Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, April 21, 2013

விமர்சனம் ‘திருமதி தமிழ்’ – ’செத்துப்பொழைக்க வாரீகளா?’





கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத, பழமொழி ஒன்று உண்டென்றால், அது, ‘கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப் பயலுக நாட்டமை’தான்.
இதை முதன் முதலில் உருவாக்கியவர், அது தன்னால்தான் உருவாக்கப்பட்டது என்பதற்கான, உரிய ஆதாரத்தோடு வந்தால், நம்ம  செல்லம் நயன்தாராவிடமிருந்து உங்கள் இரு கன்னத்துக்கும் தலா ஒரு கிஸ் வாங்கித்தருவேன் என்று அம்பது ரூபா பாண்ட் பேப்பரில் எழுதி கையெழுத்திடுகிறேன்.
அதுசரி,ராசகொமாரர் ராசா வேஷம் கட்டியதை ஒட்டி ஞாபகத்துக்கு வந்த அந்தப்பழமொழி ஒருபக்கம் இருக்கட்டும். திருமதி ராஜகுமாரன், திருவாளர் தேவயானி அவர்கள் கலந்து கட்டி, நம் கண்ணைக் கட்டிய ‘திருமதி தமிழ்’ படப் பஞ்சாயத்துக்கு வருவோம்.
நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் இந்தப் படத்தைப் போட்டார்கள். எமன் எருமையைக் கிளப்ப தாமதமானதை ஒட்டி, படம் திரையிடலும் கொஞ்சம் தாமதமாகிக்கொண்டிருக்க, லைட் பிங்க் கலர் ஃபுல் ஹாண்ட் சர்ட்டும், கருப்பு பேண்டுமாய் ஒரு பெண் பிரஸ் ஷோவுக்குள் நுழைய ‘ஹை ஏதோ ஒரு சூப்பர் ஃபிகர், புதுசா ஒரு பத்திரிகையிலருந்து வந்திருக்கு பாஸ்’ என்று கொஞ்சம் சவுண்டாகவே கமெண்ட் அடித்து விட்டேன். அந்த ஃபிகர் முன் வரிசையிலிருந்த ஒரு சிலரை நலம் விசாரித்து விட்டு, எங்கள் வரிசையை நெருங்கிய போது, ‘அட தேவயானி’.
’எப்படா மாட்டுவான்’ என்று தவம் கிடக்கும் ஒரு சில நண்பர்கள் என்னை,..’ங்கொய்யால பாட்டிக்கும், பார்ட்டிக்கும் கூட வித்தியாசம் தெரியாத கபோதியா நீ?’ என்று  கேவலமாக திரும்பிப் பார்க்க,  ஒரு சில நொடிகளுக்கு, சீட்டுக்கு அடியில் குனிந்து, கீழே விழாத ஒன்றைத் தேடவேண்டியாதாயிற்று. [ஆனா, வாலிப வயசைத் தாண்டிட்டாலும், தேவயானின்னா உயிரை விடுறதுக்கு இன்னைக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யிது பாஸ்’ என்று மைண்ட் வாய்ஸில் தோன்றியதை, அதே மைண்டுக்குள் மண் தோண்டிப் புதைத்தேன்].
சரியாக மூன்று மணிக்குத் துவங்கவேண்டிய படம் 3.55 க்கு துவங்கியதால்’ சென்சார் சர்டிபிகேட் காட்டப்படுவதற்கு முன்பே, சில குறட்டைச் சத்தங்களை கேட்க நேர்ந்தது . வெயிலின் அருமை பிரசாத் லேப் ஏ.சி.யில் தெரியும்.
படத்தின் நீளம் 148 நிமிடங்கள்.
