Tuesday, March 13, 2012

ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்

ட்டு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும் அப்படியே அழையுங்கள்.
2003-ன் இறுதியில் ‘பிதாமகன்’ ரிலீஸாகி சில தினங்களே ஆன நிலையில், நானும் பாலாவும், காரில் அமர்ந்து பீர் குடித்த படியே, ஏற்காடு மலையேறிக்கொண்டிருந்த போதுதான், முதன்முதலாக, ‘விருமாண்டி சண்டியரை நோக்கி ,சங்கீதத்தின் ஒரே சண்டியர்  ராஜா சொன்ன  ’உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ பாடலைக்கேட்டு கிறங்கினேன்., மலையிலிருந்து இறங்கின உடனே என் செல்போனின் ரிங்டோனாக அன்று  அரியனை ஏறிய பாட்டு இன்று வரை இறங்கவில்லை.

சலங்கை ஒலி’ இது மவுனமான நேரம்...,‘நாயகன்’ நீ ஒரு காதல் சங்கீதம்...,’  புன்னகை மன்னன்’ ‘என்ன சத்தம் இந்த நேரம்?..., மவுனராகம்’ நிலாவே வா...,காத்திருக்க நேரமில்லை’ வா காத்திருக்க நேரமில்லை..., நாடோடித்தென்றல்’ ஒரு கணம் ஒரு யுகமாக..., சிப்பிக்குள் முத்து’ மனசுமயங்கும்..., சத்யா’ வளையோசை கலகலவென..... வரிசையில் நான் அந்தப்பாடலை இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். பாடலில் கமலுடன் நாட்டுப்புறத்தமிழில் கொஞ்சியிருந்த ஷ்ரேயா கோஷலுக்கு எனது இதயத்தின் இடது ஓரத்தில் சின்னதாக ஒரு கோயில் கூட கட்டியிருந்தேன்.’என்னவிட உன்ன சரிவரப்புரிஞ்சிக்க யாருமில்ல ...’ என்று ஷ்ரேயா எனக்காகப்பாடுவதாக நினைத்துக்கொள்வது சொல்லவொண்ணா சுகமாக இருக்கிறது.

தமிழ் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்களைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சின்ன வயசிலிருந்தே ராஜாவின் மீது வெறிகொண்ட ரசிகன் நான். அவருக்கு என்னைபோல் லட்சக்கணக்கில் பைத்தியங்கள் உண்டென்றாலும், ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான் என்ற தலைமைப்பொறுப்பை என்னிடம் தயவு செய்து விட்டு விடுங்கள் . அப்படி விட்டுக்கொடுக்க நீங்கள் முன்வரும் பட்சத்தில் என் வாழ்நாள் முழுக்க,எம்.எல்.ஏ, மந்திரி, முதல் அமைச்சர், பிரதமர், அமெரிக்க பிரதமர் போன்ற எந்தப்பதவிகளுக்கும் நான் உங்களொடு போட்டியிட மாட்டேன் என்று எத்தனை ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வேண்டுமானாலும் எழுதி கையெழுத்திடுகிறேன்.

வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும் அவர்  இளையராஜாவுடன் இருந்தவரை. பாரதிராஜாவை* எனக்குப் பிடிக்கும் அவர் படத்துக்கு ராஜா இசையமைக்கும்போது மட்டும். ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படம்  ,ஏ.ஆர். ரகுமான்,மற்றும் ஹாரிஸ்ஜெயராஜிடமிருந்து  எங்கள் ராஜா கைக்கு மாறும்போது, ‘படம் பிரமாதமா வந்துருக்காம்’ என்று சல்லி பைசா அட்வான்ஸ் வாங்காமல் மிஸ்டர் திகில் முருகன் பார்க்க வேண்டிய பி.ஆர்.ஓ. வேலையை நான் பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன்.
 
என்னைப்பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான்.இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து.

மிகவும் வறுமையான பின்னணியில் எட்டுப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க, நாள்தோறும் நள்ளிரவில் தோட்டம் போய் தண்ணீர்பாய்ச்சிய என் தாய் லச்சம்மாளின் நினைவு வரும்போதெல்லாம் ‘பொன்னப்போல ஆத்தா என்னப்பெத்துப்போட்டா’ [என்னை விட்டுப்போகாதே ]பாட்டு கேட்டு அழுதிருக்கிறேன்.மனசு சரியில்லாத வேளைகளில், ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே, ஆலோலம் பாடி ‘ மாதிரி பாடல்கள் கொண்டு என் கண்ணீர் துடைப்பது ராஜாவின் சுரங்கள்.ஒரு பூ மலர்வதைக்கூட சங்கீதமாகச் சொல்ல முடியும் என்று மலர்ந்த ‘வெள்ளி முளைத்தது’ [கீதவழிபாடு] கேட்டு விடிந்தது எத்தனை காலைப்பொழுதுகள் என்று சொல்லிமாளாது.

