு செலவு மிச்சம்.

சேரன் டென்சனாகி, இன்னைக்கி டிஸ்கஷன் பேக்கப். நாளைக்கி புது அசிஸ்டெண்ட்ஸை வச்சி ஷூட்டிங் டேக் ஆஃப்’ என்ற படி விருட்டென்று கிளம்புகிறார்.

Monday, February 20, 2012

கூகுளில் குப்பண்ணாவைத் தேடிய நம்ம குண்டண்ணா...


கடந்த வெள்ளிக்கிழமை காலை என்று ஞாபகம். நண்பர் ஒருவருக்கு போன் செய்து,’ஆபிஸில் இருக்கிறீர்கள் என்றால் வருகிறேன்’ என்றேன்.

‘இங்கதான் இருப்பேன். எப்ப வேணும்னாலும் வாங்க’ என்றவர், ‘அண்ணே போனைக் கட் பண்ணிடாதீங்க. டி.நகர்ல கன்னையா தெரு எங்க வருதுன்னு தெரியுமா? என்றார்.


அவரது கேள்வியில் சற்றே பதட்டம் இருந்தது.

‘கன்னையா தெரு கேள்விப்பட்ட மாதிரி இருக்கு. ஆனா டக்குன்னு ஞாபகத்துக்கு வரலியே. நேர்ல வர்றப்பா சொன்னா போதுமா?’’

‘ஆங்..சரிங்கண்ணே’ என்றவர் பதிலில் 'இத்தனை வருஷமா மெட்ராஸ்ல இருந்து என்ன பிரயோசனம்?' என்பதுவும் சேர்ந்து இருந்தது போல் எனக்கு ஒரு மனப்பிராந்தி.

அடுத்த அரைமணி நேரத்தில் அவரது அலுவலகத்தை அடைந்தேன். வழியில் ஓரளவுக்கு யோசித்துப் பார்த்ததில் கன்னையா தெரு, எனக்கு நினைவில் வரும் அறிகுறி கூட தெரியவில்லை.

அவரும் வேறு யாரிடாமாவது இந்நேரம் கேட்டுத்தெரிந்துகொண்டிருப்பார் என்று நினைத்து உள்ளே நுழைந்தபோது, முகமெல்லாம் பிரகாஷமாக கன்னையா தெரு எங்க இருக்குன்னு ஞாபகம் வந்துடிச்சா? என்றார்.

‘’அட ஆண்டவா நீங்க வேற யாருகிட்டயாவது கேட்டிருப்பீங்கன்னு அசால்ட்டா இருந்துட்டேன்’’

அண்ணே, நீங்க ரொம்ப கேள்விப்பட்ட மாதிரி இருக்குன்னு சொன்னதால, நான் வேற யார்கிட்டயும் விசாரிக்காம விட்டுட்டேன்’’

அடுத்த சில நிமிடங்களுக்கு எங்களிடையே பலத்த மவுனம்.

சரிண்ணே விடுங்க, பிறகு தேடிக்கலாம்’ என்று நண்பர் சொல்ல, இப்போதைக்கு விட்டதுடா இம்சை என்றபடி வேறு வெட்டிக்கதைகள் பேசுவதில் கவனம் செலுத்தினோம்.

மறுநாள் அவருக்கு போன் அடிக்காமலே அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

நான் உள்ளே நுழைந்தது கூட தெரியாமல் கூகுள் மேப்பில் கன்னையா தெருவை கண்ணில் வெண்ணையை விட்டுத் தேடிக்கொண்டிருந்தார் நண்பர்.

எனக்கு பயங்கரமான குற்ற உணர்ச்சி தொற்றிக்கொண்டது. தனது தொழில் சம்பந்தமாக யாரையோ சந்திக்க வேண்டி நம்மை ஒரு பொருட்டாக மதித்து கேட்ட முக்கிய  விசயத்தை  மறந்துவிட்டோமே’ என்று மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ,’’அண்ணே ஓரளவுக்கு நெருக்கிக்கண்டுபுடிச்சுட்டேன்.அங்க பக்கத்துல போயி ஏதாவது ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட கேட்டுக்கலாம் வாங்க’ என்றபடி என்னையும் அழைத்துக்கொண்டு அவர் கிளம்ப, என்ன ஏது என்று கூட கேட்டுக்கொள்ளாமல் அவர் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

இடத்தை விசாரித்து  நெருங்கும்போது, அட கன்னையா தெரு, டைரக்டர் ஷங்கர் ஆபிஸ் இருக்க தெருவாச்சே. இங்க எத்தனை தடவ வந்திருக்கோம். இதுகூட மறந்து போச்சே’ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர் வண்டியைக்கொண்டுபோய் நிறுத்திய இடத்தைப் பார்த்தபோது, ’அட தின்னிப் பண்டாரமே, இதுக்குத்தான் கன்னையா தெரு அட்ரஸைக்கேட்டு என் வெண்ணைய எடுத்தியா ‘ என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டதை வெளியில் சொல்ல முடியவில்லை.

வண்டியை அவர் பார்க் பண்ணிய இடம் அன்றைக்கு முந்திய நாள் புதிதாக துவங்கப்பட்டிருந்த ‘ஜூனியர் குப்பண்ணா’ ஹோட்டல்.

‘’பாத்திங்களா பேருக்கு ஏத்தமாதிரி வாசனை எப்பிடி குப்புன்னு தூக்குது. இவங்க ஈரோட்டுல ரொம்ப ஃபேமஸ். ஒரு தடவ இவங்க ஹோட்டல்ல சாப்பிடுறதுக்காகவே பஸ் புடிச்சி ஈரோடு போயிருக்கேன்.’

நான் அடைந்த அதிர்ச்சி, மிரட்சி போன்ற எவற்றுக்கும் ஒரு க்ளோஸப் கூட போடாமல், கொஞ்சம் லேட்டாகப்போனால் எல்லாமே காலியாகிவிடும் பீதியில் குப்பண்ணாவை நோக்கி  நடக்க ஆரம்பித்தார் நம்ம குண்டண்ணா.

அவ்வளவு நாளும் அவர் ஒரு நல்ல சாப்பாட்டுப்பிரியர் என்பது தெரியும். ஆனால் கூகுளுக்குள் எல்லாம் போய் குப்பண்ணாவைத் தேடுகிற அளவுக்கு சாப்பாட்டு வெறியர் என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.

எப்படியிருந்தாலும் பில்லைத்தரப்போகிற புரவலர் அவர்தான் என்பதால் இதை எல்லாம் நான் மனசுக்குள் நினைப்பது கூட தப்புதான்.

