Sunday, March 18, 2012

எம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே...

உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களில் நீங்கள் பழிவாங்கவேண்டிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா?

அப்படியானால் அவர்களுக்கு ‘மாசி’ படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து, பிரியாணி பொட்டலமும், குவார்ட்டரும் வாங்கிக்கொடுத்து,  முழுப்படத்தையும் பார்க்கிறார்களா என்று தியேட்டர் வாசலில் காத்திருந்து கன்ஃபர்ம் பண்ணுங்கள்.

அவர்கள் மீது உங்களுக்கு இருந்த ஆத்திரம் அப்படியே பரிதாபமாக மாறிவிடும். அவர்களுக்கு, நான் சொல்லமலேயே,வீடு வரை போக ஆட்டோவுக்கும் காசு கொடுத்து அனுப்பி விடுவீர்கள்.

சரி, விமர்சனம் என்று வந்த பிறகு கதை என்ன என்று எழுதாவிட்டால் ,இவர் படம் பாக்காம தூங்கிட்டாரோ என்று நீங்கள் பழி சொல்லக்கூடும் என்பதால்,விதிப்படி, கதைக்கு வருவோம்.

அர்ஜுன் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்.அவர் நேர்மையாக இருக்கவிடாமல் அரசியல்வாதியாக இருக்கும் ரவுடிகளும், ரவுடிகளாக இருக்கும் அரசியல்வாதிகளும், மேற்படி ரெண்டுமாகவே இருக்கிற டைரக்டர் கிச்சாவும் தொந்தரவு செய்கிறார்கள்.

அவர்களை முதல் பாதியில் போலீஸாக இருந்து, இரண்டாவது பாதியில் பொறுக்கியாக இருந்து, பாட்டி வடை சுட்ட மாதிரி அர்ஜூன் சுட்ட கதைதான் ‘மாசி’ எனப்படும் படத்தின் பாசி படர்ந்த கதையாகும்.

படத்தின் முதல் காட்சியிலேயே பிச்சைக்காரன் போல் ஒருவனால் சுடப்படும் அர்ஜுனின் நினைவலைகளுக்கு போகும் டைரக்டர், அடுத்த ஷாட்டிலேயே ஹீரோயின் அர்ச்சனாவின் தொப்புளுக்கு க்ளோஸ் அப் போட்டு படுக்கையறை காட்சியில் பயணிப்பதிலிருந்து, அம்மாவுக்கு எல்லோரும் சேலை எடுத்துக்கொடுத்துதான் மகிழ்விக்கிறார்கள் அதை மாற்றி சட்டை எடுத்துக்கொடுத்து மகிழ்விப்பது என்று ஏகப்பட்ட அதிர்ச்சிகளை படம் நெடுக வைத்திருக்கிறார்.

அதிலும் கலாராணி என்கிற 25 பெண் சிவாஜிக்கு, மம்மி மாண்டேஜ் பாடல் வைக்கிற கல் நெஞ்சமெல்லாம் டைரக்டர் கிச்சாவுக்கு எப்படி வந்தது என்று புரியவில்லை. தற்போது செக் மோசடி வழக்கில் புழல் சிறையில் உள்ள கிச்சாவை அடுத்து படம் எதுவும் இயக்க மாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு ரிலீஸ் பண்ணுவது தமிழ் சமூகத்துக்கு பாதுகாப்பானது என்பது என் தாழ்மையற்ற கருத்து.

இதற்கு மேலும் இந்தப்படத்தைப் பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.  மாசி’யின் பாடி ரெண்டு மூனு நாளுக்கு மேல் தாங்காது என்பதால். முதல் பாராவில் சொன்னபடி எதிரிகளின் பட்டியலைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே செயலில் இறங்குங்கள்.
$$$$$$$$$$$$$$$

என் குறிப்பு 2: தமிழ்மணத்தின் சிறப்பு விருந்தினர் ஆசனம் எனக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இதன் முதல் கட்டுரையில் நான் வாக்களித்திருந்தபடி சமையல் குறிப்பு எழுத மட்டும் சமயம் அமையவில்லை. ஆனால் ஒரு புதிர் போடுவதாக சொன்னேன்.
அந்த புதிரைப்படிப்பதற்கு முன் ஒரு சின்ன நிபந்தனை.

இந்தப்புதிரை விடுவிப்பவர்களுக்கு என் சொத்து மொத்தமும் எழுதி வைக்கிறேன் என்று நான் ஹெவி ரிஸ்க்’ எடுத்திருப்பதால், ஐசிஐசிஐ கார்டுகளில் படிக்க முடியாத சைஸுகளில் பல நிபந்தனைகள் வருமே அது மாதிரி இரு நிபந்தனை மட்டும் வைக்கிறேன்.

