Monday, February 6, 2012

கோலிவுட்டை ஆளப்போகும் கண்ணே.... கருநிற மண்ணே...

சற்று முன்னர் நடந்த கிரிக்கெட் மேட்சிலும் டோனி அண்ட் கோ தோற்றதும், ஒரிஜினல் கேப்டன் விஜயகாந்த், நாக்கைத்துருத்தி, விழிகளை சற்று வெளியே அனுப்பி, பின் பற்களை கடமுடாவென்று கடித்தாராம்.
விக்கெட்டும் எடுக்க முடியலை, ரன்னும் ஓடமுடியலை. இந்த டோனிப்பயலுக்கு கேப்டன் பதவி ஒரு கேடா? இனிமே கடலுக்கு ஒரு கப்பல், கண்ட்ரிக்கு ஒரு கேப்டன் ‘ என்று அறிக்கை தயாராகிக்கொண்டிருப்பதாக அரசல் புரசல் தகவல். அது கிடக்கட்டும். இன்னைக்கி நம்ம சப்ஜெக்டே வேற. ஆங்..
ஆரம்பத்தில் நம்ம கேப்டன் உண்மையில் ஹீரோ ஆக்க ஆசைப்பட்டது தனது மூத்த மகன் ஜெய பிரபாகரனைத்தான். பெயரைக்கேட்டவுடன் ,சரி ஏதோ பெரிய வீரனுக்குத்தான் கதை சொல்லப்போகிறோம் என்ற நம்பிக்கையில் கேப்டனின் வீடு தேடி வந்து கதை சொல்ல வந்தவர்கள், கேப்டனின் மூத்த வாரிசைப்பார்த்தவுடன்,’’ கேப்டன் . இப்பல்லாம்' animal welfare board' ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்க. அதனால யானைய வச்சி சப்ஜெக்ட் எதுவுமே ரெடி பண்ணலை. தப்பா நினைச்சுக்காதீங்க’ என்று தப்பி ஓடினார்களாம்.
அவங்க ஃபீல் பண்றதுல ஒண்ணும் தப்பில்லையே’ என்றபடி பிரபாகரனை உடம்பைக் குறைக்கும்பொருட்டு, கொஞ்ச நாள் வாக்கிங், ஜாக்கிங் போகச்சொன்னார் கேப்டன்.
தம்பி வாக்கிங் போய்த் திரும்புமுன், தெருவிலுள்ள அத்தனை கடைக்காரர்களும்,’’ ஐயா இதெல்லாம் தம்பி வாங்கி சாப்பிட்டதுங்க. வளர்ற வயசு நல்லா சாப்பிட வேண்டியதுதான். அதுக்காக வேற யாருக்குமே யாவாரம் பாக்க முடியாம இவரு ஒருத்தரே எல்லாத்தையும் சாப்பிட்டா எப்பிடிங்க ஐயா? என்று பெரும் பில்லோடு வந்து நின்றார்களாம்.

சரி இது உதவாக்கறை.  இவனுக்கு நடிப்பு சரிப்பட்டு வராது,.எது கிடைச்சாலும் முழுங்கி ஏப்பம் விடுறதால, அரசியல்ல இவன ஆழமா இறக்கி விட்டுற வேண்டியதுதான் ‘ என்று முடிவெடுத்த பின்னரே தன்  இளைய வாரிசு சண்முகபாண்டியனை நடிகனாக்கும் முடிவை எடுத்தார் கேப்டன்.

சண்முக பாண்டியன் தமிழ்சினிமாவை விஜயகாந்துக்கு பதிலாக ஆள வருகிறார் என்றவுடன் எத்தனை கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருக்கும் என்பதை என் மனக்கண்ணால் பார்க்கமுடிகிறது.

எனக்கு உடனே 1958-ல் வெளிவந்த’ பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்ற படத்தில் வரும் ’புருஷன் வீட்டில் வாழபோகும்  பொண்ணே  தங்கச்சி கண்ணே ’என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. சரி ,தம்பிக்கு நம்மளால முடிஞ்ச ஒரு பாட்டு கிறுக்கி வைப்போமேன்னு தோணிச்சி.

. ஒரு முன்குறிப்பு.

 தயவுசெய்து எனக்காக ஒரு முறை ஒரிஜினல் பாடலைக்கேட்டுவிட்டு, இதைப்பாடிப்பார்க்கவும்.

கோலிவுட்டை ஆளப்போகும் கண்ணே..கருநிற மண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு அண்ணே..

