Friday, December 2, 2011

போராளி- விமரிசனம்

சசிக்குமாரின் கம்பெனி புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனியின் கதை,திரைக்கதை,வசன,இயக்கத்தில் வந்திருக்கிறான் ‘போராளி

தலைப்பு,ஏற்கனவே ‘நாடோடிகள்,’சுப்ரமணியபுரம்’வெற்றிப்பட காம்பினேஷன் என்று  பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்த படம்.
ஓவர் எதிர்பார்ப்பே சில படங்களுக்கு எமனாக மாறீவிடுவதுண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் இந்த போராளி.
கதைக்கு பொருத்தமில்லாத தலைப்பு வைத்து விட்டோம் என்பதைப் புரிந்துகொண்டோ என்னவோ எடுத்தவுடன் சசிக்குமார் ஏன் போராளி என்று விளக்கம் கொடுக்கிறார்கள். காட்டில் வசிக்கும் விலங்குகள் எல்லாவற்றையும் விட மோசமானவன் மனிதன்.அவனை எதிர்த்து போராடும் ஒவ்வொருவனும் போராளியாம்.

 சமுத்திரிக்கனி சொன்ன ஆர்டரில்  இல்லாமல் இந்தப்படத்தின் கதையை சொல்வதானால்‘ எழுபதுகளில் வந்த சித்தி கொடுமை கதைதான்ஹீரோ சசியின்.அப்பா, அம்மாவை ஏமாற்றி சித்தியின் முந்தானைக்குள் முட்ங்கி விடுகிறார்.பெரியப்பா சொத்து அத்தனையையும் ஹீரோ பெயருக்கு எழுதி வைத்து விடுகிறார். இந்த சொத்தைக் கைப்பற்ற, சித்தியும் அவரது அள்ளக்கைகளும் ஹீரோவை விரட்டுகிறார்கள். இவர்களை ஜெயிக்க சசிக்குமார் போராடுவதால் அவர்’போராளி’.

இந்த சாதாரண கதைக்கு’ திரைக்கதை அமைத்த வகையில் கொஞ்சம் சுவாரசியப்படுத்த முயல்கிறார் சமுத்திரக்கனி.
வெளியே பூட்டு தொங்கும் கஞ்சாகருப்பு அறைக்குள் விவரமாக நுழைவதில் துவங்கி,’எல்லாரையும் எங்களை திரும்பிப்பாக்க வைக்கணும் என்று சசியும்,நரேஷும் தங்களுக்குள்ளேயே கட்டி உருள்வது...அமர்க்கள ஆரம்பம். அந்த கட்டிடத்தில் விசு’வின் நாடக பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஹவுஸ் ஒனர்,ஹீரோவை ஒன்சைடாக லவ் பண்ணும் அவரது மகள்,சதா சண்டை போட்டுக்கொண்டேயிருக்கும் சாந்தி-காந்தி தம்பதி,ஒரு குடிகார பேச்சிலர்,ஒரு அனாதை பாட்டியுடன் வாழும் அனாதை பேத்தி(நாயகி ஸ்வாதி) ,அந்த பேத்திக்கும் ஒரு அனாதை தங்கச்சி( பாத்து கனி, பார்த்திபன் கோவிச்சுக்கப்போறாரு) என்று ஒரு பெரும் குடியிருப்பில் தங்கி மெல்ல அவர்கள் மனதிலும் இடம் பிடிக்கிறார்கள் சசியும் நரேஷும்.
ஒரு பெட்ரோல் பங்க்-ல் வேலைக்கு சேர்ந்து வருமானம் கட்டுபடியாகாமல்,பிள்ளையார் பெயரில் ஒரு சர்வீஸ் செண்டர் துவங்கி நாலைந்து காட்சிகளிலேயே நல்ல நிலையை எட்டுகிறார்கள். அடப்பாவிகளா விக்ரமன் தலையிலயும் கைய வச்சிட்டீங்களா  என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே,ஒரு வில்லேஜ் கும்பல் சசியைத்தேடி வருகிறது.வந்தவர்கள் சசியும் அவரது ஃப்ரெண்டும் பைத்தியம் என்று குண்டைத்தூக்கி்ப்போட்ட இடைவளை விடுகிறார்கள்.
வந்தவங்க சித்தியோட  ஆளுங்க சொத்தை எழுதி வாங்கதான் இப்பிடி மிருகங்களா மாறி விரட்டுறாங்க...என்று நாயகி ஸ்வாதிக்கு சசி, கதையை சொல்லி முடிக்க,”எத்தனை நாளைக்கு இப்பிடி ஓடிக்கிட்டே இருப்பீங்க, க்ளைமேக்ஸ் நெருங்குது அவங்களை திருப்பி அடிங்க என்றதும் மொத்த ஊரையும் ஒத்த ஆளாக அதுவும் நிராயுதபாணியாக துவம்சம் செய்கிறார் சசி.அர்ஜுன்,விஜயகாந்த் விட்ட இடங்களை நிரப்பும் ஆர்வம் சசியின் ஆக்‌ஷனில் தெரிகிறது’.