1. இந்தப்போட்டியில் என் சொந்த ஊரான நல்லமநாயக்கன்பட்டி, மற்றும் அருகாமையில் இருக்கிற என் உறவு கிராமங்களான உசிலம்பட்டி, புல்லலக்கோட்டை ஊர்களைச்சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளக்கூடாது.

2. மேற்படி மூன்று ஊர்களிலும் அடுத்த பதினைந்து நாட்களுக்கு  புதிய மனிதர்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது.

இது உங்களுக்கும் எனக்குமான கே. டி. குஞ்சுமேன் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்.

சரி இப்ப புதிருக்கு வருவோம்.


ஒரு அழகிய இளம்பெண் தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருக்கிறாள். அப்போது அந்தப்பகுதி வழியாக சைக்கிளில் வரும் ஒருவர் அந்தப்பெண்ணைப்பார்த்து கீழ்க்கண்டவாறு சொல்லி விட்டுப்போகிறார்....

‘எம்பொண்டாட்டி மகளே... எனக்கு நீ மருமகளே... உங்க அப்பன் வந்து கேட்டா... உன் புருஷன் வந்துட்டுப் போனான்னு சொல்லு’


மேட்டர் இவ்வளவு தான்.  இந்த இருவருக்குமான உறவுமுறை என்ன என்பதை நீங்கள் விடுவிக்க வேண்டும்.

இவர்களுக்குள் கள்ள உறவு எதுவும் இருக்குமோ என்று நினைத்து கன்ஃபியூஸ் ஆகிக்கொள்ளாதீர்கள். இருவருமே சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் தான்.

புதிர் போடும்போது ஒரு சின்ன க்ளுவாவது கொடுக்க வேண்டும் என்பது காலகாலமாக நிலவி வரும் நியதி. அந்த வகையில் நானும் ஒரு க்ளு தருகிறேன்.

எனது உள்ளம் கவர்ந்த இசைஞாநியைப்பற்றி இரு தினங்களுக்கு முன்பு எனது ப்ளாக்கில்,’ ராஜா பைத்தியங்களிலேயே ராஜ பைத்தியம் நான் தான்’ தலைப்பில் எனது ப்ளாக்கில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இதற்கான நல்ல க்ளூ ஒன்று இருக்கிறது.

23 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. என் பதிவுக்கு வரும் கடிதங்கள் அனைத்தையுமே நான் பிரசுரிக்கவே விரும்புகிறேன்,அது என் பதிவு தொடர்பாக இருந்தால் மட்டுமே.இதில் நக்கீரன் கோபால் குறித்து ஒரு தவறான தகவல் கொடுத்து கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?
   அதே போல் கேபிள்சங்கர், ஜாக்கிசேகர் போன்ற சகபதிவர்களுடன் வம்புக்கு இழுத்துவிட்டுத்தானா என்னை வாழ்த்தவேண்டும்?

   Delete
  2. நண்பரே, மன்னிக்கவும், எழுதிய மறுமொழி உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதால் அதை நீக்கிவிடுகிறேன். கடைசி வாழ்த்து பத்தியை தவிர்த்து.

   Delete
  3. திரு.நரேன் நீங்கள் மறுபடியும் தவறாகப்புரிந்து கொண்டீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருந்த இருவருமே எனக்கு துளியும் அறிமுகமில்லாதவர்கள்.அவர்கள் எதுவும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாதே என்ற ஒரு கவலைதான்.

   Delete
 2. அண்ணே இப்படி பொசுக்குன்னு உசிலம்பட்டியை கிராமம்ன்னு சொல்லிட்டிங்களே, நியாயமா?..நானும் உசிலம்பட்டிகாரன் அண்ணே!

  ReplyDelete
 3. நான் சொல்ற உசிலம்பட்டி எங்க நல்லமநாயக்கன்பட்டிக்கும் விருதுநகருக்கும் நடுவுல இருக்கிறது. உங்க உசிலம்பட்டிக்கும் நான் ஆயிரம் தடவை வந்துருக்கேன்.எதோ மெட்ரோபாலிடன் சிட்டியை பட்டின்னு சொல்லிட்ட மாதிரி நீங்க இப்பிடி பதறலாமா? நம்ம உசிலம்பட்டியும் இன்னும் பட்டிக்காடு தாண்ணே?