நம்ம தின்னிப்பண்டார அண்ணாவின் அட்ராசிட்டியை ஜீரணித்துக்கொள்ளுமுன்பே, உள்ளே எனக்கு வேறொரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

நான் சாப்பாட்டு விசயத்தில் மிகவும் பரிதாபப்பட வேண்டிய ஆள் என்றாலும் கூட அதைப்பற்றிப் படிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவன்.

அந்த அதிர்ச்சிக்குக்காரணம், பிரபல ப்ளாக்கர் கேபிள்சங்கர். இவரது ப்ளாக்கில் ’சாப்பாட்டுக்கடை’க்கு எப்போதுமே பெரும் முக்கியத்துவம் இருக்கும். அண்ணன் வெரைட்டியான ஹோட்டல்களில் வெரட்டிவெரட்டி சாப்பிட்டுவிட்டு, அதைப்பற்றி ப்ளாக்கில் சப்புக்கொட்டி எழுதி  படிப்பவர்களை எச்சில் முழுங்க வைத்து வில்லங்கமாகச் சிரிப்பார்.

ஹோட்டலின் முதல் கேபினிலேயே ஒரு விஸ்தாரமான இலைக்கு முன்னால் பல அயிட்டங்களுடன் அமர்ந்திருந்தார் ’கேபின்’சங்கர்.

ஒரே ஒருமுறை தான் சந்தித்திருக்கிறோம் என்பதால் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

மட்டன், சிக்கன் அயிட்டங்களை தனது இலையைச்சுற்றி ரவுண்டு டிராலி போட்டு அவர் ரவுண்டு கட்டிக்கொண்டிருந்ததால் சின்னதாய் ஒரு வணக்கம் வைத்து கூட  நான் அவரைத்தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

என்னை அழைத்து வந்த நண்பரைப்போலவே ஏகப்பட்ட சாப்பாட்டு ராமன்கள் ஹோட்டல் முழுக்க நிரம்பி வழிந்தார்கள்.

எதையுமே தப்பண்ணா என்று சொல்லிவிடமுடியாதபடி, அசைவ அயிட்டங்கள், இப்போது மேட்டரை அடித்துக்கொண்டிருக்கும்போது கூட  எச்சில் ஊறுகிற அளவுக்கு சுவையோ சுவை.

சக ஹோட்டலாளர்களின் வயிதெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொள்ளும் லட்சணம் ஹோட்டல்  நுழைந்ததுமே  தெரிந்தது. அதிலும் பாசத்துடன் பரிமாறுவதுதான் ஒரு ஹோட்டலின் வெற்றிக்கு முதல்மந்திரம் என்பதைத்தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே ஆர்டர் எடுக்க வந்திருந்த பையனின் கையிலிருந்த ‘ஒன்று’ என்னை ’கேளுடா பரவாயில்லை’ என்று தொந்தரவு பண்ணிக்கொண்டேயிருந்தது. கடைசியில் கேட்டே விட்டேன்.

ஆர்டரெடுக்கிற பையன்கள் கையில் ஒரு அல்ட்ரா மாடர்ன் செல்போன் போன்று ஒன்று வைத்திருந்தார்கள்.

 அதற்குப் பேர் ஐ பாட்’டாம். நாம் ஆர்டர் சொன்னவுடன், அதில் அவர் அந்த ஆர்டரின் ‘செண்ட்’ பட்டனைத்தட்டினால் அது கிச்சன் மாஸ்டர், ஆர்டர் டெலிவரி தர வேண்டிய பையன், மற்றும் கல்லாவில் அமர்ந்திருப்பவருக்கு என்று மூன்று இடங்களுக்கும் போய்விடுமாம்.

அந்த ஐ-பாட்-ஐ முதலில் பார்த்த போதே எனது டப்பா செல்போனை தூக்கி பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒளித்துவைத்துக்கொண்டேன்.

பேசாமல் ப்ளாக்’ எழுதுவதை, ஒரு ரெண்டு மாசத்துக்கு நிறுத்திவைத்துவிட்டு, குப்பண்ணாவில் வேலைக்குச்சேர்ந்து அந்த ஐ பாட்-டோடு எஸ்கேப்பாக முடியுமா என்றுதான் கடந்த ரெண்டு நாளாக என் சிந்தனை ஓடுகிறது.

அண்ணா உங்கள்ல யாராவது என்ன குப்பண்ணா கிட்ட வேலைக்கு சேர்த்துவிடமுடியுமா பாருங்க.

Sunday, February 19, 2012

காதலில் சொதப்புவது எப்படி? 'பட்டய’ கிளப்புகிறது இப்படி..

ந்தப்படம் மேற்படி தலைப்பில் குறும்படமாக வந்து,பெரும்படமாக மாறியகதை, தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும் என்பதால்,அதைப்பற்றி எழுதி சொதப்பாமல் நேராக மேட்டருக்கு வருகிறேன்.

வயது வந்தவர்களுக்கு மட்டும் மாதிரி, காதலில் தோற்றவர்களுக்கும் கல்லூரியைக் ‘கட்’ அடிப்பவர்களுக்கும் மட்டும்’ என்று ஒரு சப்-டைட்டிலே போட்டிருக்கலாமோ என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு முழுக்க முழுக்க காதலால் நொந்துபோனவர்களுக்காக வாசிக்கப்பட்ட நையாண்டி மேளம்தான் இந்த கா.சொ.எ’?

சரி, க்ளைமேக்ஸில் அதற்கு தீர்வாக ஏதாவது சொல்வார்களா என்று பார்த்தால், காதல் என்றால் சொதப்பல் இருக்கத்தான் செய்யும். அப்படி சொதப்பல் எதுவும் நடக்காமல் இருந்தால், நீங்கள் பண்ணுவது காதலாக இருக்காது என்று 
காதல் சப்ஜெக்டில் பி.ஹெச்.டி. படித்தவர் போல தத்துவம் சொல்கிறார் டைரக்டர்  பாலாஜி மோகன்.

காதலர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக காதலர்கள் அமலாபாலும், சித்தார்த்தும் பேட்டி கொடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது...

டி.வி. நிருபர் : சரி சொல்லுங்க ...ரெண்டுபேரும் முதமுதல்ல எப்ப எங்க சந்திச்சீங்க?

அமலா :
முதல்ல நீ சொல்லுப்பா.

சித்தார்த் :
இல்ல முதல்ல நீ சொல்லுப்பா..

