Friday, March 15, 2013

விமர்சனம் ‘பரதேசி’-‘ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க பாலாமாரே’






37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்காவது தமிழ் சினிமாவை தனது தினவெடுத்த தோள்களில் சுமப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, நடுவில் ‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ என்று பட்ட காலிலேயே அடிபட்டு, சொந்தமாகவே நடக்க கஷ்டப்பட்ட பாலாவின் ஆறாவது படைப்பு ‘பரதேசி’.
ரிலீஸுக்கு முன்பு எப்போதுமே பாலாவின் படங்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை என்னும் நிலையில், இருதினங்களுக்கு முன்பு, படத்துக்கான ஓப்பனிங்கை உசுப்பேத்தி விடும் சதித்திட்டத்தில் அவர் வெளியிட்டு, எக்காளச் சிரிப்பு சிரித்த ’முரட்டு அடி ட்ரெயிலர், ’படம் பாக்க வரைலைன்னா உங்களையும் வூடு தேடி வந்து உதைப்பேண்டா’ என்று எச்சரிப்பது போலவே இருந்தது.
அந்த மிரட்டலுக்குப் பணிந்து இன்று, கொடைக்கானல் மலையிலிருந்து, குரங்காட்டம் இறங்கி வந்து, மதுரை  மினிப்ரியா தியேட்டரில் மதியம் 2.30 மணி காட்சிக்கே சரணடைந்தேன்.
‘அவன் இவன்’ படத்துக்கு ‘ஹல்லோதமிழ்சினிமாவில் எழுதியிருந்த விமர்சனத்தால் பாலா கடுங்கோபத்துக்கு ஆளாகி, என் உருவ பொம்மையை எரித்த கதையை எல்லாம் கேள்விப்பட்டிருந்ததால், இந்த ‘பரதேசி’ பிரமாதமான படமாக வந்திருக்கவேண்டும். அதற்கு சிறப்பாக விமர்சனம் எழுதி அவரிடம் சில பொற்காசுகளை பரிசாக வெல்லவேண்டும் என்று என் குல தெய்வம் உட்பட நான் வேண்டாத தெய்வமில்லை.
ஆனால் நம் விசயத்தில் தெய்வங்கள், சில சமயங்களில் ஆடுகள். பல சமயங்களில் ஓநாய்கள்.
‘ரெட் டீ’ என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ‘எரியும் பனிக்காடு’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலின் தழுவல்தான் இந்தப்பரதேசி என்னும் யூகச்செய்திகளை படத்தின் டைட்டில் கார்டுகள் எந்த விதத்திலும் தெளிவு படுத்தவில்லை. கதை, திரைக்கதை, இயக்கம் என்று பாலாவின் பெயரே வருகிறது. ஒருவேளை முன்ஜென்மத்தில் ராசா அதர்வாவாகப் பிறந்திருந்து குதிகால் நரம்பை அறுக்கக்கொடுத்தவராக இருந்து, அந்த நினைவுகளின் நீட்சியாக பாலாவே இந்தக் கதையை  எழுதியிருக்கக்கூடும் என்று ஒரு பிரமாதமான லாஜிக் கண்டுபிடித்து நாம் அது பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது சாலச்சிறந்தது.
சரி, பாலாவின் முன் ஜென்மக் கதைக்கு வருவோம்.
 கதை நடக்கும் வருடம் 1939. உச்சி வெய்யில் மண்டையைப்பொழக்கும் ஒரு மத்தியான வேளை. பாலூரோ,சூலூரோ என்ற ஒரு கிராமத்தில் வசிக்கிறார் ராசா என்கிற அதர்வா. பாலாவின் கதாநாயகனாச்சே. கொஞ்சம் மனப்பிசகு, கோணியில் தைக்கப்பட்ட கிழிஞ்ச சட்டை, லூஸ்த்தனம் என்று சேதுநந்தபிதாமகடவுளவனிவனாக வருகிறார். அவரது லூஸ்த்தனத்துக்கு கொஞ்சமும் குறைவைக்காத பொண்ணு வேதிகா அவரை சோறு சாப்பிடவிடாமல் பட்டினி போட்டுக் காதலிக்கிறார். ராசா அதர்வா ஒன்றிரண்டு காட்சிகளில் தண்டோரா போடுவது தவிர்த்து, அந்த ஊர் ஜனங்கள் அனைவரும் என்ன வேலை செய்கிறார்கள் என்று டைரக்டர் சொல்லவில்லை.