  ReplyDelete
 4. அக்கா பொண்ணை கட்டுனவன் கொழுந்தியாகிட்ட சொல்றான்... புதிர் விடை சரிங்களா?

  ReplyDelete
 5. புதிர சரியா படிங்கண்ணே கொழுந்தியாள எப்பிடி பொண்டாட்டி மகளேன்னு கூப்பிடமுடியும்?

  ReplyDelete
 6. ஆஹா அவுட்டா.. மொதோ பொண்ணுக்கும் கடைசி பொண்ணுக்கும் வயசு வித்தியாசம் அதிகமா இருந்தா மூத்த பொண்ணுதான் அம்மா ஸ்தானத்துல இருந்து பாத்துக்கும்.. "பொண்டாட்டி மவளே" ய அப்படித்தான் நெனச்சுத்தொலச்சுட்டேன்... சரி இப்போ மறுபடி மொதல்ல இருந்து யோசிக்கணுமா?

  ReplyDelete
 7. கோலம் போட்டுகஈட்டு இருந்தது எம் என்பவற்றின் மகள். அங்கு வந்த அவரின் மாமனார் , மருமகளிடம் எம்மின் பொண்டாட்டி மகளே , நீ என் மருமகள் . உன் அப்பன் வந்து கேட்டால் , உன் புருஷன் அதாவது என் மகன் வந்துட்டு போனான் என்று சொல். என்று சொன்னார்.

  ReplyDelete
 8. கோலம் போட்டுக்கிட்டு இருந்தது எம் என்பவற்றின் மகள். அங்கு வந்த அவரின் மாமனார் , மருமகளிடம் எம்மின் பொண்டாட்டி மகளே , நீ என் மருமகள் . உன் அப்பன் வந்து கேட்டால் , உன் புருஷன் அதாவது என் மகன் வந்துட்டு போனான் என்று சொல். என்று சொன்னார்.

  ReplyDelete
  Replies
  1. எப்படி இப்படியெல்லாம் மூளை கிளை கிளையா பிரியிது? புதிருக்கு எனக்கு விடை தெரியாட்டியும் இது விடையா இருக்கதுன்றது எனக்கு தெரியுது.

   Delete
  2. விடை இல்லாம புதிர் போட்ட என்ன சும்மா விட்டுடுவீங்களா?

   Delete
 9. 1922இல் சங்கரதாஸ் இறந்திருக்கிறார். நீங்கள் அப்போழுது பிறந்திருக்கவே மாட்டீர்கள். அதுவும் அவருடைய காலத்தில் இருந்த பாடல்களை நீங்கள் கேட்டு வளர்ந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன கரெக்டா புடிச்சுட்டேனா?

  ReplyDelete
  Replies
  1. ஒருத்தரோட இறப்புக்கும் அவர் பாட்டைக்கேட்டு வளந்ததுக்கும் என்ன சம்பந்தம்? உங்க பதில் தவறு.

   Delete
 10. முருகா.. சீக்கிரமா விடையைச் சொல்லு முருகா..! சஸ்பென்ஸ் தாங்கலை..!

  ReplyDelete
 11. அண்ணா, இது நியாயமா? கொஞ்சம் சொந்தமா ட்ரை பண்ணி என் மொத்த சொத்தையும் எழுதி வாங்கப்பாருங்க...

  ReplyDelete
 12. எனது உள்ளம் கவர்ந்த இசைஞாநியைப்பற்றி இரு தினங்களுக்கு முன்பு எனது ப்ளாக்கில்,’ ராஜா பைத்தியங்களிலேயே ராஜ பைத்தியம் நான் தான்’ தலைப்பில் எனது ப்ளாக்கில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இதற்கான நல்ல க்ளூ ஒன்று இருக்கிறது

  பக்தனுக்கு தெய்வத்தோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?

  CLUE - CORRECT AH?

  ReplyDelete
 13. நீங்க சொன்ன அந்தப் பதிவில் க்ளூ இல்லை. அதாவது "க்ளூ" என்ற வார்த்தையே இல்லை. :-(((

  ReplyDelete
 14. அந்த பதிவுக்கும் இந்த விடுகதைக்கும் இருக்கிற ஒரே சம்பந்தம் பைத்தியம் . இந்த விடுகதைய சொன்னது ஒரு பைத்தியம்.

  ReplyDelete
 15. Sivan , theyvanaiyidam sonnathu ???

  ReplyDelete
 16. Ayya sami aaru masama mandai kaayuthu , answera sollitu ponga pls

  ReplyDelete