Thursday, April 5, 2012

‘கேட்டபோதெல்லாம் கொடுத்தவனே கிருஷ்ணா கிருஷ்ணா’



 


  
                                                                                                                                                            ’நெஞ்சு வெடித்துச்சிதறின வேளையெல்லாம் பொறுக்கியெடுத்து செய்துகொண்டோம் இன்னொன்றை’- எபன் என்கிற மலைச்சாமி

நேற்று மாலை ஒரு நண்பர் போன் செய்து , ’’ சார் ஒரு ரூமர் மாதிரிதான் கேள்விப்பட்டேன். ஆனா கொஞ்ச நாளாவே உடம்பு முடியாமதான் இருந்தார்’’ என்று பேச ஆரம்பித்தபோதே இன் பாக்ஸில் ‘கிருஷ்ணா இறந்துவிட்டார்’ என்ற குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

அந்தச்செய்தியைப் படித்ததும் பாலுமகேந்திராவின் ‘.சந்தியாராகம்’.படக்காட்சி ஒன்று ஞாபகம் வந்துவிட்டுப்போனது. சொக்கலிங்க பாகவதர் வயசை ஒத்த ராமசாமி என்பவர் இறந்திருப்பார். அதைப்பற்றி அவர்கள் பேசும்போதே அடுத்து நாமதான் என்ற மரண பயம் அவர்களைக் கவ்வ ஆரம்பித்திருக்கும்.அப்படியான ஒரு மரண பயத்தோடுதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் கிருஷ்ணா.

குமுதத்தை விட்டு வெளியே வந்த இந்த எட்டு ஆண்டுகளில், கிருஷ்ணா உட்பட யாருடனும் நான்  பெரிய தொடர்பில் இருக்கவில்லை. ‘இப்பதான் கிருஷ்ணா வந்துட்டுப்போனார். உங்களை ரொம்ப விசாரிச்சார்’ என்று ‘ரேணிகுண்டா’ டைரக்டர் பன்னீர்ச்செல்வம் மாதிரி யாராவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் கிருஷ்ணாவையும் என்னையும் சந்திக்கவிடாமல் காலம் ஏதோ ஒருவிதமான கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்தது.

சுமார் பத்து தினங்கள் முன்புதான் போனில் வந்து ‘யார்ன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்’ என்று சவால் விட்டபடி பேச்சை ஆரம்பித்தார் கிருஷ்ணா.அந்த  நெடிய பேச்சின் முடிவில், மிக விரைவில் இருவரும் சந்திப்பது என்று பரஸ்பரம் உறுதி எடுத்துக்கொண்டோம். அந்த சந்திப்பு நிகழப்போகும்  இடம் ஒரு  மின்சார சுடுகாடு என்று யாரே அறிவார்?

குமுதத்தில் நான் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, எனக்கு மிகவும் நெருக்கமானவராக ஆகியிருந்தவர் கிருஷ்ணா. நம்மிடம் வேலை வாங்கும்போது அதில் எப்போதும் நட்புமணம் வீசும். நான் உதவி இயக்குனராக வேலை செய்து நொந்த கதையெல்லாம் அவரிடம் மட்டுமே ஒரு வரி விடாமல் சொல்லியிருக்கிறேன்.’ தங்குற இடம் ஃபிரீ, 15 ரூபாயில மூனு வேலை சாப்பிடுற டெக்னிக்கெல்லாம் நான்  சொல்லும்போது, ‘இத ஒரு சிறு கதையா எழுதிக்குடுங்க. என்னோட இஷ்யூல போடுறேன்’ என்பார்.

மாதக்கடைசிகளில் என்னைப்போன்ற பலருக்கு கேட்டபோதெல்லாம் கொடுக்கிற ஏ.டி.எம் கிருஷ்ணா.

கிருஷ்ணாவுக்கு சினிமாமேல் இருந்த காதலைப்போல் வேறு எவரிடமும் சத்தியமாக நான் பார்த்ததில்லை.ஆனால் அது அவருக்கு கைகூடாமல் போனது ஒரு பெரும் துரதிர்ஷ்டமே.சினிமாவுக்கு அடுத்தபடியாக கிருஷ்ணாவின் சிலாகிப்புக்கு அதிகம் ஆளாவது எழுத்தாளர் சுஜாதா. எனக்கெல்லாம் கிருஷ்ணாவே ஒரு குட்டி சுஜாதாவாகத்தான் தெரிந்தார்.

’குமுதம்’ மாதவருவாய் தந்த நம்பிக்கையில் அங்கு வேலையில் இருக்கும்போதுதான் நான் திருமணம் செய்துகொண்டேன். ஒரு ஏ4 சைஸ் பேப்பரை 4 பீஸ்களாக கட் பண்ணி,’ எனக்கு விருதுநகர்ல கல்யாணம். வந்தா உங்களுக்கும் செலவு எனக்கும் செலவு . இங்கருந்தே வாழ்த்துங்க’ என்றுதான் கையால் எழுதப்பட்ட  என் கல்யாண அழைப்பிதழே இருந்தது. கிருஷ்ணா உட்பட அனைவருமே அதை ரசித்தார்கள்.