கேப்டன் வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும்...தம்பி
சரியா நடிக்கக்கூடாது எந்நாளும்..
கோலிவுட்டை ஆளபோகும் BUNனே..அரைப்படி மண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே

டைரக்டரையும், புரடியூசரையும் மிதிக்கனும் உன்
நடிப்பப்பாத்து ரசிகனுங்க கொதிக்கனும்...
ஃபைட்டு சீனில் காலை சுவத்தில் உதைக்கனும்
நாக்கை துருத்தி முழியை உருட்டிமிரட்டி
எதிரி கதைய முடிக்கனும்..
கோலிவுட்டை ஆள வந்த அண்ணே, மண்ணெண்ணை டின்னே
சில புத்திசதிகள் சொல்லுறன் கேளு தின்னே

நல்லகதைகள் சொல்லும் பயல்களிடம் போகாதே-அது
படம் பார்க்கும் ரசிகனுக்கு ஆகாதே-இந்த
நொண்ணேன் சொல்லும் ஐடியாவத்தள்ளாதே
நம்ம கேப்டன் பாட்டன் பேரை நீயும் போட்டுத்தள்ளாதே
கோடம்பாக்கம் குதிக்கபோகும் கன்னே..கேப்டன் சன்னே
சில புத்திமதிகள் சொல்லுறங்கேளு அண்ணே


புரடியூசர் சூட்கேசுல இருக்கனும் நம்ம கண்ணுதான்
நம்ம வச்சி படம் எடுத்தா அவர் கதையோ  அதோட மண்ணுதான்
படம் ஓடாட்டியும் போஸ்டர்கள்ல விண்ணுதான் ஆனா
பாவம் புரடியூசரோ சொந்த ஊருக்கு ரன்னுதான்
கோடம்பாக்கம் ஆள வந்த கண்ணே குவார்ட்டர் ஜின்னே
சில அட்வைஸுகள் சொல்லுறங்கேளு நின்னே

ஹீரோயின் கூட நீ இருந்து கிஸ்ஸுகிசுவுல மனம் மகிழ்ந்து
பார்ட்டிகளில் பங்கு எடுத்து எதிரிகளின் சங்கு உடைத்து
பதி  நெட்டுப்பட்டிகளின் பஞ்சாயத்து முடித்து
ஆ...... ஆ.......ஆ......
ஹிட்டுகள் தந்து அட்டுகள் தந்து
அட்டுகள் பாத்தவன் நட்டுகழண்டு
நட்டுகழண்டவன் கெட்டு உழன்று
பாயாவுல புரோட்டா தொட்டு
நூறு புரோட்டா திங்கப்போற தம்பி நீ
நமக்கு கேப்டன் துணையிருக்கார் நம்பு நீ
நம்ம புரோட்டாவ கேப்டன் தின்னுமுடிப்பார் நம்பு நீ...
கேப்டன் தின்னு முடிப்பார்  வெம்பு நீ..


பின் அரிப்பு:
இதைப்படிச்சிட்டு தம்பி சண்முகபாண்டியன் படத்துக்கு பாட்டெழுத
கூப்பிட்டுருவாங்களோன்னு பயமா இருக்கு.






Sunday, February 5, 2012

'மெரினா' -விமர்சனம்; குடிக்க முடியாத ரொம்ப பழைய டொரினா



இனிமேல் படம் பார்க்கப்போகும்போது, குறிப்பிட்ட இயக்குனரின் முந்தைய படங்களை ஒரு மதிப்பீடாகக்கொண்டுபோய் யாரும் ஏமாற வேண்டாம் என்று சமீபகாலமாய் சில இயக்குனர்கள் நம்மை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் அவற்றை மறந்துவிட்டு அடிக்கடி வாங்கிக் கட்டிக்கொள்கிறோம். 
'ராஜபாட்டை' தந்த சுசீந்திரனைத்தொடர்ந்து இப்போது அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்த்தியிருப்பவர் ‘பசங்க’ பாண்டிராஜ்.
'காதல்ங்கிறது ஒரு காக்கா பீ மாதிரி அது எப்ப எவன் தலையில விழும்னு சொல்லவே முடியாது'  என்று அதற்கு தன்னிலை விளக்கமாக படத்தில்  இப்படி  ஒரு வசனத்தையும் வைத்திருக்கிறார்.
தலையை மெதுவாகக்கழுவிக்கொள்ளலாம். முதல்ல கதையைப்பாப்போம்.