இந்நிலையில், அந்த ஊர் ஜனங்களை டீ எஸ்டேட் ஒன்றுக்கு தொழிலாளிகளாக ஏமாற்றி அழைத்துப்போகும் கங்காணி, வெள்ளைக்கார துரைகளின் மனம் நோகாமல் நடக்க இவர்களைப் படாத பாடு படுத்துகிறார்.  ட்ரெயிலரில் பார்த்து மிரண்ட முரட்டு விளக்குமாத்து அடிகள், விரும்பிய பொண்ணை துரைமார்கள் கற்பழிப்பது, எஸ்டேட்டை விட்டு தப்ப முயன்றால் குதிகால் நரம்பை வெட்டுவது போன்ற மயிர்க்கூச்செரியும் காட்சிகள் சீன் ஒன்றில் துவங்கி எண்ட் கார்டு வரை ஏராளம் உண்டு.
இதுவே வேறு ஒரு இயக்குனரின் படமாக இருந்தால், சிறப்பான அம்சங்கள் என்று சிலாகித்துக்கூறும்படி படத்தில் சில சமாச்சாரங்கள் உண்டுதான். ஆனால் ‘சேதுவில் துவங்கி ‘அவன் இவன்’ வரை பார்த்துச் சலித்த ஷேம்ஷேம் பாலா ஷேம் பார்முலா.
1939-ல் அதர்வாவும்,மற்றவர்களும் பேசிய இதே இழுவைத் தமிழைத்தான் அவர்கள் பேசினார்கள் என்பது உண்மை என்றால், தேயிலைத்தோட்டத்தில் அவர்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக சித்திரவதை செய்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். வேதிக்கா நீ ஒரு வேஸ்டுக்கா. தன்ஷிகா நீ ஒரு தண்டம்க்கா.
தமிழின் பத்து தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான நாஞ்சில் நாடன் வசனம் எழுதியிருக்கிறார். படம் முழுக்க இடம் பெற்ற தரமான கெட்ட வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் சரக்குக்கு வெறும் ஊறுகாயாக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது. கலெக்டரிடம் கூறி இவர் இனி கோவையை விட்டு வெளியே செல்லமுடியாதபடி, அதிலும் குறிப்பாக பாலாவாக்கம் செல்லமுடியாதபடி, ஏதாவது சிறப்பு சட்டம், சதித்திட்டம் தீட்டமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
பாடல்களே தேவைப்படாத ஒரு கதையில் ஒரு ஜீசஸ் குத்துப்பாட்டு உட்பட ஆறு பாடல்களை செருகியிருப்பதை ஒரு வகையில் பாலாவின் சாமர்த்தியம் என்றே சொல்லவேண்டும். ஓலைப்பாயில் எதுவோ என்னவோ செய்ததுபோல், ஓயாமல் வாசிக்கப்பட்ட பின்னணி இசை, சில இடங்களில் காட்சிகளை விட முன்னணியில் இருந்து காதுகளை சேதுகளாக்குகிறது.
செழியனின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆனால் உலகப்படங்கள் எல்லாம் பார்த்துக்கொழுத்துச் செழித்த செழியன் போன்ற ஒரு நல்ல ஒளிப்பதிவாளருக்கு அழகு, வேதிகா மாதிரி செவத்த பொண்ணுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து, இயக்குனர் அழைத்து வரும்போது,’ நாட்டாமை ஃபிகரை மாத்து’ என்று அதை நிராகரிக்கவேண்டும்.
காட்சிகள் அனைத்துமே ஒரே ஒப்பாரி ரகமாக இருப்பதால், ரெண்டு மணி நேரப்பட முடிவில் நமக்கு பெண்டு கழண்டுபோன ஃபீலிங்.
க்ளைமாக்ஸ் காட்சியில் அதர்வா ஒரு பாறைமேல் ஏறி நின்றுகொண்டு,’ ’நியாயமாரே எங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா?’ என்று கதறும்போது, ஏனோ கங்காணி ஸ்தானத்தில் பாலா நிற்பதாக சிந்தனை ஓடி, ரசிகர்கள் அவ்வளவு பேரும்  குதிகால் நரம்பு அறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய தொழிலாளர்களாக காட்சி அளிக்க,’ மறுபடியும் மறுபடியும் ஒரே மாதிரி படம் எடுத்துக்கொல்லாம, ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா பாலாமாரே’ என்று கதறி அழத்தோன்றுவது நிஜம்.
’பர்தேசி, பர்தேசி ஜானா நஹி’

