Monday, July 21, 2014

ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று

'ஓஹோ’ பக்கம் லேசாய் எட்டிப்பார்க்கும் நேரமெல்லாம், ‘அடடா, எழுதி எவ்வளவோ மாதங்கள் ஆகியும், நேற்று கூட நூறுபேர் வந்துபோயிருக்கிறார்களே’ என்று தெரியும்போது, கடுமையான குற்ற உணர்ச்சி வந்துபோவதென்னவோ உண்மைதான். நம்ம படம் படுத்திய பாட்டில், அவ்வப்போதுகூட எழுத இயலாமல் மிகவும் சோர்ந்துபோய்விட்டேன். இனி?? படம் இயக்கிய அனுபவம் குறித்து, சுவாரசியமான பல நூறு பதிவுகள் எழுத முடியும் எனினும், வெட்டி ப்ராமிஸ் தர மனம் சம்மதிக்கவில்லை. இங்கே கீழே இருக்கும் பதிவு கூட சற்றுமுன்னர் ஃபேஸ்புக்கில் எழுதிப்போட்டது. கிராமப்புறங்களில் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் அலைபவர்களை ‘மந்திரிச்சி விட்ட மாடு மாதிரி அலையுது பாரு’ என்பார்கள். அந்தப்பழமொழிக்கு அர்த்தம், விஷுவலாக பார்க்கவேண்டுமானால், இப்போதைக்கு என்னைப்பார்த்தால் போதும். ஆகஸ்ட் 15 நம்ம ‘சிநேகாவின் காதலர்கள்’ ரிலீஸ் என்று விளம்பரம் வந்தவுடன், மாட்டை சகலரும் மானாவாரியாக கன்ஃபியூஸ் செய்கிறார்கள். நம்முடையது மிகமிகமிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சின்னப்படம். எனவே படம் நூறு நாட்கள் ஓடி, பலகோடி களைக் குவிக்க வேண்டும்...என்ற பேராசையெல்லாம் எனக்கோ தயாரிப்பாளருக்கோ இல்லை. இந்தச்சூழலில் படத்தில் சிநேகா பேசும் ஒரு வசனத்தை போட்டால் பொருத்தமான இருக்கும் என்று கருதுகிறேன். சீன் நம்பர் [அநேகமாக] 47... இரவு...கொடைக்கானல் கெஸ்ட் ஹவுஸ். ....எழிலை நோக்கி சிநேகா.. ‘பாலச்சந்திரன் சுள்ளிக்காடெல்லாம் நீ படிச்சிருக்க வாய்ப்பே இல்ல..... அவரு சொல்றாரு.... ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று. ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை, அது உங்களுக்காக, பொத்திவைத்து காத்திருக்கும் எப்போதும்.....

Saturday, March 15, 2014

'படத்துல கதையே இல்லைங்குறேன்?’
 'படம் முடிந்து இன்னும் ஒரு சில வாரங்களில் ரிலீஸை நெருங்கும் வேளையில், நம்ம ‘சிநேகாவின் காதலர்கள்’ அனுபவம் குறித்து கொஞ்சமாவது ரீல் விடலைன்னா நல்லாருக்குமா?

முதல்ல பாடல்கள் பிறந்த கதை.

நானே ஒரு பாட்டாளிங்கிறதால, பாட்டுக்கள் இல்லாம படம் பண்றதைப் பத்தி, ஒரு சின்ன சிந்தனைகூட இல்லை.

தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம் நம்ம படவேலைகள் எதுலயும் தலையிட, ஆலோசனை சொல்லக்கூட விரும்பாததுனால, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாமே நம்ம சாய்ஸ்.  அந்த வகையில படத்தின் முதல் தொழில்நுட்பக்கலைஞர், என்னுடைய 32 ஆண்டுகால நண்பர் இரா.ப்ரபாகர். [இதை வச்சி எங்க வயசைக் கணக்குப்போடாதீங்க. அப்பிடியே கணக்குப்போடுறதா இருந்தா, சந்தானமும், உதயநிதி ஸ்டாலினும் மாதிரி, ’குவாகுவா’ காலத்துலருந்து நண்பர்கள்னு புரிஞ்சிக்கிட்டா சந்தோஷம்]