நம்மில் அநேகர் பொழைப்பதற்காக சென்னை வந்திருக்கும் ஜீவராசிகள். ஆனால் ராஜகும்மாளனோ, கதைப்படி, சாவதற்கென்றே சென்னை வந்திருக்கிறார். அப்படி வந்தவர்,காஸ்ட்யூம்களின் நிறத்துக்கு ஏற்றபடி, ஈஸ்ட்மென் கலர்களில் தன் உதட்டில் லிப்ஸ்டிக் பூச ஆரம்பித்ததில் துவங்கி,  என்னென்ன விதங்களில் எத்தனை பேரைச் சாகடிக்க முடியுமோ அப்பெடியெல்லாம் சாகடிப்பதுதான் ‘திருமதி தமிழ்’ன் இரு வரிக் கழுதை ஸாரி இருவரிக் கதை.
ஒரே ப்ரேமில் ஏழெட்டு ரவுசுகுமாரன்கள் தோன்றி, ஆர்கெஸ்ட்ராவில் உள்ள அனைத்து இன்ஸ்ட்ருமெண்ட்களையும் வாசித்து, காதலை யாசிப்பது, ஒரிஜினல் மனைவி தேவயானி, சினிமா காதலி கீர்த்தி பாவ்லா இருவருடனும் கொஞ்சிக்குலாவும் டூயட்கள், திகுடுமுகுடான வில்லன்களை வெறும் கையால் அடித்து விளாசுவது, ரேப்பு சீன்களை விட கேவலமாக, ரோப்பு கட்டி இவர் அந்தரத்தில் அட்டகாசம் செய்வது என்று இந்தியன் பீனல் கோட்-ல் எத்தனை செக்‌ஷன்கள் இருக்கின்றனவோ அத்தனையிலும் வழக்குப் போடும் அளவுக்கு அட்ராசிட்டிகள் புரிகிறார் ராஜகொமாரன்.
கர்ப்பிணிப் பெண்கள், திருமணமாகாத இளம்பெண்கள், கல்லூரி மாணவ,மாணவிகள்,பெரியவர்கள், குழந்தைகள், நகரத்தவர், கிராமத்தவர், நோயுற்றிருப்போர், உடல்நலமுடன் இருப்போர்,… அதாவது சுருக்கமாக சொல்வதென்றால் மனித ஜீவராசிகள் யாரும் பார்க்கக்கூடாத காலியம் இது.
படத்தின் ஒரே ஆறுதலான அம்சம் தனது மனைவி தேவயானியை மனதில் வைத்து ’இந்தியாவில் எத்தனையோ பொண்ணுங்க, விருப்பமில்லாத புருஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, தற்கொலை மாதிரி வாழ்க்கையை வாழ்றாங்க’ என்கிற கருத்தை, படம் நெடுக,  அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது.
மற்றபடி, இதற்கு மேலும், இதைப்பற்றி விலாவாரியாக விமர்சித்துக்கொண்டிருப்பது, வனக்கொரங்கை பிடித்து வந்து, அதன் வறண்ட தலையில் பேன் பார்ப்பதற்கு இணையானது.
ஆதலினால் மற்ற மனித இனங்கள் ஒதுங்கிக்கொள்ள, ’வாழ்ந்து இனி என்ன ஆகப்போகிறது,.. செத்துத் தொலைக்கலாம்’ என்று தற்கொலை முடிவில் தீவிரமாக இருப்பவர்கள், இதைப் படித்த ஓரிரு மணிநேரத்திற்குள் தியேட்டர்களுக்கு வேகவேகமாக ஏகும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு பிறாண்டல் குறிப்பு:
ஏற்கனவே தந்த டுபாக்கூர் படங்களையும் தாண்டி, ராஜகொமாரன், அவரே கீரோவாக நடித்து மேலும் ஒரு படம் இயக்கமுடிந்ததென்றால், அதற்கு முன்னூறு சதவிகிதம் காரணம், அவரது நடிகை மனைவி தேவயானி என்பதை எல்.கே.ஜி. குட்டீஸ்களும் அறியும். இதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும், தியேட்டரில் முதல் நாள் காட்சிகளில் ஆபரேட்டர் தவிர்த்து யாரையும் காணமுடியாமையும், ராஜகுமாரனை என்னவாக ஆக்கிவிட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சின்ன சம்பவம் கேளுங்கள்.
