Monday, April 16, 2012

தயவு செய்து உங்கள் அழுகையை நிறுத்துங்கள்.

 
 

 அற்புதங்கள்  எங்கும்  சூழ்ந்துள்ளன...  வாழ்வின்  மீளமுடியாத  துயரத்திலிருந்து  தொடங்குகிறது அற்புதத்திற்கான  முதல் கணம்...எனவே  துயரங்களைக் கொண்டாடுங்கள்....-நம்மாழ்வார்

‘குமுதம்’ கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல், லயோலா கல்லூரியின் ஒரு அரங்கினுள், நேற்று மாலை 6 மணி துவங்கி 9 மணி வரை நிகழ்ந்தது.அவரது தகனத்துக்கு சுமார் 30 பேர் வரை மட்டுமே வந்திருந்த்து கண்டு பெரும் துயரடைந்திருந்தேன்.அதற்கு ஆறுதலாகவோ என்னவோ நேற்றைய கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களும் கிருஷ்ணாவின் ஏனைய நண்பர்களுமாய் 200 பேர்களுக்கும் மேல்  கூடிவிட்டார்கள்.


அரங்கினுள் நுழையும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணாவின் சில புகைப்படங்களைப்பார்த்த போதே கண்ணில் நீர்கோர்க்க ஆரம்பித்து,கிருஷ்ணா கிடாரில் கார்டு பிடித்துக்கொண்டே பாடிய விஷுவல்களைப்பார்த்தபோது வந்த அழுகையை அடக்க பெரும்பாடு பட்டேன்.

பேட்டி எடுத்தது,செய்தி எழுதியது,கதை விவாதத்தில் கலந்துகொண்டு உடன்பணியாற்றியது என்கிற வகையில் கிருஷ்ணாவுக்கு சினிமாக்காரர்கள், எனக்குத்தெரிந்தே, ஒரு 500 பேரையாவது தெரியும்.ஆனால் நேற்று வந்திருந்த சினிமாக்கார்கள் இயக்குனர் லிங்குசாமி,இயக்குனர் எஸ்.எம்.ராஜூ,தோழர் நடிகை ரோகிணி மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த இயக்குனர் ராம் ஆகிய நால்வரே. [ வேறு யாராவது வந்திருந்து நான் குறிப்பிடத்தவறியிருந்தால், என் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்து என்னைப்பழி வாங்குங்கள்.]

பாஸ்கர் சக்தி, தேனி ஈஸ்வர் போன்ற இனிய நண்பர்களை என்றுமே சினிமாக்காரர்களாக பாவிக்க விரும்பவில்லை என்பதால் அந்த பட்டியலில் அவர்கள் இல்லை.[எப்பவுமே என் மேல பாசக்கார பாஸ்கர்சக்தி, கோவமா இருக்கார்னு எவண்டா சொன்னது?]

கிருஷ்ணாவைப்பற்றிய நினைவுகளை அவரது அக்கா உஷா துவக்கி வைக்க, அடுத்து பேச வந்த அவரது அப்பா, பேசியதை விட அதிகம் அழுது உயிரை உருக்கினார்.

இன்னொரு நண்பர், கிருஷ்ணாவின் மேதமையைப்பற்றி குறிப்பிடும்போது,’’ இன்றைய காலகட்டத்தில் சினிமா, இசை,இலக்கியம், பத்திரிகைத்துறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் அரை வேக்காடுகள் மலிந்து விட்ட சூழலில், கிருஷ்ணா போன்ற மேதமைகள் வெளிப்படாமலே மறைந்து போகிற துர்பாக்கிய நிலை குறித்து வேதனைப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு பேச்சுக்களும் கிருஷ்ணாவைப் பற்றிய நினைவுகளை மீட்டெடுத்துக்கொண்டிருக்க, ‘குமுதம்’ எஸ்.ஏ.பி.யின் மகள் கிருஷ்ணா நிகழ்த்திய உரை,நினைவேந்தல் நிகழ்வின் ஆகச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

நான் குமுதத்தில் சுமார் 45 மாதங்கள் வேலை பார்த்திருந்தாலும்,எஸ்.ஏ.பி.யின் மகள் இந்த கிருஷ்ணா ஆச்சியை அலுவலகத்தில் ஒரு வாரமும், அவர்களது வீட்டுக்குச் சென்ற இருமுறையும் மட்டுமே சந்தித்திருக்கிறேன். 

நல்ல பண்பாளர். நமக்கு முதலாளி என்ற உணர்வை ஒருபோதும் ஏற்படுத்தாதவர்.

எடிட்டோரியல் பொறுப்பு ஏற்பதற்காக அலுவலகம் வந்த அந்த ஒரு வாரத்தில் தினமும் கைநிறைய 10 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொண்டு வருவார்.மீட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே, எளிமையான சில கேள்விகளோடு மினி க்விஸ் நடத்துவார். பதில் சொல்பவர்களுக்கு பத்து ரூபாய்.