அமலா[ சற்றே கோபமாக]
அதான் முதல்ல நீ சொல்லுங்கிறேன்ல..

சித்தார்த்: முதல்ல காலேஜ் கேண்ட்டீன்ல சந்திச்சோம். இவங்க அப்ப ’சப்பியா’ குண்டா இருந்தாங்க

அமலா:[கடுப்புடன் ] நான் எப்ப’சப்பிய’ குண்டா இருந்தேன்?

சித்தார்த்: இல்லப்பா அப்ப நீ கொஞ்சம் குண்டா அழகா இருந்த. அந்த குண்டுதான் உன்னோட அழகே..

அமலா;அப்ப இப்ப நான் அழகா இல்லைங்கிறீயா?

இந்த உரையாடல் ஒரு பெரும் சண்டையாக மாறி கையில் இருக்கும் கண்ணாடி கிளாஸை வீசி சித்தார்த்தின் மண்டையை உடைக்கிறார் அமலா.

இப்படியே இன்னுமொரு முப்பது காட்சிகளையும்,அதன் தொடர்ச்சியாய் அவர்கள் சமாதானமாகி பின்  மறுபடியும் சண்டை போடுவதையும் சேர்த்துக்கொண்டால்,’காதலில் சொதப்புவது எப்படி? படத்தின் முழுக்கதையும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

 ...பொண்ணுங்க ஒரு பெயிண்டிங் மாதிரி, அவங்க எங்க பாத்தாலும் அது நம்மள பாக்குற மாதிரியே இருக்கும்..அது ஒரு இல்லுயூஷன்’...

...பாசத்தையும் சரி,வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்டுற அளவுக்கு பசங்களால என்னைக்குமே காட்டமுடியாது...

..பார்வதியை நான் லவ் பண்றதுக்கு முந்தின நிமிஷம் வரை நாலு பசங்களோட நல்லா சிரிச்சி பேசிக்கிட்டிருந்தேன். ..

அவளை லவ் பண்ணின பின்னாடி என் வாழ்க்கை நாசமாப்போகப்போகுதுங்கிறது அந்த நிமிஷம் வரைக்கும் எனக்குத்தெரியாது...

அவ எடுத்து என் மண்டையை உடைக்கிறதுக்கு முந்தின நிமிஷம் வரை நம்மளோட காலேஜ் கேண்ட்டீன்ல ஏன் கூல்ட்ரிங்ஸை பேப்பர் கப்ல குடுக்காம கண்ணாடி கிளாஸ்ல குடுக்கிறாங்கன்னு யோசிச்சதில்லை...

அவ கிட்ட கடைசிய கண்ணாடி கிளாஸ் அடி வாங்குனதிலிருந்து நான் ஒரு ‘அஃபிஷியல் லவ் ஃபெயிலியர் கேஸ்’...

...இப்படி படம் முழுக்க பட்டய கிளப்பும் வசனங்கள், தத்துவங்கள், மொக்கைகள் சீன் பை சீன் கொட்டிக்கிடக்கின்றன.

சித்தார்த் லவ் ஃபெயிலியர் கேஸாக அசத்தியிருக்கிறார்.

ஆனால் அமலாபாலை காலேஜ் பொண்ணாக ,ஏன் பலவருஷம் அட்டெம்ப்ட்’ அடித்த பொண்ணாகக்கூட மனசு ஏற்க மறுக்கிறது.

இவர்களைத்தவிர படத்தில்அசத்தும்  மற்ற அனைவருமே குறும்படத்தில் நடித்தவர்கள்.

கதையை சற்று வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட அமலாவின் அம்மா-அப்பா விவாகரத்து விவகாரமும், பின்னர் அது ரத்தாகி அவர்கள் காதலில் விழுந்து, பின்னணியில் சத்யா’பட ‘வளையோசை கலகலவென’ பாடலும் டைரக்டர் முதுகைத் தேட வைக்கின்றன, சபாஷ் என்று தட்டிக்கொடுப்பதற்காக.

தமன் இசை, படத்தின் தரத்துக்கு இல்லையென்றாலும் ஓகே.

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு துல்லியம். மொக்கை ஃபிகர்கள் இவர் கேமராவில் தேவதைகளாய் தெரிகிறார்கள்.

முதல் படம் வாங்குவதற்குள், பல சொதப்பல்களை சந்திக்க நேரும் புதிய இயக்குனர்களுக்கு இப்படியும் ஒரு ரூட் இருக்கிறது என்று காட்டி அதை பெரிய திரையிலும் சாதித்துக்காட்டிய பாலாஜி மோகனின்’ காதலில் சொதப்புவது எப்படி? பட்டய கிளப்புகிறது இப்படி.
Saturday, February 18, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்’-டைரக்டர் குமார் ஸாரி நீங்க ரொம்ம்ம்ப சுமார்...

இந்தப்படம் நீண்ட நாட்களாகவே உதவி இயக்குனர்கள் மனதில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

காரணம், காரணம் சொல்லாமலேயே,படத்தின் இயக்குனரான விஜயைத்தூக்கிவிட்டு, தயாரிப்பாளரே இயக்க ஆரம்பித்தது.

பணம் கையிலிருந்தால், யார் வேண்டுமானாலும் டைரக்டராகிவிடலாம் என்று ஆகிவிட்டால் சினிமாவின் எதிர்காலம் என்னாவது என்ற நியாயமான கொந்தளிப்புதான் அது.

அவர்களின் கொந்தளிப்புக்கு திடீர் இயக்குனர் எல்ரெட் குமார் எந்தக் குறையும் வைக்கவில்லை.

இதே படத்தில் நடந்த இன்னொரு மோசடியை, எனக்கு நண்பர் ஆந்தை’குமார் செய்தியாக அனுப்பி இருந்தார்.படத்தின் கதையை எழுதியவர் மருத்துவர் வஸந்த செந்தில்.இவரது கதையை மட்டன் கைமா பண்ணிவிட்டு,கூட்டத்தோடு கோவிந்தாவாக, வசன உதவி என்று போட்டார்கள்.

கீழே என் இணையதளத்துக்காக நான் எழுதிய விமரிசனம்:

கோ’ விண்ணைத்தாண்டி வருவாயா’ படங்களைத் தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் தயாரிப்பில், இந்தமுறை தயாரிப்பாளரே இயக்கத்தையும் மேற்கொண்ட படம்.