Wednesday, March 6, 2013

’என்னது சிவாஜி பொழைச்சிட்டாரா?’ மீண்டும் ‘வசந்தமாளிகை’





கதாசிரியரைப்பத்தி படம் எடுத்தாக்கூட [சந்தமாமா] நம்ம ஆளுங்க கதையே இல்லாம படம் எடுக்குறாங்க. அதனால பாவம் ஜனங்க, எப்பவாவது ஒரு வாட்டி, கதையோட உள்ள படம் பாக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில், நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் ‘வசந்த மாளிகை’ படம் போட்டார்கள்.
நாளை மறுநாள், வெள்ளியன்று, 100 தியேட்டர்களை களம் காண இருக்கும்’வசந்த மாளிகை’யானது ‘கர்ணன்’ கண்ட கரைபுரண்ட வசூல் சபலத்தின் வழிமொழிதலாகும் என்பதை யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
டிஜிடலைஸுடு என்று விளம்பரப்படுத்தப்படுகிற இந்த ‘வசந்த மாளிகை’யைப் பார்த்தபோது, ஒரு பழைய பிரிண்டை எடுத்து வந்து, அதை ஈரத்துணியால் துடைத்து ரிலீஸ் பண்ணியதைத்தாண்டி, வேறு மெனக்கெடல்கள் எதுவும் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை.
இனி ஒரு பழைய படத்தை டிஜிடலைஸுடு ரீ-ஸ்டோரேஷன் பண்ணி வெளியிடும்போது, அதைப்பற்றி பத்து வரிகளுக்கு மிகாமல் எதாவது எழுதி வெளியிட்டு, அப்புறமாய் படத்தை வெளியிடும்படி, அப்பன் கணேசனின் அடிபோற்றி வேண்டிக்கொள்கிறேன்,
ரிலீஸான ’72 சமயத்தில் இந்தப்படத்தில் சிவாஜியின் நடிப்பும் பெரிதும் சிலாகிக்கப்பட்டதென்றாலும், ’புதிய பறவை’ தில்லானா மோகனாம்பாள்’ ‘உயர்ந்த மனிதன்’ போன்ற படங்களோடு ஒப்பிடுகையில், இதில் அவர் நடிப்பு சுமாருக்கும் கீழ்தான்.
வாணிஸ்ரீயின் மேக்கப்புக்கே தனி வண்டி கட்டி ஷூட்டிங் போயிருப்பார்கள் போல. ப்ப்ப்ப்ப்ப்பா யார்றா அந்த பொண்ணு, மேக்-அப்ல பயங்கரமா இருக்கு’ என்று தியேட்டர்களில் நடுவுல கொஞ்சம் கமெண்ட் வரப்போவது நிச்சயம்.
நாகேஷ், வி.கே.ராமசாமி,ரமா வகையறாக்களின் காமெடியை கொஞ்சம் எடி’த்திருக்கலாம். அந்த கெட்ட ஆவிகள் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து கொட்டாவி வருகிறது.
மற்றபடி ‘பழசை மறக்கலியே பாவிமக நெஞ்சு துடிக்குது’ பார்ட்டிகள் பார்த்து மருக, படம் முழுக்க பல சமாச்சாரங்கள் உள்ளன. குறிப்பாக ‘ஓ மானிட ஜாதிகளே’ கலைமகள் கைப்பொருளே’வில் துவங்கி ‘யாருக்காக’ வரை அத்தனை பாடல்களுமே பாட சுவாரசியமானவை. படம் பார்த்த அன்று இரவு கவிதை மனசு கொண்டவர்கள் அத்தனைபேரின் கனவிலும் ’கவிதைப்பேய்’ கண்ணதாசன் சில நிமிடங்கள் வந்து ‘ஹாய்’ சொல்லுவார்.
சின்ன வயசில் பார்த்த ஞாபகத்தின் படி, க்ளைமேக்ஸில் சிவாஜி ரத்தவாந்தி எடுத்து இறந்துவிட,  வசந்தா வாணிஸ்ரீ, அவரது மடியிலேயே உயிர்துறப்பதாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் நேற்றோ, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று குணப்படுத்தி காதலர்களைச் சேர்த்துவைக்கிறார்கள்.
இது தெரியாமல் ‘என்னது சிவாஜி பொழைச்சிட்டாரா?’ நல்லவேளை ‘டிஜிடலைஸ்ல க்ளைமேக்ஸையாவது சுபமா மாத்தி, நம்மளை சுகமா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாங்களே’ என்றேன் சத்தமாக.
‘யோவ் முட்டாள் முத்துராமலிங்கம், முதல்ல இருந்தே இதுதான்யா க்ளைமேக்ஸ்.வாணிஸ்ரீ சொன்னாளேங்குறதுக்காக சரக்கை பாதியில நிறுத்திட்டு நான் பட்ட பாடு போதாதா? எதையும் பாதியில பட்டுன்னு நிறுத்தாதீங்கன்னு சொன்னா கேக்குறாய்ங்களா’…
என்று இருட்டிலிருந்து ஒரு குரல்.
அது சிம்மக்குரலோன் சிவாஜியின் குரல் போலவே இருந்தது.
’சார் பின் வரிசையில வெள்ளைச்சட்டை போட்டுக்கிட்டு படம் பாத்தது நீங்கதானா?’ சொல்லவே இல்லை’.

