Friday, November 30, 2012

விமர்சனம் ‘நீர்ப்பறவை’- ‘சரக்கு ஓவரானதால், விரிக்கவில்லை தன் சிறகை’
சென்சார் சர்டிபிகேட் போட்டு முடிந்ததும், எடுத்தவுடன், கன்னங்கரிய திரையில் ‘ எ சீனு ராமசாமி ஃபிலிம்’ என்ற வெண்ணிற எழுத்துக்கள் மிளிர்கின்றன.
ஏற்கனவே தனது முந்தைய படமான ‘தென்மேற்குப் பருவக்காற்று’க்கு ரெண்டுமுனு பிராந்திய விருதுகள் வாங்கிய இயக்குனர், இந்த முறை, உதயநிதி ஸ்டாலின் போல ஒரு பிக் ஜெயண்ட் கிடைத்திருப்பதால், ஒரு அஞ்சாறு ஆஸ்கார்களும், ஏழெட்டு கேன்ஸ் பட விருதுகளும்,  நமக்குப் பெயர் விளங்காத, இன்னபிற வெளிநாட்டு விருதுகளும் வாங்கிவிட முடியும் என்ற மனத்திட்பம் இல்லாவிட்டால், இப்படி எடுத்தவுடன் நம்ம முகத்தில்’ a film by seenu ramasamy’ என்று  டார்ச்லைட்  அடிப்பாரா என்ற யோசனையுடனேதான் படம் பார்க்கத் துவங்கினேன்.
ஏற்கனவே பேட்டிகளில், விளம்பரங்களில் அவர்கள் நீட்டி முழங்கியிருந்தபடி கதை என்னவோ மீனவன் சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் அதைக் கையாண்டிருக்கும் விதமோ ‘எங்க ஆத்துக்காரரும் கடலுக்கு மீன் பிடிக்கப் போனாரு’ என்பதையும் விட இன்னும் சற்றே கேவலமானது.
டைட்டில் கார்டு போடும்போது ’25 ஆண்டுகளுக்கு முன்பு’ என்று துவங்கும் ஒரு காட்சி, சில விநாடிகளில் அற்ப ஆயுளில் முடிய, நந்திதா தாஸின் ஃப்ளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது.
கடைசி வரை என்ன காரணத்துக்காக அப்படிக் குடித்தான் என்று சொல்லப்படாத பெருங்குடிகாரன் நாயகன் விஷ்ணு. படத்தின் இடைவேளை வரை வரும், 31 காட்சிகளிலும் வெவ்வேறு லொகேஷன்களில், வெவ்வேறு கிளாஸ்களில் குடித்துக்கொண்டே இருக்கிறான்.
தமிழ்சினிமாவின் பலகால ட்ரீட்மெண்ட் பிரகாரம், நாயகி சுனைனாவிடம் காதல் வயப்பட்ட பிறகு, அவன் தன் குடியை நினைத்து, சரக்கு குடியை மறந்து மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல விரும்புகிறான்.
பேட் இல்லாமல் கிரிக்கெட் கிரவுண்டுக்குள் இறங்கிய பேட்ஸ்மேன் மாதிரி, கடலுக்கு செல்ல போட் இல்லாமல் தவிக்கிறான். தாஸ் என்கிற செமி வில்லன், ‘நீ என்ன இனமோ என்ன குலமோ தெரியலை?’ என போட் தரமறுக்க, சமுத்திரக்கனிபாய் விஷ்ணுவுக்கு மீன்பிடிக்க போட் தருகிறார்.
கடலுக்குள் மீன்பிடிக்கப்போன விஷ்ணுவை ‘துப்பாக்கி’ படக்குழுவைச் சேர்ந்த யாரோ சுட்டுக்கொன்று விட, அது வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று விஷ்ணுவின் உடலை வீட்டுக்குள் புதைத்துவைத்து 25 ஆண்டுகளாக கண்ணீர்ப்பறவையாக வாழ்ந்து வருகிறார் நந்திதா.
இவர்களுக்கு சிங்கள மீனவனே தேவலாமோ என்று தோணுகிற அளவுக்கு அவ்வளவு வீராவேசமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.
பிரபல இலக்கியவியாதி ஜெயஜெயமோகனுடன் சேர்ந்து உரையாடலைத் திரையாடல் ஆக்கியிருக்கிறார் மீனு ராமசாமி.
மீனவன் என்றாலே சதா குடித்துக்கொண்டே இருப்பவன் என்கிற தோற்றத்தை நாயகன் விஷ்ணு கனகச்சிதமாக செய்துமுடித்திருக்க, மீனவப்பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள் என்று பொருள்படும்படி, நாயகி சுனைனா கறுப்பு மை பூசப்பட்டு கண்றாவியாகக் காட்சியளிக்கிறார். [இனிமே செவத்த பொண்ணுங்களைக் கூப்பிட்டு கருப்பு பெயிண்ட் அடிக்கிறவங்கள கியூவுல நிறுத்தி ஆளுக்கு நாலு சவுக்கடி குடுத்தாலொழிய தமிழ்சினிமா உருப்பட வாய்ப்பே இல்லை.]
ரகுநந்தன் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்று சொல்லவிரும்பும்போது, அவரது பின்னணி இசை நம்மை பின்னோக்கி இழுக்கிறது. நமது ரெண்டு காதுகளுக்குள்ளும்,கயிறுகள் வழியாய்,  பியானோவைக் கட்டிக்கொண்டு உள்ளே இறங்கி வாசிப்பது போல் அப்படி ஒரு இம்சை.
பாலசுப்பிரமெணியெத்தின் ஒளிப்பதிவு,  உதயநிதி ஸ்டாலின் தனது கோட்-ஷூட் சகிதமாய் கட்டுமரத்தில் மீன்பிடிக்கக் கிளம்பினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
படத்தில் இடம்பெறும் ஏழு பாடல்களயும் எழுதி இருப்பவர் கவிப்’போரரசு’ வைரம். பாடல் எழுதுவதிலிருந்து இவருக்கு விரைவிலேயே இளைப்பாறுதல் தரும்படி கர்த்தரை வேண்டுவதைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே.
தமிழ்சினிமாவில் சமீபகாலமாக ‘மேதாவிபோல் நடிப்பவர்களின்’ [ஹிபோகிரட்ஸ்] முகத்திரை கிழிந்து வருகிறது. அவர்கள் அனைவரையும் திருவாளர் தங்கர் மச்சானுடன் சேர்த்து கியூவில் நிறுத்தும் வேலைகளை மக்கள் மவுனமாக செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
விரைவில், மிக நீளமாக ஆகப்போகும் அந்தக் கியூவில், இதோ மீனு ராமசாமியும் ‘நீர்ப்பறவை’ என்ற அரைவேக்காட்டுப் படத்தின் மூலம் தானே போய் நின்றுகொண்டார்.

