Saturday, December 20, 2014

’ஸோலோ வில்லன் கேரக்டர் இருந்தா சொல்லி அனுப்புங்க சார்’


சிங்கப்பூர் பயணத்துக்கு பத்து தினங்கள் முந்தி, வழக்கம்போல் முகநூல் சாட்டிங் மூலம் நண்பரானவர் தான் குமாரராஜா.

‘சார் நான் ‘ஓஹோ’வுக்கு ரெகுலர் வாசகர். நீங்க இப்ப சிங்கப்பூர் வர்ற பயணத்துக்கான விசா, டிக்கெட் செலவுகள் தொடங்கி, மூவி ஃபண்டிங்குக்கும் என்னால முடிஞ்ச உதவிகள் செய்றேன். ஆனா என் பெயர் வெளியில தெரிய வேண்டாம்.’

’எதாவது இன்கம் டாக்ஸ் பிரச்சினை வரும்னு பயப்படுறீங்களா?’

‘அய்யய்யோ அதெல்லாம் இல்ல சார். நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல சார்’

’அப்புறம் ?’

‘அது வந்து... நான் எதாவது சொல்லிட்டு பண்ணுனா அது பலிக்க மாட்டேங்குது சார்’

’பாத்தா ரொம்ப நல்ல மனுசனாட்டம் தெரியிறீங்க. உங்களுக்குள்ள இப்பிடி ஒரு மூடநம்பிக்கையா?’

பாதி சவுண்டும், மீதி மைண்ட்வாய்ஸுமாக குமாரராஜாவை மெல்ல பற்றிக்கொண்டேன்.


சிங்கப்பூரில் அவரை சந்தித்த கதை தனிக்கதை. அதை அப்புறம் பார்ப்போம்.

கடந்த பதிவில் ஒரு கெடா வெட்டுக்கு உற்சாகமாய்க் கிளம்பிப்போனேனே அது இவர் வீட்டு விஷேசம்தான்.

‘என் உறவினர்கள் சுமார் 50 பேர்வரை வருகிறார்கள். நண்பர் என்று பார்த்தால் நீங்கள் ஒருவர் மட்டும்தான். தங்குறதுக்கு பெரிய வசதியெல்லாம் இருக்காது. கோவில் பக்கத்துலயே ஒரு கொட்டாய் போடச்சொல்லியிருக்கேன். நீங்க வேணும்னா, நாம போற கார்ல படுத்து தூங்கிக்கலாம்’.

‘பாஸ் நாங்கள்லாம் ஹாஸ்டல்ல  சுவரேறி குதிச்சி, செகண்ட் ஷோ பாத்துட்டு, ‘தினத்தந்தி’ பேப்பர்ல மதுரை பஸ் ஸ்டாண்டுல பல நாட்கள்  தூங்கி பழக்கப்பட்டவங்கதான். அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. கெடாவெட்டி சோறுபோடுற வேலையை மட்டும் பாருங்க’.

யில் பயணம் என்றால் மனது றெக்கை கட்டிப்பறக்க ஆரம்பித்துவிடும் என்பதால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸின் 17 மணிநேரப்பயணம் கொஞ்சமும் அலுக்கவில்லை.

அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்திலிருந்து உற்றார் உறவினர் சூழ குமாரராஜா என்னை திருச்செந்தூரில் பிக்-அப் பண்ணும் வரை , நான் ஒரு பரவசமான பயணதுக்குப்போகிறேன் என்பது எனக்கு தெரியாது.

திருச்செந்தூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலிருக்கும் காயாமொழி கிராமத்துக்கு எங்கள் வாகனங்கள் பறந்தன.  அதுவரை குமாரராஜா வீட்டு விஷேசம்  மட்டுமே என்று நினைத்திருந்த எனக்கு, வருடா வருடம் நடக்கும் ஒரு பெரிய திருவிழாவுக்கு ஆஜராகியிருக்கிறோம் என்பது தெரியாது.

விழாவின் பெயர் கற்குவேல் அய்யனார்  கள்ளர்வெட்டுத்திருவிழா.

முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளைக் கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கமாம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தாராம்.

வருடா வருடம் கார்த்திகை மாதம் ஆறுநாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் ஐந்துநாட்கள் சைவ விஷேசங்களும் கடைசி நாள் கிடாவெட்டுமாக லட்சக்கணக்கில் ஜனங்கள் திரளுவார்களாம்.

நாங்கள் இறங்கியிருந்தது கிடாவெட்டுக்கு முந்தினநாள். ஜனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும். 
நம்ம குமாரராஜா போட்டிருந்த கொட்டாய் போல் பல நூறு தற்காலிக கொட்டாய்கள் அந்த திருவிழாவுக்காகவே ஆங்காங்கே முளைத்திருந்தன. 

கோயிலையும், அங்கிருந்த ஒன்றிரண்டு கட்டிடங்களையும் தவிர்த்துப் பார்த்தால் அது ஒரு பெரும் செம்மண் பொட்டல்காடு. பக்தர்கள் குளிக்க ஒன்றிரண்டு இடங்களில் தொட்டிகள் இருந்தன.
பெரும் மழை பெய்தால் ஒரு சில நூறுபேர் மட்டுமே ஒதுங்குவதற்கு வசதியுள்ள அங்கே லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தது பெரும் வியப்பானதாயிருந்தது.