மெரினா பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், ஒரு குதிரை ஓட்டி, பீச்சை வாடகைக்கு விட்டிருப்பவர், சில காதல் ஜோடிகள், மருமகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு வந்து பிச்சை எடுப்பவர் என்று ஒரு மெகா சீரியலுக்கு தீனி போடும் அள்வுக்கு கேரக்டர்கள். இந்த சுண்டல் விற்கும் சிறுவர்களில் ஊரை விட்டு ஓடிவந்த ஒருவனை இரு போலீஸ்காரர்கள் தேடி மெரினாவில் அழைகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரியின் மகன் தலையில் கல்லை அடித்துவிட்டு ஓடி வந்துவிட்டானாம். அதை ஒரு கொலைக்கேஸ் மாதிரி காட்டிவிட்டு கடைசியில் காக்கா பீயை விட மோசமாக முடிக்கிறார் போங்கு ராஜ். 
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும், ஓவியாவும் மெரினா பீச்சில் சந்திக்கும் காதலர்கள். வந்த பத்தாவது நிமிடமே ஏதாவது ஒரு காரணத்துக்கு சண்டை போட்டுவிட்டு பிரிந்து விடுகிறார்கள். 
அதுக்கும் அடுத்த பக்கம் திடீரென்று மெரீனாவில் ரெய்டு வரும் ஒரு கும்பல் குழந்தைகளை ஒரு பள்ளியில் அடைத்து வைத்து சின்ன வயசில் படிக்கவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அந்த அடுத்த பக்கத்துக்கும் அடுத்த பக்கத்தில் பிச்சைக்கார தாத்தா, பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு, தான் புல்லாங்குழல் விற்று சம்பாதித்த காசில், பீச் சிறுவர்களிடையே ஒரு குதிரை ரேஸ் நடத்தி கோப்பை வழங்கி மறுநாள் மண்டையைப் போடுகிறார். அவர் அனாதைப் பொணமாகிவிடாமல் போலீஸின் காலில் விழுந்து சொந்தத்தாத்தா மாதிரி அடக்கம் செய்கிறார்கள்.அத்தோடு ‘எ ஃபிலிம் பை பாண்டிராஜ்’ என்று படம் முடிகிறது.

என்னங்க கதை சொல்றேன்னுட்டு எங்களை ‘அடக்கம்’ பண்ண ஐடியா பண்ற மாதிரி தெரியுதே என்று நீங்கள் முனுமுனுக்க ஆரம்பித்திருப்பது தெரிகிறது.ஆனால் மெரினா பக்கம் எட்டிப்பார்த்தால் தான் தெரியும்,கதை என்ற பெயரில் பாண்டே ராஜ் படுத்தியிருக்கும் அவஸ்தையை.

தியேட்டர்களுக்கு பொட்டி கிளம்பும்வரையிலுமே இந்தப்படத்தின் கதை என்ன என்பது பற்றி இயக்குனர் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகவே தெரியவில்லை.பீச்சில் சுண்டல் விற்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதா, சிவகார்திகேயன் -ஓவியாவின் காதல் பஞ்சாயத்தா,போலிஸ்காரனின் மகனை கல்லால் அடித்துவிட்டு ஓடிவந்தவனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதா,அல்லது முதியவர் ஒருவரின் முடிவுரைப்பக்கங்களா? இப்படி ஏகப்பட்ட கிளை, துணை கதைகள் இருக்கின்றன.

சிறுவர்களின் சேட்டைகள் சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும், அது ‘பசங்க’ என்றொரு படத்தைப்பார்த்து காப்பியடித்தது போலவே இருந்தது.என்னதான் நம்ம படம் தேசிய விருது வாங்கியிருந்தாலும், இதுக்குத்தான், எப்பப்பாத்தாலும் அதையே பாத்துக்கிட்டிருக்கக்கூடாது என்பது.

இசை அறிமுகம் கிரீஷ்.ஜி என்று போடுகிறார்கள். அவர் படம் முழுக்க பாட்டு, ரீரெகார்டிங் என்ற பெயரில் நம் தலையில் பல்வேறு வடிவங்களில் கல்லைத்தூக்கிப் போடுகிறார்.

ஒளிப்பதிவும் அறிமுகம்தான். பெயர் விஜய். சிறுவர்களின் இயல்பான நடிப்புக்கு அடுத்தபடியாக இவருடைய ஒளிப்பதிவு படத்தின் ஆறுதலான அம்சங்களுல் ஒன்று என்று சொல்லலாம்.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்புகளில் சிங்கம் போல காட்சியளித்த சிவகார்த்திகேயன், சினிமாவில் தாயை விட்டுப்பிரிந்த குட்டிக்குரங்கு போல தவிக்கிறார்.கைவசம் மேலும் நாலு படங்கள் இருப்பதால், சாவகாசமாக பழகி அவர் ஒருதேர்ந்த நடிகராகும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.ஓவ்யா உங்களுக்கு இன்னொரு களவாணி நோவ்யா.