சமீபத்தில் நடந்த இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரஸ்மீட்டில் பேசியஇப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான  எல்ரெட் குமார், ஒரு நிருபர் கேணத்தனமாக ( அந்த நிருபரே நான் தான் என்பதால் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டியதில்லை )  கேட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, இந்தப்படத்தை தெலுங்கு இந்தியில் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்போவதாக நிருபரை விட கோணத்தனமாக பதிலளித்தார்.
சரி, முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றை ஹாலிவுட்டுக்கு ரீமேக் பண்ணும் அளவுக்கு ஒரு எக்ஸ்ட்ராடினரி கதையுடன், எக்ஸ்ட்ராடினரி டைரக்டர் வந்து விட்டார் என்று நினைக்கத் தோன்றியிருக்கும், முப்பொழுதும் உன் கற்பனைகள்’ தியேட்டருக்குள் நுழைவதற்கு முன்பு வரை.
இதுவன்றி இன்னும் சில பஞ்சாயத்துகளும் இந்தப்படத்தைப்பற்றி இருக்கின்றன .எனினும் முதலில் கருமாந்திரம் பிடித்த கதை என்னவென்று பார்ப்போம்.

 ராம் [அதர்வா] ஒரு ஐ.டி. ஊழியர். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையில் வேலை பார்த்துவிட்டு, சனி, ஞாயிறுகளில் தன் காதலி சாரா[அமலாபால்]வை சந்திக்க பெங்களூரு வந்து விடுகிறார். இருவரும் அடிக்கடி கட்டிப்பிடித்து காதல் சொல்கிறார்கள். வயசுக்கோளாறா அல்லது இயக்குனரின் ஆர்வக் கோளாறா என்று சந்தேகப்படும் அளவுக்கு, அநியாயத்துக்கு, டி.வி.கிரிக்கெட்டில் தோனி சிக்சர் அடித்தால் கூட கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள்
.

நடு நடுவே அதர்வா ஒரு சைக்கோவாக மாறி பெரும் பொருட்செலவில் கிராஃபிக்ஸ் உத்திகளின் உட்சபட்ச உதவியுடன் அந்தரந்தில் அடிக்கடி நின்றுகொண்டு  கொலைகள் செய்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்து சென்னை வரும் இன்னொரு அமலாபால் அதர்வாவைப்பார்த்து ஆச்சரியம் கொள்கிறார். பதிலுக்கு அதர்வாவுக்கு எதுவும் ஆவதில்லை. தன் மாமாவும் டாக்டருமான ஜெயப்பிரகாஷின் உதவியோடு, அமலா அதர்வாவைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட.. இன்னொரு அமலா இருப்பதாக அதர்வா ‘ இல்யூஷனில் வாழ்வதாக கதையில் ஒரு  பொல்யூசனைப் புகுத்தி கடைசியில் கதைக்கு ஒரு சொல்யூஷன்  தரமுடியாமல் தவிக்கிறார் எல்ரெட் குமார்.

மெடிக்கல் த்ரில்லர் என சொல்லப்படும் இந்தக்கதையை மருத்துவர் வஸந்த் செந்தில் என்பவர் எழுதியதாகவும், அவர் பெயரை டைட்டிலில் கூட போடாமல் அவர் டாக்டர் என்பதால் கருணைக்கொலையும், கதைக்கொலையும் புரியப்பட்டதாக
ஒரு பஞ்சாயத்து.

மற்றொன்று படத்தை ஆரம்பத்தில் இயக்கிவந்த விஜய் என்பவரை நீக்கிவிட்டு தயாரிப்பாளரே ..ஸ்டார்ட் ..கட்.. சொல்லி படத்தை இயக்கியது. [இவை இரண்டுமே விரைவில் தனிக்கட்டுரைகளாய்]
அதர்வா பாலா படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே இப்படியா என்று ஆச்சரியப்படும் வகையில் சைக்கோவாக நடித்துகொடுத்திருக்கிறார்,

அமலா பால் ஒரு பாலா இரண்டு பால்களா என்று ரசிகர்களைக் குழப்புவதில், தானும் குழம்பிப்போய் இருப்பது போல் திரண்டு போன பாலாய் மிரண்டு முழிக்கிறார்.

சந்தானம் நாலைந்து காட்சிகளில் வந்து வழக்கம்போல் கலாய்க்கிறார். ‘நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கி முழைச்ச ஐ.டி. பசங்களே...’ என்று கம்ப்யூட்டர் பசங்களைக் கலாய்ப்பதிலும், ஏங்க என்ன அடிச்சதே..அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க 25 டாக்டர்களா...’என்று டாக்டர்களைக் கலாய்ப்பதிலும் சந்தானம் சத்தான’ ம் தான்.

சைனாவுக்கெல்லாம் போய் டியூன்களைக் கம்போஸ் பண்ணிவிட்டு வந்தார் என்று பிரஸ்மீட்களில் பெருமை அடிக்கப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்குமார் அங்கு போய் பாம்பு ஷூப் குடிப்பதிலேயே பல மணி நேரங்களை செலவிட்டிருப்பார் போல தெரிகிறது. பாடல்களும்,பின்னணி இசையும் பர்மா பஜார் பாம்பு ஷூப்பையும் விட  பரிதாபம்..

படத்தின் ஒரே உருப்படியான அம்சம் ரேணிகுண்டா’ சக்தியின் ஒளிப்பதிவு. நல்ல வண்ண ஞானம் இவரிடம் இருக்கிறது.மிக விரைவில் நல்லவண்ணம் வருவார்.

இன்னொருத்தர் கதையை சுட்டு’ இயக்கியதாலோ என்னவோ, நமக்கு மட்டுமல்ல படத்தின் இயக்குனருக்கே கதை புரிந்ததா என்பது புரியவில்லை.

பாடல், சண்டைக்காட்சிகள் வரும்போதெல்லாம் தலைவலி மாத்திரைகள் தேடித்தவிக்கிறது நம் மனசு.

முப்பொழுதும் உன் கற்பனைகள்’ தயாரிப்பாளரும்,இயக்குனருமான எல்ரெட்குமார், தன் சொந்தச்செலவில் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூன்யமே என்று சொல்லவைக்கும், பெரும் செலவில் கற்றுக்கொண்ட வீண் படிப்பினைகள்.

மிஸ்டர் குமார்!  ஸாரி, நீங்க ரொம்ம்ம்ம்ப சுமார்!


Wednesday, February 15, 2012

அவர் வைரமுத்து,...நான் எப்போதுமே அவரை வய்யிற முத்து...

