Sunday, December 14, 2014

‘சார் மொட்டை போட்டாச்சி. காது குத்தியாச்சி.. கிடா எப்ப சார் வெட்டுவீங்க...?

தமிழகம் வந்திருக்கும் சிங்கப்பூர் நண்பர் ஒருவரிடமிருந்து நேற்று ஒரு அழைப்பு.

’‘சார் ஊர்ல, கோயில்ல ஒரு விஷேசம் வச்சிருக்கோம். வந்தா சந்தோசம்’’

‘’கெடா வெட்டு இருக்குங்களா?’’

‘ஆமா சார்.அது இல்லாம நாங்க  எந்த விஷேசமும் வைக்கிற வழக்கமில்ல’’

‘ஏங்க நான் ஏற்கனவே கிளம்பி பாதி தூரத்துல வந்துக்கிட்டிருக்கேன். அப்புறம் வந்தா சந்தோசம்  வரலைன்னா தோஷம்னுக்கிட்டு’’

நீண்ட நாட்களுக்கு அப்புறம் உற்சாகமான கிடாவெட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு நாளை, திருச்செந்தூர் நோக்கி பயணம்.  வந்ததும் துள்ளலான ஒன்றிரண்டு பதிவுகள்  உறுதி.

’நெனப்புதான் பொழப்பைக்கெடுக்குமாம்னு சும்மாவா சொல்லிவச்சாங்க’


சிங்கப்பூர், மலேசியப்பயணம் குறித்து சென்னை வந்து சேர்ந்தவுடன் பதிவிடமுடியவில்லை.  எழுத நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டது பற்றி   இப்போதும் கூட எழுதப்போவதில்லை.  

சிங்கையில் இருந்த 4 நாட்களும், மலேசியாவில் இருந்த 3 நாட்களும், ஒருநாள் இரவு கேசினோ போனது தவிர்த்து,  நண்பர்களை சந்தித்து உரையாடியதிலேயே  பெரும்பொழுது கழிந்தது.

முகநூல் மூலம் நாங்கள் விடுத்திருந்த சந்திப்புக்கு  வெகுசில நண்பர்களே வந்திருந்தனர். அது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.  ஆர்டர் செய்த சில உணவுப்பொருட்கள் வீணாகப்போக இருப்பதை ஜெய்லானியின் நண்பர்கள் இருவர் கவலையோடு பார்த்தனர்.
’என் படத்துல நீங்க ஹீரோ உங்க படத்துல நான் வில்லன் டீல் ஓகேவா?”  

‘உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்முத்துராமலிங்கம்’ என்றபடி என்னைத்தனியே அழைத்துப்போனார்கள் இருவரும்.

ஆச்சரியங்கள் என்றும் இழுபறியாக நடப்பன அல்ல. அவை சட்டென நிகழ்ந்து விடும்.

‘ஜெய்லானி புராஜக்டுக்கு இன்னும் எவ்வளவு தேவைப்படுதோ.அவ்வளையும் நாங்களே முதலீடு செய்றோம்’ என்றனர்.

எனக்கு அவர்கள் அதைச்சொன்ன விதத்தில், அவர்கள் மேல் நூறுசதவிகிதம் நம்பிக்கை இருந்தது. நான் அதை சற்றுநேரத்தில் ஜெய்லானியிடம் சொன்னபோது, கொஞ்சம் நம்பத்தயங்கி பின்னர் ரொம்பவே நெகிழ்ந்தார்.

இந்த நிகழ்வுகளின் பின்னணி நாயகன் ஜெய்லானியின் மனதுக்கு நெருக்கமான நண்பர் குழலி புருஷோத்தமன்.   பயணம் முழுக்க அத்தனை அக்கரையுடன் எங்களை அரவணைத்துக்கொண்டார்.

குழலி த கிரேட்  

அவருடன் முகநூல் மூலமாக சாட் செய்தது தவிர்த்து, ஒரே ஒருமுறை, அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே, சென்னையில் சந்தித்திருக்கிறேன்.

சரியான நடைமன்னன். நல்ல மீட்டிங் ஹால் புக் பண்ணுவதற்காக மனிதர் நடந்தார் பாருங்கள்...யப்பப்பா கூடவே அழுதுகொண்டே நடந்தேன்.

