Thursday, December 8, 2011

வெண்மணி......கண்மணி வம்போடு

இந்தப்படம் பார்த்து ரெண்டு நாளாகிவிட்டது. விமரிசனம் எழுதலாமா வேண்டாமா என்று பெருங்குழப்பத்துக்கு ஆளாகிவிட்டேன். சரி விமரிசனமா இல்லாம சும்மா உங்களோட கலந்துக்கவமேன்னு தோணிச்சி.
‘மிருகம்’ நெல்லு’ படங்களைத்தயாரிச்ச கார்த்திக் ஜெய் இந்தப்படத்தை தயாரிச்சி ஹீரோவாவும் நடிச்சிருக்கார்.
ஒரிஜினல் கேப்டன் சினிமாபக்கம் நடமாடமாட்டார்னு முடிவு பண்ணிட்டாங்களோ என்னவோ,படம் முழுக்க இவரை எல்லாரும் கேப்டன் கேப்டன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
படத்தோட கதையைப்பத்தி சொல்றதுக்கு முன்னாடி, நீங்களும் நானும் மூணாங்கிளாஸ் படிக்கிறப்ப கேள்விப்பட்ட ஒரு குட்டிகதைய ரீவைண்ட் பண்ணுவோம்.
ஒரு பையன் விழுந்து விழுந்து பனை மரத்தைப்பத்தி படிச்சிட்டுபோவான். ஆனா கேள்வித்தாள்ல பசு வைப்பற்றி ....வரிகளுக்கு மிகாமல் எழுதவும் வந்திருக்கும்.உடனே சுதாரிச்ச பையன் அவன் படிச்ச பனை மரத்தப்பத்தி எழுதிட்டு, இப்படிப்பட்ட பனைமரத்தில் கொண்டுபோய் அந்தப்பசுவைக் கட்டினால் கூடுதலாய் பால் கறக்கும்னு கட்டுரையை முடிப்பான்.
இப்ப என்னத்துக்குங்க முணாங்கிளாஸ் கதையெல்லாம்னு டென்சன் ஆகத்தான் செய்வீங்க.
‘வெண்மணி’ன்னு புதுப்பேரை வச்சிட்டு ஒரு வருஷத்துக்கு முந்தி ரிலீஸான ‘நெல்லு’ படத்த இடைவேளை வரைக்கும் ஓட்டிட்டு அப்பிடியே ஒரு கயித்த புடிச்சி வெண்மணி’யில வந்து கட்டுறாங்க.
விமரிசனம் எழுதலாமா,வேண்டாமான்னு நான் ஏன் குழம்புனேங்கிறதுக்கான காரணத்துல பாதி புரிஞ்சிருக்கும்.மீதியும் புரிய வேணாமா?
அப்ப வாங்க கதைக்குள்ள போவோம்.கீழவெண்மணியில் 44 விவசாய தொழிலாளிகள் பண்ணையார் ஒருவரால் உயிரோடு கொளுத்தப்பட்ட கதை அனைவருக்கும் தெரியும். அந்த சம்பவத்தை கண்கூடாகப் பார்க்கும் ஒருவன் போராளியாக மாறுகிறான்.ஒரு இயக்கம் நடத்தி நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப்போராடுகிறான்.
இரும்புக்கடை முதலாளியால் தந்தையைப் பறிகொடுக்கும் ஒருவன் அந்தப்போராளியின் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறான்.
தற்போது அமைச்சராக பதவி உயர்வு அந்த இரும்புக்கடை முதலாளியை கும்பலாகப்போய் கொல்கிறார்கள்.
கதை திரைக்கதை எழுதி இருப்பவர் கதாக.திருமாவளவன்.எடிட்டர் என்று ஒருவரைப்படத்துக்கு நியமிக்கவில்லையோ என்று யோசிக்கும் அளவுக்கு படம் வளவள..அதே போல் பிண்ணனி இசை காதை பின்னி எடுக்கிறது.
படம் முழுக்க மாவோயிஸம், மார்க்ஸிஸம்,மிளகுரஸம்,தக்காளி ரஸம் என்று ஏகப்பட்ட இஸங்களைப் பேசுகிறார்கள்...பேசுகிறாகள்...பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஹீரோவின் பேர் பிரபாகரனின் சாயலில் இருக்கட்டுமென்று கிருபாகரன் என்று வைத்திருக்கிறார்கள்.
கிருபாகரனாக நடித்திருக்கும் கார்த்திக்ஜெய்,கண்டிப்பாக,’பவர்ஸ்டார்’ லத்திகா சீனிவாசனுக்குப்பிறகு கிடைத்திருக்கும் நல்ல காமெடி பீஸ்.
பொதுவாக இது போராளிகளுக்கு பொல்லாத காலம் போலிருக்கிறது. ‘வெண்மணி’ போராளிகளைப்பற்றி படம் எடுக்கிறேன் என்று வெண்ணை மாதிரி படம் எடுத்திருக்கிறார்கள்.

(படம் இணைப்பு; பெண் போராளிகளுடன் நாயகன் கிருபாகரன்)

2 comments:

  1. நண்பர் ஒருத்தர் நம்ம கார்த்திக் ஜெய் க்கு கதை சொல்லப் போனார் சார். 'ஏற்கெனவே ஆறு படம் ஓகே பண்ணி வச்சிருக்காரு. உங்க கதை ஓகே ஆச்சுன்னா அது ஏழாவது படம்தான். சம்மதம்ன்னா கதை சொல்லுங்க'ன்னு சொன்னாங்களாம். நண்பர் பின்னங்கால் பிடரியில் ஒட்டிக்கிட ஓடி வந்துட்டாரு. இதனால் அறியப்படுவது யாதெனில் இந்தப் படம் மாதிரி இன்னும் அஞ்சு படம் கியூவுல நிக்குது. பவர் ஸ்டாருக்கு மிகப் பெரிய காம்பெடிஷன் காத்திருக்கு. எல்லாரும் ஒடுங்க. அது நம்மள நோக்கி வந்துக்கிட்டு இருக்கு..

    ReplyDelete
  2. போகிற போக்கில், பண்ணையார் ஒருவரால் விவசாயத் தொழிலாளர்கள் 44பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட கதை என்று சொல்கிறீர்கள், முத்துராமலிங்கம். அது கதை இல்லை, தமிழக வரலாற்றில் நடந்த உண்மையான கொடுரம்.

    ReplyDelete