எங்கள் எடிட்டோரியல் ஆசாமிகளின் அந்த வார அபிராமி தியேட்டர் கேண்டீன் செலவுகள் எல்லாவற்றையுமே ஆச்சியின் அந்த பத்து ரூபாய்கள் பார்த்துக்கொண்டன.

அந்த இனிமையான ஒரு வாரத்துக்குப்பிறகு, அவரது அலுவலகத்தை விட்டே அவர் விரட்டப்பட்ட கதை பழைய கதை. இப்போது அது ஊரெல்லாம் அறிந்த பெருங்கதை.

கிருஷ்ணா குமுதத்துக்குள் எப்படி வந்தார் என்பதை விவரித்த ஆச்சி, ‘இத்தனை ஆண்டுகள் பணி புரிந்த கிருஷ்ணாவுக்கு குமுதத்தில் எங்களால் ஏன் நினைவஞ்சலி  செலுத்த முடியவில்லை என்பதை இங்கே உள்ள பலரும் அறிவீர்கள். ஆனால் அடுத்த ஆண்டு நாங்கள் குமுதத்தில் எப்படி நினைவஞ்சலி செலுத்துகிறோம் என்பதைப்பார்க்கத்தான் போகிறீர்கள் என்பதை சூசகமாகக்குறிப்பிட்டார்.

ஆச்சி குறிப்பிட்டது பற்றி நான் விளக்கம் எதுவும் கொடுக்கப்போவதில்லை. குமுதத்தின் உள்நாட்டு அரசியல் தெரிந்தவர்களுக்கு சுலபமாக இது விளங்கும்.மற்றவர்களுக்கு விளக்க,இது சரியான இடமும், தருணமுமல்ல.

’ஒரு அற்புதமான வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டுபோன கிருஷ்ணாவை நினைத்து பரவசம் மட்டுமே அடையவேண்டுமே ஒழிய, இனியும் யாரும் அவருக்காக அழக்கூடாது’ என்ற கிருஷ்ணா ஆச்சி ஒரு நெகிழ்வான குட்டிக்கதையும் சொன்னார்.

தம் ஒரே குழந்தையின் மேல் பேரன்பு கொண்டிருந்த பெற்றோர்கள் அவர்கள். ஒரு நாள் எதிர்பாராதவிதமாக அந்தக்குழந்தை இறந்து விடுகிறாள்.பெற்றோருக்கோ உலகமே இருண்டு  போனதுபோல் ஆகிறது.வந்த உறவினர்கள் ஆறுதல் சொல்லி திரும்பிப்போய்விட்டார்கள். நாட்கள் நகர்கின்றன.ஆனால் அந்தப்பெற்றோரின் அழுகை கொஞ்சமும் குறைந்த பாடில்லை.

ஒரு நாள் அந்த தந்தையின் நினைவு தப்பி, வேறு ஒரு வெளிதனில் பிரவேசிக்க, அங்கே நூற்றுக்கணக்கில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன, இன்னும் சற்று உற்று நோக்குகையில் தங்கள் குழந்தையும் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதை அந்த தந்தை கண்டார்.

சற்று நேரத்தில் இருள் சூழத்துவங்க, அந்தக்குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு தங்கள் இருப்பிடம் நோக்கி நகரத்துவங்கினர்.

அதன்படியே இவர்களது குழந்தையும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முயல அது தொடர்ந்து அணைந்துகொண்டே இருந்தது.

தந்தைக்கோ ஆற்றமாட்டாத ஆதங்கம்.  மகளிடம் கேட்கிறார்,’மகளே மற்ற பிள்ளைகளெல்லாம்  மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு, தங்கள் இருப்பிடம் நோக்கி சென்று விட்டார்கள்.உனக்கு மட்டும் ஏன் அது அணைந்து அணைந்து போகிறது?

அதற்கு அந்த மகள் சொன்னாள்,’’ அப்பா மற்றவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக போதுமான அளவுக்கு அழுதுவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்க போய்விட்டார்கள்.ஆனால் நீங்களும் அம்மாவும் பலநாட்களாகியும் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறீர்கள்.

 தயவு செய்து உங்கள் அழுகையை நிறுத்துங்கள்.

உங்கள் கண்ணீர்தான் தொடர்ந்து என் மெழுகுவர்த்தியை அணைத்துக்கொண்டே இருக்கிறது.


 கிருஷ்ணாவின் மறைவு குறித்த இதற்கு முந்தின பதிவைப் படிக்க...http://ohoproduction.blogspot.com/2012/04/blog-post_05.html
 

3 comments:

 1. ஜூராசிக் பார்க் வெளிவந்திருந்த சமயத்தில் ராணிமுத்துவில் வெளியான ஒரு நாவல். Drift Theoryயை அடிப்படையாக கொண்டு டைனோசர்கள், ராட்சத பறவைகள் வாழும் தீவு, அந்த தீவில் வசிக்கும் ஒரு இளைஞிக்கும், ஒரு ஆராய்சியாளனுக்கும் இடையே உண்டான ஒரு காதல் என்று அப்படியே இன்றைய அவதார் கதையை எழுதியிருந்தார் கிருஷ்ணா! டா வின்சியின் vision பற்றித் தெரிந்து கொண்டுதான் பெயரில் சேர்த்துக் கொண்டார் போல!