படத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் நிறைய இடங்களிலிருந்து சுடப்பட்ட வசனங்கள். பசங்க சுண்டல் விற்கிறார்களா அல்லது கிண்டல் விற்கிறார்களா என்று குழம்பும் அளவுக்கு நையாண்டி  வசனங்கள் படம் முழுக்க பரவிக்கிடக்கின்றன.’இந்த மூஞ்சியெல்லாம் லவ் பண்ணுது பாருடா....புது அக்கா, புது சொக்கா ,போங்கடா ங்கொக்காமக்கா,என்று சிறுவர்கள் சுண்டல் வாங்காதவர்களைப்பார்த்து கொளுத்திப்போட்டபடி போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.

படத்தில் பிச்சையெடுக்கும் பெரியவரைக்காட்டும்போதெல்லாம் அவர் டைம்ஸ் ஆஃப் இண்டியா படித்துக்கொண்டிருப்பதைக் காட்டியதால் பெரியவருக்கு ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக் இருக்கிறது போலிருக்கு என்ற ஒரு பீதி இருந்துகொண்டே இருந்தது.நல்லவேளை என்ன ஒரு காரணத்தாலோ அப்படி ஒன்று இடம் பெறவில்லை.

அடுத்தபடியாக க்ளைமேக்ஸ் காட்சியில் கூட்டத்தின் இடது ஓரத்தில் ஒரு பணக்கார கணவான் கையில் பெரிய கட்டுடன் நின்று கொண்டிருந்தார். இயக்குனர் பாண்டேராஜ் படம் தயாரிக்க உதவியதில் அவருக்கு ஏற்பட்ட காயமாகத்தான் அது இருக்கக்கூடும்.

‘மெரினா’ குடிக்க முடியாத ரொம்ப பழைய டொரினா. 

Saturday, January 28, 2012

சூப்பர் ஸ்டாரை இப்படியா ஏமாத்துவீங்க எஸ்.ராமகிருஷ்ணன்?


