Sunday, June 2, 2013

இசைஞானியின் திசைவணங்கி இன்னையிலருந்து ‘… தந்தன்னானத்தன்ன..’- ’சி.கா 5’
படம் பண்ற பொழைப்பைப் பாத்துட்டு பணம், துட்டு, மணி சம்பாதிச்சி செட்டில் ஆகுற வழியைப் பாருங்க பாஸ். இனிமே ப்ளாக் எழுதுறேன். சினிமா விமரிசனம் எழுதுறேன்னு சிக்கி சீரழிஞ்சி சின்னாபின்னமாகாதீங்க’-
இப்படி சில நண்பர்களிடமிருந்துஅழுத்தமானஆலோசனைகள் கடந்த சில தினங்களாய் எதிர்கொண்டு வருகிறேன்.
அதற்கெல்லாம் எனது பதிலாய் அமைந்தது மய்யமான ஒரு சிரிப்பு மட்டுமே. அந்த மய்யமான சிரிப்புக்கான அர்த்தத்தை ஒரு ஓரமாய் வைத்துவிட்டுசிநேகாவின் காதலர்கள்குறித்த 5 வது பதிவினை தொடர்கிறேன்.
இணையத்தின் மூலம் நடிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்களை இணைத்துக்கொள்வது குறித்து எழுதியிருந்த பதிவினை, எனது வேண்டுகோளை ஏற்று, சில அன்பு நண்பர்கள் பகிர்ந்திருந்ததால், அநியாய ரெஸ்பான்ஸ்.
நடிக்க வாய்ப்புக்கேட்டு நூற்றுக்கணக்கானோர், உதவி இயக்குனர் வாய்ப்புக்கேட்டு சுமார் 50 பேர் மற்றும் பாடலாசிரியர்கள், இவர்களையெல்லாம் தாண்டி, ஒரு பிரில்லியண்ட் மேன்  ஸ்ட்ரெயிட்டாக இயக்குனர் வாய்ப்பே கேட்டும், சுவாரசியமான பல மெயில்கள் வந்திருந்தன.
அவற்றில் சிலவற்றிற்கு மட்டுமே பதில் போட்டேன். மற்றவற்றிற்கு பதில் அளிக்கவில்லை. காரணம் அவை அத்தனையுமே ஒரு அவசர இங்கிலீஸில் அடிப்படை விபரங்கள் கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்தன.
படித்தது ஆங்கில இலக்கியமென்றாலும் 42 சதவிகிதமே வாங்கி பார்டரில் பாஸான கடைசி பெஞ்ச் மாணவன் நான். இன்றுவரை ஆங்கிலத்தை சற்று அச்சத்தோடே எதிர்கொள்வதால் ஆங்கிலத்தில் வந்த மெயில்களுக்கு இதுவரை பதில்போடமுடியவில்லை.
ஆங்கில மெயிலர்களுக்கு நான் சொல்லவிரும்புவது இதுதான். 
‘தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு. இனியாவது ப்ளீஸ் மெயிலை தமிழில் தட்டிப்போடு.
’எங்கே என் சிநேகா?’ என கதையின் நாயகி தேடும் வேலை தீவிரமடைந்திருக்கும் வேலையில், விரக்தியின் விளிம்புக்கே சென்று நான் கண்டடைந்த உண்மை, சென்னையில், இளம்பெண்களில் தற்போது சுமார் 63 சதவிகிதம் பேர் முழுக்கை உறை அணிந்து, முகத்திரை மாட்டி ‘ட்விங்’ எனும்படி ரெண்டு கண்கள் முழிக்கும் உருவமாகவே வாகனங்களில் பறக்கிறார்கள். அவிங்கள நாம சைட் அடிக்கமுடியாதே ஒழிய, அந்த ‘ட்விங்’ முழிகளால் அவர்கள் அடிக்கிற சைட் அய்யய்யோ அதீத வெட்கத்தால் நானே பலமுறை தலைகவிழ்ந்திருக்கிறேன்.
