Saturday, May 11, 2013

’அமெரிக்கன் காலேஜ் பயலுக எல்லாருமே அப்பிடிப்பட்டவய்ங்களா?’-சிநேகாவின் காதலர்கள்- 3







பிரபலமானவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள விரும்புபவர்கள் நண்பர்கள் பிரபலமாவதை ஒருபோதும் விரும்புவதில்லை’ 

                             -பிரபலமாகாத யாரோ ஒருவர் 

எனது அமெரிக்கன் கல்லூரி ஆசிரியரும், ப்ளாக்கர்களில் முன்னோடியுமான தருமிஅவரது வலைப்பதிவில், நான் இயக்கப்போகும் படம் எத்தகையது என்பது குறித்து ஒரு உருமிச்சத்தம் எழுப்பியிருக்கிறார்.
அவரது பதிவில் இடம்பெற்ற பகுதி நீங்கள் கீழே படிப்பது,…
….ஒரு நண்பன் திடீர்னு கேட்டான். அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்க்கிற ஆளுக எல்லாம் ஒரு மாதிரியா... weird-ஆன ஆளுகளான்னு கேட்டான்.

 ’இல்லியே .. ஏனிப்படிக் கேட்கிறன்னு கேட்டேன்.

உங்க கல்லூரியிலிருந்து சினிமாவுக்குப் போன டைரடக்கர்கள் எல்லோரும் எடுத்த படம் எல்லாம் கொஞ்சம் weird-ஆக இருக்கேஅப்டின்னான்.

ஏம்பா!அப்படி சொல்ற? மகேந்திரன் படத்தை எப்படி இதில சேர்க்கிற?’

உதிரிப் பூக்கள் படத்தின் கடைசி வசனத்தைச் சொன்னான். ஒரு கெட்டவன் ஊரையே கெடுத்துட்டு செத்துப் போறானேஎன்றான்.

என்னிடம் பதில் இல்லை.

மகேந்திரன், பாலா, ராம், அமீர், சாந்தகுமார் ... இந்த வரிசையில் இப்போது ஓஹோ புரொடக்‌ஷனின்முத்துராமலிங்கமும் சேர்ந்திருக்கிறார்.

இப்படி கேள்வி கேட்ட நண்பனும் வகுப்பின் முதல் மாணவனாகப் படித்து முடித்த எங்கள் கல்லூரி மாணவன் தான் ....
இப்படிப்போகிறது ஆசிரியர்தருமியாரின் பஞ்சாயத்து [http://dharumi.blogspot.in/]


அது குறித்து எழுதுவதற்கு முன்பு, கடந்த பதிவின் தொடர்ச்சியை எழுதுவது தலையாய பணியாய் தோணியதால், [ வாத்தியாருங்க சமாச்சாரம்னாலே ஏட்டிக்குப் போட்டியா செஞ்சே பழகிப்போச்சிங்க] அதை முடித்துவிட்டு, உங்க கிட்ட வர்றேன் சார்.

சும்மா ஒரு டம்மி லெட்டரிங்
முதல்முறை போன் முழு ரிங் போயும் எதிர்முனையில் அவர் எடுக்கவில்லை.
சரி எதாவது மீட்டிங்கில் இருக்கலாம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு அடித்தபோது,’ வணக்கம் கலைக்கோட்டுதயம் என்றது எதிர்முனை.
கலை வணக்கம். நான் முத்துராமலிங்கம் பேசுறேன். நான் வேலை பாக்குற நிறுவனத்துல கடந்த நாலு மாதங்களா சம்பளம் வரலை. மூனு மாசத்துல திருப்பிக்குடுத்துடுறேன். ஒரு சின்ன தொகை அவசர உதவியா கைமாத்தா வேணும்’.
நடுவில் அவர் எதுவும் பேசிவிடாமல் ரேடியோ ஜாக்கிபோல் படு ஸ்பீடாக பேசிமுடித்தேன்.
சென்னை வாழ்க்கையில் ஒரு இடத்தில் உருப்படியாக வேலை பார்க்காத வகையில், எனக்கு கடன் வாங்குவது, வட்டிக்கு வாங்குவது, மனைவியின் நகைகளை அபேஸ் பண்ணி, அடமானம் வைத்து அட்ராசிட்டிகள் புரிவதெல்லாம் அத்துப்படி. கடன் கேக்கிற இடங்களில் கண்டேன் சீதையைபாணியில் எப்ப திருப்பித்தரப் போறோம் என்று சொன்னபிறகுதான் கடனே கேட்பது.

