Thursday, March 22, 2012

’ கல்லறைக்குப்போகும் வரை என் பெயர் முத்துராமலிங்கமே தான்’


ஓராயிரம் உயிர்களை
பதற வைத்தபடியே

 காலந்தோறும்
கடந்து செல்லும்
ஆம்புலன்ஸ் ...
ஒரு உயிரைச் சுமந்தபடி...

[இன்று காலை]

னி பதிவு எழுதும்போது,அதைப்பாதியில் முடித்து தொடரும் போடக்கூடாது என்று உறுதியான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.

காரணம் 1. மிகச்சிலபேர், அது ஒரு பில்ட்-அப் என்று தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். பதிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீளமாக ஆகிவிட்டதே என்பதற்காக மட்டுமே தொடரும் போட்டேன்.

 கா 2.விஷயம் கொஞ்சம் சீரியசானதாக இருந்தால், அதை எழுதி முடிக்கும் வரை நம்மை நாமே ஒரு மனநெருக்கடிக்கு ஆளாக்கிக்கொள்கிறோம்.
பாதியில் நிறுத்தப்பட்ட ‘என் பெயர் முத்துராமலிங்கம்’ அப்படித்தான் ஆகிப்போனது. இதோ தொடருகிறேன்.

‘எல்லாரும் வழி விட்டு நில்லுங்க’ என்றபடி என் வெந்த உடலை வாங்கியபடி டாக்டரை நோக்கி நடக்கிறார் அந்த கான்ஸ்டபிள்.

உள்ளே போனவர் டாக்டரிடம் ஒரு நீண்ட விவாதம் நடத்தி, ‘எனக்கும் இந்த புள்ள பொழைக்கிறதுக்கு வாய்ப்பில்லங்கிறது தெரியுது. ஆனா  இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிரும் ,பத்து நிமிஷத்துல போயிரும்னு வச்சி அடக்கம் பண்றதுக்கு இது வாழ்ந்து முடிச்ச உசுரா?.முடிஞ்ச வரைக்கும் பாருங்க.உயிரோட தூக்கிட்டுப்போக வேண்டாம்’ என்று சொல்ல, கான்ஸ்டபிளை ஒருமாதிரியாகப் பார்த்த லைஸாண்டர், ‘நர்ஸ் யாரையாவது உடனே போய் ஒரு குலை வாழைப்பழம் வாங்கிட்டு வரச்சொல்லு’ என்று அவசரப்படுத்தியிருக்கிறார்.

நான் எட்டாம் வகுப்பு படித்த சமயத்தில்,தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தேன்.என் அண்ணன்மார்களின் பலசரக்குக் கடையை, படிப்பு நேரம் போக கவனிக்க வேண்டி, நல்லமநாயக்கன்பட்டியிலிருந்து விருதுநகருக்கு ஷிப்ட் பண்ணப்பட்டிருந்தேன். எல்லோரும், கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்கப்போய்க்கொண்டிருக்க, நான் மட்டும் விருதுநகரிலிருந்து சத்திரரெட்டியபட்டி என்னும் கிராமத்துக்கு படிக்கபோய்க்கொண்டிருந்தேன்.பெ
ரிய பையனான பிறகு வயித்துவலியால் அதிகம் அவதிப்பட்டபோதெல்லாம் லைஸாண்டரை நோக்கி தான் என் சைக்கிள் விரையும்.

அம்மா சொன்ன கதையின் ஒரு பகுதியை அவரும் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். ,’’ அப்பல்லாம் போலீஸ் யூனிஃபார்முக்கு பயங்கர மரியாதை. போலிஸ்காரர் வந்து சொன்னாரேன்னு சொல்லி, நான் வாழைப்பழ ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சேனே ஒழிய எனக்கு நீ பொழைப்பேன்னு ஒரு துளி நம்பிக்கை கூட கிடையாது.
பழம் வாங்கிட்டு வர்றதுக்குள்ளயே உன் கதை முடிஞ்சிரும்னு கூட  நினைச்சேன். நடக்கலை.

 தினமும், முகம் தவிர உன் உடம்பெல்லாம் பழச்சதையை வச்சி மூடிட்டு,சில மணி நேரங்கழிச்சி எடுப்போம். ஒரு மூனு மணி நேரம் நீ தாக்குப்பிடிச்ச உடனே எனக்கு லேசா ஒரு நம்பிக்கை வந்துச்சி.தினமும் ஆஸ்பத்திரியில உன்ன கிராஸ் பண்றப்பல்லாம்,மனசுக்குள்ள ‘நீ செத்துப்பொழைச்சவண்டா’ தான் பாடிட்டுப்போவேன்.