’இப்படி தேடும் கண்பார்வை தவிக்க’ அலைந்துகொண்டிருக்கும் வேளையில் சுமார் மூன்று தினங்களுக்கு முன்பு நண்பர் இசையமைப்பாளர் இரா.பிரபாகருடன் இசைக்கோர்ப்பு பணியில் இறங்கியிருக்கிறோம். ‘சிநேகாவின் காதலர்கள்’ எழுத்துவடிவம் ஒருவழியாக இப்படி உறுதியாகிவிட, வரும் வெள்ளியன்று தினத்தந்தி, தினகரன்களில் ‘இசைஞானியின் திசைவணங்கி இன்னையிலருந்து தந்தத்தானன்ன்ன’ என்ற வாசகங்களுடன் நம் படவிளம்பரம் வெளியாகிறது. இசைஞானியின் பிறந்தநாளான இன்று என் நண்பர்களுடன் இதைப் பகிர்ந்துகொள்வதில் ராஜாவின் வெறிகொண்ட ரசிகர்களுல் ஒருவனாக பெரும்மகிழ்வு அடைகிறேன்.
இயக்குனர் ஆனதால் ‘ஓஹோபுரடக்‌ஷன்ஸ்’-ல் பதிவுகள் எழுதுவதிலிருந்து இம்மியளவும் பின்வாங்கமாட்டேன். ஏனெனில் என்னையும் எனது நண்பர்கள் பலரையும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ இடம் இது.
படத்தின் கதை, நட்சத்திரங்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இத்யாதிகள் குறித்து கண்டிப்பாக தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே செய்வேன். குறிப்பாக இந்தப்படம் குறித்து கிசுகிசு மன்னன் தமிழ்சினிமாவின் அண்ணன் அந்தண்ணன் உட்பட யாரும் கிசுகிசுக்களே எழுதமுடியாது. ஏனெனில் நம் படம் குறித்த கிசுகிசுக்களை நானே ஜனங்களிடம் சரண்டர் பண்ணிவிட உத்தேசம்.
கடந்த வெள்ளியன்று மிக மும்முரமாக கம்போஸிங் நடந்துகொண்டிருந்தது. கவிதையாக இருந்த ஒன்றை பாடலாக மாற்றும் முயற்சியில் அரும்பாடுபட்டு ப்ரபா கணிசமான வெற்றியடைந்திருந்தார். நல்ல விசயம் நடக்கும்போது அதைத் தட்டிக்கொடுத்து கொண்டாடவேண்டியதுதானே தமிழர் மரபு. அலுவலகம் விட்டு அவசரமாக வெளியே சென்று, பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்து ஒரு காஸ்ட்லியான பாதாம்பருப்பு டப்பாவை ப்ரபாவிடம் கொடுத்தேன். ஆர்வத்தோடு திறந்து பார்த்தவருக்கு  அதிர்ச்சி. உள்ளே 200கிராம் பட்டாணி. [அந்த பாதாம்பருப்பு ஒரு நண்பர் சிலநாட்களுக்கு முந்தி தந்த அன்பளிப்பு]
’’உலக சினிமாவுல இதுக்கு முந்தி எந்த ஒரு டைரக்டரும், நல்ல டியூன் போட்டதுக்காக, மியூசிக் டைரக்டருக்கு பட்டாணி டப்பாவை பரிசாக்குடுத்ததாக வரலாறே இல்லை. உன்னோட சினிமா வரலாறு இந்த எடத்துல ஸ்டார்ட் ஆயிடுச்சிய்யா’’ என்றார் ப்ரபா மனசுக்குள்  மருகியபடி.
மனசுக்கு இருந்த ரோசம் நாக்குக்கும் பல்லுக்கும் இல்லை. மறுநாள் மாலை அந்த டப்பா காலியாகியிருந்தது.
’மதுரைக்காரய்ங்கள்லாம் ரோசக்காரய்ங்கன்னு யாருங்க சொன்னது?’