அமெரிக்கன் கல்லூரியில்* படித்துக்கொண்டிருந்தபோது, நானும் எனது நண்பர்களும். வகுப்பறைகளில் இருந்ததை விட ,கல்லூரிக்கு எதிரே இருந்த கணேஷ் டீ ஸ்டாலில் தான் அதிகம் நின்றிருப்போம்.

‘மண்வாசனை, கரையெல்லாம் செண்பகப்பூ’ நான் பாடும் பாடல், பயணங்கள் முடிவதில்லை,இளமைக்காலங்கள்’ என்று கேட்டு எங்களைத்திகைக்க வைப்பதையே ராஜா சலிப்பின்றி செய்து வந்தார்.கணேஷ்  ஸ்டாலில் டீ கேட்பதுவும், ராஜாவின் பாட்டீ  குடிப்பதுமே கல்லூரி காலங்களில் எங்களது முக்கியமான பணியாக இருந்தது.

ராஜாவை நான் முதன் முதலில் தனிப்பட்ட முறையில் சந்தித்தது, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், ‘அதர்மம்’ பட பூஜை தினத்தன்று.
எனது அமெரிக்கன் கல்லூரி வகுப்புத்தோழன் ரமேஷ் என்கிற ரமேஷ்கிருஷ்ணன்*, அடையாறு திரைப்படக்கல்லூரியில் டைரக்‌ஷன் கோர்ஸ் முடித்து, அங்கேயே ஆக்டிங் கோர்ஸ் முடித்த சுரேஷ் என்பவரை தயாரிப்பாளராக அமைத்து தனது’அதர்ம ஆட்டத்தை ஆரம்பித்திருந்தான். பட நிறுவனத்தின் பெயர் ஜி.கே.ஃபிலிம்ஸ்.தயாரிப்பாளர்கள் அண்ணன் தம்பி மூன்று பேர்.ரமேஷ் மூத்தவர், சுரேஷ் நடுவர். சதீஷ் கடைக்குட்டி. 
ரமேஷ் கிருஷ்ணனுடன் சேர்ந்து சந்தித்த நாலைந்து சந்திப்புகளிலேயே நான் தயாரிப்பாள சகோதரர்களிடம் மிகவும் நெருக்கமாகிவிட்டேன்.

இந்த சமயத்தில் நான் ஆசிரியராகவும், பார்ட்னராகவும் இருந்த ‘சத்ரியன்’* அரசியல் பத்திரிகை தனது இறுதி மூச்சை நெருங்கிக்கொண்டிருந்ததால், நான் எனது பெரும்பாலான நேரங்களை டிஸ்கஷன் ,சீட்டு விளையாடுவது என்று ‘அதர்ம’ கோஷ்டிகளுடனேயே கழிக்க ஆரம்பித்திருந்தேன்.

நன்றாக நினைவிருக்கிறது.  அன்று அதிகாலை.ஏ.வி.எம்மில் லேசான தூறலடித்துக்கொண்டிருக்க பூஜைக்கு சரியான நேரத்தில் ராஜா இறங்கிவர, நான் தெய்வ தரிசனம் கிடைத்ததுபோல் சிலிர்த்து நின்றேன்.

முதல்நாளே  கொஞ்சம் மன ரீதியாக, ரமேஷ் உட்பட்ட டீமை நான் தயார் படுத்தியிருந்த வகையில்,ரமேஷ்கிருஷ்ணன் உட்பட படத்தில் பணியாற்ற இருந்த அத்தனை டி.எஃப்.டி.மாணவர்களும் தாங்கள் போட்டிருந்த முரட்டு ஜீன்ஸ் பேண்டையும் பொருட்படுத்தாது, பட்பட் என்று ராஜா காலில் விழுந்து நமஸ்காரம் வைத்தவுடன்’ இந்தப்படம் கண்டிப்பா நல்லா ஓடும் என்று என் மனசுக்குப் பட்டது.
அன்று மதியமே மனோ குரலில் ‘தென்றல் காற்றே ஒன்றாய்ப் போவோமா?’ என்ற பாடலையும்,அடுத்த இரு தினங்களில் மேலும் 4 பாடல்களையும் முடித்துத்தந்த ராஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரமேஷை விட்டு நகராமல் கவனித்துக்கொண்டே இருந்தேன். படம் பின்னணி இசைக்குப்போனபோது,திரைக்குள் நுழைந்துகொண்ட மந்திரவாதி போலவே எனக்குத்தெரிந்தார்.