‘நல்லா யோசிச்சிக்கோ நீ ‘ராஜா’ வெறியன். புரடியூசர் கையிலகால்ல விழுந்து, அவர் மியூசிக்லயே படம் பண்ணி ஜென்மசாபல்யம் அடையிற வழியப்பாரு’ என்பதில் தொடங்கி, எனக்கு வேறு ஏதாவது உத்தேசங்கள் இருந்தால், வழக்கமான புன்னகையோடு எனக்கு வழிவிட அவர் தயாராகவே இருந்தார். [அது என்ன வழக்கமான புன்னகை என்பது தனிக்கதை. அதைப் பின்னர் செப்புகிறேன்.] எனக்கோ வேறு யோசனைகள் இல்லவே இல்லை.

ஆனால் ஒரு சிறு தயக்கம் மட்டும் இருந்தது. தயாரிப்பாளர் என்ன நினைப்பார்? வேறு யாரோ என்றால் கூசாமல் சொல்லிவிடலாம். எனது நீண்டகால நண்பர் ஒருவரை இசையமைப்பாளராக நியமிக்கும்பொழுது, தயாரிப்பாளருக்கு, அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அவருக்கு தரப்படும் இசையமைப்பாளர் வாய்ப்பு என்பது, நட்புக்காக அன்றி, அவரது திறமைக்காகவே தரப்படுகிறது என்பதை எப்படிச்சொல்வது?. ஏனென்றால் இது ஒன்றை ‘போட்டுவிட்டே’ படத்தையே இல்லாமல் ஆக்கிவிடும் வல்லுநர்கள் நிரம்பியது நமது கோடம்பாக்கம்.

 ப்ரபாவை இசையமைப்பாளராக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று தயாரிப்பாளர்  கலை அவர்களுக்கு விளக்க முயன்றபோது, ‘எல்லாமே உங்க மேல உள்ள நம்பிக்கையில செய்றப்போ, இதுமட்டுமில்ல இனி எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியமில்லை’ என்று எனக்கு 70 எம்.எம். சைஸில் க்ரீன் சிக்னல் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்த சில தினங்களில் நமது அலுவலகத்திலேயே கம்போஸிங் தொடங்கியது.

‘படத்துல எத்தனை பாட்டு வைக்கிறோம். என்னமாதிரி சிச்சுவேஷன்ஸ்?’- ப்ரபா.

‘படத்துல கதையே இல்லைங்குறேன். அப்புறம் எங்க சிச்சுவேஷன்ஸ் சொல்லுறது. ஒரு அஞ்சு பாட்டு போட்டுக்குடுங்க. ஆடியோ ரிலீஸைன்னைக்கு நெஞ்சைத்தொடும் அஞ்சு பாடல்கள்னு விளம்பரம் பண்றதுக்கு ஏத்தமாதிரி’.

இப்பிடித்தாங்க ‘சிநேகாவின் பாடல்கள்’ கம்போஸிங்கை நான்சிங்கா ஆரம்பிச்சோம்.

முன்னமாதிரி எஸ்கேப் ஆகமுடியாது. ரெண்டேநாள்ல தொடருவேன். அதுவரைக்கும் யூடுப்ல போய் நம்ம முதல் பாட்டைக்கேட்டுக்கிட்டிருங்க.

http://www.youtube.com/watch?v=SBCw1A_2Mm8.


[ப்ரபாவும் நானும் சேர்ந்து இருக்குற ஸ்டில்ஸ் வச்சிருக்குற  அமெரிக்கன் காலேஜ் புண்ணியவான்கள் அனுப்பி வையுங்கப்பா]

Thursday, March 13, 2014

சிநேகாவின் காதலருக்கு இன்று பிறந்தநாள் ’
’சிநேகாவின் காதலர்கள்’  முதல் ஷெட்யூல் முடிஞ்சிருந்த சமயம். கல்லூரி மாணவர் சந்தோஷ்[திலக்] கேரக்டர் தவிர மத்த யாருமே முடிவாகலை.பத்து மணி ட்ரெயினுக்கு 9.59க்கு எக்மோர்ல இறங்குறவங்களாச்சே நாம?. கொடைக்கானல் ஷெட்யூல் ஆரம்பிக்கிற அன்னைக்குதான் இளவரசன் [உதய்] வந்து இணைந்தார்.