Monday, May 20, 2013

’சிநேகாவுக்கு இப்போ காத்திருக்க நேரமில்லை’ -’சி.கா-4
படம் டைரக்ட் பண்ற அளவுக்கு எருமை மாடு மாதிரி வளந்துட்டீங்க, அதுக்கப்புறமும் சஸ்பென்ஸ் வச்சி எழுதுற சல்லிப்புத்தி உங்கள விட்டுப் போகலையே பாஸ்?’
இந்த அர்த்தம் தொனிக்க சில எதிர்வினைகளை சிநேகாவின் காதலர்கள்-3’ க்குப் பிறகு நான் அதிகம் சந்திக்க நேர்ந்ததால், அதுபோன்ற சின்னப்புள்ளத்தனமான சில காரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ‘காரியம்செய்ய முயற்சிக்கிறேன்.
குமுதம்வேலையை விட்டபிறகு, நான் யார் யாரிடம் என்னென்ன வேலைகள் பார்த்தேன் போன்ற கச்சாத்துக்களை பதிவிடுவது, இன்றைய தேதிக்கு,சில முகாம்களில், எகத்தாளமாகக் கருதப்படும் என்பதால், அவற்றை பத்திரமாக பரணில் மூட்டை கட்டிவைத்துவிட்டு, நிகழ்கால சமாச்சாரங்களை மட்டும் பகிர்கிறேன்.
நான் பணம் கேட்டுப்போன கலையுடனான சந்திப்பு, சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
ஆனால்  கேட்ட பணம் என் கைக்கு வந்ததோ சந்திப்பு நடந்த 30 நொடிகளுக்குள். [ஒரு கணம், 5-ம் தேதி தரவேண்டிய அற்ப சம்பளத்தை 15-ம் தேதி வரை, என் கண்ணில் ரெண்டு சொட்டு கண்ணீர் காணும் வரை இழுத்தடித்து தந்து வந்த ஒரு இயக்குனரை நினைத்துக்கொண்டேன்] அது கைக்கு வந்தவுடன் கொஞ்சம் தெம்பாகி அவரிடம் மனம் விட்டுப்பேச ஆரம்பித்தேன். அன்றைய சந்திப்பின் பேச்சு முழுக்க, எங்கள் இருவருக்கும் பொத்தாம்பொதுவாக தெரிந்த நபர்களைப் பற்றியதாகவே இருந்தது.
பின்னர் எனது கசப்பான சினிமா அனுபவங்கள் குறித்து பேச்சு திரும்பியது. கசப்பு என்பது அதை அனுபவிக்கும் தறுவாய் மட்டும்தான். மற்றபடி வெறும்வாயாய் இருக்கையில் மெல்வதற்கு அந்த அனுபவங்கள் என்னைப்பொறுத்தவரை இனிப்பானவையே.
எல்லாவற்றையும் பொறுமையாகக்கேட்டுவிட்டு, அடுத்த நாள் சும்மா வந்துவிட்டுப்போகும்படி அழைத்தார் கலை. பேச்சு எங்கள் சத்ரியன்கால நினைவுகளில் துவங்கி, தமிழ்சினிமாவின் தற்போதைய குறும்பட்ஜெட் படங்கள் நிலவரம் வழியாக போய்க்கொண்டிருந்தபோது, இந்த பிரபஞ்சமே சற்றும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.
‘நான் இன்னைக்கு உங்கள ஒண்ணும் சும்மா வரச்சொல்லலை. நம்ம தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பா ஒரு படம் தயாரிக்கிறோம். அந்தப்படத்தை நீங்கதான் இயக்குறீங்க. முழுக்கமுழுக்க உங்கள மேல உள்ள நம்பிக்கையில நான் தயாரிக்கிற இந்தப்படத்துக்கு ஒருத்தரைக்கூட நான் சிபாரிசு பண்ணமாட்டேன். உங்க நடிகர்கள், உங்க தொழில்நுட்பக்கலைஞர்கள். நீங்க இந்த நிமிஷத்துல இருந்தே உங்களுக்கான ஒரு அலுவலகத்தையும் சக கலைஞர்களையும் தேட ஆரம்பிக்கலாம்’ என்றபடி எனக்கு முன்பணம் தந்தார்.
சில உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளுக்கு போதிய சக்தி இருப்பதில்லை. இதற்கு முந்திய பதிவை எழுதிவிட்டு, அதற்கு அடுத்த நாளிலிருந்து, கலை எனக்கு படம் இயக்க வாய்ப்பளித்த  மேற்படி நிகழ்வை எழுத, வார்த்தைகளுடன் நான் முட்டிமோதிய அவஸ்தையை எப்படிச் சொல்ல? கடைசியில் வார்த்தைகளுடன் தோற்று, வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டேன்.
படம் இயக்க வாய்ப்புக்கேட்டுப் போகவில்லை. கதை சொல்லவில்லை. நிபந்தனைகள், நெருக்கடிகள் இல்லை. என் தயாரிப்பாளர், என் தொழில்நுட்பக்கலைஞர்கள், என் நட்சத்திரங்கள்.
‘முழுக்க முழுக்க உங்கமேல உள்ள நம்பிக்கையில’ என்ற கலையின் ஆத்மார்த்தமான வார்த்தைகளை என் நெஞ்சத்தில் பொறித்துக்கொண்டு, ‘சிநேகாவின் காதலர்கள்’ கதையை எழுத ஆரம்பித்தேன்.
படத்தின் இரண்டாவது தொழில்நுட்பக்கலைஞராக, எனது 30 ஆண்டுகால நண்பர் இரா.பிரபாகர் ( http://prabahar1964.blogspot.in/ ) இசையமைப்பாளராகவும், என்னுடன் இணைந்து திரைக்கதை எழுதுபவராகவும் இணைந்திருக்கிறார்.
திரைக்கதை பணிகள் முடிந்து, வரும் 29, புதன் முதல், பாடல் பதிவுக்குச் செல்கிறோம்.
பாடல்களை கவிஞர், நண்பர், பத்திரிகையாளர் நெல்லைபாரதி எழுதுகிறார்.
ஒளிப்பதிவாளர், உட்பட மற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வும், நாயகி சிநேகா உட்பட்ட மற்ற நட்சத்திரங்கள் தேர்வும் விரைவில் சூடுபிடிக்க உள்ளன.
இனியும் சிநேகாவுக்காக காத்திருக்க நேரமில்லை.

