Sunday, December 16, 2012

விமர்சனம் ‘கும்கி’- நல்ல டைரக்டருங்களுக்கெல்லாம் சூன்யம் வச்சிட்டாய்ங்களோ?’ஒரு படம் துவங்கும்போது, பொதுவாக, கொஞ்சநேரம் கதை நடக்கும் லொகேஷனையும், கதை மாந்தர்களையும் அரசல்புரசலாக அறிமுகப்படுத்துவார்கள்.
ஆனால் ஒரு ரெண்டேகால் மணிநேரத்தில், ரெண்டுமணிநேரம் மேற்படி சமாச்சாரத்திற்கே முழுக்கவனம் செலுத்தி நம்மை அநியாயத்துக்கு சோதிக்கிறார் பிரபு சாலமன்.
தகுதிக்கு மீறி பணமும் புகழும் சேர்ந்துவிடுகிறபோது பெரும்பாலான மனிதர்களிடம் பக்தி பற்றிக்கொள்கிறது. ‘சாட்டைக்குப் பிறகு இதிலும் ‘தேங்க் யூ ஜீஸஸ்’ என்று போட்டபிறகுதான் கதையையே ஆரம்பிக்கிறார் சாலமன்.
ஒரு மலைகிராமம். மதம் பிடித்த கொம்பன் யானை ஒன்று அவர்களது வெள்ளாமையை நாசம் செய்துவிட்டு, ஜனங்களையும் கொன்றுபோட்டுவிட்டுக்கொண்டிருக்க, அதை அடக்கி விரட்ட ‘கும்கி’ யானை ஒன்றை அமர்த்த கிராமத்தார் முடிவு செய்கிறார்கள். கதையில் சுவாரசியம் வேண்டுமே? ‘உள்ளத்தில் பூனையடி’ ரேஞ்சில் இருக்கும் விக்ரம் பிரபுவின் யானை,மாணிக்கம் மலைகிராமத்துக்கு வருகிறது. மலைப்பூ,மலைவாசனைதிரவியங்கள், மலைத்தேன் மாதிரி விஷேசமான மலைஜாதிப்பெண்ணான லட்சுமி படுகா மேனனைப் பார்த்ததும் கொம்பன் யானையை விட சற்று அதிகமாகவே மதம் பிடித்து சுற்றிச்சுற்றி வருகிறார் ஜூனியர் பிரபு.
லட்சுமி-விக்ரம் பிரபு காதல் கைகூடியதா? கொம்பன் யானையை நம்ப சும்பன் யானை மாணிக்கம் விரட்டி அடித்ததா? மலைஜாதி மக்கள் அப்புறம் சுபிட்சமாக வாழ்ந்தார்களா?’- போன்ற கொடிய கேள்விகளுக்கு விடியவிடிய விடைதேடுவதுதான் ‘கும்கி’யின் கதை.
படத்தின் ஒரிஜினல் நாயகன் கண்டிப்பாக ஒளிப்பதிவாளர் சுகுமார்தான். யானைக்கு வைத்திருக்கும் பரிதாப ஷாட்கள் தவிர்த்து, படமெங்கும் தனது அபார உழைப்பால் வியாபிக்கிறார்.
ரொம்ப நாளைக்குப் பிறகு காதுகொடுத்துக்கேட்கும் தரத்தில் இமானின் பாடல்கள். பாடல்களிலும், பின்னணி இசையிலும் அப்பா பிரபுவுக்கு ராஜா போட்ட ராகங்களை உரிமையோடு உருவியிருக்கிறார்.
தாத்தாவைப்போலவே எல்லோருக்கும் முதல் படமே ‘பராசக்தி’யாக அமைந்துவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்பா பிரபுவே நல்ல நடிகர் என்று பேர் வாங்க சில டஜன் படங்கள் நடிக்கவேண்டி இருந்தது. படத்தின் முக்கால்வாசி இடங்களில் எதையோ பறிகொடுத்தமாதிரியே முழிக்கும் ஜூனியர் பிரபு மிகவிரைவிலேயே கரையேறி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக அங்கங்கே தென்படுகின்றன.
மேக்கப் மற்றும் கட்டுக்கோப்பான உடைகளைப் பார்த்து லட்சுமி மேனனை மலைஜாதிப்பெண்ணாக ஏற்க மனசு மறுக்கிறது.
சுகுமாருக்கு அடுத்தபடியாக, படத்தின் இன்னொரு ஆறுதல் பரிசு தம்பி ராமையா.சரக்கு எதுவும் இல்லாத வறட்சியான காட்சிகளிலும், இல்லாத முறுக்கு காட்டி, எதையாவது ஸ்கோர் பண்ணிக்கொண்டே இருக்கிறார். [அய்யா ராமையா இனிமே நீங்க உங்க பேரை அண்ணன்ராமையான்னு மாத்திக்கங்கன்னு வேண்டிக்கிறது உங்க சிவய்யாய்யா]
தமிழ்சினிமாவில் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்களெல்லாம் அடுத்து வீணாகப் போகவேண்டுமென்று எங்காவது பில்லி சூன்ய வேலையில் யாரும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று தீவிரமாக ஆராயவேண்டிய நேரம் இது. இல்லையென்றால் இத்தனூண்டு ‘மைனா’வில் புலிப்பாய்ச்சல் காட்டிய பிரபு சாலமன் ‘கும்கி’ யானையை பிடிக்கிறேன் பேர்வழி என்று ஒரு கொசுவைப் பிடித்துவிட்டுத் திரும்பியிருப்பாரா?’
ஒரு முக்கிய பின்குறிப்பு: டைட்டில் கார்டை மிக கவனமாகப் படித்தபோது’ இந்தப் படத்தில் இடம்பெற்ற உதவி, இணை, துணை இயக்குனர்களின் எண்ணிக்கை 18-ஐத்தொட்டது. இவங்கள்ளெல்லாம் ஆளுக்கு அரை சீன் சொல்லியிருந்தாலே படத்துல ஒன்பது சீனும் ஓரளவு கதையும் இருந்திருக்குமே என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். ஆனால் இத்தனை உதவி இயக்குனர்களை பிரபு சாலமன் வைத்துக்கொண்டது எதற்கு என்று தெரிந்தால் உங்கள் நெஞ்சு கொதிக்கும்.  நீங்கள் கேட்டால் சொல்கிறேன்.