ரஜினியை தன்னுடைய விழாக்களுக்கு அழைப்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் நிறைவான அன்பும் நேர்மையான உறவும் கொண்டவர்கள். இன்னொரு வகையினர் மனமெல்லாம் தந்திரம், நெஞ்செல்லாம் வஞ்சகம் கொண்டவர்கள்.இந்த இரு சாராரையும் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் அறிவார். அதனால் தான் தேர்தல் தினத்தன்று பொன்னர் சங்கர் படம் பார்க்க கலைஞர் ரஜினியை அழைத்த போது,  தேர்தல் நேரம் முடிந்த பின் சென்றார். சில சமயங்களில் ரஜினி அந்தப் ’பொறியை’ கவனிக்காமல் விட்டுவிடுவார். அந்த சமயங்களில்தான் பகடைக்காயாகவோ அல்லது பலியாடாகவோ ஆக்கப் படுவார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் அப்படி பகடைக்காயக்கப்படும் நிகழ்ச்சி வரும் 2.2.2012 அன்று நடைபெறுகிறது. இடம் காமராஜர் அரங்கம், விழா  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இயல் சர்வதேச விருது பெறும் விழா.
ரஜினியை வைத்து சதி வலையைப் பின்னியிருப்பவர்கள் எஸ். ராமகிருஷ்ணனும் , மனுஷ்யபுத்திரனும் 
ஒரு எழுத்தாளர் சர்வதேச விருது பெரும் விழா எப்படி ரஜினி பகடைக்காயாகப் பயன்படுத்தப் படும் விழாவாகும் என்று எல்லோருக்கும் தோன்றலாம்.
இதைப் புரிந்து கொள்ள சமீபத்தில் சாகித்திய அகடாமி விருது பெற்ற ‘காவல் கோட்டம்’ சு. வெங்கடேசன் மற்றும் எஸ். ராமகிருஷ்ணனின்  நீண்ட பகை வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.
மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் தான் வெங்கடேசனின் ஊர். அவர் தீவிரமான படிப்பாளி. இளம் வயதிலேயே இடது சாரி இயக்கத்தில் தன்னை முழு நேர ஊழியராக ஐக்கியப் படுத்திக் கொண்டவர். தமிழ் நாடு முழுவதும் இருந்து வருகிற இலக்கியவாதிகளை உபசரித்து மகிழ்வதில் முதன்மையானவர். ராமகிருஷ்ணனுக்கும் அவர் செய்த உபசரிப்பு கொஞ்சநஞ்சமல்ல. ராமகிருஷ்ணன் தன்னுடைய தொண்டரடிப் பொடிகளுள் முதன்மையானவர் என்று வெங்கடேசனை கருதி வந்த காலம் அது.
இந்த சமயத்தில்தான் வெங்கடேசன் ஒரு நாள்,  ‘மதுரை வரலாற்றை மையமாகக் கொண்டு நான் ஒரு நாவல் எழுத இருக்கிறேன்’ என்று தன்னுடைய விருப்பத்தை ராமகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறார். தன்னுடைய தொண்டரடிப்பொடியின் இந்த விருப்பத்தை ராமகிருஷ்ணனால் ரசிக்க முடியவில்லை. ( ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரன் மன நிலையை நினைவில் கொள்ளுங்கள் ) ‘வேறு வேலை இருந்தால் பாருங்கள் வெங்கடேஷன்’ என்று சொல்லி விட்டு வந்து விட்டார்.
ஆனால் வெங்கடேசன் வேறு வேலையைப் பார்க்க வில்லை. மதுரை குறித்த நீண்ட ஆய்வில் இறங்கினார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. பனிரெண்டு ஆண்டுகள்.
மதுரையைப் பற்றி எழுத வேண்டும் என்பது ராமகிருஷ்ணனின் கனவு. அதை இன்னொருவர் எடுத்துக் கொண்டால் எப்படி ராமகிருஷ்ணனால் சகித்துக் கொள்ள முடியும். அவர் ஏற்கனவே கண்ணகி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க அதை ஜெயமோகன் எழுதி விட்டார். மதுரையை வெங்கடேசன் எழுதி விட்டால். அதுவும் தனக்குத் தொண்டரடிப்பொடியாக இருந்த நபர் அப்படி முடிவு எடுத்து விட்டால் ..ராமகிருஷ்ணன் வெங்கடேசனுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.
‘அவனை வேறு வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள். நாவலென்ன கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டி போர்டு என்று  நினைத்தானா ஈசியாக தூக்கிச் செல்ல. ஒரு ஈ பீரங்கியை இழுக்க ஆசைப்படுகிறது ..என்றெல்லாம் பல வகைகளில் அலட்சியமாகப் பேசி வந்தார் ராமகிருஷ்ணன். ஆனாலும் வெங்கடேசன் மனம் தளராமல் தொடர்ந்து எழுதி வந்தார். பனிரெண்டு கால ஆய்வு மூன்றாண்டு கால தொடர் எழுத்து இதன் பலனாக ஆயிரம் பக்க நாவலாக ’காவல் கோட்டம்’ உருவானது.
வெங்கடேசன் பதிப்பகம் தேடி அலைந்த போது, எந்த பதிப்பகங்களை யெல்லாம் வெங்கடேசன் தொடர்பு கொள்கிறாரோ அந்த பதிப்பகங்களுக் கெல்லாம் ராமகிருஷ்ணன் தொடர்பு கொண்டு அது ஒரு நாவலே அல்ல, அதை வெளியிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பலத்த  நஷ்டம் தான் வரும் என்று எச்சரித்து வந்தார். ‘ வெங்கடேசனை அந்த ஆயிரம் பக்கங்களையும் கூவத்தில் கொண்டு வந்து போடச் சொல்லுங்கள். கூவத்தில் தான் அவ்வளவு காகிதங்களை கரைக்கிற அமிலம் நிறைந்திருக்கிறது என்றெல்லாம் நண்பர்களிடம் அலட்சியமாகப் பேசி வந்திருக்கிறார் எஸ்.ரா.