பிரசாத் லேப்பில் படம் முடிந்ததும், ஒரு சில பத்திரிகையாளர்கள் தேவயானியை கையைப்பிடித்து வாழ்த்திக்கொண்டிருக்க, ராஜகொமாரனை நெருங்கிய, ஒரு மூத்த பத்திரிகையாளர், ‘லெங்க்த் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. கொஞ்சம் குறைச்சா நல்லாருக்கும்’ என்றார்.
உடனே ராஜகொமாருக்கு பொத்துக்கொண்டு வந்தது, ‘படத்தின் நீளத்தைக் குறைக்கச்சொல்றதுக்கு நீ யாருய்யா’ என்றபடி அவரை நோக்கிக் குரைக்க ஆரம்பித்த ராஜகொமாரன், ஆணவத்தின் உச்சியில் உதிர்த்த வார்த்தைகள் இவை, ‘ என் படத்தை விமர்சிக்கிற தகுதி எவனுக்கும் கிடையாது. அப்படி விமர்சிக்கனும்னு நினைக்கிறவன், நான் விக்ரமன்கிட்ட அசிஸ்டெண்டா வேலை பாத்த மாதிரி, பத்து படத்துல அசிஸ்டெண்டா வேலை பாத்திருக்கனும். அடுத்து பத்து படம் டைரக்ட் பண்ணியிருக்கனும். மத்த எவனுக்கும் என் படத்தை விமர்சனம் பண்ற அருகதை கிடையாது. [ இந்த மாதிரி பத்துப் படம் டைரக்ட் பண்றதுக்குப் பதிலா, அம்மா ஷூட்டிங் போன உடனே வீட்ல இருக்க பத்து பாத்திரங்களை எடுத்து, பத்துப்பாத்திரம் கழுவி பொழைக்கலாம் பாஸ்.]
‘அட கூறுகெட்ட குக்கரே, பத்து படத்துல  அசிஸ்டெண்டா வேலை பாத்திருந்தா இந்த மாதிரி கன்றாவி கழிசடையெல்லாம் பாத்துத் தொலையனும்னு பத்திரிகையாளர்களுக்கு தலைவிதியா? மீறியும் அப்பிடித்தான்னா, அது கூட தெரியாம, என்ன ……த்துக்கு பிரஸ் ஷோல்லாம் போடுறீங்க பிரதர்?

Friday, April 19, 2013

’ராதாமோகனின் ’கவுரவம்’ போச்சி’





மை டியர் ராதாமோகன் ,
நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் உங்கள் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் தந்த மசால் வடையும், இடியாப்பமும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு ‘கவுரவம்’ பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
‘அழகிய தியே’ முதல் ‘பயணம்’ வரை தமிழ்சினிமாவுக்கு கவுரமான படங்கள் தந்து, தனித்த ஒரு முத்திரையுடன் திரைப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தவர் நீங்கள். அதிர்வுகள் அதிகமற்று மெல்லிய மனதுடன் உரையாடிய உங்கள் திரைமொழியால் கவர’ப்பட்ட சில லட்சம் ரசிகர்களுள் நானும் ஒருவன். ஆனால் பிரகாஷ்ராஜைப் போல் நெருங்கிய நண்பனோ, உங்களை சதா கக்கத்துள் முடிந்து வைத்துக்கொண்டு ‘வெளியே’ நடமாட விடாத நண்பனோ அல்ல.
‘மொழி’ உட்பட்ட உங்கள் படங்களை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் சினிமாவில் சம்பாதிக்க ஆரம்பிக்கும் முன்பே, மேல்தட்டு அல்லது நடுத்தர மேல்தட்டு வகுப்பினரைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறேன். யூகிக்கக்கூட தேவையில்லாத இன்னொரு சமாச்சாரம் நீங்கள் கண்டிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்தவரோ அல்லது அவர்களது வலியைச் சற்றேனும் அறிந்தவரும் அல்ல என்பது.