Wednesday, November 28, 2012

’பரதேசி’- ரெண்டு கிட்னிகளால் வைரமுத்து எழுதிய நான்கு பாடல்கள்


முன் குறிப்பு; நண்பர்களே, இந்த ஆடியோ விமர்சனம், பொதுவான மனநிலை கொண்டவர்கள் படிக்க உகந்ததல்ல.  இசைஞானியின் ஒரு தீவிர ரசிகனாக பாரபட்ச மனநிலையில் எழுதப்பட்டது. எனவே ராஜா ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள், இதைப் படிப்பதை தவிர்த்து விடலாம்.

 தமிழ் சினிமா ரசிகன் சமீபகாலமாக அனுபவித்துவரும் கொடுமைகளில் தலையாயது, படங்களைப் பார்த்து அனுபவிப்பதை விடவும் கொடுமையானது, என்று நான் கருதுவது, பட ரிலீஸுக்கு முன்பு நடத்தப்படும் புரமோஷனல் விழாக்கள்.

அந்த விழாக்களில் படம் சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் ‘அவுத்து விடுவதை, ஒருவருக்கு ஒருவர் கொஞ்சமும் வெக்கமானமின்றி, பரஸ்பர ஜால்ரா தட்டிக்கொள்வதைப் பார்க்க நேருவது.

இதில் ஒவ்வொருவரின் அப்ரோச்சும், அவர்களது அறிவுக்கு ஏற்றவரை மாறுகிறதேயன்றி, உள்ளடக்கம் ஒன்றுதான்.

அப்படி நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்து நெளிந்த நிகழ்ச்சி, ‘நாங்க புதுசாக்கட்டிக்கிட்ட ’நரிக்குறவ’ ஜோடியான பாலா-வைரமுத்து கூட்டணியின் ‘பரதேசி’ ஆடியோ ரிலீஸ்.

