Friday, December 16, 2011

மம்பட்டியான் -விமரிசனம்.வெட்டிப்பயதான்....

சில வருடங்களுக்கு முன்பு ரசித்துக்கேட்ட, சில பாடல்களை, ரீமிக்ஸ் ஆகிக்கேட்கும்போது‘ என்ன கொடுமைடா இது’ என்று தோன்றும்.
.5 நிமிட பாடல்களுக்கே அப்படி எனும்போது, நாம் ரசித்துப்பார்த்த  இரண்டரை மணி நேரப்படம் ரீமேக்காகி வந்து, நம்மை சோதித்தால்...?

இந்தக்கேள்விக்கான பதிலை,சுமார்  6கோடி செலவில் சொல்லியிருக்கிறார்கள்  பழைய மம்பட்டியான் தியாகராஜனும் ,மாடர்ன் மம்பட்டியான் பிரஷாந்தும்.
1983 -ல் வெளிவந்த மம்பட்டியானின் கதை,இந்த தலைமுறைக்கு தெரியாது என்பதாலும், கதகேட்டு, கதகேட்டே  வளந்த சனம்,நம்ம சனம்ங்கிறதுனாலயும்,  மாடர்ன் மம்பட்டியானோட கதைய  கொஞ்சம் சுருக்கமா பாப்போம்.

பணக்காரங்க கிட்ட கொள்ளை அடிச்சி ,ஏழைகளுக்கு கொடுக்கிற மலையூர் காட்டு ராபின்ஹுட் நம்ம மம்பட்டியான். அவரோட அப்பா,அம்மாவை உள்ளூர் பண்ணையார் கொன்னு போடவே,திருவிழா சமயத்துல ஊருக்குள்ள நுழைஞ்சி பண்ணையாரையும்  அவரோட ஆளுங்க 7பேரையும் வெட்டிச்சாச்சி ‘ ஆறுகொலை ஆறுமுகம்’ மாதிரி,எட்டுக்கொலை ஏகாம்பரம் ஆயிடுறார் நம்ம மம்பட்டியான்.

இவரை பிரகாஷ்ராஜ் தலைமையில  ஒரு போலீஸ் கூட்டம், படம் முழுக்க தேடிக்கிட்டே இருக்காங்க.  இங்க ஒரு ஃபைட் வச்சா நல்லா இருக்குமேன்னு, அப்பாவும் மகனும் நினைக்கிற
 இடத்துல எல்லாம்  மம்பட்டியான் போலீஸ் கிட்ட மாட்டி,அவரோட வீரதிர பராக்கிரமங்களால தப்பிக்கிறாரு.

நடுவுல வீரத்துக்கு ஓரத்துல, கொஞ்சம் காதலையும் வச்சா நல்லா இருக்குமே, தன்னைக்காப்பாத்துன மம்பட்டியான ஆரம்பத்துல, மீரா ஜாஸ்மின் ஒருதலையாக் காதலிக்கிறாங்க..செகண்ட் ஆப்ல மம்பட்டியான் கொஞ்சம் இறங்கி வந்ததும்,  இருதலையா காதலிக்க ஆரம்பிச்சி,ஊரை விட்டே ஓடி வாழலாம்னு முடிவு எடுக்கும்போது, மாடர்ன் செந்தில் ஒருத்தரு, போலீஸ் அறிவிச்ச காசுக்கு ஆசைப்பட்டு மம்பட்டியான சுட்டுக்கொல்றாரு.
இந்தப்படம் 83 ல் வெளிவந்து சக்கைப்போடு ,போட்டதோடு இந்தி உட்பட நாலைந்து மொழிகளில் ரீ-மேக் ஆகி அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது. காரணம் புதிய கதைக்களம்.படத்தில் இருந்த யதார்த்தமான எளிமை.ராஜாவின் சொக்க வைத்த பாடல்கள்.ரீ-ரெகார்டிங்.

மாடர்ன் மம்பட்டியானில், மேற்படியில் கடைசி மூன்றுமே மிஸ்ஸிங்.
கதை எப்போது நடக்கிறது என்கிற பீரியட் உணர்வு ஒரு இடத்திலும் வரவில்லை.
சொந்த பேனர் என்பதாலோ என்னவோ, கலைராணி மாதிரி பிரஷாந்தும் வாங்கின மீட்டருக்கு மேலேயே நடிக்கிறார்.

 ஒளிப்பதிவு என்று அரைடஜன் பேர் பெயர் போடுகிறார்கள்.

இசை தமன்.‘ காட்டு வழி போற பொண்ணே’ மற்றும் ‘சின்னப்பொண்ணு சேலை ‘ஆகிய பாடல்களை பழைய மம்பட்டியானில் இருந்து எடுத்து
 ரீ-மிக்ஸ் பண்ணியிருக்கார்.
சென்னையிலிருந்து திருப்பதி வரை கால் நடையாகப்போய் வந்தால்தான் தான் ராஜா பாட்டைக்கெடுத்த பாவம் தீரும்.

படத்தில் போலி மம்பட்டியான் ஒருவர்,பெண்களைக்கற்பழித்தும், சாராயம் காய்ச்சியும்  நல்ல மம்பட்டியானின் பேரைக்கெடுக்கிறார்.
பழைய மம்பட்டியானோடு ஒப்பிட்டால்  இந்த மாடர்ன் மம்பட்டியானே ஒரு போலி மம்பட்டியான் தான்.

1 comment:

  1. i agree with your completely.. waste of time, money and energy.

    ReplyDelete