திருச்செந்தூரில் வண்டி கிளம்பியதிலிருந்தே  ‘‘கள்ளர்வெட்டை’ மிஸ் பண்ணிடக்கூடாது சார்’ என்று குமாரராஜா கூறிக்கொண்டே இருந்ததால் எனக்கும் அதன் மேல் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியிருந்தது. [கூட்டத்தை ஸ்டில் எடுக்கத்தவறி விட்டேன். வீடியோ மட்டும் இருக்கிறது. யாராவது விரும்பிக்கேட்டால் இணைக்கிறேன்]

கோவிலுக்குப் பின்புறம் ஏறத்தாழ ரத்தச்சிவப்பில் மண்மேடு. நாங்கள் போவதற்கு முன்பே அந்த இடம் லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனங்களின் பாதம் பட்டு மேலும் சிவந்திருந்தது.


படத்தில் காணப்படும் கெட்டப்பில் இருந்த பெருசுகள்’கள்ளர் வெட்டு’ நடைபெற இருந்த இடத்திற்கு உள்ளே வரவர ஆரவாரங்களும், குலவைச்சத்தங்களும் விண்ணைக்கிழித்தன.

இந்த ஆண்டு கள்ளர்வெட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியவர் உள்ளே வந்து, தான் நின்ற இடத்திலிருந்து மூன்று சுற்று சுற்றி விட்டு ஒரு இளநீரை வெட்டிவிட்டு ஓட, மிகவும் சக்தி வாய்ந்தது என்று கருதப்படும் அந்த இளநீரின் ஒரு துணுக்கையாவது கைப்பற்றிவிட, கூட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பாய, அங்கிருந்த பெருசுகளும் போலீஸாரும் தலைதெறிக்க தப்பி ஓடியது கண்கொள்ளாக்காட்சி. இளநீரின் பாகங்கள் கிடக்காதவர்கள் அங்கிருக்கும் செம்மண்ணையே பிரசாதமாக பயபக்தியுடன் எடுத்து முடிந்துகொள்கிறார்கள்.

ஒருவழியாக கள்ளர்வெட்டு பரபரப்பிலிருந்து கடாவெட்டு மூடுக்கு மாறி கூடு திரும்பினோம்.மறுநாள். மிட்நைட் 5 மணிக்கே எழுப்பப்பட்டு,  பலநாள் தரிசிக்க மறந்த அதிகாலை தரிசனத்துடன், திறந்தவெளி நடைப்பயணம், திறந்தவெளி குளியல்களுடன் மூன்று கைதேர்ந்த சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ஆகச்சிறந்த மட்டன் சாப்பாடுடன் என் பொழுது இனிதே  கழிந்தது. [ விலா எழும்பு கடித்ததையெல்லாம் விலாவாரியாக எழுதி, யாருடைய வயித்தெரிச்சலையும் கிளப்பவேண்டாமே என்றுதான் இதை சுருக்கமாக முடிக்கிறேன்.

இங்கிருந்த இரண்டு தினங்களுமே செல்ஃபோன் டவர் சுத்தமாக வேலை செய்யாமலிருந்தது சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்த விசயம். 
 
 அன்று மாலையே, குமாரராஜா மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் நோக்கி கார் மற்றும் வேன்களில் விரைய, அதே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் பிடித்து
மீண்டும் சென்னை பயணித்தேன்.

பொதுவாக தயாரிப்பாளரை படம் முடியும் தறுவாயில்தான் மொட்டை போடுவார்கள். ஆனால் நாம், எப்போதும் போல் விஷேசமாக படம் துவங்குமுன்பே போட்டுவிட்டிருக்கிறோம்.

நண்பர் குமாரராஜா என் படத்துக்காக மூவிஃபண்டிங்குக்கு அளித்த தொகை விபரம் நமது இணையத்தில் இடம்பெற்றுள்ளது.

‘சரி என் படத்துக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. எதாவது ஒரு வில்லன் கேரக்டர்ல நடிக்கிறீங்களா ராஜா?’என்றேன் கிளம்புகையில்.
’படத்துல நாலைஞ்சி வில்லன்கள் இருக்காங்கங்குறீங்க. ஸோலோ வில்லன் கதை பண்றப்ப சொல்லி அனுப்புங்க சார்’ 4 comments:

 1. //படத்துல நாலைஞ்சி வில்லன்கள் இருக்காங்கங்குறீங்க//

  தாத்தா வேடம் எத்தினி ..?

  ReplyDelete
  Replies
  1. கூலிங் கிளாஸ்ல மிஷ்கின் மாதிரியே இருக்கீங்க சார். வில்லனுக்கே நீங்க ஓகேதான்....

   Delete
  2. உங்களுக்கே சரின்னா பிறகு என்ன?!

   மிஷ்கின் உங்களை (கண்ணாடி வழியே) முறைக்கப் போறார் பாருங்க ....!

   Delete