பி;கு: கடைசி வரியை படித்து திகிலடைந்த பிஞ்சு மனசுக்காரரா நீங்க? அப்ப இந்த பின்குறிப்பு உங்களுக்காக மட்டுமே.
‘வசந்தமாளிகை’ ரிலீஸான ஆண்டு 1972.அதில் பணியாற்றிய மற்ற டெக்னீஷியன்கள் அனைவருமே, 1940 க்கு முன்பு பிறந்தவர்களாக இருக்க, இந்தப்படத்தின் பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர் 1973-ஆம் ஆண்டு பிறந்த நிகில்முருகன். பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பே அவர் ‘வசந்தமாளிகையில் பி.ஆர்.ஓ.வாக ஒப்பந்தமானது எப்படி? டென்சனாகாம, ஒரு மூலையில உக்காந்து யோசிங்க. நீங்களும் ‘பிட்சா’ மாதிரி ஒரு கதை எழுதலாம்.

Tuesday, February 19, 2013

’விமர்சனம் ‘ஹரிதாஸ்’- கண்டிப்பா பாக்கவேண்டிய படம்பாஸ்





 படம் ரிலீஸாவதற்கு முன்கூட்டியே, நல்லபடியாக விமர்சனங்கள் வந்தால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்குமே என்ற ஆர்வத்துடன் ‘ஹரிதாஸ்’ படத்தை கடந்த ஞாயிறன்றே பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ போட்டார்கள். இந்தமாதிரியான முன்னார்வ ஷோக்கள் பலமுறை  வெறுமனே ஆர்வக்கோளாறு ஷோக்களாகவே மாறி படம் ரிலீஸான பிறகும் விமர்சனம் எழுதமுடியாத தர்மசங்கடமாகவே பெரும்பாலும் மாறிவிடும்.
ஆனால் ‘ஹரிதாஸ்’ வெகுநாட்களுக்குப் பிறகு, வந்திருக்கும் மிக அருமையான படம்.
தங்கள் வீட்டிலேயே அப்படிப்பட்ட பிள்ளை இருந்தபோதிலும், அந்நோயின் பெயர், அதை எப்படி எதிர்கொள்வது என்று விழிப்புணர்வு இல்லாத, ’ஆட்டிஸம்’ பாதிப்புற்ற சிறுவன் தான் படநாயகன்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான கிஷோரின் மனைவி பிரசவத்தின்போது இறந்துவிட, மனப்பிறழ்வு [ஆட்டிஸம்] பாதிப்படைந்த அவரது மகன், பாட்டியிடம் வளர்கிறான். பணியில் இருக்கும் ஒரு தினம், கிஷோருக்கு அவரது அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப்போய் திரும்பி வருகையில், உறவினர்களிடம் மகனை ஒப்படைக்க விரும்பாமல் தன்னோடே அழைத்து வருகிறார்.
பேச்சுவராத, தன்னை ஏறிட்டும் பாராத, வேறொரு உலகில் வாழும் சிறுவனை எப்படி வளர்க்கப்போகிறோம் என்று ஒரு கட்டத்தில் குமுறி அழும் கிஷோர், குழந்தை மருத்துவர் யூகிசேதுவை சந்தித்தவுடன் ‘ஆட்டிஸம்’ சம்பந்தமான சில தெளிவுகள் பெற்று மகனுக்காக சில மகத்துவ காரியங்களில் ஈடுபட்டு அவனை எப்படித்தேற்றுகிறார் என்பதுதான் கதை. இதனை ஒட்டிய பக்கத்து டிராக்கில்,கிஷோரின் என்கவுண்டர் நண்பர்கள், இவரது எதிரிகள் சம்பந்தமான ஒரு கதையும் விறுவிறுப்பாக நகர்கிறது.