பிதாமகன்ரிலீஸான மூன்றாவது நாள். படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தயாரிப்பாளர் வி.. துரை என்னை தி.நகரிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றுக்கு அழைத்துப்போனார். இரண்டு செயின்கள் [பத்துபவுன், எட்டுபவுன்] வாங்கினார். ஒரு செயின் பாலாவுக்கு ஓகே. இன்னொன்று? ஒருவேளை பாலா கையில் கொடுத்து தயாரிப்பாளர் தனக்குத்தானே போட்டுக்கொள்ளக்கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பார்ட்டி துவங்குவதற்கு முன்பு, நா தழுதழுக்க, ‘பிதாமகனுக்குஎன் பங்களிப்பு குறித்து சில வார்த்தைகள் பேசி, அந்த இரண்டாவது செயினை என் கழுத்தில் போட்டார்.
காமெடியா போய்க்கிட்டிருக்க கதையில நடுவுல எதுக்கு பாஸ் இப்பிடி ஒரு செண்டிமெண்ட் சீனு?’
க்ளைமாக்ஸைக் கேளுங்க பாஸ். அப்பதான நாம நகைகளை அடமானம் வைக்கிறதுல எவ்வளவு பெரிய கில்லாடின்னு தெரியும்?
மறுநாள் காலையில், அந்த நகைக்கடையில், வாட்ச்மேன் கூட வருவதற்கு முன் முதல் ஆளாய் நான் போய் நின்று, அந்த செயினை அதேகடையில் சில நூறு ரூபாய்கள் கம்மி விலைக்கு விற்றேன். எப்பூடி?
சரி, அந்தக்கதையை அப்புறம் தொடரலாம்.
எனது மடைதிறந்த பேச்சு ஒர்க்-அவுட் ஆனது போலவே தோன்றியது.
அண்ணே என்னோட அலுவலகத்துக்கு வாங்க நேர்ல பேசிக்கலாம் என்றபடி போனை வைத்தார் கலை.
அவரது அலுவலகம் போய்ச்சேருமுன் எங்களுடைய ப்ளாஷ்பேக் கொஞ்சம் பேசிக்கொள்ளலாம்.
இருபது ரூபாய் இரும்பு மனிதர்
இப்போதைய தமிழன் தொலைக்காட்சிஉரிமையாளர் கலைக்கோட்டுதயத்தின் துவக்க காலம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எண்பதுகளின் இறுதிகளில், நாகர்கோவிலில் இருந்து, வெறும் நம்பிக்கைகளை மட்டுமே சுமந்துகொண்டு, பத்திரிகையாளர் கனவோடு சென்னை வந்தவர்.
நான் நக்கீரனில் இருந்து விலகி, சினிமாவில் நுழைய முயற்சிக்க, ’நடுவுல கொஞ்சம் நடத்திட்டுப்போங்கஎன்று நண்பர் ஒருவர் ஏற்படுத்திய நப்பாசையால் சத்ரியன்துவங்கியிருந்த சமயம். எங்கள் சென்னை நிருபர் குழுவில் ஒருவராக, சம்பளம் எதிர்பாராத நண்பராக இணைந்தவர்தான் கலை. உலக அப்பாவிகள் சங்கத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கவேண்டிய அளவுக்கு வெவரமானவர். நான் என்ன சொன்னாலும் நம்புவார்.
சத்ரியன்பத்திரிகை ஒரு குடிகாரர்கள் சங்கம். சூரியன் குட்நைட் சொன்ன சில நிமிடங்களில், உலகம் எக்கேடு கெட்டுப்போனாலும் நாங்கள் ஓல்டு காஸ்க் அடித்தே ஆகவேண்டும். காசு பஞ்சம் இருந்தால் இருக்கவே ரிடர்ன் வந்த காப்பிகள். முட்டை பரோட்டாவுக்கும் சரக்குக்குமாக ஆளாளுக்கு கொஞ்சம் சதிரியன்களை எடைக்குப் போடுவார்கள். அந்த சமயத்தில் அப்பாவியாய், இதுகுறித்து எந்தவித சிந்தனையும் இல்லாத கலையை தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே ஓடோடி வந்தவரே பீரடிச்சீரோஎன்று பாடியபடி முதன்முதலாக பீர் குடிக்கவைத்த பாவம் என்னையே சேரும்.
எங்கள் அலுவலகம் மேட்டுக்குடிகள் வசிக்கும் அண்ணாநகரில் இருந்தது. பத்திரிகை விற்பனை நன்றாக இருந்தபோதிலும், சில நிர்வாகக் குளறுபடிகளால், ஏஜெண்டுகளிடமிருந்து நேரத்துக்குப் பணம் வந்து சேராததால், பஞ்சப் பரதேசிகளாவே பத்திரிகை நடத்தி வந்தோம்.
சோறுக்கும், பீருக்கும் மட்டுமே தேறும் என்பதால் யாருக்கும் சம்பளம் இல்லை.
வெறும் இருபது ரூபாய் தந்தால் போதும், அண்ணாநகரிலிருந்து எம்.எல்..ஹாஸ்டல் வரை நடந்தே போய் கூட செய்தி சேகரித்து வருவார் கலை. பேட்டா, கன்வேயன்ஸ், காலை டிபன், லஞ்ச் உட்பட எல்லாவற்றையும் அந்த இருபது ரூபாய்க்குள் முடித்துக்கொள்ளும் அவரது மாயக்கலைதான் அவரை இன்று, நூறுக்கும் மேற்பட்டோருக்கு சம்பளம் போடும் முதலாளியாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இதற்கு முன்னர் ஓரிருமுறை நான் அவரைச் சந்திக்க அங்கே சென்றிருந்தபோதிலும், நிதி உதவி கேட்டுச் செல்வது அதுவே முதல்முறை என்பதால், சற்று சங்கடமாகவே இருந்தது. ஆனால் அவர் என்னை நன்கு அறிந்தவர், முதலாளியான பிறகும் அதே அன்போடு அண்ணேஎன்று அழைப்பவர்.
ரிசப்ஷனில் சில நொடிகள் காத்திருக்க எம்.டி. உங்களை உள்ள வரச்சொல்றாங்கஎன்று அழைப்பு வந்தது.
உள்ளே போனால் அவரது அறையில் அவர் இல்லை. [தொடரும்]                       