 ஜூன் மத்தியில், நம் படக்கலைஞர்களுடன் ஒரு சிறு நட்புவட்டம் நடத்தி முடித்து, படப்பிடிப்பு கிளம்ப இருக்கிறோம்.
உதவி இயக்குனர்கள் வாய்ப்பு கேட்டும் நிறைய நண்பர்கள் அணுகினார்கள். இப்போதைக்கு என்னிடம் இரண்டு பேர் இருக்கிறார்கள். இன்னும் இருவரை முகநூல் மூலமாக இணைக்கவே உத்தேசித்திருக்கிறேன்.
இணைய நண்பர்களே இது நம் படம். இப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞராகவோ, நடிகராகவோ, பாடகராகவோ பங்குபெற விரும்பினால், உங்களைப்பற்றிய தெளிவான விபரங்களுடன், கண்டிப்பாக புகைப்படங்களுடன் எனது மெயிலில் ohoproductionss@gmail.com அல்லது muthuramalingam30@gmail.com-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

எனக்கு நல்ல இரு உதவி இயக்குனர்கள் கிடைக்க, என் நண்பர்களில் ஒரு பத்துப்பேராவது, தங்கள் முகநூலில் இந்தப்பதிவை ’ஷேர்’ செய்து, எதிர்காலத்தில் என்னுடன் கணக்கை நேர் செய்துகொள்ளும்படி கேர்ஃபுள்ளாக கேட்டுக்கொள்கிறேன்.   

Saturday, May 11, 2013

’அமெரிக்கன் காலேஜ் பயலுக எல்லாருமே அப்பிடிப்பட்டவய்ங்களா?’-சிநேகாவின் காதலர்கள்- 3பிரபலமானவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள விரும்புபவர்கள் நண்பர்கள் பிரபலமாவதை ஒருபோதும் விரும்புவதில்லை’ 

                             -பிரபலமாகாத யாரோ ஒருவர் 

எனது அமெரிக்கன் கல்லூரி ஆசிரியரும், ப்ளாக்கர்களில் முன்னோடியுமான தருமிஅவரது வலைப்பதிவில், நான் இயக்கப்போகும் படம் எத்தகையது என்பது குறித்து ஒரு உருமிச்சத்தம் எழுப்பியிருக்கிறார்.
அவரது பதிவில் இடம்பெற்ற பகுதி நீங்கள் கீழே படிப்பது,…
….ஒரு நண்பன் திடீர்னு கேட்டான். அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்க்கிற ஆளுக எல்லாம் ஒரு மாதிரியா... weird-ஆன ஆளுகளான்னு கேட்டான்.

 ’இல்லியே .. ஏனிப்படிக் கேட்கிறன்னு கேட்டேன்.

உங்க கல்லூரியிலிருந்து சினிமாவுக்குப் போன டைரடக்கர்கள் எல்லோரும் எடுத்த படம் எல்லாம் கொஞ்சம் weird-ஆக இருக்கேஅப்டின்னான்.

ஏம்பா!அப்படி சொல்ற? மகேந்திரன் படத்தை எப்படி இதில சேர்க்கிற?’

உதிரிப் பூக்கள் படத்தின் கடைசி வசனத்தைச் சொன்னான். ஒரு கெட்டவன் ஊரையே கெடுத்துட்டு செத்துப் போறானேஎன்றான்.

என்னிடம் பதில் இல்லை.