நல்ல கதையில் காதல், டூயட்டெல்லாம் இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற முடிவுடன், கிஷோருக்கும், அவரது மகனின் டீச்சராக வரும் சிநேகாவுக்கும் இடையில் எதையும் வைக்காமல், கடைசிவரை கதையை நகர்த்தியதற்கும், கிஷோரின் பிள்ளையை வில்லன்கள் கடத்தினார்கள் என்ற யூகத்திற்கு இடமளித்து, அப்படியில்லாமல், அவன் காணாமல் போனதையே கதையின் முக்கிய புள்ளியாக்கியதற்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலனுக்கும் சபாஷ்.
ஒரு பக்கம் என்கவுண்டரில் சிறுத்தையாக, இன்னொரு பக்கம் ‘ஆட்டிச’குழந்தையின் தந்தையாக மனம் சிறுத்தவராக, கிஷோருக்கு அருமையான ஆடுகளம் இந்தப்படம். இவரோடு சேர்ந்து சிறுவனும், சிநேகாவும்,.. அண்ணா பிரசன்னா, அண்ணி அடுத்த வருஷம் வாங்கப்போற அவார்டுகளுக்கு அலமாரியில இப்பவே கொஞ்சம் விலாவாரியா இடம் ஒதுக்கிவைங்க.
எவ்வளவு துணிச்சல் இருந்தாலும், இருட்டினில் நடக்கையில், நடுங்கிக்கொண்டே பாட்டுப்பாடுவோமே, அதுபோலவே ஒன்றிரண்டு பிட்டுப் பாடல்களையும், போலீஸ்காரர்களுக்கு வக்காலத்து வாங்கி ஒரு கானாபாடலும் சேர்த்து லைட்டாக மசாலா தூவ முயன்றிருக்கிறார் இயக்குனர். அதேபோல் பரோட்டா சூரி, இதுல உங்க காமெடி கொஞ்சம் சாரி.
முன்னாள் பத்திரிகையாளர்  ஏ.ஆர்.வெங்கடேசன் வசனம் எழுதியிருக்கிறார். ‘என் பையன் போட்டியில ஜெயிக்கவேணாம் சார். அதுல கலந்துக்கிட்டாலே போதும்’ ‘அவன் என்ன கோச்சா, இல்ல காக்ரோச்சா? டாக்டர் சொல்லவேண்டியதை கோச் சொல்றான். கோச் சொல்லவேண்டியதை டாக்டர் சொல்றான்’ என்று பல இடங்களில் ஈர்த்து, பத்திரிகையாளர்கள் மத்தியிலயும், இன்னும் கூட ஓரளவுக்கு வெவரமானவங்க இருக்காய்ங்க’ என்று மானம் காக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக இப்படத்தின் ஜீவன்களாக இருப்பவர்கள் படத்தின் தயாரிப்பாளர் ராமதாஸும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும். இப்படி ஒரு கதையைப் படமாக்க, அதுவும் பெரும்பொருட்செலவில், முன்வந்ததற்காக,’ அய்யா வந்தனம், வந்தனம்.
படத்தின் கதையை சிறுவன் ஹரி சொல்வதுபோல் அமைத்திருந்தாலும், படம் துவங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை ஒளிப்பதிவாளரின் படமாகவே இது நகர்கிறது. ஒரு சில காட்சிகளின் அழுத்தத்தை, இது திசைதிருப்பினாலும், வெகு நேர்த்தியான, உள்ளம் கொள்கிற ஒளிப்பதிவு ரத்னவேலுவுடையது. வெல்டன் ராண்டி. ‘எந்திரன்’ மாதிரி வெட்டிப்படங்களுக்கு உங்க திறமையை வீணடிக்கிறதை விட்டுட்டு, இப்படி நல்ல படங்களுக்கு ரண்டி.