11 comments:

 1. நான் கேக்குறேன், தயவு செஞ்சு சொல்லுங்க.

  ReplyDelete
 2. கேட்கிறோம் சொல்லுங்கள். :)

  ReplyDelete
 3. //‘மைனா’வில் புலிப்பாய்ச்சல் காட்டிய பிரபு சாலமன் ‘கும்கி’ யானையை பிடிக்கிறேன் பேர்வழி என்று ஒரு கொசுவைப் பிடித்துவிட்டுத் திரும்பியிருப்பாரா?’//

  கொசு பிடித்தல் நல்லது தானே டெங்குவை தடுக்கலாமே

  ReplyDelete
 4. // ஆனால் இத்தனை உதவி இயக்குனர்களை பிரபு சாலமன் வைத்துக்கொண்டது எதற்கு என்று தெரிந்தால் உங்கள் நெஞ்சு கொதிக்கும். நீங்கள் கேட்டால் சொல்கிறேன்//

  நான் கேட்கிறேன் சொல்லுங்கண்ணே! அவருக்கு கை அமுக்கவா இல்ல கால் அமுக்கவா?

  பிரபு சாலமன் என்றுமே நல்ல இயக்குனர் இல்லை, மைனா பெரிய இடத்தினர் வாங்கியதால் கொஞ்சம் பறந்தது, இல்லையென்றால் அதுவும் சிறகொடிந்துதான் போயிருக்கும். மைனா க்ளைமாக்ஸ் மொக்கையிலும் மொக்கை.

  ReplyDelete
 5. // இத்தனை உதவி இயக்குனர்களை பிரபு சாலமன் வைத்துக்கொண்டது எதற்கு என்று தெரிந்தால் உங்கள் நெஞ்சு கொதிக்கும். நீங்கள் கேட்டால் சொல்கிறேன்//

  நான் கேட்கிறேன் சொல்லுங்கண்ணே! கால் அமுக்கவா? கை அமுக்கவா?

  பிரபுசாலமன் என்றுமே நல்ல இயக்குனர் அல்ல. மைனாவை பெரிய இடத்தினர் வாங்கி பறக்க விட்டதால் ஏதோ கொஞ்சம் பறந்தது, இல்லாவிட்டால் அதுவும் ஒரு சிறகொடிந்த பறவைதான்.

  ReplyDelete
 6. ///இத்தனை உதவி இயக்குனர்களை பிரபு சாலமன் வைத்துக்கொண்டது எதற்கு என்று தெரிந்தால் உங்கள் நெஞ்சு கொதிக்கும்.///

  எதுக்குங்க?

  ReplyDelete
 7. //தகுதிக்கு மீறி பணமும் புகழும் சேர்ந்துவிடுகிறபோது பெரும்பாலான மனிதர்களிடம் பக்தி பற்றிக்கொள்கிறது.//

  !!!!!!!!!!!

  Oh! அதுதான் என்னை இன்னும் பக்தி பற்றிக் கொள்ளவில்லையா?!

  ReplyDelete
 8. முதல்ல பேங்க் அக்கவுண்டை செக் பண்ணுங்க பாஸ். உங்க அக்கவுண்ட்ல ஓவர்ஃப்ளோவ் அமவுண்ட் ஜாஸ்தியா இருக்கதா நியூஸ்,...

  ReplyDelete
 9. //இத்தனை உதவி இயக்குனர்களை பிரபு சாலமன் வைத்துக்கொண்டது எதற்கு என்று தெரிந்தால் உங்கள் நெஞ்சு கொதிக்கும். நீங்கள் கேட்டால் சொல்கிறேன்.// இத்தனை பேரு கேட்டாச்சு அண்ணே, சொல்லுங்க... அது என்ன அதிர்ச்சு தகவல்ன்னு....

  ReplyDelete