அவருள் இருக்கிற இசை என்ற ஒன்றை எடுத்து விட்டால்,ராஜா என்பவர் இருந்துகொண்டிருக்கும் இடம் வெற்றிடமாய் மாறிவிடுமோ என்று எண்ணுமளவுக்கு முழுக்க முழுக்க இசையாகமட்டுமே அவர் இருந்தார், தெரிந்தார்.

அதற்கு அப்புறம் ‘சேது’ பிதாமகன்’ சமயங்களில் பாலாவுடன் , இளையஞானி கார்த்திக்ராஜா தனக்கு மேனேஜராக இருக்கச்சொல்லி வீட்டுக்கு அழைத்தபோது என்று பலமுறை மிக நெருக்கமாக ராஜாவை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு வார்த்தை கூட நான் பேச நினைத்ததில்லை.

பக்தனுக்கு தெய்வத்தோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?

57 comments:

 1. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோன்னு நினைக்க வைக்குது

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ஆயிரம் பக்கம் எழுத ஆசைதான்.படிக்கிற பொறுமை உங்களுக்கு இருக்கனுமே?

   Delete
 2. //பக்தனுக்கு தெய்வத்தோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?//


  அடடே ..!

  ReplyDelete
  Replies
  1. அடடே ஒரு ஆச்சரியக்குறிக்கு அர்த்தம் விளங்களையே சார்.

   Delete
  2. ! = மானசீகமான, மெளனமான சங்கேதங்கள்

   Delete
 3. தெய்வத்தோட பேசாத பக்தரா அதிசியம்தான்

  ReplyDelete
 4. முத்தண்ணா, சின்னமணிக் கோவிலிலே - வண்ணவண்ண பூக்கள், அந்த வானத்தைப் போல - சின்னக் கவுண்டர், தென்றல் வந்து தீண்டும் போது - அவதாரம், அம்மா என்றழைக்காத - மன்னன், ஆராரிரோ பாடியதாரோ - தாய்க்கு ஒரு தாலாட்டு, பூங்காற்று புதிரானது, கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை, பச்சை மலைப் பூவு - கிழக்கு வாசல், தூளியிலே ஆடவந்த - சின்னதம்பி, என்னைத் தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை.. இது இப்போதைக்கு என் மனதில் வந்த லிஸ்ட்.. இன்னும் நிறைய இருக்கு.. இன்று அவர் இசையின் இன்றைய புது விஷயங்களை அங்கீகரிக்க மனமில்லாததால் சராசரி இசையமைப்பாளர் போல் இசையுலக வாழ்க்கையில் அஸ்தமிப்பாரோ என்று வருத்தமாக இருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒரு எண்ணம் தேவையில்லை. உங்க கேள்விக்கு பதிலாக விரைவில் ஒரு கட்டுரை எழுதுறேன்,ப்ரபா.

   Delete
 5. என் மனதில் இருப்பதையெல்லாம் நீங்கள் எழுதிவிட்டீர்கள்.
  நான் கூட என் நண்பனிடம் சொன்னேன். "நீ தானே என் பொன் வசந்தம்" செமையா
  வந்திருக்காம்" என்று. அவன் திருப்பிக் கேட்டான். உனக்குத்தான் கௌதமன் படமெல்லாம்
  அவ்வளவா பிடிக்காதே என்று :).... அருமையானப் பதிவு. மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி, உங்களுக்குத்தான் சொல்லனும்.நீதானே என் பொன் வசந்தம்’ நெசமாவே பிரமாதமா வந்திருக்காம்.

   Delete
 6. ராஜாவின் இசை :
  நம்மை ஆழ வைக்கும், சிரிக்க வைக்கும், நம்மை சந்தோஷ படுத்தும், அணைத்து மனித உணர்ச்சிகளுக்கும் இசை வடிவம் குடுத்த ஒரே மாமேதை ராஜா தான்.