ஏனெனில் தலித் இன மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று பாவ்லா பண்ணப்பட்டுள்ள கவுரவத்தின் ஒரு ஃப்ரேமில் கூட அவர்களது வலி பதிவு செய்யப்படவில்லை. நீங்கள் தலித்தாய் இருந்திருக்கும் பட்சத்தில் சினிமா மொழியே கைவரப்பெறாதவராய் இருந்திருப்பினும், ஒரு கசப்பான அனுபவத்தின் பகிர்வே கூட மிகப்பெரிய கலைப்படைப்பாய் வந்திருக்கக்கூடும். 
இதை முன்வைத்து தலித்கள் பிரச்சினையை அவர்கள் அல்லாதவர்கள் கையாள முடியாது என்றோ, உண்மையான வலியோடு பதிவு செய்ய முடியாது என்றோ நான் சொல்ல வருவதாக, குறுகிய மனதோடு புரிந்துகொள்ளல் ஆகாது. அப்படிப்புரிந்துகொண்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை என்றே கூறுவேன்.
அடுத்த இன்னொரு பிரச்சினை, ’கவுரவம்’ படப்பிடிப்புக்கு முன்னர் நீங்கள் தற்செயலாகக் கூட எந்த கிராமத்துப் பக்கமும் கூட போயிருக்க வாய்ப்பில்லை என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் பேஸ்மெண்ட் இவ்வளவு வீக்காக இருக்கும்போது, கிராமம், தலித் இனப் பிரச்சினை என்று எப்படி ஒரே நேரத்தில் இரண்டு விஷப்பரிட்சைகளில் இறங்கத்தயாரானீர்கள் அல்லது இறக்கிவிட்டார்கள் என்பது எனக்குப்புரியவில்லை.
சரி, கதைக்கு வருவோம்.
வெண்மணி என்று நிஜ கிராம பெயரைச் சூட்ட திராணியற்று வெண்ணூர் என்று கதை நடக்கும் கிராமத்துக்கு நீங்கள் பெயர் சூட்டியதில் இருந்தே, தலித் சினிமா என்ற பெயரில் ஆட ஆரம்பிக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமாகிவிடுகிறது.
ஊர்ப்பெரியவரான பிரகாஷ்ராஜின் மகளை, அதே ஊரைச்சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஊரை விட்டு ஓடும் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில், தலித் இளைஞருடன் கூடப் படித்த நண்பர் [ஆந்திர நாயகன் அல்லுசுரேஷ்] அவரைத்தேடி வெண்ணூருக்கு வந்து நண்பனை தேட ஆரம்பிக்கிறார். இந்த தேடுதல், குழிதோண்டி புதைக்கப்பட்ட தங்கள் கவுரவத்தை மீண்டும் தோண்டி எடுத்து அவமானப் படுத்துவதாக பிரகாஷ்ராஜ் கோஷ்டி நினைத்து, நாயகனுக்கு தொந்தரவு கொடுக்க ஃபேஸ்புக் உதவியுடன், தலித் இளைஞருடன் படித்த அத்தனை நண்பர்களையும், அதே வெண்ணூர் கிராமத்துக்கு வரவழைத்து, காதல் ஜோடிகள் இருவரும் வறட்டு கவுரவத்துக்காக வெட்டிக்கொல்லப்பட்டு, புதைக்கப்பட்ட உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் இணையாடும் நண்பர்களில், சில குழுவினர், சமூக அவலங்களுக்கு எதிரான சிறிய மிரட்டலாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை நிதர்சனமாகப் பயன்படுத்தப்படாமல், ஒரே கலர் ஜீன்ஸ், டீ-சர்ட் அணிந்து கைகோர்த்துப் பாடி புரட்சி ஏற்படுவதுபோல், ஒரு மாயையை வணிக நோக்கில் மட்டுமே செய்திருக்கிறீர்கள் என்ற சந்தேகத்தை மட்டுமே உண்டாக்குகிறது.