திகில் முருகன்,ஜான்சன்,மவுனம்ரவி,வீ.கே.சுந்தர்,விஜயமுரளி,ஜான்,டயமண்ட் பாபு  போன்ற முன்னணி பி.ஆர்.ஓ.க்களெல்லாம் கோபித்துக்கொள்ளக்கூடாது.

என்னைப்பொறுத்தவரை, எப்போதுமே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பி.ஆர்.ஓ. யாரென்று கேட்டால் நான் கவிப்பேரரசு வைரமுத்துவின் பெயரைத்தான் சொல்லுவேன்.

எல்லா பத்திரிகை நிருபர்களையுமே குடும்ப நலம் விசாரிக்கிற அளவு நெருக்கம்,தொடர்ந்து தன்னைப்பற்றிய பாஸிடிவான செய்திகளை கைப்பட எழுதி நிருபர் பெயரிலேயே போட வைக்கிற சாமர்த்தியம், தான் சம்பந்தப்பட்ட படங்களின் செய்திகளை வரவழைத்து பாட்டு எழுத வாய்ப்புக்கொடுத்த  டைரக்டர்களின் மனம் குளிர்விக்கிற லாவகம், ஏதாவது சிறு காண்ட்ரவர்சி தன்னைப்பற்றி வந்தால் கூட நிர்வாகத்தின் தலைமைக்கு போன் செய்து,அதை எழுதியவருக்கு 'குண்டு'  வைக்கிற சாதுரியம்..

இதெல்லாம் மேற்படி பி.ஆர்.ஓ.க்கள் யாரிடமும் வைரமுத்து அளவுக்கு இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இந்நேரம் ஒதுங்கியிருப்பார்கள்.

இப்ப என்னாத்துக்கு இந்த மேட்டர்? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.

இந்த வாரக் ‘குமுதம்’ படித்திருந்தால் இந்தக்கேள்வியை பாதிப்பேர் கேட்க மாட்டார்கள்.இருந்தாலும் மீதிப்பேருக்காக..

சும்மாவே வைரமுத்துவின் பேட்டியில் தற்பெருமை தாண்டவமாடும் என்றாலும், 60 க்கு மேல கிறுகிறுப்பு என்பதை நீரூபிப்பது போல், இந்தப்பேட்டியில் பெருமையை கொஞ்சம் ஓவராகவே பீத்தியிருக்கிறார் கவிப்பேரரசு.

சொந்த வேலைகள் காரணமாக கொஞ்சம் சொங்கிப்போயிருந்தவர், இந்த ஆண்டு மீண்டும் நிறைய்ப்பாடல்கள் எழுதும் எண்ணத்தோடு இருக்கிறாராம்.அதனால் பாடல் எழுத வாய்ப்புக்கொடுப்பவர்கள், ,கபிலனுக்கொன்று,சினேகனுக்கென்று என்று பாடல்களை 'காக்காக்கடி' கடித்து  பங்கு பிரித்துக்கொடுத்துவிடாமல்,மொத்தமாக’  எனக்கே எனக்கென்று கொடுத்து விடுங்கள் என்கிறார்.

அதற்கு என்ன காரணமாம்?

மொத்தப்பாடல்களும் எழுதும்போது படத்தோடும் இயக்குனரோடும் ஒரு பந்தம் நேர்ந்து விடுகிறதாம்.படத்தின் பாத்திரங்களோடு, இவரது குழம்பும்,கூட்டும்,குருமாவும் சேர்ந்து பயணம் செய்வதால்,வேறு யாருக்கும் அந்தப்படத்தின் பாடல் போகாதது தெரிந்தால்தான் , ஒழுங்காக சயனம் வருகிறதாம்.

அடுத்து திரைத்துறையில் யாரை நேசிக்கிறீர்கள் ?
என்ற கேள்விக்கும் அதே பதில்தான் வருகிறது கவி BORE அரசுவிடமிருந்து...

மொத்தப்படத்தின் பாடல்களையும் என்னை நம்பி ஒப்படைக்கும் இயக்குனர்களையும், பேமெண்ட் தந்து விட்டு செக்கை பவுன்ஸ் பண்ணாத தயாரிப்பாளர்களையும்தான் கவிஞருக்கு ரொம்பப்புடிக்குமாம்.

கவிஞருக்கு இன்னொரு 50 வருடம் கழித்தாவது  ’ரிடையர்’ ஆகும்  எண்ணம் இருக்கிறதா?
என்று கேட்டால்,ஏதோ சினேகன் தேசிய விருதை வாங்கி விட்டதாகக்கேள்விப்பட்டமாதிரி  மாதிரி சினம் கொள்கிறார்.

எனது படைப்பாற்றலின் கடைசிச்சுடர் அணையும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன். அல்லது என்னைத்தாண்டும் ஒருவன் வரும்வரை.

இப்போது பாடல் எழுதுகிறவர்களின் எண்ணிக்கை மலைப்பாக இருக்கிறதே ஒழிய,trend setter' எனக்கூடிய என்னைப்போல் தடம் பாதித்தவர்கள் யாரையும் காணோம்.வெறும் ஓசைகளின் பள்ளத்தாக்கை இட்டு நிரப்பும் பொருளாக பாடல் வரிகள் ஆகிவிட்டன.

பாடல் என்பது தாயின் மார்பில் சுரக்கும் பாலாக இருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கவிஞர்களின் பாடல்களோ எந்திரத்தின் இடுக்கில் கசியும் எண்ணெயாக ஆகிவிட்டது.’


என்று தன்னைத்தவிர, தன் சொந்தப்பிள்ளை உட்பட அனைவரையுமே கங்கணம் கட்டிக்கொண்டு கலாய்க்கும் கவிபோர் அரசு, இப்போது  மணிரத்தினத்தின் ‘கடல்’ படத்துக்கு தனது ‘வைரமுத்து கவிதைகள்’ தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளைப் பாடல்களாக்க கொடுத்திருக்கிறாராம்.

அந்த இரண்டு பாடல்களுமே, தமிழ்சினிமா கடந்த பத்தாண்டுகளில் கண்ட சிறந்த பாடல்களாம்.

கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி மீண்டும்  இப்படி தனக்கு தானே பி.ஆர்.ஓ. வேலை பார்க்கத்தொடங்கி விட்டார் வைரமுத்து.

இனி நா.முத்துக்குமார் போன்றவர்கள் வருஷக்கடைசியில், போன வருஷம்,நான் தான் அதிகபட்சமாக 48 படங்களில் 111 பாடல்கள் எழுதினேன் என்று பிரஸ் ரிலீஸ் எழுதி பெருமையடித்துக்கொள்ள முடியாது.ஏனென்றால்....