’பட்டுக்குஞ்சங்களுக்கு இனி பப்ளிஷிட்டி எதற்கு?’ என்று எண்ணாமல் பாலாவும், வைரமுத்துவும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்ட ஜால்ரா இருக்கிறதே, நிகழ்ச்சி முடிந்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்டுகளை சந்தித்து காதுகளுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துவிட்டே வீட்டுக்குச்சென்றதாக தகவல்.

வைரமுத்து ‘பரதேசி’ பாடல்களுக்குத்தேவையான அனைத்துப் பாடல்களையும் அவரது ரத்தத்தால்தான் எழுதினாராம். அதை முதலில் நக்கலாக ‘ஏன் மையி தீர்ந்து போச்சா?’ என்று நினைத்த பாலா பாடல்களைப் படித்து முடித்தபோது, ‘அடடா உண்மையிலேயே ரத்ததாலதான் எழுதியிருக்காரு’ என்று புரிந்துகொண்டாராம்.

இதைக்கேட்டவுடன் வடிவேலுவின் தக்காளிச் சட்னி காமெடிதான் தவிர்க்கமுடியாமல் ஞாபகத்துக்கு வந்துபோகிறது. வைரமுத்துவின் பாடல்களை தக்காளிச்சட்னி என்று நினைத்த பாலா, அதை திடீரென்று ரத்தம்தான் என்று முடிவு செய்யும்போது, நாம் ‘அடடா, ரெண்டு இட்லிக்கு சப்புக்கொட்டி சாப்புடவேண்டிய தக்காளிச்சட்னியை, ரத்தம்னு நெனச்சி பாலா அநியாயத்துக்கு மிஸ் பண்றாரே?’ என்ற பரிதாப உணர்வுதான் அவரிடம் மேலோங்குகிறது.

ஆக, ‘பரதேசி’க்கு தனது ரத்தத்தால் பாட்டெழுதி விட்ட வைரம், ஒருவேளை மறுபடியும் பாட்டெழுத வாய்ப்புத்தந்தால், அடுத்து தனது இரண்டு கிட்னிகளால்தான் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையோடு ‘பரதேசி’ப் பயலின் பாடல்களைக்கேட்போம்.

பாடல் 1. அவத்தப்பையா,சிவத்தைப்பையா..’ -  பாடியவர்கள் யாசின், வந்தனா ஸ்ரீனிவாசன்.

’சிரட்டையில் பேஞ்ச சிறுமழை போல நெஞ்சுக்கூட்டுக்குள்ள நெறஞ்சிருக்க’

’கூத்துப்பாக்க போகலாம் கூடமாட வாரியா? நெல்லுச்சோறு தாறியா?’

’ஒன் சூழ்ச்சி பலிச்சிருச்சி. நெல்லுச்சோத்துப் பானைக்குள்ள, பூனை விழுந்துடிச்சி’ என்ற, காலம் இதுகாறும் எழுத மறந்த காவிய வரிகளை யாசினும், வந்தனா ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள்.

நம்ம வீட்டு கெழடிகள் காலத்திலிருந்தே கேட்டுச் சலித்த மெலடி. நெக்ஸ்ட்.

பாடல் 2. செங்காடே சிறுகரடே போய்வரவா?’

மதுபாலகிருஷணன், பிரகதி க்ருபிரசாத் குரலில், ஊரைவிட்டு அகதிகளாய் வெளியேறும் சனங்களின் அவலப் பாட்டு. ஏதோ வாயில் மெல்லுவதற்கு அவலைப் போட்டு பாடுவதுபோல் அத்தனை உணர்ச்சியற்ற உச்சரிப்பு. ‘ஏக் துஜே கே லி யே’வின் ‘தேரே மேரே பீச் ஹையில் துவங்கி, ஒரு பிட்சிலும் பிடிபடாமல், அந்த அகதிகளை விடவும் பரிதாபமாய் பயணிக்கிறது பாட்டு.

ரத்தத்தால் எழுதியவரும் தன் பங்குக்கு,’ புளியங்கொட்டையை அரச்சித்தின்னுதான் பொழச்சிக்கிடக்கிறோம் சாமி, பஞ்சம் பொழைக்கவும் பசியைத்தீர்க்கவும் பச்ச பூமியைக் காமி’ என்று எழுதி, நல்லவேளை அடுத்தவரியில் மாமியை அழைக்காமல் விட்டுவிட்டார்.

8.09 நிமிடங்கள் ஓடுவது, இந்தப்பாடலின், இன்னொரு சொல்லொண்ணாத்துயரம்.

நெக்ஸ்ட்;

பாடல் 3. ‘யாத்தே ஆழிக்கூத்தே,..’

வி.வி.பிரசன்னா, பிரகதி குருபிரசாத் குரலில் மெல்ல ஒரு கஜல் போல ஆரம்பித்து,பிற்பாதியில் ஒப்பாரியாக மாறி, காதைக் கவ்வ ஆரம்பிக்கும் இந்தப்பாடல்,’ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை அடிமை செய்வதுமில்லை.ஓர் மனிதன், ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்த வேலை’ என்ற இதுவரை மனிதகுலம், மிருக இனம் கேட்டிராத அபூர்வ வரிகளுடன் ஆராதனை செய்கிறது.

பாடல் 4. ’தன்னைத்தானே,..’
கானா’ பாலா பாடியிருக்கிறார். மனதைக்கொள்ளை கொள்ளும் குரலில் கர்த்தருக்கு, கானாவில் ஒரு குத்து குத்துகிறார் பாலா, அவர் கிளம்பி வந்து ’எனக்கு இது வேணா’ என்று சோலிவிட மாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்.

இப்பாடல் ரத்தத்தால் எழுதப்பட்டதல்ல. ஆடியோ கவரில் இப்பாடலை எழுதியவர் பெயர் இடம் பெறவில்லை. கர்த்தரை லேசாய் கலாய்த்திருப்பதைப் பார்த்தால் பாலா அண்ட் பாலாவே எழுதியிருப்பதற்கான அறிகுறி அதிகம் தெரிகிறது.

பாடல் 5. செந்நீர்தானா, செந்நீர்தானா,..?’ இப்பாடலை கங்கை அமரனும், ப்ரியா ஹேமேஷும் பாடியிருக்கிறார்கள். படத்தில் இளையராஜா இசை இல்லாத உறுத்தலை துரத்தும் முகமாக, அவரது குரலுக்கு எப்போதும், ஒரு அறுபதடி தள்ளி நிற்கும் கங்கை அமரனை அழைத்து ‘உண்டான சொந்தம் [ராஜா] உடைகின்ற போது, இல்லாத சொந்தம் [கங்.அமரர்] உறவாகுமே’ என்று கரையவிட்டிருக்கிறார்.

இந்தப்பாடலை கங்கை அமரனைப் பாடவிட்டதுமன்றி, பாடல்களில் பல இடங்களில் ‘ராஜாத்தனத்தை’ ஜி.வி.பிரகாஷ் மூலம் கொண்டுவர முயன்றிருப்பதை உணர முடிகிறது. அது ஒரு பிச்சைக் காரனுக்கு ராஜபாட்டை சூடமுயலும் முயற்சியைப் போலவே, தோல்வியில் முடிவதையும் அனுபவித்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது.

இறுதியாக பாலாவின் இந்தப் ’பரதேச’ இசைகுறித்து, அவரது புதிய கூட்டாளி வைரமுத்து, இந்தப்படத்துக்கு எழுதிய  ரத்தவரிகளிலேயே சொல்வதாக இருந்தால்,…

‘… இளையராஜா விட்டு, யுவன்ஷங்கர் ராஜா விட்டு, நாம்

எலியானோம் ஜீ.வி.ப்ரகாஷ் என்ற பூனைக்கு வாக்கப்பட்டு…

Wednesday, November 14, 2012

விமர்சனம் ‘போடா போடி’ பாத்துட்டு போய்ச்சேர வேண்டிய இடம் ஏர்வாடி
என்னது சிவாஜி செத்துட்டாரா மாதிரியே, என்னதுபோடா போடிகதை லீக் ஆயிடிச்சா? என்று சிம்பு சமீபத்தில் ஷாக்கானது எவ்வளவு பெரிய நடிப்பு, அதற்கு எத்தனை ஆஸ்கார் கொடுக்கலாம் என்பது படத்தை பார்க்கநேரும் பரிதாப ஜீவன்களுக்கு மட்டுமே புரியும்.

பின்ன என்னங்க,கதைன்னு ஒண்ணே படத்துல இல்லாதப்ப, அது எப்பிடிங்க லீக் ஆக முடியும்? அந்த விஷயம் தெரிஞ்சிக்கிட்டே ஷாக் எக்ஸ்பிரசன் குடுக்கிறதுக்கு சிம்புவுக்கு எவ்வளவு தில்லு வேணும்?

வெளிநாட்டுல வசிக்கிற சிம்புவும், வரலட்சுமியும் முதல் சந்திப்பிலேயே, ‘கத்திரிக்கா கிலோ என்ன விலைன்னு கேக்குற மாதிரியே, ‘ நீ என்னைக் காதலிக்கிறியா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்திலேயேபோடா போடின்னு பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே பிரிஞ்சிடுறாங்க. பழைய படி சேர்ந்துக்கிறாங்க. கட்டிக்கிறாங்க. பிள்ளை ஒண்ணு பெத்துக்கிறாங்க.

பாலே டான்சரான வரலட்சுமி, கல்யாணத்துக்கு அப்புறமும் கண்ட ஆம்பிளைங்க கட்டிப்புடிக்க டான்ஸ் ஆடுறது, சிம்புவுக்குப் புடிக்கலை. தான் டான்ஸ் ஆடுறது புடிக்கலைன்னு சொல்ற சிம்புவை வரலட்சுமிக்கு புடிக்கலை. அவிங்க ரெண்டு பேருமே ஆடுற அழுகுணி ஆட்டம் புடிக்கலைங்கிறதால என்ன ஆனாய்ங்கன்னு நான் எழுதி முடிக்கலை.

இது ஒரு கதையாம். இதை தங்களோட வாழ்க்கையில நடந்த ஏழு எபிசோடுகளா பிரிச்சி சிம்புவும் வரலட்சுமியும் சொல்ல ஆரம்பிக்கிறப்பவே, ஏழரை நாட்டுச்சனியன் நம்ம மேல ஏறி உட்கார்ந்துர ஆரம்பிச்சிடுது.

அச்சன் பெருந்தச்சன் டி. ஆர். பாணியிலேயே பாடலை இயற்றி, பாடி, ஆடி நம்மை ஏறத்தாழ ஒரு டெட்பாடி ஆக்குகிறார் இழைய சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். ‘ங்கொய்யால பேசாம ஏதாவது ஒரு ட்ரெயின்ல டி.டி.ஆரா வேலைக்குச் சேர்ந்திருந்தா தமிழனுக எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாய்ங்க’ என்று உள்மனசு கல்மனசாய் மாறுகிறது.

சரத்குமாரின் வாரிசு வரலட்சுமி கவர்ச்சிகரலட்சுமியாக கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸை ஒட்டியுள்ள குத்துப்பாடலில் இவரது கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்தால் நமீதாவின் நாலுநாள் தூக்கம் கெடுவது உறுதி.

ஒரு புதுமுகமாக, வரலட்சுமி ஆர்வக்கோளாறில் தானே டப்பிங் பேச ஆசைப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கம்பீரமான அவர் குரலைக் கேட்டபிறகாவது மனித வதைச்சட்டத்தின் கீழ் அதை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டாமா? அட என்னமோ போங்க, நம்ம தமிழ் சினிமாவுல மிருக வதைகளுக்கு எதிரா இருக்கிற அளவுக்கு மனித வதைகளுக்கு எதிரா சட்டங்கள் இருக்கிறதா எனக்குத்தெரியலை.

படத்துல இவங்க ரெண்டு பேரைத் தாண்டின ரொம்ப முக்கியமான விஷயம் எசை. அனிருத் மாதிரியே அரை கிலோ எலும்பும் முக்கால் கிலோ கறியோட அலையிற தரண் குமார்தான் மியூசிக் பண்ணியிருக்கார். சகிக்கலை. காதுக்கு கால் செண்டி மீட்டர் தூரத்துல ஒரு ஏழெட்டுக் கழுதைகளை கட்டிப்போட்டு கத்தவிட்டா எப்பிடி இருக்குமோ அப்படி ஒரு எஃபெக்ட்ல இருக்கு ஒவ்வொரு பாட்டும். இது போதாதுன்னுஅப்பன் மவனே, டண்டணக்கா, டமுக்கணக்கா,ங்கொக்காமக்காஎன்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய வரிகள் வேறு.

  ஒரு ரெண்டுமணிநேரம் இவர்கள் பஞ்சாயத்தைப் பார்த்து முடித்தவுடன், என்னையும் அறியாமல் ஏர்வாடியை நோக்கி பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். உங்க சவுகரியம் எப்படி?