  ReplyDelete
  Replies
  1. கூடவே ஊர்ப்பாசம்ன்னு ஒண்ணு உங்களுக்கு இருக்குமே?

   Delete
  2. உண்மை தான், சார் சொந்த ஊரு பண்ணைபுரம், எங்க ஊர் பக்கம் தான்.
   ராஜா சாரின் அம்மா சமாதி என்னோட சொந்த ஊருல (கூடலூர்) தான் பாஸ் இருக்கு. அவங்க சமாதி பக்கத்துல பெரிய வீடு கட்டி இருக்கார். வருசத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா சார் அங்க வருவார். அடிக்கடி பார்த்து இருக்கேன்.
   நீங்க சொல்லுற மாதிரி அவரை பார்க்கறது எல்லாம் தெய்வ தரிசினம் மாதிரி தான்.

   Delete
 7. நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் எப்படி வந்துருகாம். அதுவும் கொஞ்சம் பகிர்ந்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. பாட்டை ரிலீஸாகுறதுக்கு முந்தியே பகிர்ந்துகிட்டா பைரஸி கேஸ்ல நம்மள உள்ள துக்கி வச்சிருவாங்க. ரெண்டு சனியனுங்க தொலைஞ்சதுன்னு ராஜா கம்முன்னு கிடப்பார். ஒரு மாசம் பொறுங்க .ஒரிஜினலே கேப்போம்.

   Delete
  2. \\ரெண்டு சனியனுங்க தொலைஞ்சதுன்னு\\

   யாரு தல அந்த ரெண்டு ;-))

   Delete
 8. அண்ணே, நீங்கள் ராஜ பைத்தியமாக இருங்கள், நான் மகா ராஜ பைத்தியமாக இருந்து விட்டுப் போகிறேன்..

  ReplyDelete
 9. //காரில் இளையராஜாவின் பாடல்களை மட்டும் கேட்டுகொண்டே சென்னை டு கன்னியாகுமரி போய்விட்டு வந்துவிடலாம்!// - டைரக்டர் மனோபாலா

  நானும்!

  ReplyDelete
  Replies
  1. எப்போதும் என்னை போடா வாடா போட்டு அழைக்கிற இம்சையான நண்பர் மனோபாலா. அவரும் ராஜாவின் தீவிர ரசிகர்தான். ராஜாவுக்கு டீ குடிக்கச்சொன்னாலும் குடிப்பார். தீக்குளிக்க சொன்னாலும் குதிப்பார்.

   Delete
 10. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

  http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

  ReplyDelete
 11. //"என்னைப்பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான்.இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து."//

  100% உண்மை.

  ReplyDelete
 12. அருமை .. உங்கள் நிஜ பெயர் என்னவென்று கூற முடியுமா? ஒரு சக ராஜா பைத்தியத்தின் பெயர் தெரிந்துகொள்ள ஆர்வம் தான்.. :)

  ReplyDelete
  Replies
  1. என் பெயர் முத்துராமலிங்கம்.இந்த தலைப்பில் இரு தினங்களில் இந்த தலைப்பில் ஒரு செய்தி எழுதுகிறேன் படியுங்கள்.

   Delete
 13. என்னைப் பொறுத்தவரை, நீங்கள் எழுதியதும்,அதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்த விரும்பிய உங்கள் எண்ணங்களும், ரொம்ப ரொம்ப கம்மிதான்... !இந்த மாபெரும் இசைஞானிக்கு!!!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன்.

   Delete
 14. படிக்க படிக்க ஆவலைத்தூண்டும் வகையில் அருமையான எழுது...கருத்து பற்றி நான் எந்தக்கருத்தும் கூற வேண்டியதில்லை...அற்புதம்! என்னைப்போன்ற பரம ரசிகைகள் ஆர்வமுடன் படிக்கும் அருமையான ஒன்று...நானும் யோசித்திருக்கிறேன் ...அவரை நேரில் சந்தித்தால் என்ன செய்வேன் என்று ஆசீர்வாதம் பெறுவதைத் தவிர வேறெதுவும் செய்திருக்க மாட்டேன்... அதே தான் நீங்கள் செய்திருக்கீறீர்கள் ...இதன் தொடரினை எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா எழுதுவேன். அவரைப்பத்தி ஒரு மழைத்துளி அளவு கூட எழுதின திருப்தி எனக்கு இதுல இல்ல.