இப்பப்பாரு வவுத்து வலின்னு வாரத்துக்கு ரெண்டுதடவையாவது என்னை டார்ச்சர் பண்ண வந்துர்ற’’ என்ற டாக்டர் எனக்கு வவுத்து வலி முத்துராமலிங்கம்’ என்று பட்டப்பெயர் வைக்கும் அளவுக்கு அவருக்கு ரெகுலர் ’கஷ்ட’மர் ஆகியிருந்தேன்.போகும்போதெல்லாம் கலர்கலராக மாத்திரைகள் அடுத்த தடவ சரியாகலைன்னா ஆபரேசன் தான் என்று மிரட்டி அனுப்புவார்.

வாழைப்பழத்தின் தயவில் என் உயிர் நீடிக்க ஆரம்பித்த மூன்றாவது நாள்தான்,இனி இவன் பிழைத்துவிடுவான்’ என்ற நம்பிக்கை வந்து, வாடிப்பட்டி, சோழவந்தான், கட்டக்குளம், சுக்கிலநத்தம் போன்ற கிராமங்களிலிருந்து வந்த என் சொந்தங்கள் ஊருக்கே திரும்பியிருக்கிறார்கள்.

சுமார் இரண்டு மாத சிகிச்சைக்குப்பிறகு சகஜ நிலைக்கு வந்த என் உடலில் தீக்காயத்துக்கான தழும்பு என்று இருப்பது, இடது கையின் ஒரு பகுதியில் மட்டுமே. அதுவும் தினமும் கவனமாய் வாழைப்பழத்தை நீக்கி, புதிய பழங்களை வைக்கும் வேலையை அம்மா செய்துவர,அது அத்தை கைக்குப்போன ஒரு நாள், அந்தக்கையில் வாழைப்பழத்தை எடுக்கும்போது, எனது சதையும் சேர்ந்துவருவதை அவர் கவனிக்காமல் செய்தததால் நிகழ்ந்தது.

இந்தக்கதையை உடைந்த குரலிலேயே பெரும்பாலும் சொல்லும் அம்மா, முத்துராமலிங்கத்தேவர், அந்த கான்ஸ்டபிள், டாக்டர் லைஸாண்டர் ஆகிய மூன்று பேரைப்பற்றிச்சொல்லும்போதெல்லாம் கையெடுத்துக்கும்பிட்டபடியேதான் சொல்லுவார்.

’எத்தனை செல்வங்கள் வந்தாலுமே, எத்தனை இன்பங்கள் தந்தாலுமே..அத்தனையும் ஒரு தாயாகுமா? அம்மா..அம்மா...அம்மா.. எனக்கது  நீயாகுமா?
தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை. தாயின் வடிவில் தெயவத்தைக்கண்டால் வேறொரு தெய்வமில்லை’

- இது அடிக்கடி நான் கேட்கும் பாடல் எனும்போது என்னை வாழவைத்த ‘முத்துராமலிங்கம்’ எனும் இந்தப் பெயரை நான் கல்லறைக்குப்போகும் வரை மாற்ற முடியுமா?

ப்புறம் எனக்கு விபரம் தெரிந்தபிறகு ‘தேவர்’ பச்சை குத்தியிருந்த அந்த கான்ஸ்டபிளை நான் பார்த்ததில்லை.

          ஆனால் டாக்டர் லைஸாண்டரோ  வாழ்நாள் முழுக்க பல சமயங்களில் என் கனவுகளில் வந்து நலம் விசாரித்துவிட்டுபோயிருக்கிறார்.

90ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள், நான் என் சொந்த வேலை காரணமாக ரயிலில் மும்பை பயணித்துக்கொண்டிருக்கிறேன். வழக்கத்தை விட ஒரு நீண்ட கனவு, ‘என்னய்யா ராசா இப்பல்லாம் என்னப்பாக்க வர்றதேயில்லை. ஊரை விட்டுக் கிளம்பின உடனே வவுத்து வலியெல்லாம் சரியாப்போச்சா?’’ என்றெல்லாம் பேசுகிறார் டாக்டர்.

இறங்கின உடனே முதல் வேலையாக என் விருதுநகர் நண்பனுக்கு போன் அடித்து விஷயத்தைச்சொல்கிறேன்.

‘’டேய் இன்னைக்கி காலைல தான்  நான்குநேரி பக்கத்துல ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல லைஸாண்டர் டாக்டர் இறந்துட்டார்டா’’

அதன்பிறகு ஒருமுறை கூட டாக்டர் என் கனவில் வரவேயில்லை.

18 comments:

 1. இதெல்லாம் ஓகேண்ணே! அந்தப் புதிருக்கு விடையைச் சொல்லுண்ணே மொதல்ல..

  என்னோட விடையோட, உங்க விடை ஒத்துப்போவுதான்னு பார்க்கணும்ல..

  ReplyDelete
  Replies
  1. உங்க விடை என்னன்னு எனக்கு எழுதினாத்தாண்ணே தெரியும்?

   Delete
 2. எல்லாமே நன்மைக்குத்தாண்ணே!