மூட் இருந்தா பழையபடி  முதல் இரண்டு  பாராவ மட்டும் படிங்க..


கவிப்பேரரசு வைரமும்,எலக்கியப்பேரரசு எஸ்.ராவும் சமீபத்துல ஒரு ஃபங்சன் ல சந்திச்சிப்பேசுனதை ஒட்டுக்கேட்கிற பாக்கியம் ஒரு நண்பரின் பாழடந்த காதுக்கு கிடைத்தது.

எஸ்.ரா: என்ன கவிஞரே ஆனந்த விகடன் -ல நீங்க எழுதுற ‘ மூன்றாம் உலகப்போர்’ தொடர்  பெரிய அக்கப்போர்ன்னு பேசிக்கிறாங்களே?

வயிரம்: ஏன் ஜூனியர் விகடன் -ல நீங்க எழுதுற ‘ எனது இந்தியா’ கூட படிச்சி நொந்தியாங்கிற மாதிரி இருக்குன்னு தான் பேசிக்கிறாங்க.

எஸ்.ரா: சரி சரி விடுங்க.. புலவர்களுக்குள்ள சண்டை எதுக்கு?  ஒட்டுமொத்தமா  நம்ம மேட்டர்கள் முந்தி மாதிரி பேசப்படலைன்னு பொதுவான ஒரு கருத்து இருக்கு.

வயிரம்: விகடனே முந்தி மாதிரி பேசப்படலைன்னு ஒரு கவுண்டரைத் தட்டிவிடுங்க .அப்புறம் நமக்கெதிரா ஒரு பய வாயைத்தொறக்க மாட்டான். ஹா..ஹா.. ஹா..

இருவரும் எகத்தாளமாக சிரிக்க ஆரம்பிக்க, நண்பர் காதைக்காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுகிறார்.

Tuesday, February 14, 2012

கோடம்பாக்கத்தின்’ டாப் டென்’ காதல், கண்றாவி,கத்தரிக்கா....

தியேட்டரில் ஒரு பழைய காதல்  ஜோடி:


"என்னங்க பின்னாடி ஒருத்தன் விடாம என்னையே பாத்துக்கிட்டிருக்கான்"
"அப்பிடியா ராசாத்தீ.. உன் முகத்தை கொஞ்சம் திருப்பி காட்டு, அவன் அப்பிடியே துடிச்சி சாகட்டும்".


சில படங்கள் இடைவேளைக்குப்பிறகுதான் நன்றாக இருக்கும். எனக்கும் அப்பிடித்தான். இனிமேதான் யாரையாவது சீரியஸா லவ் பண்ணனும்’’

- என் மனைவி உங்க சின்ன வயசு காதல் அனுபவங்களைப் பற்றி சொல்லுங்க என்று கேட்கும்போதெல்லாம் நான் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் பதில் தான் இது.

புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்றாலும், எல்லாசமயங்களிலும் அவ்வாறு நடந்துவிடுவதில்லை.

சில  புளிகள் குழம்புக்கு ருசி சேர்ப்பதோடு ஓய்வெடுத்துக்கொள்கின்றன. அதுவும் நீண்ட காலம் பதுங்கிக்கிடக்கும் பழைய்ய்ய... புளியின் ருஷியே தனி.
எனது ஸெகண்ட் ஆஃப் புலியா, குழம்புப்புளியா என்பதை இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் சினிமாக்காரர்களின் காதல் கதைகளும், அவர்கள் காதலை ஒட்டிவெட்டி எழுதப்படும் கிசுகிசுக்களும் என்றுமே சுவாரசியமானவை. நம்மைப்போன்ற வெகுஜன மக்களின் வயித்தெரிச்சலில் அந்த கிசுக்களின் வெற்றியே இருக்கிறது.

சரி, காதலர் தினத்தை ஒட்டி கோடம்பாக்கத்துக்கு நம்மளால முடிஞ்ச சேவையை செய்வோமேன்னு நினைச்சி, கொளுத்திப்போட்டதுதான் இந்த கிசுகிசுக்கள். மேட்டரில் வாராராம் போறாராம் எல்லாம் யாரும் வக்கில் நோட்டீசு அனுப்பாமல் இருக்கத்தானாராம்.

நம்ம சினிமா நட்சத்திரங்களைப்பொறுத்தவரை, ’காதலில் ஏது நல்ல காதல் கள்ளக்காதல்?’ என்பது மிகப்பொருத்தமான கேள்வியே.


10.படம் துவங்கும்போது,  இந்தப்பூனையும் குவார்ட்டர் அடிக்குமா? என்பது போல் இருந்த  அவர், படம் ரிலீஸாகி கொஞ்சம் பிக்கப் ஆனவுடன், சரி இன்னும் ரெண்டு மூனு நாள்ல காதலர் தினம் வருது ,அதுக்காகவாவது நாம காதலிச்சிப்பாக்கலாமே, என்று காமெடி பண்ணியே களவாணி நடிகையின் மனம் கொத்திவிட்டாராம், மெரினா பீச்சில் சந்தித்த சின்ன’ நடிகர்.

 9.நாயன நடிகைக்கு ஆல்டர்னேட்டாக மாஸ்டர் பிக்கப் பண்ணியிருந்த ஹன்ஸ் புஷ்டி நடிகையை இப்போது பெரிய இடத்து பேரப்புள்ளை தன்னோடு பேக்கப் பண்ணிக்கொண்டாராம். ஒரு கல் ஒரு ஜொள் என்று பார்ர்டிகளில் இவர்கள் வடிக்கிற கூத்தே இப்போது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ’ஆத்தே’.

8.வாராவாராம் காதலர்களை மாற்றிக்கொண்டிருக்கும் காஞ்ச’ மாடு லட்சு நடிகை இப்போது லேட்டஸ்டாக இந்திய டீமில் இடம் கிடைக்காத ஸ்ரீ சாந்தமானவரை இடுப்பில் தூக்கிக்கொண்டு அலைகிறாராம்.

7.மூனு ஷா வோ, வடசென்னை வரை வந்த நடிகரை வம்புத்தம்பியுடன் நடிக்கவிடாமல் தடுத்துவிட்டு, ஆந்திரக்கரையோரம் ராணா , ராவண்ணா படித்துக்கொண்டிருக்கிறாராம்.