   Delete
 15. ராஜபைத்தியத்தை ‘செல்’லிலேயே பாராட்டித் தீர்த்துவிட்டேன். ஆனாலும் தீராது.
  ஆகவே, ராஜாவின் சங்கீதச் சங்கிலியால் கட்டுண்டு கிடக்கும் அதீத பைத்தியங்களில்
  ஒருவனான நான், தலைப்பு முதல் கடைசி வரி வரை கண்ணில் பரவச ஈரம்
  கசியச் செய்த முத்துராமலிங்கத்தின் விரல்களுக்கு என் பாச முத்தத்தையும் இங்கே
  பதிவு செய்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eJI2KZpGGIM
   தமிழ்நாட்டில் எப்போதோ மதுவிலக்கு.உதய் அண்ணே உன் இதழ்மட்டும் எப்போதும் விதிவிலக்கு’
   தலைவனின் ‘முத்தம் போதாதே, சத்தம் போடாதே ரத்தம் சூடாகுதே’ பாடலை அண்ணனின் அன்பு முத்தத்துக்கு பதிலாக சத்தமாக வழங்குகிறேன்.

   Delete
 16. இசை தெய்வத்தை பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி...தொடர்ந்து எழுதுங்கள் தல ;-)

  \\பக்தனுக்கு தெய்வத்தோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?\\

  இதை தான் சொல்றோம் யாரும் புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்களே ! ;-)

  ReplyDelete
  Replies
  1. பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டாலே புத்தி சொன்னார்....

   Delete
 17. சே. மறுபடியும்.. பொசுக்...

  ஆனா கடைசி வரி, நச்..

  ReplyDelete
 18. இசைஞானி பற்றி எழுதும் எல்லோரின் மனநிலையும் ஒரே நிலையில் தான் இருக்கும் போல, இன்னும் தேவை போதாது இது

  ReplyDelete
  Replies
  1. யோவ்.. போதும் நிறுத்துமையான்னு நீங்க சொல்றவரைக்கும் எழுதுவேன் ப்ரபா.

   Delete
 19. //வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும் அவர் இளையராஜாவுடன் இருந்தவரை. பாரதிராஜாவை* எனக்குப் பிடிக்கும் அவர் படத்துக்கு ராஜா இசையமைக்கும்போது மட்டும்//

  பாலாவை ...?

  ReplyDelete
 20. பாலாதான் இப்ப பாழாப்போய்க்கிட்டிருக்காரே? சேது, பிதாமகனை ரீ-ரெகார்டிங் இல்லாம ஒரு தடவ போட்டுக்கேட்டார்னா, இசைப்பிதாமகனோட அருமை தெரியும்.

  ReplyDelete
 21. //இசைப்பிதாமகனோட அருமை தெரியும்.//

  ம்ம் .. ம் ..

  ஆ.வியில் வந்த பாலாவின் கதை படித்த பின் இந்தக் கேள்வி மனதுக்குள் எப்போதும் இருக்கிறது!

  ReplyDelete
 22. ஒஹோ சார்,

  ஒரு ரசிகனாக மிக நன்றாக உங்கள் எண்ணங்களை பகிர்ந்துள்ளீர்கள், பெரும்பாலோர் ராஜாவின் பாடல்களின் இரசிகர்கள் ஆக விரும்புவார்கள் ஆனால் அவருக்கே இரசிகர்களாக இருக்க விரும்புவதில்லை என்பது எனது எளியக்கருத்து.

  ராஜாவின் பாடல்களை அதிகம் கேட்பேன் ,80களின் கோல்டன் ஹிட்ஸின் மிக பெரிய/சிறிய இரசிகன் நான். அதே நேரம் அவரின் கருத்துகளும், பேச்சும் ,பாவனையும் நீங்கள் சொல்வது போல உச்ச ஆராதனை செய்ய தக்கது இல்லை என நண்பர்களோடு பேசும் போது விமர்சிக்கவும் செய்வேன் , ஏன் எனில் எந்த அளவுக்கு பிடிக்குதோ அந்த அளவுக்கு விமர்சிக்கவும் செய்வார்கள் நல்ல இரசிகர்கள் என்பது எனது கருத்து.