  ReplyDelete
 3. Nalla padhivu boss dr laisandar illavittal ungalai madhiri oru writer kidaithiruppara

  ReplyDelete
  Replies
  1. ரைட்டர் ஃபீலிங்-லாம் எனக்கு இல்லை பாஸ்.கட்டி ஏத்திவிடாதீங்க....

   Delete
 4. உங்களை பற்றி, உங்கள் தாயார், லைசாண்டர் என்கிற டாக்டர், கான்ஸ்டபில் இப்படி பலரை பற்றி நெகிழ்வாய் சொல்லி சென்றது கட்டுரை. அருமை

  ReplyDelete
 5. anna unga story interesting and way of writing also

  ReplyDelete
 6. சினிமா நியூஸ் மட்டும் படிக்காம சொந்தக்கதையும் படிக்கிறீங்களே சந்தோஷம்.

  ReplyDelete
 7. பதிவு நன்றாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்கும் முத்து ராம லிங்கம் என்ற பெயருக்கும் உள்ள சம்பந்தம் புரியவில்லை. இந்த நிகழ்வுக்குப் பின் அந்த பெயரை வைத்திருந்தாலாவது கொஞ்சம் பொருந்தியிருக்கும். இல்லன்னா எனக்குப் புரியாத பின் நவீனத்துவ பதிவா?

  ReplyDelete
  Replies
  1. பின் நவீனத்துவம் என்கிற பெரிய வார்த்தையெல்லாம் நமக்கு எதுக்குண்ணே.... இதுக்கு முந்தின பதிவை படிச்சா ஒண்ணாங்கிளாஸ் குழந்தையும் குழப்பமில்லாம புரிஞ்சிக்கிற மாதிரிதான் எழுதியிருக்கேன்.

   Delete
 8. ‘தெரியுமா.., அந்த முத்துராமலிங்கம் நம்ம சாதி கிடையாதுடா., இவ்வளவு காலமா நல்லா நாம ஏமாந்துக்கிட்டு இருந்திருக்கோம். ’
  தீயும் ஜாதியும் அடுத்தடுத்து உங்களை சுட்டிருக்கிறது.. ஒரு பெயர் குறிப்பிட்ட ஜாதியின் அடையாளக் குறியீடாக அடையாளப்படுத்தப்படுவது ஒரு துயரமே..
  லைசாண்டரைப்போனற டாக்டர்கள் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்புவரை தமிழக பேரூர்களிலும் சிறு நகரங்களிலும் மருத்டுவ சேவையாற்றி வந்தார்கள்.. இப்போதெல்லாம் அப்படியான ஆட்களை எங்குமே பார்க்க முடிவதில்லை. கான்ஸ்டபிள் முத்துராமலிங்கம் லைசாண்டரின் மரணம் கனவில் வந்த உள்ளுணர்வு இவற்றுக்குள் ஒரு நல்ல நாவல் ஒழிந்து இருக்கிறது... ஆனால் நீங்க அதை எழுத மாட்டீங்க எழுதினாலும் முடிக்க மாட்டீங்க என்பது என் கருத்து...!

  ReplyDelete
  Replies
  1. வரவர கொஞ்ச பேர் எனக்கு பீதிய கிளப்ப ஆரம்பிச்சிருக்கீங்க. நேத்து என்னடான்னா ஒருத்தர் எனக்கு எழுத்தாளரேன்னு எழுதுறார். இன்னொருத்தர், அண்ணே இதுல ஒரு சினிமாவுக்கான கதை இருக்கு, நான் யூஸ் பண்ணிக்கவாங்கிறார். இப்ப நீங்க நாவல் இருக்கு,ஆனா எழுத மாட்டீங்கங்கிறீங்க...லைட்டா எழுந்திரிச்சி நடமாடலாம்னு பாத்தா விட மாட்டீங்க போலருக்கே?

   Delete
 9. த்மிழ் சினிமாவை அன்ல் பறக்கவைக்கும் வித்த்தில் விமர்சனம் எழுதும் அண்ண்ன் க்தை நெகிழ வைக்கிறது

  ReplyDelete
 10. நன்றி ஆந்தையார்..நான் உங்களுக்கு தம்பிதானே, எப்ப அண்ணனானேன்?

  ReplyDelete
 11. பகிர்வுக்கு நன்றி. டாக்டர் லைஸாண்டர் போட்டோ இட்டது மிகவும் சந்தோசம். டாக்டர் லைஸாண்டர் போட்டோவை எனது கணனியில் ஏற்றிக்கொண்டேன்.

  நன்றி
  மை.செய்யது
  விருதுநகர்

  ReplyDelete
 12. நன்றி சையத், முடிந்தால் அதை கூகுளில் தேடும்போது கிடைக்கும்படி செய்ய முடிந்தால் இன்னும் நல்லது.

  ReplyDelete