மட்டனும், சிக்கனும் சாப்பிடும் பிராமின்கள் பயங்கர புரட்சிகரமான சிந்தனை கொண்டவர்கள் என்கிற மொக்கையான சிந்தனையை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்களோ தெரியவில்லை.[ விசனம் விஜி ]
நாயகன் அல்லு சிரிஷ் பணக்கார வீட்டுப் பிள்ளையாக இல்லாதிருந்தால், அவரை ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் கூட்டத்தில் முதல் வரிசையிலாவது நிறுத்தியிருப்பார்களா என்பதே சந்தேகமே? அப்படி ஒரு முக லட்சணம். முக லட்சணத்தை விட்டுவிடுவோம். முகபாவம் எதையும் வெளிப்படுத்த்த் தெரியாமல் படம் முடியும் வரை, பாவமாக வந்து விட்டுப்போகிறாரே, அது யார் செய்த பாவம்? உங்கள் தயாரிப்பாளர் எவ்வளவு வாங்கிக்கொண்டு அவரை ஹீரோ ஆக்கினார்? அதற்கு உடன்பட்டதற்கு உங்கள் பங்கு என்ன? [அதில் எனக்கு வரவேண்டிய ‘கட்டிங்’ ஏன் இன்று வரை வந்து சேரவில்லை]
நாயகி யாமி கவுதமுக்கு யாழினி என்று அழகிய பெயர் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்கள். புடலைங்காய்க்கு புடவை கட்டிவிட்டமாதிரி, அதை பொறியல் செய்து சாப்பிடலாம் போல புதிரான ஒரு அழகாய் இருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் வழக்கமான மிகைநடிப்பு. இன்னொரு பக்கம் நாசர் குட்டி வேடத்தில் வந்தாலும் பிரகாஷுக்குப் போட்டியாக நடிப்பில் நெஞ்சை நக்குகிறார். நூற்றுக்கணக்கான படங்களில் இதே போன்ற பாத்திரங்களில் நடித்த பிறகும், இந்த குணவிசித்திர நடிகர்கள் நம்மை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்க காரணம் என்ன என்று, ஒரு காமெடி கதையாக யோசித்து, நல்ல நடிகர்களாகப் போட்டு அடுத்த படம் இயக்குங்களேன். கண்டிப்பாக அது உங்களுக்கு நன்றாக வரும்.
ப்ரீத்தியின் ஒளிப்பதிவிலும், எஸ்.எஸ். தமனின் இசையிலும் வில்லேஜ் எஃபெக்ட் விழலுக்கு இரைத்த வெந்நீர்.
பாடல்களுக்கான சூழலும் அதைப் படமாக்கியிருக்கும் விதமும் கூட கவுரமாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இப்போதும் நீங்கள் எனக்குப் பிரியமான இயக்குனர்தான். ஒரு சமூகப் பிரச்சினையை கையில் எடுத்து, அதை வியாபாரம் மட்டுமே ஆக்க முயன்றதால் வந்த கோபமே இது.
இனி கிராமங்களை படங்களில் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டு, உங்களைச் சுற்றியுள்ள வாழ்வியலைப் படமாக்க முயலுங்கள். இது ஆலோசனை அல்ல சுயநலம்.
தமிழில் நல்ல இயக்குனர்கள் என்று நம்பப்பட்டவர்கள் எல்லாம் நாறிக்கொண்டு வரும் வேளையில் உங்களையும் இழக்க நாங்கள் தயாரில்லை.
‘கவுரவம்’ ஆச்சாரமான சாத்தான்கள் ஒன்றிணைந்து ஓதிய வேதம்.

Friday, March 15, 2013

விமர்சனம் ‘பரதேசி’-‘ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க பாலாமாரே’






37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்காவது தமிழ் சினிமாவை தனது தினவெடுத்த தோள்களில் சுமப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, நடுவில் ‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ என்று பட்ட காலிலேயே அடிபட்டு, சொந்தமாகவே நடக்க கஷ்டப்பட்ட பாலாவின் ஆறாவது படைப்பு ‘பரதேசி’.
ரிலீஸுக்கு முன்பு எப்போதுமே பாலாவின் படங்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை என்னும் நிலையில், இருதினங்களுக்கு முன்பு, படத்துக்கான ஓப்பனிங்கை உசுப்பேத்தி விடும் சதித்திட்டத்தில் அவர் வெளியிட்டு, எக்காளச் சிரிப்பு சிரித்த ’முரட்டு அடி ட்ரெயிலர், ’படம் பாக்க வரைலைன்னா உங்களையும் வூடு தேடி வந்து உதைப்பேண்டா’ என்று எச்சரிப்பது போலவே இருந்தது.