மகேந்திரன், பாலா, ராம், அமீர், சாந்தகுமார் ... இந்த வரிசையில் இப்போது ஓஹோ புரொடக்‌ஷனின்முத்துராமலிங்கமும் சேர்ந்திருக்கிறார்.

இப்படி கேள்வி கேட்ட நண்பனும் வகுப்பின் முதல் மாணவனாகப் படித்து முடித்த எங்கள் கல்லூரி மாணவன் தான் ....
இப்படிப்போகிறது ஆசிரியர்தருமியாரின் பஞ்சாயத்து [http://dharumi.blogspot.in/]


அது குறித்து எழுதுவதற்கு முன்பு, கடந்த பதிவின் தொடர்ச்சியை எழுதுவது தலையாய பணியாய் தோணியதால், [ வாத்தியாருங்க சமாச்சாரம்னாலே ஏட்டிக்குப் போட்டியா செஞ்சே பழகிப்போச்சிங்க] அதை முடித்துவிட்டு, உங்க கிட்ட வர்றேன் சார்.

சும்மா ஒரு டம்மி லெட்டரிங்
முதல்முறை போன் முழு ரிங் போயும் எதிர்முனையில் அவர் எடுக்கவில்லை.
சரி எதாவது மீட்டிங்கில் இருக்கலாம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு அடித்தபோது,’ வணக்கம் கலைக்கோட்டுதயம் என்றது எதிர்முனை.
கலை வணக்கம். நான் முத்துராமலிங்கம் பேசுறேன். நான் வேலை பாக்குற நிறுவனத்துல கடந்த நாலு மாதங்களா சம்பளம் வரலை. மூனு மாசத்துல திருப்பிக்குடுத்துடுறேன். ஒரு சின்ன தொகை அவசர உதவியா கைமாத்தா வேணும்’.
நடுவில் அவர் எதுவும் பேசிவிடாமல் ரேடியோ ஜாக்கிபோல் படு ஸ்பீடாக பேசிமுடித்தேன்.
சென்னை வாழ்க்கையில் ஒரு இடத்தில் உருப்படியாக வேலை பார்க்காத வகையில், எனக்கு கடன் வாங்குவது, வட்டிக்கு வாங்குவது, மனைவியின் நகைகளை அபேஸ் பண்ணி, அடமானம் வைத்து அட்ராசிட்டிகள் புரிவதெல்லாம் அத்துப்படி. கடன் கேக்கிற இடங்களில் கண்டேன் சீதையைபாணியில் எப்ப திருப்பித்தரப் போறோம் என்று சொன்னபிறகுதான் கடனே கேட்பது.