கதைக்கு இன்னும் ரெண்டு நாயகர்கள் வேணும். நிறைய பேர்கிட்ட அந்த தேவையை சொல்லியிருந்தாலும், உதய் மட்டும் கொஞ்சம் சின்சியராவே நிறைய பேரை சிபாரிசு செஞ்சார்.அந்த கேரக்டருக்கு மட்டும் கொஞ்சம் ஸ்மார்ட்டான லுக் இருந்தா நல்லார்க்கும்னு யோசிச்சப்ப வந்தவங்கள்லாம் என் ரேஞ்சுலயே இருந்தாய்ங்க. எதுவும் செட்டாகலை. அடுத்து ஒரு நாலைஞ்சு நாள்ல ஷூட்டிங் கிளம்பவேண்டிய அவசரம்.
சில வேலைகளை அன்பா சொல்ல ஆரம்பிச்சி, ஒருக்கட்டத்துல அதட்ட ஆரம்பிச்சிருவோம். அப்பிடித்தான் உதய்க்கு ஓவரா இம்சையை குடுக்க ஆரம்பிச்சேன்.

’தேதி ரெண்டாச்சி, ஆறாம் தேதி ஷூட்டிங் கிளம்பனும் உதய்?’

‘அண்ணா இன்னைக்கு அதிஃப்ன்னு என் ஃப்ரண்ட் ஒருத்தனை அனுப்புறேன். நீங்க சொல்ற கேரக்டருக்கு செட் ஆக நிறைய சான்ஸ் இருக்குண்ணா’- உதய்.

‘என்ன பண்ணிக்கிட்டிருக்காரு?’

‘சாஃப்ட்வேர் கம்பெனியில ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கான். ஒண்ணுரெண்டு குறும்படங்கள்ல நடிச்சிருக்கான்’ -உதய்.

‘சாஃப்ட்வேர்ன்னாலே நமக்கு கொஞ்சம் அலர்ஜியாச்சே,[ வேற என்ன, நம்மளைவிட  அதிகம் படிச்சவங்களாச்சேங்குற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்தான்] சரி வரச்சொல்லுங்க பாக்கலாம் உதய்’.

மறுநாள் சொன்ன நேரத்துக்கு அந்த இளைஞர் நம் அலுவலகத்துக்கு வந்தார்.

காஸ்ட்லியான ஆடைகள். ஹன்சிகா மோத்வானியின் நிறம். ஆறு அடி, பத்துநாள் தாடி. மொத்தத்தில் நான் தேடிய எழில் என்கிற கேடி.

கண்டதும் காதல் போல, என் எழில் கேரக்டர் அவர்தான் என்று முடிவுக்கு வந்து, அவரது கேரக்டரை சொல்லி பட்ஜெட் நிலவரம் குறித்த கலவரத்தையும் அவருக்குள் ஏற்றி முடித்தபோது கூலாக ‘ஓ.கே சார். நான் நடிக்கிறேன்’ என்று நம் டீமுக்குள் வந்தார்.

ஷூட்டிங் தேதிகள் சொன்னபோது, அதில் ஒருநாள் மட்டும் முடியாது என்று காரணம்  சொன்னபோது, அவர்மீது அநியாயத்துக்கு ஒரு மரியாதை வந்தது.

’சாஃப்ட்வேர் பசங்கள்ல இவ்வளவு சாஃப்டானவய்ங்களும் இருக்காய்ங்களா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, படத்தில் பணியாற்றிய இருபது தினங்களும் இருந்த இடம் தெரியாமல், அவ்வளவு அமைதி. சொன்னபோதெல்லாம் லீவு போட்டார். சொந்த உடைகள் கொண்டுவந்தார். இவ்வளவுக்கும் மேலாக, கூட நடிக்கும் பெண்களை கவரும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. [இவ்வளவு அட்ராக்டிவா இருந்திருந்தா நானெல்லாம் ஏகப்பட்ட லவ்லெட்டர்களை எழுதி வீசியிருப்பேன்].

சிநேகாவின் தோழர், எழில் என்கிற அதிஃப் ஜெய்க்கு, இன்று பிறந்த நாள். என் அடுத்த படத்துக்கும் கால்ஷீட் கொடுத்து, அவர் எழில்மயமான எதிர்காலம் கண்டு, நீடூழி வாழ,[ வாழ்த்தும் வயதில்லை], ஆனாலும் வாழ்த்துகிறேன்.