6.தன்ஷிகத்தை ’அரவாணை’த்துக்கொண்ட ஆதியானவரோ, இது ஜஸ்ட் ஒன்லி லவ்தான், கல்யாணப்பேச்செல்லாம் எடுத்தா எங்கப்பா மிருகமா மாறிடுவாரு...என்று லவ்வுக்கு புது லாவணி பாடிக்கொண்டிருக்கிறாராம்.

5.மதராசப்பட்டிணத்திலிருந்து கிளம்பிப்போய், டெல்லியில் தாண்டவமாடிக்கொண்டிருந்த விஜய இயக்குனர், சமீபகாலமாக மீண்டும் வெள்ளைக்கார நடிகையுடன் ,வெள்ளாவி வச்சிதான் வெளுத்தாகளா பாடிக்கொண்டிருப்பதை அறிந்த பால் நடிகை,தேன் குடித்த நரியாக மாறி தேம்பித்தேம்பி அழுகிறாராம். நடுவில் ஒரு இயக்குனர் கூப்பிட்டாரே ‘அங்கு’ சென்றுவிடலாமா என்று தனக்குத்தானே சங்கு தேடிக்கொண்டிருக்கிறாராம்.

4.பல பெண்ணைத்தாண்டிய இயக்குனர் மீண்டும், அடியே கொல்லுதே அழகோ அல்லுதே’ பாட ஆரம்பித்து, ரெட்டி நடிகையை ‘வா சேந்து ரொட்டி சாப்பிடலாம் என்று அமெரிக்கா அழைத்துச்சென்றிருக்கிறாராம்.

3.தனது குடும்ப சூழ்நிலை’ சரியில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தினாவெட்டான இரண்டெழுத்து இசையமைப்பாளர், தான் நடிகராக அவதாரமெடுத்த சூழலில்,அருகே இருந்த பட நாயகியை, தனது மூன்றாவது ஆசை நாயகி ஆக்கிக்கொண்டாராம்.

2.மாதந்தோறும் காதலிகளை மாற்றி வரும் வம்புத்தம்பி, தற்போது தற்காலிகமாக பாட்டையில் அக்ரம் அண்ணன் பயன்படுத்திய தேக்‌ஷா பாத்திரத்தை பயன்படுத்தி வந்தாலும்,கூடிய விரைவில் தனது பழைய ‘நாயனத்தை கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறாராம். இதற்காக நாயன தார தப்பட்டையுடன் தம்பி தயாராகிக்கொண்டிருப்பதாக தகவல்.

1.ஆனால் இதே நாயனத்துக்கு, பாஸ்’ இயக்குனரின் துணையோடு ,அட இதோ பார்யா நடிகர் பல்லக்குத்தூக்க அலைவதாகவும், அட்லீஸ்ட் பார்ட் டைம் லவ்வர் வேலையாவது தரும்படி நாயனத்தின் சேலையைப்பிடித்து தொங்குவதாக நயவஞ்சக வட்டாரங்கள் நச்சரிக்கின்றன.

Thursday, February 9, 2012

நதிமூலம், ரிஷிமூலம், ஒரு நடிகையின் வாக்குமூலம்

அன்பு நண்பர்களே, எனது இணையதளத்துக்கு எழுதும் சினிமா விமரிசனங்களை ப்ளாக்கில் பயன்படுத்தக்கூடாது. இதற்காக தனியாக எழுதவேண்டும் என்ற பேராவல் இருக்கத்தான் செய்கிறது.ஏனெனில் இணியதளத்துக்கு இருக்கிற சில மனத்தடைகள் இங்கே இல்லை.இங்கே கேள்வி கேட்க ஆளில்லாத சுதந்திரப்பறவை நாம். ஆனால் இணையதளம் ஒரு அகோரப்பசி கொண்ட பிசாசு போல் எழுத எழுத கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
நடிகைகளின் கற்பு குறித்து பல மாதங்களுக்கு முன்பு தினமலருடன் சூர்யா,விவேக், குஷ்பூ,சுஹாசினி போன்றவர்கள் கண்டமேனிக்கு சண்டை போட்டார்கள்.
இப்போதோ,அவர்களது திரைத்துறையைச்சேர்ந்த ஒருவரே, நடிகைகள் எப்படியெல்லாம் கற்பை இழக்கிறார்கள் என்று படம் எடுத்து பாகங்களைக்குறித்திருக்கிறார்.
சுஹாசினிகள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? ************************************************ 
பிரபல நடிகையைக்
கற்பழிக்க முயற்சி
-
நாளிதழின் தலைப்பு
அழிக்க கற்பு அங்கு
இருந்ததா? வாசகன் வியப்பு
      -’கனவைத்தொலைத்தவர்கள்தொகுப்பில் , மகுடி.