ஒரு வழியாக வெங்கடேசன் தமிழினி பதிப்பகம் மூலம் காவல் கோட்டம் நாவலை வெளிக்கொண்டு வந்தார். ராமகிருஷ்ணனுக்கு ஆத்திரம் தாள வில்லை. அந்த நாவலை ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ என்று தன்னுடைய வலைப் பக்கத்தில் எழுதினார்.சாலையோராம் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்பவனைப் பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்துக் கொள்வானே, அப்படியொரு தண்டனை போல் இருந்தது இந்த நாவலை வாசித்தது என்று எழுதினார். நாவல் ரோடு ரோலர் மாதிரி இருக்கிறது என்று பரிகசித்தார். நூற்றாண்டுகளாக ஒரே புத்தகத்தைப் படித்தால் ஒருவன் எவ்வளவு சலிப்பு அடைவானோ அவ்வளவு சலிப்பு அடைந்தேன் இந்த புத்தகத்தை வாசித்து  விட்டு என்று எழுதினார். நீங்கள் யாரையாவது தண்டிக்க விரும்பினால் இந்த நாவலை வாங்கி பரிசளியுங்கள் என்று எழுதினார். அந்த நாவலை முதலில் வெளியிட சம்மதித்து விட்டு வெளியீட்டு விழா தினத்தன்று காய்ச்சல் என்று பொய் சொல்லி வீட்டில் படுத்துக் கொண்டார்.
 ஒரு புத்தகத்திற்குப் பின்னால் ஒரு எழுத்தாளன், ஒரு பதிப்பகம், ஒரு மொழி, ஒரு வரலாறு இவைகளெல்லாம் இருக்கின்றன என்ற ஒரு சின்ன பிரக்ஞை கூட இல்லாமல் அந்தப் புத்தகத்தை யாரும் வாங்கி விடக்கூடாது என்ற வெறியோடு எழுதினார்.
ராஜபக்ஷே அவ்வளவு தமிழர்களை கொன்று குவித்த போது கூட  பொங்கி எழுதாத ராமகிருஷ்ணன், பாவம் ஒரு முதல் புத்தகம் எழுதிய இளம் எழுத்தாளனுக்கு எதிராக பொங்கிப் பொங்கி எழுதினார். எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணனின் பாசாங்கற்ற நிஜ கோர முகம் வெளிப்பட்டது அன்றைய தினத்தில் தான்.
அந்தப் புத்தகத்தை இனி ஒரு நபர் கூட வாங்கி வாசிக்க மாட்டார் என்ற சூழலே அன்று ஏற்பட்டது. ஆனால் தெய்வம் அனுப்பியது போல் ஜெயமோகன் களத்தில் குதித்தார். இது போன்ற அறச்சீற்றம் தான் ஜெயமோகனின் பலம்.
உண்மையில் வெங்கடேசன் - ராமகிருஷ்ணன் ‘பகைக் கதை’  ஒரு சினிமாக்கதை போல, ஒரு நீதிக்கதை போல, ஒரு சாமிக்கதை போலத்தான் தெரிகிறது. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியும் பொறுத்தவன் பூமி ஆள்வான் என்ற நீதியும் இணைந்து நிற்கிற கதை அது.
ஜெயமோகன், ‘காவல் கோட்டம், ஒரு நாவல் மட்டுமல்ல தமிழின் மிக முக்கியமான நாவல்’ என்று ஒரு தொடர் எழுதத் துவங்க காவல் கோட்டத்திற்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் உண்டானது. ஜெயமோகனை எதிர்த்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ராமகிருஷ்ணன் தற்காலிகமாகப் பின் வாங்கிக் கொண்டார். ஆனால் போகும் இடமெல்லாம் நாவலையும் வெங்கடேசனையும் புறம் பேசுவதையே தினசரி வழக்கமாக கொண்டார். இதையெல்லாம் ஒரு மௌனமான புன்னகையுடன் மட்டுமே எதிர்கொண்டார் வெங்கடேசன். 
இப்பொழுது ராமகிருஷ்ணன் தலையில் மேலும் ஒரு இடி விழுந்தது.இயக்குனர் வசந்த பாலன் காவல் கோட்டத்தை மையமாகக் கொண்டு ’அரவான்’ திரைப்படம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். அதுவரை சினிமா, தான் குத்தகைக்கு எடுத்த இடம், அங்கே வெங்கடேசன் வரவே முடியாது என்ற நினைத்திருந்த ராமகிருஷ்ணனின் அகந்தைக்கு மற்றுமொரு அடி விழுந்தது.                வசந்த பாலனின் சினிமா படப்பிடிப்பில் நடைபெறுகிற சின்ன சின்ன சறுக்கல்களையும் குழப்பங்களையும் பின்னடைவுகளையும் அது குறித்த தகவல்களையும் சேகரித்து அது குறித்து நண்பர்களிடம் பேசி சிரித்து மனம் தேற்றி வந்தார்.  
லயன் கிங் படத்தில் ஒரு கெட்ட சிங்கம் வரும். அதன் சிரிப்பு வினோதமாக இருக்கும். இது மாதிரி தருணங்களில் ராமகிருஷ்ணன் சிரித்ததும் அப்படித்தான் இருந்தது.
இப்பொழுதுதான் இடிக்கெல்லாம் தலையாய இடியாக ஒரு பேரிடி வந்து ராமகிருஷ்ணன் தலையில் விழுந்தது. சு.வெங்கடேசனுக்கு காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்திய அகடாமி விருது அறிவிக்கப் பட்டது.
உண்மையில் தெய்வம் இருக்கிறது என்ற மீண்டும் உலகில் மீண்டும் நிரூபனமான தினம் அது.