அந்த மிரட்டலுக்குப் பணிந்து இன்று, கொடைக்கானல் மலையிலிருந்து, குரங்காட்டம் இறங்கி வந்து, மதுரை  மினிப்ரியா தியேட்டரில் மதியம் 2.30 மணி காட்சிக்கே சரணடைந்தேன்.
‘அவன் இவன்’ படத்துக்கு ‘ஹல்லோதமிழ்சினிமாவில் எழுதியிருந்த விமர்சனத்தால் பாலா கடுங்கோபத்துக்கு ஆளாகி, என் உருவ பொம்மையை எரித்த கதையை எல்லாம் கேள்விப்பட்டிருந்ததால், இந்த ‘பரதேசி’ பிரமாதமான படமாக வந்திருக்கவேண்டும். அதற்கு சிறப்பாக விமர்சனம் எழுதி அவரிடம் சில பொற்காசுகளை பரிசாக வெல்லவேண்டும் என்று என் குல தெய்வம் உட்பட நான் வேண்டாத தெய்வமில்லை.
ஆனால் நம் விசயத்தில் தெய்வங்கள், சில சமயங்களில் ஆடுகள். பல சமயங்களில் ஓநாய்கள்.
‘ரெட் டீ’ என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ‘எரியும் பனிக்காடு’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலின் தழுவல்தான் இந்தப்பரதேசி என்னும் யூகச்செய்திகளை படத்தின் டைட்டில் கார்டுகள் எந்த விதத்திலும் தெளிவு படுத்தவில்லை. கதை, திரைக்கதை, இயக்கம் என்று பாலாவின் பெயரே வருகிறது. ஒருவேளை முன்ஜென்மத்தில் ராசா அதர்வாவாகப் பிறந்திருந்து குதிகால் நரம்பை அறுக்கக்கொடுத்தவராக இருந்து, அந்த நினைவுகளின் நீட்சியாக பாலாவே இந்தக் கதையை  எழுதியிருக்கக்கூடும் என்று ஒரு பிரமாதமான லாஜிக் கண்டுபிடித்து நாம் அது பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது சாலச்சிறந்தது.
சரி, பாலாவின் முன் ஜென்மக் கதைக்கு வருவோம்.
 கதை நடக்கும் வருடம் 1939. உச்சி வெய்யில் மண்டையைப்பொழக்கும் ஒரு மத்தியான வேளை. பாலூரோ,சூலூரோ என்ற ஒரு கிராமத்தில் வசிக்கிறார் ராசா என்கிற அதர்வா. பாலாவின் கதாநாயகனாச்சே. கொஞ்சம் மனப்பிசகு, கோணியில் தைக்கப்பட்ட கிழிஞ்ச சட்டை, லூஸ்த்தனம் என்று சேதுநந்தபிதாமகடவுளவனிவனாக வருகிறார். அவரது லூஸ்த்தனத்துக்கு கொஞ்சமும் குறைவைக்காத பொண்ணு வேதிகா அவரை சோறு சாப்பிடவிடாமல் பட்டினி போட்டுக் காதலிக்கிறார். ராசா அதர்வா ஒன்றிரண்டு காட்சிகளில் தண்டோரா போடுவது தவிர்த்து, அந்த ஊர் ஜனங்கள் அனைவரும் என்ன வேலை செய்கிறார்கள் என்று டைரக்டர் சொல்லவில்லை.