9 comments:

  1. சஸ்பென்ஸ் வைக்காம எழுதவே தெரியாதா ...?

    ReplyDelete
    Replies
    1. இதையெல்லாம் நீங்க சஸ்பென்ஸ்ல சேக்கலாமா சார்?

      Delete
  2. Proud to be 'The American Colege' student

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு தனீ ஃபீலிங் பாஸ். நன்றி

      Delete
  3. சமீப காலமாக உங்களுடைய பதிவுகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் bookmark-இல் “ஓஹோ புரோடக்சன்‌ஸ்” இடம் ‘பிடித்து’விட்டது. அனைத்தும் அருமையான இயல்பான பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணி சார். புக் மார்க்கை உங்க மனசுன்னு எடுத்துக்கிறேன்.

      Delete
  4. ரசித்தேன்...

    ReplyDelete
  5. என் பதிவில் பின் சேர்க்கை ஒன்றும் சேர்த்துள்ளேன்.

    பின் சேர்க்கை:

    அதே மாணவன் இன்று தொலைபேசியில் அழைத்து இன்னொன்றும் சொன்னான். இன்று தான் இயக்குனர் ராம் நடித்து, இயக்கும் தங்க மீன்கள் என்ற படத்தில் யுவன் இசையில் ஸ்ரீராம் பாடும் ’ஆனந்த யாழை மீட்டுகிறாள் ...’ என்ற பாட்டைக் கேட்டு மயங்கி சொன்னான்:

    “ஏற்கெனவே ஒரு பாசிட்டிவ் பாய்ண்ட்டை சொல்ல உட்டுட்டேன். நம் கல்லூரி இயக்குனர்கள் எல்லோருக்கும் sense of music மிக அழகாக இயைந்து வருகிறது. அவர்கள் படத்தின் பாடல்கள் எல்லாமே ரொம்ப rich" என்றான்.

    ஒத்தைப் பெண் பிள்ளையின் அப்பனல்லவா அவன் ...! இந்தப் பாட்டு அவனுக்கு இனிக்காமலா போகும்.

    நானும் பாட்டைக் கேட்டேன். பாடல் அழகு .... ராம் இதற்கு இனிய காட்சியமைப்பு கொடுத்திருக்க வேண்டும்.

    ******************************

    ReplyDelete