‘என் கலைக்கிந்த தமிழ் நாடு இணையாகுமா’ என்று ஹேமநாத பாகவதர் ஆணவத்துடன் பாடினால் ‘ கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?’ என்று சிவன் பாடி  ஆணவத்தை அடக்குவதுதானே வழக்கம்.
ஒரு எழுத்தை, கலைப் படைப்பை, ஆயிரம் பக்க அபத்தம் என்று எழுதிய எஸ். ராமகிருஷ்ணனை சிவனே வந்து தண்டித்த நிகழ்வு தான் வெங்கடேசனுக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்த நாள்.
  * * * * *
சாகித்திய அகடாமி அறிவிப்பு வந்த நாளிலிருந்து ராமகிருஷ்ணன் மிகுந்த மனப்பதட்டத்துடன் இருந்ததாக அவருடைய நண்பர்கள் சொன்னார்கள்.
பலரும் இருக்கிற சமயத்திலேயே தன்னையும் அறியாமல் ‘ விருதென்ன பெரிய மயிரா?’ என்று சத்தமாக அவர் பேசியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
சில நாள் தூக்கத்திலிருந்து மிகுந்த சத்தத்துடன் அலறி எழுந்திருத்திருக்கிறார். அது ஒரு குழப்பமான சத்தம்தான் என்றாலும் ‘டேய் வெங்கடேசா’ என்கிற மாதிரி அந்த சத்தம் இருந்ததாக  அவர் வீட்டிலிருந்து தகவல்கள் வந்தன. 
* * * * *
இந்த வருட புத்தகத் திருவிழா ராமகிருஷ்ணனுக்கு மிகவும் அவமானகரமான விழாவாக இருந்திருக்கிறது.
எங்கு பார்த்தாலும் வெங்கடேசனுக்கு கட் அவுட். வெங்கடேசனும் புத்தகத் திருவிழா நடந்த அனைத்து நாட்களும் அங்கே வந்து ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட்டார். இது வரை புத்தகத் திருவிழாவில் சிங்கம் போல பவனி வந்த ராமகிருஷ்ணன் இம்முறை வாலறுந்த நரி போல நேரே உயிர்மை ஸ்டாலுக்குச் செல்வது அப்படியே வெளியே வந்து விடுவது என்பதாகவே இருந்திருக்கிறார்.
புத்தகத்திருவிழாவில் யாரைப்பார்த்தாலும் ’காவல் கோட்டம்’ நாவல் வாங்கி கையில் வைத்தபடியே நடந்திருக்கிறார்கள். இதில் சிலர் ராமகிருஷ்ணனிடம் காவல் கோட்டம் புத்தகத்தை நீட்டி ஆட்டோகிராஃப் கேட்டிருக்கிறார்கள். பிரிண்ட அடித்த ஐயாயிரம்  புத்தகங்களும் விற்றுத் தீர்ந்ததில் தமிழினி வசந்தகுமார் மிகவும் பெருமிதத்துடன் நடமாடியிருக்கிறார். இது போட்டி புத்தக வியாபாரி மனுஷ்யபுத்திரனுக்கு மிகவும் அவமானமாக இருந்திருக்கிறது.
இருவரும் அடிபட்ட நரியாய் காயத்தை நக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போது தான் கனடாவில் இருந்து இயல் விருதுக்கு எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இந்த சிறு நெருப்புப் பொறியை வைத்துத்தான் நம் ஈகோவை நாம் தூக்கி நிறுத்திக் கொள்ள முடியும் என்று ராமகிருஷ்ணன் போட்ட கணக்குத் தான் சூப்பர் ஸ்டாரை வைத்து இதற்கு ஒரு விழா எடுப்பது என்கிற முடிவு.
 * * * *
கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு போவதற்கு முன்பாக இந்த இயல் விருது பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம் நண்பர்களே!
இந்த இயல் விருது என்பது தமிழில் வழங்கப் படுகிற விருதுகளிலேயே சப்பையான விருது.
இந்த விருதை இதுவரை யார்யார் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால்தான் இந்த விருது எவ்வளவு சப்பையான விருது என்று ஒருவருக்குப் புரியும்
கே. கணேஷ் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். இ.பத்மநாப ஐயர் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். ஏ. சி. தாசியேஸ் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். லஷ்மி ஹோம்ஸ்லோம் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். ஐராவதம் மகாதேவன் வாங்கியிருக்கிறார். இந்த வரிசையில் இப்பொழுது எஸ். ராமகிருஷ்ணனும் வாங்குகிறார்.
இந்த விருது வாங்கிய யாரும் இதைப் போல் ஒரு விழா எடுக்கவில்லை. வெளியில் கூட சொன்னதில்லை. ஏதோ கனவு கண்டால் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்று ஒரு பழமொழி இருக்கிறதே. அந்தளவிற்குத்தான் இந்த விருதை கடந்த காலங்களில் எல்லோரும் பாவித்து வந்தார்கள். .[இந்த விருதுக்குப் பதில் ஒரு எருது கிடைத்திருந்தால் கூட ஏரோட்டிப் பிழைத்திருக்க முடியும்.]
இது சாதாரண விருது என்றால் ரஜினியை விழாவுக்கு கூட்டி வர முடியாதே.
அந்தக் கணத்தில், கேடி பில்லா ராமகிருஷ்ணன் மனதிலும், கில்லாடி ரங்கா மனுஷ்யபுத்திரன் மனதிலும் உதித்த சதிதான் இதை சர்வதேச இலக்கிய விருது என்று சூப்பர் ஸ்டாரிடம் பொய் சொல்லலாம் என்பது. 