பலரையும் போல் எனது  ‘சிநேகாவின் காதலர்கள்’  படத்தை அவரும் பார்த்திருக்கவில்லை.  பார்த்திருந்தால் ஒருவேளை இவ்வளவு பாசம் காட்டியிருக்கமாட்டாரோ என்னவோ?

அடுத்த முக்கியமான சந்திப்பு எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களுடனானது.  முகநூல் நட்பு ஒருவர்தான், ‘ ஷாநவாஸ் அவர்களையும் சந்தித்து விட்டு வாருங்கள். எதாவது ஒரு சரியான சந்தர்ப்பத்தில்  உங்களுக்கு உதவுவார்’ என்று எனக்குச்சொல்லியிருந்தார்.
உணவுக்கலைஞர் ஷாநவாஸ்

என்னையும், ஜெய்லானியையும் அவ்வளவு நட்புடன் ஏந்திக்கொண்டார்.  தொழில்முறையாக ரெஸ்டாரெண்ட் நடத்திக்கொண்டிருந்தாலும், அவர் இதயத்துடிப்பு இலக்கியமாகவே இருக்கிறது.

இன்னொரு முக்கியத்தம்பி, எனக்கு ஃப்ளைட் டிக்கட் போட்டவரே அவர்தான். ‘உங்க அடுத்த படத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் சார். ஆனா அதைப்பத்தி எழுதாதீங்க’ என்று லிங்கா அணை கட்டியிருக்கிறார்.
அந்த அணையை விரைவில் உடைப்போம்.

இப்போதைய நிலவரப்படி, மூவிஃபண்டிங் தேதிகள் முடிவடைய இன்னும் பதினோரு நாட்களே உள்ள நிலையில், எனக்கு உதவ சம்மதித்திருக்கும் மேலும் ஐந்து பேரையும் அவர்கள் தொகையையும் அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு அறிவித்து விட்டு, மொத்த  பட்ஜெட் தொகையை எப்படியும் எட்டிவிடுவதற்கு இரண்டு வழிகளை யோசித்திருக்கிறேன்.

ஒன்று ஃபேஸ்புக், ட்விட்டர்,வாட்ஸ்-அப் போன்ற சமாச்சாரங்களின் வாசனையே தெரியாமல் நடமாடுகிற சில உறவினர் நண்பர்களை சந்திப்பது.

இரண்டாவது, எனக்கு தகவல் கூட சொல்லாமல் அமெரிக்காவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் போட்டாரே, எனது கல்லூரி சீனியர் ஆல்ஃபி, அவரைப்போல் நூறு பேரைப்பிடிப்பது.

சிரமம் ஏதுமின்றி, என் படத்துக்கு 10,000 ரூபாய் உதவி, என் இரண்டாவது படத்தை கரைசேர்க்கக்கூடிய நண்பர்கள் நூறுபேர்  எனக்கு கண்டிப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அனைவர் பெயரும் இணைத்தயாரிப்பாளர்கள் என்று டைட்டிலில் இடம்பெறும்.

நேற்று புதிதாக வாங்கிய, 2015-ம் ஆண்டு டைரியில், அவர்கள் பெயரைப்பட்டியலாக சேகரிக்க ஆரம்பித்தும் விட்டேன்....

நான் உங்களுக்குப் பண்ணுகிற அடுத்த போன் ‘அந்த பத்தாயிரம்’ குறித்தே இருக்கும்.

பதட்டப்பட்டு  இன்னைக்கே போனை ’ஸ்விட்ச் ஆஃப்’ பண்ணாதீங்க. கிடா வெட்டுக்குப் போயிட்டு வந்துதான் போன் பண்றதா உத்தேசம்.

‘சார் மொட்டை போட்டாச்சி. காது குத்தியாச்சி.. கிடா எப்ப சார் வெட்டுவீங்க...?
1 comment:

  1. இதுகுறித்து விரிவாக பேச விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்...

    என் மெயில் ஐ.டி. muthuramalingam30@gmail.com.

    mobile no; 98409 14026 .

    ReplyDelete