Saturday, April 21, 2012

வெள்ளைச்சாமியோட மரணம் ஒரு ப்ளாக்பேக்- ஹாஸ்டல் தினங்கள்
மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு,சமீபத்தில் மாஸ்டர்ஸ்மலையாளப்படம் பார்த்துச்சலித்தபோது, எண்பதுகளில் வியந்து,மகிழ்ந்து,அழுது, சிரித்து ரசித்த மலையாளப்படங்கள் பெரும் ஏக்கத்தைத் தூண்டும் நினைவாக வந்து போனதை தவிர்க்க முடியவில்லை.

அப்போதெல்லாம் ஸெகண்ட் ஷோ படம் பார்ப்பதென்பது  மிகவும் பிடித்தமானதாய் இருந்தது.

அமெரிக்கன் கல்லூரியின் நான்கு ஹாஸ்டல்களில் ஒன்றான  வாஷ்பர்ன் ஹாலில் நான் இருந்தேன்.

டெர்ர்ர் என்ற வார்த்தையின் மொத்த அர்த்தமாய் எங்கள் வார்டன் ஜான் சகாயம் இருந்தார்.எப்போதுமே தமிழில் பேசமாட்டார்.

நானோ ஒரு விபத்து போல் ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்து விட்டேனே ஒழிய,அவர் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் சதா காலுக்கடியில் ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்துகொண்டே இருப்பேன்.

பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதேஎன்பார்களே அதை சத்தியமாக இந்த சகாயத்திடம்  கசாயத்தைக் குடித்த ஏதாவது ஒரு மாணாக்கன் தான் அனுபவித்து எழுதியிருக்கவேண்டும்.

ஏனெனில் இரவு நேரங்களில் ஹாஸ்டலின் எந்த ஒரு தூணிலிருந்தும், எவ்விதமும் அவர் வெளிப்படுவார் என்கிற பயம் எப்போதும் எங்கள் அடிவயிற்றை கவ்விக்கொண்டே இருந்தது.

அவருக்கும், அப்போது வாட்ச்மேனாக இருந்த குருசாமி அண்ணனுக்கும் டேக்கா குடுத்துவிட்டு இரண்டாவது காட்சி சினிமாவுக்குப்போவதென்பதுதான் எங்களது, அப்போதைய  ’அத்து மீறு அடங்க மறு’ [ சிறுத்தைகள் மன்னிப்பார்களாக]

’மாமனாரின் இன்பவெறி’ அஞ்சரைக்குள்ள வண்டி,பாவம் தம்புராட்டி, போன்றவ்ற்றின் மூலம், மலையாளப்படங்கள் என்றாலே பலான படங்கள் என்ற தவறான மனோபாவம் உருவாகியிருந்த அந்த கால கட்டத்தில் தான் ஆகச்சிறந்த மலையாளப்படங்களும் வெளியாகிக்கொண்டிருந்தன.

சக்தி தியேட்டரில் பாலுமகேந்திரா-இளையராஜா-மம்முட்டி கூட்டணியின், ’யாத்ராபடம் செகண்ட் ஷோ பார்த்துவிட்டு தூக்கம் பறிபோய் நானும்,பிரபாவும் விடியவிடிய பேசிக்கொண்டிருந்ததுஅந்த இரவின் தாக்கத்தோடே, இன்னும் நினைவில் இருக்கிறது,

ஹாஸ்டல் தினங்களிலும்,படிப்பு முடிந்து மும்பையில் வேலை செய்து சென்னை திரும்பிய வரையிலுமான அந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த அற்புதமான மலையாளப் படங்களின் கதைகளையும் அதன் சிறப்பம்சங்களையும் இன்றும் என்னால் நினைவு கூற முடியும்.

கிருஷ்ணகுடியில் ஒரு ப்ரணய காலத்து,  பாலுமகேந்திராவின்,’ஓளங்கள்;’ஊமக்குயில்,பரதனின் ’காற்றத்தே கிளிக்கூடு, மற்றும் பாதேயம்’ப்ரியதர்ஷனின் ‘தாலவட்டம், பத்மராஜனின் ’ நமக்குப்பார்க்கான் முந்திரித்தோப்புகள், ஃபாஸில் ஒரு காதல் காற்றாய் களமிறங்கிய ‘மஞ்ஞில் விரிஞ்ச பூக்கள்,,சினிமா மாமேதை அடூரின் ’மதிலுகள் மற்றும் அனந்தரம்,,சிபிமலயிலின்,’தனியாவர்த்தனம், பரதம்,சத்யன் அந்திக்காடுவின் ‘மழவில் காவடி’ ஜெயராஜின் ‘குடும்பசமேதர், ஒரே உண்மையான சனங்களின் கலைஞன் ஜான் ஆபிரகாமின்’ அம்மா அறியன்’என்று என்னால் ஒரு நூறு படங்களின் பெயர்களைக்கூற முடியும்.


ரொம்ப பழைய பார்ட்டிகிட்ட மாட்டிக்கிட்டமோ என்று நீங்கள் திகைப்பது அறிந்து, இளமைக்காலங்களான ஹாஸ்டல் தினங்களுக்கே வருகிறேன்.