பிதாமகன்ரிலீஸான மூன்றாவது நாள். படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தயாரிப்பாளர் வி.. துரை என்னை தி.நகரிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றுக்கு அழைத்துப்போனார். இரண்டு செயின்கள் [பத்துபவுன், எட்டுபவுன்] வாங்கினார். ஒரு செயின் பாலாவுக்கு ஓகே. இன்னொன்று? ஒருவேளை பாலா கையில் கொடுத்து தயாரிப்பாளர் தனக்குத்தானே போட்டுக்கொள்ளக்கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பார்ட்டி துவங்குவதற்கு முன்பு, நா தழுதழுக்க, ‘பிதாமகனுக்குஎன் பங்களிப்பு குறித்து சில வார்த்தைகள் பேசி, அந்த இரண்டாவது செயினை என் கழுத்தில் போட்டார்.
காமெடியா போய்க்கிட்டிருக்க கதையில நடுவுல எதுக்கு பாஸ் இப்பிடி ஒரு செண்டிமெண்ட் சீனு?’
க்ளைமாக்ஸைக் கேளுங்க பாஸ். அப்பதான நாம நகைகளை அடமானம் வைக்கிறதுல எவ்வளவு பெரிய கில்லாடின்னு தெரியும்?
மறுநாள் காலையில், அந்த நகைக்கடையில், வாட்ச்மேன் கூட வருவதற்கு முன் முதல் ஆளாய் நான் போய் நின்று, அந்த செயினை அதேகடையில் சில நூறு ரூபாய்கள் கம்மி விலைக்கு விற்றேன். எப்பூடி?
சரி, அந்தக்கதையை அப்புறம் தொடரலாம்.
எனது மடைதிறந்த பேச்சு ஒர்க்-அவுட் ஆனது போலவே தோன்றியது.
அண்ணே என்னோட அலுவலகத்துக்கு வாங்க நேர்ல பேசிக்கலாம் என்றபடி போனை வைத்தார் கலை.
அவரது அலுவலகம் போய்ச்சேருமுன் எங்களுடைய ப்ளாஷ்பேக் கொஞ்சம் பேசிக்கொள்ளலாம்.
இருபது ரூபாய் இரும்பு மனிதர்
இப்போதைய தமிழன் தொலைக்காட்சிஉரிமையாளர் கலைக்கோட்டுதயத்தின் துவக்க காலம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எண்பதுகளின் இறுதிகளில், நாகர்கோவிலில் இருந்து, வெறும் நம்பிக்கைகளை மட்டுமே சுமந்துகொண்டு, பத்திரிகையாளர் கனவோடு சென்னை வந்தவர்.
நான் நக்கீரனில் இருந்து விலகி, சினிமாவில் நுழைய முயற்சிக்க, ’நடுவுல கொஞ்சம் நடத்திட்டுப்போங்கஎன்று நண்பர் ஒருவர் ஏற்படுத்திய நப்பாசையால் சத்ரியன்துவங்கியிருந்த சமயம். எங்கள் சென்னை நிருபர் குழுவில் ஒருவராக, சம்பளம் எதிர்பாராத நண்பராக இணைந்தவர்தான் கலை. உலக அப்பாவிகள் சங்கத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கவேண்டிய அளவுக்கு வெவரமானவர். நான் என்ன சொன்னாலும் நம்புவார்.
சத்ரியன்பத்திரிகை ஒரு குடிகாரர்கள் சங்கம். சூரியன் குட்நைட் சொன்ன சில நிமிடங்களில், உலகம் எக்கேடு கெட்டுப்போனாலும் நாங்கள் ஓல்டு காஸ்க் அடித்தே ஆகவேண்டும். காசு பஞ்சம் இருந்தால் இருக்கவே ரிடர்ன் வந்த காப்பிகள். முட்டை பரோட்டாவுக்கும் சரக்குக்குமாக ஆளாளுக்கு கொஞ்சம் சதிரியன்களை எடைக்குப் போடுவார்கள். அந்த சமயத்தில் அப்பாவியாய், இதுகுறித்து எந்தவித சிந்தனையும் இல்லாத கலையை தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே ஓடோடி வந்தவரே பீரடிச்சீரோஎன்று பாடியபடி முதன்முதலாக பீர் குடிக்கவைத்த பாவம் என்னையே சேரும்.
எங்கள் அலுவலகம் மேட்டுக்குடிகள் வசிக்கும் அண்ணாநகரில் இருந்தது. பத்திரிகை விற்பனை நன்றாக இருந்தபோதிலும், சில நிர்வாகக் குளறுபடிகளால், ஏஜெண்டுகளிடமிருந்து நேரத்துக்குப் பணம் வந்து சேராததால், பஞ்சப் பரதேசிகளாவே பத்திரிகை நடத்தி வந்தோம்.
சோறுக்கும், பீருக்கும் மட்டுமே தேறும் என்பதால் யாருக்கும் சம்பளம் இல்லை.
வெறும் இருபது ரூபாய் தந்தால் போதும், அண்ணாநகரிலிருந்து எம்.எல்..ஹாஸ்டல் வரை நடந்தே போய் கூட செய்தி சேகரித்து வருவார் கலை. பேட்டா, கன்வேயன்ஸ், காலை டிபன், லஞ்ச் உட்பட எல்லாவற்றையும் அந்த இருபது ரூபாய்க்குள் முடித்துக்கொள்ளும் அவரது மாயக்கலைதான் அவரை இன்று, நூறுக்கும் மேற்பட்டோருக்கு சம்பளம் போடும் முதலாளியாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இதற்கு முன்னர் ஓரிருமுறை நான் அவரைச் சந்திக்க அங்கே சென்றிருந்தபோதிலும், நிதி உதவி கேட்டுச் செல்வது அதுவே முதல்முறை என்பதால், சற்று சங்கடமாகவே இருந்தது. ஆனால் அவர் என்னை நன்கு அறிந்தவர், முதலாளியான பிறகும் அதே அன்போடு அண்ணேஎன்று அழைப்பவர்.
ரிசப்ஷனில் சில நொடிகள் காத்திருக்க எம்.டி. உங்களை உள்ள வரச்சொல்றாங்கஎன்று அழைப்பு வந்தது.
உள்ளே போனால் அவரது அறையில் அவர் இல்லை. [தொடரும்]