நேற்றே ஆபிஸ் சுவரில், இந்த சோதனையும் வேதனையும் மிகுந்த 2012 ம் வருடத்தில், இன்னும் எத்தனை நாட்கள் மிச்சமிருக்கிறது என்று கணக்குப்பண்ணி, கரிக்கட்டையால், கழிகிற ஒவ்வொரு நாளையும் x. போட ஆரம்பித்துவிட்டேன்.
புத்தாண்டு தினத்தன்று ‘கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ்’ என்ற படம் பார்த்தபோது பிடித்த பீடை இன்னும் போகவில்லை சோடை.
மார்ச் முடியவில்லை, இதற்குள் சுமார் மூன்று டஜனுக்கும் மேல் உப்புமா படங்கள் பார்த்து முடித்தாகி விட்டது.
இப்படியே போனால், இந்த வருஷக்கடைசியில், அநேகமாக ‘காதல்’ க்ளைமேக்ஸ் பரத் மாதிரி, திண்டுக்கல் ஏரியாவில்,நைட் எஃபெக்டில் ’ ஞ்நனாணநமனெ’ என்று உளறிக்கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதே எனக்கு லேசாக தெரிய ஆரம்பித்துவிட்டது. அந்த சமயம், என் ப்ளாக் படிக்கிறவர்களில் ,சந்தியா மாதிரி யாராவது வந்து வீட்டுக்கு அழைத்துப்போய் கஞ்சி ஊத்துவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த சனியன்களை தொடர்ந்து பார்த்துத் தொலைக்கிறேன்.
நேற்று 4ஃப்ரேம்ஸ் தியேட்டரில்,’மீராவுடன் கிருஷ்ணா’ பார்த்தேன். இந்த கிருஷ்ணா என்பது டைரக்டரின் ஒரிஜினல் பெயரும் கூட. கதை, திரைக்கதை, வஜனம் எழுதி இயக்கி, ஹீரோவாக நடித்து பாட்டும் எழுதியிருக்கிறார். நான் யார் கிட்டயும் அசிஸ்டெண்டா வேலை பாத்ததில்ல பாஸ் என்று துவங்கி, படம் துவங்குமுன்பே எக்கச்சக்கமாக, பக்கம்பக்கமாகப் பேசுகிறார்.
தனக்கு தெரிந்த அண்ணன் ஒருவரின் பொண்டாட்டி அவரை ஏமாற்றிவிட்டு ஓடியதை சின்ன வயதில்,பார்க்க நேரும் அவர், இளைஞனானவுடன்,அவர் பொண்டாட்டி மட்டுமின்றி, நண்பர்களின் பொண்டாட்டி உட்பட எல்லாப்பெண்களையும் சந்தேகக்கண்கொண்டு பார்க்கும் கதை.
அதை எப்படியெல்லாம் எடுக்கக்கூடாதோ அப்படியெல்லாம் எடுத்து நம்மை செய்கிறார் வதை.
மனைவி கர்ப்பமானவுடன்,இந்தக்குழந்தைக்கு உண்மையான அப்பன் யாரு? என்று கேட்டு ஒரு கையில் காண்டம் பாக்கெட், இன்னொரு கையில் அவர் சந்தேகப்படும் நபரின் போன்கால் மனைவிக்கு, மூன்றாவதாக ஒரு குழந்தை படத்துக்கு மாறி மாறி ஜூம் போட்டு இடைவேளை விட்டார்.
இந்தப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டான விசயமே அண்ணன் கிருஷ்ணாவின் அடாவடியான நடிப்பு. அதை நடிப்பு என்று சொல்வதை விட வெறிகொண்ட ஒரு மனிதனின் கடிப்பு என்றே சொல்லிவிடலாம்.
பத்து டி.ராஜேந்தர், இருபது பவர்ஸ்டார், இணைந்து வந்தாலும் கிருஷ்ணாவின் நடிப்புக்கு முன்னால் நிற்க முடியாது.
அதிலும் கண்ணாடி, முன்னாடி நின்று சுமார் ஒரு நூறு தடவையாவது கிருஷ்ணா நடிப்புக்கதகளி ஆடுவது காணக்கண் கோடி வேண்டும்.
இந்தப்படத்திலேயே நான் மிகவும் அதிகம் ரசித்த காட்சி,க்ளைமேக்ஸில், மனைவி மீராவை கிருஷ்ணா ‘அபார்ஷன்’ பண்ணச்சொல்லி கட்டாயப்படுத்தும்போது,அவர் வலுவாக கிருஷ்ணாவை நோக்கி விட்ட மூன்று அறைகள்...
1. இனிமே படம் டைரக்ட் பண்ணுவியா?
2. இனிமே ஹீரோவா நடிச்சி சினிமாவை நாற அடிப்பியா?
3. கூட நடிக்க என்னைக் கூப்பிடுவியா?
என்று கேட்டு அறைந்த மாதிரியே இருந்தது.
ஒரு பயங்கரமான பின்குறிப்பு : படம் ரிலீஸாவதற்கு முந்தின தினம் ‘குமுதம்’ இதழில் டைரக்டர் கிருஷ்ணாவின் பேட்டி ஒன்று வந்திருக்கிறது.அதில் அதீத நம்பிக்கையுடன், அண்ணன் தன் மீரா யார் என்று பேசும்போது,அஜீத்தை வைத்து படம் இயக்காமல் தான் திருமணமே செய்துகொள்ளப்போவதில்லை’ என்று பேட்டி அளித்திருக்கிறார்.
‘குமுதம்’ காரர்கள் எவ்வளவு குசும்பர்கள் என்று இந்த கிருஷ்ணா போன்றவர்களுக்கு தெரியாது.
பேட்டி எடுத்த அதே நிருபர்,இன்னும் 25 வருடங்கள் கழித்து வரவிருக்கிற, 27- 4-2037 தேதியிட்ட இதழுக்கு நேற்றே ஒரு ஒரு பக்க மேட்டர் எழுதிக்கொடுத்துவிட்டாராம்.
அந்தச் செய்தி இப்படி தொடங்கியதாக தகவல்
....கிருஷ்ணாவுக்கு வயது இப்போது 60. இன்னும் திருமணமாகாத கன்னிப்பையன். இவர் 2012 மார்ச் மாதத்தில் ‘மீராவுடன் கிருஷ்ணா’ என்ற படத்தை இயக்கி நடித்து வெளியிட்டிருந்தார். அப்போது நமது ‘குமுதம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது போல், அஜீத்தின் கால்ஷீட்டுக்காக ....
அண்ணா நீர் சாதாரண அண்ணா இல்லை. அறிஞர் அண்ணா.
ReplyDeleteஏண்ணா உங்களுக்கு இந்த கொலவெறி?
ReplyDeleteyov pavam ya antha ahaluuuuuuuu.....block padicha thoonga mattaru
ReplyDeletepavam ya antha aalu...
ReplyDelete