அந்த சமயத்தில் கவிதை,கட்டுரைகளில்,ஸ்கிட் எனப்படும் குட்டி நாடகங்களில் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்து மகிழ,அடிக்கடி எங்களது மெஸ் சாப்பாட்டை மெயின் டிஷ் ஆக எடுத்துக்கொண்டோம்.அவ்வளவு அற்புதமான  எங்களது மெஸ் சாப்பாட்டை அப்புறம் நான் வாழ்நாளில் எங்கும் சாப்பிட்டதில்லை என்பது காலங்கடந்த ஞானம்..

புரோட்டாவுக்கு செமி ட்ரையாக ஒரு மட்டன் மசாலா, அன்லிமிடெட்குஷ்கா, எங்கள் ஹெட்குக் நாயரின் கைப்பக்குவத்தில் எங்களுக்கு நேயர் விருப்பமாக, மற்றவர்களுக்குத்தெரியாமல் ரகஸியமாக வந்துசேரும் முட்டைதோசைகள், மாதக்கடைசிகளில் நடத்தப்பட்ட ஃபீஸ்ட் [விருந்து] என்ற ஒரு அற்புதமான உணவை நோகாமல் தின்றுவிட்டு கிண்டல் அடித்திருக்கிறோம்.

மேற்படி கிண்டலின் ஒரு அம்சமாக,எங்கள் ஹாஸ்டல் விழா ஒன்றுக்காக,அந்த சமயம் ரிலீஸாகியிருந்த பாலுமகேந்திராவின் ‘லேகாயொட மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’ கைத்தழுவி, ‘வெள்ளைச்சாமியோட மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’ என்ற நாடகம் ஒன்றை எழுதி,ஹாஸ்டல் நண்பர்கள் சிலரைத் துன்புறுத்தி ரிகர்சல் தந்து மேடையேற்றினேன்.

நான் படித்த 82-85 சமயத்தில் போஸ்ட் கிராஜுவேட்டில் மட்டும் பெண்களும் இருந்தார்கள்.
எங்கள் கெஞ்சிக்கூத்தாடிய, வேண்டுகோளுக்கு இணங்கி அந்த ஹாஸ்டல் மாணவிகளும் நாடகத்துக்கு வந்திருந்தார்கள்.
நாடகம் துவங்கி பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது.
அன்றைய மெஸ்ஸின் அன்லிமிடட் குஷ்காவுக்காக,நல்ல பசி ஏற்படும் பொருட்டு, எக்ஸர்சைஸில் சில தடிமாடுகள் ஈடுபட்டிருப்பதுபோல் ஒரு காட்சி.
காட்சியில் பல மாணவர்கள் இருந்தாலும், ஒரு டைரக்‌ஷன் டச்சோடு, நன்கு திணவெடுத்த தோள்களையும், முரட்டு கால்களையும் கொண்ட ராஜகோபால் என்ற அண்ணனை நன்கு முன்னிலைப்படுத்தி நிறுத்தியிருந்தேன்.
நாம் நிற்பது மேடை, எதிரில் நம் கல்லூரியின் சீனியர் அக்காக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து, அவரது ஐம்புலன்களிலும் குஷ்காவே ஓடிக்கொண்டிருந்த்தாலோ என்னவோ, தனது லுங்கி அவிழ்ந்து,தரையை முத்தமிட்டது கூட தெரியாமல்,தனது எக்ஸர்சைஸை தொடர்ந்துகொண்டிருந்தார் ராஜகோபால்.
ராஜகோபால் என்கிற கடோத்கஜன் வெறும் ஜட்டியோடு மேடையில் நின்ற ,அந்த திடீர் விபரீதக்காட்சியை, நானே பார்த்து அதிர்ந்தேன் என்கிறபோது, மாணவிகள் எத்தகைய அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள்?வெடிகுண்டு புரளி வந்ததுபோல்,  உடனே அக்காக்கள் ஆடிட்டோரியத்தை விட்டு தெறித்து ஓட, நாடகம் பாதியில் நின்று போனது.
நடந்துமுடிந்துபோன அதிபயங்கர விபரீதத்துக்கு, மறுநாள், வார்டன் ஜான் சஹாயத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது என்று யோசித்த போது எனக்குஅப்போது  வாழவே பிடிக்கவில்லை.

6 comments:

 1. சார்... பின்னிட்டீங்க.. பிரமாதம் சார்.. அருமையான அங்கதம்...அட்டகாசம்...

  ReplyDelete
 2. //தூக்கம் பறிபோய் நானும்,பிரபாவும் விடியவிடிய //

  ஓ! அந்தப் பட்டறையா ...?

  ReplyDelete
 3. ரதிநிர்வேதம் படம் சமீபத்தில் மீண்டும் ரீமேக் ஆகிவந்தபோது நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு தியேட்டருக்கு ஓடினேன் :-(

  அது எப்படிப்பட்ட படம் என்று பெருசுகள் யாராவது முன்பே சொல்லியிருக்கலாம்.

  ReplyDelete
 4. அண்ணன் இப்பதான் ஸ்கூலுக்கு போயிட்டிருக்கதா நெனப்பு. உங்க பொண்ணுங்க ரெண்டு காலேஜ் போயிட்டிருக்க சங்கதியை அவுத்துவிட்டாதான் வழிக்கு வருவீங்க போலருக்கு......பீ கேர்ஃபுல். நான் என்னச்சொன்னேன்....

  ReplyDelete
 5. லேகாயொட மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் - பாலுமகேந்திராவின் படம் இல்லை. அது அவரின் மனைவி ஷோபாவின் தற்கொலையை தழுவி எடுக்கப்பட்டது.

  ReplyDelete