  80 களில் இராஜாவின் ராஜாங்கம் என்று சொன்னால் மிகை ஆகாது, அதற்கு பின் மெல்ல மங்கி இப்போது அவரது இசை அவரின் நிழலாகவே இருக்கிறதோ எனத்தோன்றுகிறது.சச்சின் எத்தனையோ அதிரடி சதங்கள் அடித்திருந்தாலும் வங்க தேசத்துக்கு எதிராக தடவி அடித்த 100வது 100 மனதை கவராதது போல ஆகிவிட்டது பின்னர் வந்த பாடல்கள்.

  இராஜா இசைக்குறிப்புகள் எழுதி ரெஹ்மான் ஆர்கெஸ்ட்ரேஷன் செய்தால் அற்புதமான பாடலாக அது வரும் என எனக்கு ஒரு எண்ணமுண்டு.இம்முறையில் தான் மேற்கத்திய இசையயமைப்பாளர்கள் செயல்படுகிறார்கள்.

  மெல்ல திறந்தது கதவு படத்தில் இரண்டு பாடல்களுக்கு எம்.எஸ்.வியின் இசைக்குறிப்புகளுக்கு இராஜா ஆர்கெஸ்ட்ரேஷன் செய்தார் என படித்திருக்கிறேன்.இராஜாவின் இப்போதைய பாடல்களை கேட்டால் ஒரு பழைய வாசனை வரக்காரணம் அதே பழைய பாணியிலான ஆர்கெஸ்ட்ரேஷன் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பதில் எழுத ஆரம்பித்து அது ஒரு பதிவு அளவுக்குப்போய்விட்டது. பின்னர் அதை வெளியிடுகிறேன்...

   Delete
 23. அண்ணா உங்கள் பதிவுகளை சில நாட்களாகத்தான் தொடர்ந்து வருகிறேன்,அவை என் எண்ணங்களோடு அதிகமாக ஒத்து வருகின்றன . தல யை பற்றிய பதிவு, ராஜா வை ப்பற்றிய இந்த பதிவு .
  நமது வாழ்க்கையை பின் நோக்கி பார்த்தால் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னணியில் இளையராஜா இசையும் , பாடல் களும் ஒலித்துக்கொண்டே இருக்கும்
  பதிவுலகில் நீங்கள் சாதிக்க ,என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. நான் உங்கள் வலைபக்கதிற்கு வருவது இதுவே முதல் முறை . இளையராஜா சிறந்த இசை அமைப்பாளர், அதில் சந்தேகமில்லை , ஆனால் (என்னை பொறுத்தவரை) எல்லா படைப்பாளிகளுக்கும் ஒரு நேரம் உண்டு , அவர்களின் உச்சம் அதில் வெளி வரும் , கவிதை , இசை, பாடகர், நடிப்பு, எழுத்து, சிற்பம், ஓவியம் என்று எல்லா விதமான கலைபடைப்பளிகளுக்கும் இது பொருந்தும். ஒரு அளவிற்கு மேல் படைப்புத்திறன் தேவையில்லாத வேலைகளுக்கு மட்டுமே இந்த 'நேர' விதி பொருந்தாது.

  இந்த விதி இளையராஜாவிற்கும் பொருந்தும், அவர் உச்சத்தில் இருந்த நேரம் (மற்றவரை ஒப்பிடும்போது) அதிகம், அதற்கு காரணம் அவரின் திறமை, அதில் சந்தேகமில்லை, ஆனால் இந்த 2012-இல் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் அவருக்கு எந்த பட வாய்ப்பும் கொடுக்காமல் சரியான ஓய்வில் அவரை விட்டு விடுவதுதான் .இதனால் அவரின் மரியாதை குறையாது, அவரின் இசை மூலம் அவர் இன்னும் பல்லாண்டுகள் பேசப்படுவார். ஆனால் அவர் புதிய படங்களுக்கு இசை அமைக்க கூடாது.

  சிவாஜி கணேசன் 80-களில் நடித்த பல தப்ப படங்கள் போல் இவரது இசையும் ஆகிவிடும் வாய்ப்பு அதிகம்

  ReplyDelete
 25. ///எட்டு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும் அப்படியே அழையுங்கள்.///
  அப்போ நானும் உங்களை மாதிரியே பைத்தியக்காரன் தான்....எப்போ இந்த ரிங் டோன் சேவையை ஏர்டெல் தொடங்குச்சோ ..அப்போ இருந்து இன்னிக்கு வரைக்கும் ராஜா சார் இசை அமைச்ச /// என்னை தாலாட்ட வருவாளோ /// பாடலை வைத்து இருக்கிறேன்...அப்புறம் அவரோட பாடல் கொண்ட பென்டிரைவ் தான் எப்போதும் என் காரில் ஒலிக்கும்..