இந்நிலையில், அந்த ஊர் ஜனங்களை டீ எஸ்டேட் ஒன்றுக்கு தொழிலாளிகளாக ஏமாற்றி அழைத்துப்போகும் கங்காணி, வெள்ளைக்கார துரைகளின் மனம் நோகாமல் நடக்க இவர்களைப் படாத பாடு படுத்துகிறார்.  ட்ரெயிலரில் பார்த்து மிரண்ட முரட்டு விளக்குமாத்து அடிகள், விரும்பிய பொண்ணை துரைமார்கள் கற்பழிப்பது, எஸ்டேட்டை விட்டு தப்ப முயன்றால் குதிகால் நரம்பை வெட்டுவது போன்ற மயிர்க்கூச்செரியும் காட்சிகள் சீன் ஒன்றில் துவங்கி எண்ட் கார்டு வரை ஏராளம் உண்டு.
இதுவே வேறு ஒரு இயக்குனரின் படமாக இருந்தால், சிறப்பான அம்சங்கள் என்று சிலாகித்துக்கூறும்படி படத்தில் சில சமாச்சாரங்கள் உண்டுதான். ஆனால் ‘சேதுவில் துவங்கி ‘அவன் இவன்’ வரை பார்த்துச் சலித்த ஷேம்ஷேம் பாலா ஷேம் பார்முலா.
1939-ல் அதர்வாவும்,மற்றவர்களும் பேசிய இதே இழுவைத் தமிழைத்தான் அவர்கள் பேசினார்கள் என்பது உண்மை என்றால், தேயிலைத்தோட்டத்தில் அவர்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக சித்திரவதை செய்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். வேதிக்கா நீ ஒரு வேஸ்டுக்கா. தன்ஷிகா நீ ஒரு தண்டம்க்கா.
தமிழின் பத்து தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான நாஞ்சில் நாடன் வசனம் எழுதியிருக்கிறார். படம் முழுக்க இடம் பெற்ற தரமான கெட்ட வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் சரக்குக்கு வெறும் ஊறுகாயாக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது. கலெக்டரிடம் கூறி இவர் இனி கோவையை விட்டு வெளியே செல்லமுடியாதபடி, அதிலும் குறிப்பாக பாலாவாக்கம் செல்லமுடியாதபடி, ஏதாவது சிறப்பு சட்டம், சதித்திட்டம் தீட்டமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
பாடல்களே தேவைப்படாத ஒரு கதையில் ஒரு ஜீசஸ் குத்துப்பாட்டு உட்பட ஆறு பாடல்களை செருகியிருப்பதை ஒரு வகையில் பாலாவின் சாமர்த்தியம் என்றே சொல்லவேண்டும். ஓலைப்பாயில் எதுவோ என்னவோ செய்ததுபோல், ஓயாமல் வாசிக்கப்பட்ட பின்னணி இசை, சில இடங்களில் காட்சிகளை விட முன்னணியில் இருந்து காதுகளை சேதுகளாக்குகிறது.
செழியனின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆனால் உலகப்படங்கள் எல்லாம் பார்த்துக்கொழுத்துச் செழித்த செழியன் போன்ற ஒரு நல்ல ஒளிப்பதிவாளருக்கு அழகு, வேதிகா மாதிரி செவத்த பொண்ணுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து, இயக்குனர் அழைத்து வரும்போது,’ நாட்டாமை ஃபிகரை மாத்து’ என்று அதை நிராகரிக்கவேண்டும்.
காட்சிகள் அனைத்துமே ஒரே ஒப்பாரி ரகமாக இருப்பதால், ரெண்டு மணி நேரப்பட முடிவில் நமக்கு பெண்டு கழண்டுபோன ஃபீலிங்.
க்ளைமாக்ஸ் காட்சியில் அதர்வா ஒரு பாறைமேல் ஏறி நின்றுகொண்டு,’ ’நியாயமாரே எங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா?’ என்று கதறும்போது, ஏனோ கங்காணி ஸ்தானத்தில் பாலா நிற்பதாக சிந்தனை ஓடி, ரசிகர்கள் அவ்வளவு பேரும்  குதிகால் நரம்பு அறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய தொழிலாளர்களாக காட்சி அளிக்க,’ மறுபடியும் மறுபடியும் ஒரே மாதிரி படம் எடுத்துக்கொல்லாம, ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா பாலாமாரே’ என்று கதறி அழத்தோன்றுவது நிஜம்.
’பர்தேசி, பர்தேசி ஜானா நஹி’