படித்து பல ஆண்டுகள் ஆன இந்தக்கவிதை போன்ற ஒன்றை ஞாபகத்துக்குக் கொண்டுவந்த புண்ணியமோ பாவமோ எதுவாக இருந்தாலும் ,அது ஒரு நடிகையின் வாக்குமூலம்படத்தையே சேரும்.
 இது சோனியா அகர்வாலின் சொந்தக்கதை. படத்தில் செல்வராகவன் மாதிரியே, இவரை ஏமாற்றிய ஒரு டைரக்டர் முக்கிய பாத்திரமாக வருகிறார் என்று கொஞ்ச நாட்களுக்கு கிசுகிசு எழுதப்பயன்பட்ட படம். அந்தக்கிசுகிசு உண்மையுமல்ல, அதே சமயம் பொய்யுமல்ல.
இந்தக்குழப்பமான மூடிலேயே படத்தின் கதையைப் பார்த்து விடுவோம்.
நடிகை அஞ்சலி [சோனியாவின் கதைப்பெயர்] ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். வேளாவேளைக்கு குக் பண்ணி சாப்பிடமுடியாத அளவுக்கு வறுமை குடும்பத்தில் அகோர தாண்டவம் ஆடுகிறது.உடனே சாதாரண அஞ்சலியை ஏஞ்சலினா ஜோலி ஆக்கிக்காட்டுகிறேன் என்று அவரது ஆத்தா சபதம் பூண்டு சென்னைக்கு வந்து சினிமாக்கம்பெனிகளில் ஏறி இறங்குகிறார்கள்.நடிகை ஆக வேண்டுமானால் கொஞ்சம்இறங்கிதான் போக வேண்டும் என்பதைப்புரிந்து கொண்டு அறிமுகப்படுத்தும் இயக்குனருடன் படுக்கையைப்பகிர்ந்து கொள்ளும் அஞ்சலிக்கு அதுவே அரசியல்வாதிகள், புரடியூசர், ஃபைனான்சியர் என்று  ஒரு தொடர்கதை ஆவதை தொடர்ந்து விரக்தி அடைகிறார்.
தன் தாய், உடன்பிறப்புகள், தன்னால் முதல்பட வாய்ப்பைப்பெறும் இயக்குனர் உட்பட  அனைவருக்குமே தனது உடம்பு மட்டுமே வேண்டும், அதைவிற்று சொத்து சேர்த்துக்கொள்வதிலேயே அனைவரும் குறியாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு சந்நியாசினியாகி விடுகிறார் அஞ்சலி .
இந்த சந்நியாசினி நடிகையைத்தேடிப்போய் தனது டி.வி.சேனலில் தொடர் போட விரும்பும் பெண் நிருபரிடம், அஞ்சலி தனது டைரியைத்தந்து படிக்கச்சொல்ல அது கதையாக விரிகிறது.அந்தக்கதையை சேனலில் போட்டால் போர் நிகழ்ச்சியாகி  டி.ஆர்.பி. ரேட்டிங் குறைந்து விடுமோ என்று பயந்து படமாக்கி நம் தலையில் கட்டியிருக்கிறார்கள்.
இயக்குனர் ராஜ்கிருஷ்ணா படத்தின் துவக்கத்தில் இது கற்பனைக் கதைதான் என்று ஒரு கார்டு போட்டாலும், உண்மைச்சம்பவம் போலவே சித்தரிக்க முயன்றிருக்கிறார். படத்திற்கு பேசாமல்ஒரு நடிகையின் சதைஎன்றே பெயர் வைத்திருக்கலாம்.படத்தின் மொத்த நோக்கமும் அது ஒன்றாகவே இருக்கிறது.
அரசியல்வாதிகளிடம் நடிகைகள்  படுக்கநேர்வது எப்படி, நடிகையின் அம்மாக்காரிகள் சொந்த மகளையே எந்த விதமாக ப்ளாக்மெயில் செய்கிறார்கள், அஞ்சலியைக்காதலிக்கும் உதவி இயக்குனன் தனக்கு படம் கிடைப்பதற்காக எப்படி காதலியையே கூட்டிக்கொடுக்கத் தயாராகிறான் என்பது போன்ற காரசாரமான விவகாரங்களை பின் விளைவுகள் பற்றி துளியும் கவலைப்படாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
புன்னகைகாரர்கீதா
படத்தில் கதை சொல்லும் நிருபராக தயாரிப்பாளர்புன்னகைப்பூகீதா நடித்திருக்கிறார். இப்படி ஒரு பெயர் வைத்ததற்காக சதா புன்னகைக்கிறாரா அல்லது சதா புன்னகைத்துக்கொண்டிருப்பதால் அவருக்கு இப்படி ஒரு காரணப்பெயர் வைத்தார்களா என்று கேட்டு எனக்கு தகவல் தருபவர்களுக்கு, அவரிடமிருந்து ஒரு பிரத்யேக புன்னகை வாங்கித்தருகிறேன்.                               படத்தில் சோனியாவின் மம்மியாக வரும் பொம்மி வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவர் என்று சொல்லிக்கொள்ள எப்படித்தான் இயக்குனருக்கு மனசு வந்ததோ? ஒரு நாளைக்கு பதினாறு வேளைக்கு கொட்டிக்கொண்டமாதிரி அவ்வளவு புஷ்டியாக இருக்கிறார்.மகள் முன்னேற்றத்துக்காக இவரையும் சில டைரக்டர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள் என்று சொல்லும்போது, அவ்வளவு வறுமையில் வாடும் அந்த டைரக்டர்களின் பெயர்களை தெரிந்து கொள்ள மனசு பிடிவாதம் பிடிக்கிறது.
நடிப்பிலும் சரி, தோற்றத்திலும் சரி , சோனியா படத்தில் போனதுபோல் சந்நியாசம் போய்விடுவதே மேல் என்று நினைக்கும் அளவுக்கு சோர்ந்து காணப்படுகிறார்.
ஒரு நடிகையை அப்பாவியாகக்காட்டுகிறேன் என்பதற்காக இந்த அளவுக்கு அப்ப்பப்பாவியாக காட்டியிருக்க வேண்டியதில்லை. அதிலும் முதல்முறையாக மகளை ஒரு டைரக்டரிடம் அம்மாஅனுப்பும் காட்சிக்கு அடேயப்பா எவ்வளவு பில்டப். சோனியா கை மம்மி கையை விட்டு பிரிய மறுக்கிறதாம். இரண்டு கைகளுக்கும் எத்தனை க்ளோசப் ?
மற்றபடி ,டெக்னிக்கலாக பார்த்தால் எல்லா அம்சங்களிலும் ஒரு நடிகையின் வாக்குமூலம்சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட பழைய வாக்குமூலமாகவே இருக்கிறது.
நதிமூலம், ரிஷிமூலம், 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள்,அதோடு இந்த நடிகையின் வாக்குமூலத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான்.
  
பி.கு:இந்த பின் குறிப்பு அரிப்பு என்று எதுவும் எழுதக்கூடாது என்றுதான் பார்க்கிறேன்.ஆனால் சனியன் ஏதாவது வந்து மாட்டிக்கொள்கிறது
மேல குறிப்பிடப்பட்டுள்ளகனவைத்தொலைத்தவர்கள்கவிதைத்தொகுப்பு, நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது வெளியிடப்பட்டது. ஒரு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி வைத்து வெளியிடப்பட்டு , தடபுடலாக விற்பனையாகி, மிக விரைவிலேயே பழைய புத்தகக்கடைகளில் தஞ்சம் புகுந்துகொண்ட பெருமை இந்தத்தொகுப்புக்கு உண்டுஎன்னிடம் இருக்கும் ஒரு பிரதி விருதுநகரில் ஒரு பழைய புத்தகக்கடையில் வாங்கியதுதான்.
 நான் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய இந்தப்புத்தகத்தை ஒரு பத்துப்பைசா அதிகம் தருவதாக இருந்தால் கூட நான் விற்கத்தயார்.
 அல்லது யூ.டி.வி. ஜெமினி ஃபிலிம் சர்கியூட் மாதிரி பெரிய கம்பெனிகள் வாங்குவதாக இருந்தால், விற்பனை உரிமையில் பாதிக்குப்பாதி என்ற அடிப்படையில் இந்தியா முழுக்க ரிலீஸ் பண்ணலாம்.