  ReplyDelete
 26. உங்களை மன்றத்துல உடனே சேத்தாச்சி. மறக்காம மாசாமாசம் சந்தா அனுப்பிருங்கண்ணே...

  ReplyDelete
 27. nice blog. i m a big fan of raja sir too.. but hellooo... where is the clue? :)

  ReplyDelete
  Replies
  1. க்ளூ நீங்கதான் கண்டுபிடிக்கனும் மலர்விழி. உங்க பேரை வச்சி என்கிட்ட ஒரு பெரிய ஃபிளாஷ்பேக் இருக்கு. கொஞ்சகாலம் போகட்டும் பகிர்ந்துக்கிறேன்...

   Delete
 28. இளையராஜா குறித்து இன்னும் அதிகம் நீங்கள் எழுத வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா எழுதுறேன் நண்பா...தங்கள் சித்தம் என் பாக்கியம்....

   Delete
 29. ’ராஜ பைத்தியம்’ என்கிற பெரும்பதவியை அப்படி யாரிடமும் சொல்லாமல் நீங்கள் களவாடிக்கொள்ள முடியாது. அதற்கென்று போட்டியிட இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கிறோம். உங்களைப் போலவே நாங்களும் மதுரைத் தண்ணீர் குடித்து கோரிப்பாளையத்தைச் சுற்றியுள்ள டீக்கடைகளெங்கும் இசைஞானியைப் பருகித் திரிந்தவர்கள்தான். என்ன ஒரு பத்து வருஷ இடைவெளி வேண்டுமானால் இருந்திருக்கலாம். (உங்களுக்கு ‘கணேஷ் டீ ஸ்டால்’ என்றால் எனக்கு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எதிரில் இருந்த ‘லதா காபி பார்’.. ஹி.. ஹி..). :-)

  மிகப் பிரமாதமான பதிவு. இன்னும் நிறைய நிறைய இசை தெய்வத்தைப் பற்றி எழுதுங்கள். நன்றி! :-)

  ReplyDelete
  Replies
  1. லதா காபி பாருக்கும் நான் ரெகுலர் கஸ்டமர்தான். அங்கே கிடைத்த உருளைக்கிழங்கு பஜ்ஜியையும், அதற்கென அவர்கள் தந்த மிளகாய் சட்னியையும் இப்போது நாவில் எச்சில் ஊற நினைத்துக்கொள்கிறேன்....

   Delete
 30. கணேஷ் ஸ்டாலில் டீ கேட்பதுவும், ராஜாவின் பாட்டீ குடிப்பதுமே கல்லூரி காலங்களில் எங்களது முக்கியமான பணியாக இருந்தது - Excellent

  ReplyDelete
 31. உங்களது வலைப்பூவை இன்றுதான் முதன் முதலாக பார்க்க முடிந்தது......அருமை தலைவரே ! உங்களது ராஜாவின் பார்வை என்னை மெய் சிலிர்க்கவைத்தது . நானும் மதுரை தான் தற்பொழுது திருச்சி வாசியாகி விட்டேன் . ராஜாவின் ஒவ்வொரு பாடல்களும் அந்தந்த கால கட்டங்களின் ஒரு rewind பட்டன்கள் போலத்தான் என்பது என்னுடைய கணிப்பு . வாழ்த்துக்கள் .....தொடரட்டும் உங்கள் பணி..!

  ReplyDelete
 32. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 33. உங்களுக்குப் போட்டியாக இளையராஜாவின் இயற்பியல் என்று ஒரு வலைப்பக்கம் உள்ளது. அங்கும் இதைப் போன்ற இளையராஜா வழிபாடு நிறைய உண்டு. இளையராஜாவைப் பற்றி புதியதாக எதையாவது எழுதி இருப்பீர்கள் என்று இங்கே வந்தேன். இளையராஜாவின் அபிமானிகள் ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. திருவாளர் வவ்வால் சொன்னபடி இசையை ரசிப்பதில் பாகுபாடு இருக்ககூடாது. ரசனையை இசையோடு நிறுத்திக்கொள்வது ஆரோக்கியமானது. இளையராஜாவை கைகூப்பி வணங்கும் முன் மேலும் பல இசை மேதைகளைப் பற்றி தெரிந்துகொள்வது நலம்.

  ReplyDelete