இடையில் ஸ்வாதியுடன் ஒரு காதல் ட்ராக்.’ஆஸ்பிட்டலுக்கு ஸ்வாதியைப் பார்க்க வரும்போது,’சாப்பிட ஏதாவது வேணுமா’ என்று கேட்க ஸ்வாதி சிலோன் புரோட்டா’ என்கிறபோதும் சசி முறைத்துக்கொண்டே சிலோன்னாலே நம்க்கு ஆகாது என்கிற போதும் தியேட்டர் அதிர்கிறது.

இந்தக்கதையில் தெலுங்கு நடிகர் நரேஷும்,இன்னொரு கதாநாயகியும் எதற்கு என்று கடைசி வரை புரியவில்லை.அதுவும் நரேஷ் காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என்று வழிகிறார்.சூரி, கஞ்சாகருப்பு காமெடி பரவாயில்லை. தயாரிப்பாளர்கள் ஞானவேலும், ஜெயப்ரகாஷும் வந்தார்கள்...சென்றார்கள்..அவ்வளவுதான்.

படத்தில் இடம் பெற்ற பைத்தியக்கார ஆஸ்பிடல் காட்சிகள் எதற்கு என்றே விளங்கவில்லை.ஒருவேளை பைத்தியக்கார ஆஸ்பிடல் காட்சிகளை ரசிப்பதற்கென்றே சில பைத்தியங்கள் தியேட்டர் பக்கம் அலைகிறதென்று பைத்தியக்கணக்காக யோசித்திருப்பார்களோ?

இசை சுந்தர்.சி.பாபு. ‘சம்போ சிவ சம்போ’ வை விட்டு எம்போ’தான் வெளியே வருவார் என்று தெரியவில்லை.ஸ்வாதிக்கு சசி மீது காதல் வந்தவுடன் எட்டுக்கட்டையில் ‘யாரவன்’ என்று பாடல் திடுக்கிட வைக்கிறது. ஸ்வாதி சசி மீது காதல் கொள்வார் என்று ஒருவேளை சுந்தர்,சி பாபு எதிர்பார்க்கவில்லையோ என்னவோ? எனிவே, இண்டஸ்ட்ரி இதுவரை காணாத புதுமையான காதல் பாட்டு.

ஒளிப்பதிவு கதிர். பழைய கதையில நாம மட்டும் என்னத்த புதுசா பண்ணிடமுடியும் என்று நினைத்தாரோ என்னவோ, ஒளிப்பதிவில் எவ்வித மெனக்கெடலும் இல்லை.

பல கோடிகளில் படம் எடுப்பவர்கள்,சில ஆயிரங்கள் செலவழித்தாலே நல்ல கதைகளை வாங்க அல்லது உருவாக்கமுடியும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் நமக்கு புரியவில்லை.

போராளி’ கொஞ்சம் BORE ஆன ஆள்தான்.

1 comment: