Wednesday, January 21, 2015

ப்ளீஸ் நோட் திஸ் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி

யாரை, என்னத்தை, எப்போ,எங்கே எப்படி, எதுக்கு எரிப்பார்கள் என்று தெரிந்துகொள்ளமுடியாத, வானத்துக்கு கீழே உள்ள அத்தனை கெட்ட கிரகங்களும் கூடியிருந்து கொட்டமடிக்கும் இடம் என்பதால் பெரும்பாலும் நான் புத்தக கண்காட்சிகள் பக்கம் போவதே இல்லை.

இன்னொரு காரணம் இல்லக்கியவாதிகள் கூடியிருக்கும் இடத்தில் நமக்கு கண்டிப்பாக வேலையில்லை. கல்லூரி நாட்களிலேயே தகுதிக்கு மீறி தாடிவளர்த்து, ஜோல்னா பையில் ஆத்மா நாம், ஆதவன், லா.ச.ரா, அசோகமித்திரன்,ஜி.நாகராஜன் மற்றும் ‘அன்னம் விடு தூதுகளுடன் டயர்டாகுற அளவுக்கு அலைஞ்சாச்சி.

இப்படி போவதில்லை என்று எழுத ஆரம்பிப்பதே போனதைப் பற்றி என்னத்தையோ எழுதத்தான் என்பது என்னத்தே கன்னையா உட்பட எல்லோருக்கும் தெரியும்.
இனியும் கொண்டுகொலையெடுக்காமல் மேட்டருக்கு வருகிறேன்...

கடந்த சனியன்று மாலை சுமார் ஏழு மணியளவில் புத்தகக்கண்காட்சிக்கு போயிருந்தேன்.

ஒரே நோக்கம் முகநூல் மூலம் பரிச்சயமான எழுத்தாளர் வா.மணிகண்டனை சந்திப்பது. அவரை முகநூலில் பார்க்கும்போதெல்லாம் ‘முந்தானை முடிச்சு’ பாக்கியராஜ் ஏன் என் நினைவுக்கு வருகிறார் என்று சொல்லத்தெரியவில்லை. ஒருவேளை இதற்கு தக்க பதில் மணிகண்டனிடம் இருக்கலாம்.

அவருடைய முகநூல் ஸ்டேட்டஸ்களையும், ‘நிசப்தம்’ ப்ளாக்கையும் ரெகுலராக வாசிப்பதுண்டு. அவரது அறக்கட்டளை குறித்தும் ஓரளவு அறிந்ததுண்டு.

நேரில் சந்தித்தது அதுதான் முதல்முறை. அவர் சொன்ன ஸ்டால் நம்பரை நோக்கி நடந்தபோது முதலில் என் பார்வையில் பட்டவர் இலக்கிய உலகின் வெடிகுண்டு முருகேஷன் என்று அழைக்கப்படும் வேடியப்பன். அவருக்குப் பக்கத்தில் வேஷ்டி சகிதமாக வெண் புன்னகையுடன் வரவேற்றார் மணிகண்டன்.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப்பின் அவரது சிறுகதைத்தொகுப்பான ‘லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்’ மற்றும் கட்டுரைத்தொகுப்பான ‘மசால்தோசை 38 ரூபாய்’ ஆகிய புத்தகங்களைத் தந்தார்.
காசு கொடுத்தபோது வாங்க மறுத்தார். ரொம்ப வற்புறுத்தி கொடுக்க நான் முனையவில்லை.காரணம் அன்று பர்ஸில் ஒரு குவார்ட்டர் மற்றும் சிகரட் பாக்கெட் வாங்கும் அளவுக்கே காசு இருந்தது. இன்னொரு காரணம் மணிகண்டன் சாஃப்ட்வேர் துறையில் சம்பாதித்துக்கொண்டே பார்ட் டைமாக எழுதுபவர். சாஃப்ட்வேர் எழுத்தாளர்கள் பற்றி ஹார்ட்வேர் அபிப்ராயம் கொண்டவன் நான்.[ ப்ளீஸ் நோட் இட் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி.]

அன்று இரவு சன் டி.வி விவாத மேடைக்கு ’வா’ என்று மணிகண்டனுக்கு திடீர் அழைப்பு வந்ததால் ‘இரவு வெளிய போகலாம்’ என்று அவர் சொல்லியிருந்த ’ரகசியத்திட்டம்’ தள்ளிப்போடப்பட்டு, ஸ்டாலை விட்டு விரைந்தே வெளியே வந்தேன்.

தோழர் ரேவதி தவிர அன்று இலக்கியவாதிகள் யார் கண்ணிலும் படாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணிய போது ‘ஆண்டவன் இருக்காண்டா கொமாரு’ என்று  சொல்லிக்கொண்டேன்.

மணிகண்டனை சந்திக்கச்சென்றதும், அவரது புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததும் ஒரு ‘காரணமாகத்தான்’.

மறுநாள் ஞாயிறன்று முழுமூச்சாக இரண்டு புத்தகங்களையும் வாசித்துமுடித்தவுடன் மணிகண்டனுக்கு நான் அனுப்பிய மெயில் இது...

அன்புள்ள மணிகண்டன்
நேற்று ‘மசால் தோசையும் இன்று ‘மாரியப்பனையும் வாசித்து முடித்தேன். மொத்த எழுத்துக்களையும் மனசுக்கு நெருக்கமாக உணரமுடிந்தது. இரண்டின் எல்லா எழுத்துக்களிலுமே நீங்கள் இருந்துகொண்டே இருப்பதால் உங்கள் ‘பயஃகிராபி’ படித்தது போல ஒரு உணர்வு. குறிப்பாக மசால்தோசை பதிவுகளை சிறுகதைகள் போலவே சொல்லியிருப்பது ஆச்சர்யமூட்டியது. எதையும் நீட்டி முழக்காமல் கொஞ்சமே கொஞ்சமாக எழுத வாய்த்திருப்பது வரம். சுஜாதா உங்களுக்குள் ஸ்ட்ராங்காக குடியிருக்கிறார்.

சமீப வருடங்களில் நான் வாசிக்கும் பழக்கத்தை ஏறத்தாழ துறந்திருந்தேன். ‘மானசரோவர்’ பாட்டிசைக்கும் பையன்கள்’ குட்டி இளவரசன்’ அந்நியன்’ ஜமீலா’ போன்ற சிலவற்றை அடிக்கடி படிப்பேன். மற்றபடி புது எழுத்துக்கள் அவ்வளவாக வாசிக்க முடியவில்லை அல்லது மனநிலை இடம் தரவில்லை என்றும் சொல்லலாம்.
உங்கள் இந்த புத்தகங்கள் ’காரணமாக’ வாசிக்க ஆரம்பித்தது. உங்கள் ப்ளாக் ரெகுலராக படித்திருந்தும் இவற்றை எப்படி மிஸ் பண்ணினேன். இப்படி எத்தனை சமீபத்திய நல்ல புத்தகங்களை படிக்காமல் விட்டிருக்கிறேன் என்றொரு மெல்லிய குற்ற உணர்வுக்கு ஆளானது உண்மை.
சரி, நம்ம கதைக்கு வருகிறேன். 

அது என்ன நம்ம கதை? புதுக்கதையால்ல இருக்கு?? என்கிற கேள்வி ஒன்று உங்களுக்கு இங்கே எழுந்தே ஆகவேண்டும்.

அதை நான் சொல்லமுடியாது. மணிகண்டன் சொல்லுவாரா என்று தெரியாது...

1 comment:

  1. இப்பத்தான் பாத்தேன்..

    ஹார்ட்வேர் இல்லாம சாஃப்ட்வேர் ஓடாது பாஸ் :-)

    ReplyDelete