  படைப்பாளிகள் படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!

  ReplyDelete
 2. குமுதம் ஆச்சி சொன்ன கதை சரி தான். ஆனால் எப்போதுமே நம் வருத்தம் இறந்தவர் குறித்தல்ல. இறப்பவர் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைகிறார். நம் வருத்தம் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீதே. குறிப்பாய் சம்பாதிக்கும் ஒரு நபர் இறந்து ஒரு குடும்பம் படும் வேதனை கொடியது

  கிருஷ்ணாவை மட்டுமல்ல மனிதர்கள் யாரையுமே உயிரோடு இருக்கும் போது அவருக்குண்டான மதிப்பை, சரியான மரியாதையை தர தவறி விடுகிறோம். ஒருவரை எந்த அளவு நேசிக்கிறோம் , அவர் மீது எந்த அளவு மதிப்பு வைத்துள்ளோம் என்பதை அவர் இறந்த பிறகு சொல்லி சொல்லி ஆத்து போகிறோமே அன்றி அவர் இருக்கும் போதே சொன்னால் அந்த மனிதர் எவ்வளவு மகிழ்வார் !

  ReplyDelete
 3. நான் பாஸ்கர்சக்தி(முதலில் ஒரு தகவல். நான் உங்கள் ரசிகன் முத்து. உங்கள் மீது எனக்கு கோபமா? மிக மிக தவறான தகவல்)
  நேற்றைய நிகழ்வு என்னையும் கலங்க வைத்தது முத்து. எனக்கும் கிருஷ்ணாவுக்கும் பொதுவான நண்பர்கள் நிறையப் பேர் இருந்தும் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்படாமல் போனது வியப்பாகவே இருக்கிறது. இந்த மனிதனுடன் பழகாது போய்விட்டோமே என்கிற வருத்தம் நேற்று எனக்கு ஏற்பட்டது. அவரைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாத நான் நேற்று மிக முக்கியமான வேலை ஒன்றை விட்டு விட்டு கூட்டத்துக்கு வந்ததற்கு நீங்களும், செந்தமிழனும், கார்ட்டூனிஸ்ட் பாலாவும் எழுதிய பதிவுகளே காரணம். இத்தனை பேராலும் நேசிக்கப் பட்ட ஒரு மனிதனை இந்த சந்தர்ப்பத்திலாவது அறிந்துகொள்ள வேண்டும் என்று கிளம்பி வந்தேன். அங்கே வந்திருந்த அத்தனை பேரும் கிருஷ்ணா மீது கொண்டிருந்த அன்பை உணர முடிந்தது... எல்லோரும் இதயத்திலிருந்து பேசினார்கள். கிருஷ்ணா ஆச்சி, மதன் , செந்தமிழன், ஷாஜி, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பேசியது மனதைத் தொட்டது...நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கிருஷ்ணாவின் சகோதரியும் தந்தையும் பேசும் போது மிகுந்த மன வேதனைக்கு ஆட்பட்டேன். எதற்காக இந்த நிகழ்ச்சி என்று கூடத் தோன்றியது. அதன் பின் ராம், `கிருஷ்ணாவின் மகள் நேயா நாளை வளர்ந்து வந்து இதனைப் பார்க்கையில் தன் தந்தை எப்படியானவர் என்பதை புரிந்து கொள்வதற்காகவே இந்த நிகழ்வு’ என்று விளக்கியபோது மனம் சமாதானமடைந்தது...இந் நிகழ்ச்சி மிக முக்கியமானது. ஒரு சக மனிதனை, கலைஞனை நேசித்த எல்லாரும் கூடி அவனை நினைவு கூர்ந்த இந்த நிகழ்ச்சி கிருஷ்ணாவின் வாழ்க்கைக்கும் குணத்துக்கும் கிடைத்த அங்கீகாரம். இந் நிகழ்வின் பின்னணியாக இருந்து உழைத்த ராமும் மற்ற நண்பர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
  திரையில் லூசுப் பொண்ணே பாடலை கிடார் மீட்டி கிருஷ்ணா பாட அவரது மகள் நேயா சிரித்தபடி ஆடும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. எதிரே ஜெயராணியின் மடியில் அமர்ந்திருந்த நேயாவுக்கு அந்தக் காட்சியைப் பார்த்த்தும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அதை அம்மாவிடம் காட்டி காட்டி அவள் சிரிக்கிறாள். அதைப் பார்க்கையில் என் மனதில் ஏற்பட்ட உணர்வை எந்த வார்த்தையாலும் விளக்கி விட முடியாது.

  ReplyDelete