கனடாவில் கொடுக்கப்படுகிறது என்பதனால் அது சர்வதேச விருதாகி விடுமா என்ன? கனடாவின் பிரதமர் சர்வதேசப் பிரதமரா ? கனடாவில் விற்கப் படும் பேல்பூரி சர்வதேச பேல்பூரியா? அடப்பாவிகளா?
சின்னக் குழந்தையை சாக்லெட் கொடுத்து ஏமாற்றுவது போல தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரை,  அவர் தமிழ் இலக்கியம் அறியாதவர் என்ற இடைவெளியைப் பயன்படுத்தி இப்படியா ஏமாற்றுவீர்கள்?
சூப்பர் ஸ்டாரை பலரும் அவமதித்திருக்கிறார்கள் . ஆனால் அவர் தமிழ் அறியாதவர் , தமிழ் இலக்கிய சூழல் அறியாதவர் என்பதை உடன் பழகி அறிந்து, அந்த நுட்பமான இடைவெளியைப் பயன்படுத்தி, அந்த வெள்ளந்தியான தலைவனை, வெள்ளை மன தளபதியை வேறு யாரும் ராமகிருஷ்ணனைப் போல் இனி அவமானப் படுத்தி விட முடியாது. 
*******
சூப்பர் ஸ்டார் அவர்களே!
நீங்கள் அந்த விழாவில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அது ஒரு இலக்கிய விழா, சர்வதேச இலக்கிய விருது வழங்கும் விழா என்று நம்பிப் போக வேண்டாம்.
மதுரை மண்ணில், சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய வாழ்க்கையை, இளமையை மக்களுக்கான போராட்டங்களில் கரைத்து, கால் நூற்றாண்டு காலத்தை இலக்கிய வாசிப்பில் செலவழித்து, பனிரெண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, மூன்றாண்டுகள் செலவழித்து ஒரு நாவல் எழுதி, தன்னுடைய முதல் நாவலுக்கே சாகித்திய அகடாமி விருது வாங்கி, இந்தியாவில் இளம் வயதில் சாகித்திய அகடாமி விருது பெற்ற தமிழன் என்று சாதனை படைத்த ஒரு எளியவனுக்கு எதிராக தன்னுடைய ஆணவத்தைக் காட்ட எஸ். ராமகிருஷ்ணன் நடத்தும் அகம்பாவ விழா என்பதை அறிந்து செல்லுங்கள்!
ராமகிருஷ்ணரே!
வெங்கடேசனை ஒரு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னால் தீர்ந்து போகிற வியாதி தான் உங்களுக்கு வந்திருப்பது. அதை சூப்பர் ஸ்டாரை அழைத்து வந்து விழா நடத்தி பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள்!

பெப்சி விவகாரம்; ரஜினி முதல்வரை சந்தித்த ரகசியம்