82- ம் ஆண்டே வீட்டை விட்டு வெளியேறி,மிக நீண்ட பேச்சிலர் வாழ்க்கையில் எனக்கு சமையல் கைவந்த கலை ஆகியிருந்ததால், என் மனைவியை உற்சாகப்படுத்தும்பொருட்டு எப்போதுமே சனி ஞாயிறுகளின் மதியச்சமையல் என்னுடையதாகவே இருக்கும்.

இந்த தகவலை நான் சொன்னவுடன் ஒரு சனியன்று கிண்டல் செய்தபடியே என் சமையலை சாப்பிட வந்த, கிருஷ்ணா, ‘’அட  முத்து, நீங்க எழுதுற நியூஸ விட உங்க சமையல் பிரமாதம் ‘என்றபடி பெரும்பாலான சனி ஞாயிறுகளை என் சமையலோடு  கழித்த நாட்கள் இப்போது கண்ணீர்கலந்த ஞாபகங்களாய் வழிகின்றன.

அடுத்து, பத்திரிகை வேலையை விட்டவுடன் ஏனோ சமைக்கிற பழக்கத்தையும் விட்டுவிட்டிருந்தேன்.

கடந்தவாரம், கிருஷ்ணா போன் பண்ணார்.சீக்கிரமே மீட் பண்ணலாம்னு சொல்லியிருக்கார்’ என்று என் மனைவியிடம் சொன்னதுமே, ‘அப்பல்லாம் நீங்க சனி ஞாயிறு லஞ்ச் எவ்வளவு ஆர்வமா பண்ணுவீங்க.இப்ப சுத்தமா விட்டுட்டீங்க. அவர் வர்ற அன்னிக்காவது சமைங்கப்பா . உங்க சமையல் அவருக்கு ரொம்ப புடிக்கும்’ என்றாள் என் மனைவி.

’’வர்ற சனி ஞாயிறு சத்தியமா நான் தான் சமைக்கப்போறேன். ப்ளீஸ் சாப்பிட வாங்க கிருஷ்ணா’’

**********************************************************************
கிருஷ்ணா...

இப்படி ஒரு நள்ளிரவில் இச்செய்தி வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அரைமணிக்கு முன் பாரதி என்னை தொலைபேசியில் எழுப்பி ‘கிருஷ்ணா செத்துட்டாராம்ப்பா’ என்று சொன்னபோது ஒருகணம் நினைவு தப்பி மீண்டேன். ‘போதும் கிருஷ்ணா... பத்திரிகை போதும்... நீங்களும் சீக்கிரம் வாங்க...’ என்று குமுதம் வாசலில் அப்போதைய அபிராமி தியேட்டரின் மரநிழலில் உங்களிடம் விடைபெற்று வந்தபிறகு... இப்போது பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதற்குப் பிறகு ஒரு நாள் ஒரு பொழுதுகூட உங்களை சந்திக்கவில்லை. ஆனால் குமுதத்தில் நாம் இணைந்து பணியாற்றிய அந்த நாட்கள்... ஒரு சந்தர்ப்பவாத சூழலுக்கு அப்பால் நம்முள் இழையோடிய நட்பு, முக்கியமாக ரேவதியும் நீங்களும் மீண்டும் இணைந்த அந்தக் காலம்... (பின்னர் உங்களுக்குள் நேர்ந்த பிரிவு நான் அறியாதது) குமுதம் மில்லெனியம் இதழும் குமுதம்.காமின் தோற்றமும் நம் இரவுகளை சூறையாடிய தருணம்... ஒவ்வொருநாள் காலையும் என்னை எதிர்கொள்ளும் முதல் விநாடியில் உங்கள் பார்வையில் தொற்றிக்கொள்ளும் பரவசம்... எத்தனை இறுக்கமான சூழலிலும் புன்னகை மாறாத உங்கள் முகம்...

இனி உங்களைப் பார்க்கவே முடியாதா கிருஷ்ணா...?
அந்த மில்லெனியம் ஆண்டுக்கு இனி ஒருமுறை நாம் திரும்பவே முடியாதா...?
பன்னிரெண்டு ஆண்டுகள் போனதே தெரியவில்லையே கிருஷ்ணா...?
அழுகிறேன் கிருஷ்ணா... ரொம்ப...!
 நண்பர் பாபு யோகேஷ்வரன் கிருஷ்ணாவின் நினைவாக.....



8 comments:

  1. அண்ணே,
    சத்தியமா கண்ணு கலங்கியவாறே இந்த கமென்ட் இடுகிறேன். னென்று சாயந்திரம் இந்த தகவலை படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் கேள்விப்பட்டேன். அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலி.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போலவே தாமதமாக தகவல் அறிந்து நிறைய பேர் போன் செய்கிறார்கள். நான் உட்பட யாராவது ஒருவர் பொறுப்பெடுத்து நண்பர்களுக்கு முறைப்படி தகவல் பரிமாறியிருக்கலாம்.

      Delete
  2. கண் கலங்க வைத்த பதிவு..ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி, உங்கள் பிரார்த்தனைக்கு.

      Delete
  3. கண் கலங்க வைத்த பதிவு..ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

    Reply

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா பன்முகம் கொண்ட நல்ல பத்திரிகையாளர்.உங்களைப்போலவே தனக்குக் கீழே வேலை செய்த நிருபர்களிடம் எப்போதும் நட்பு முகத்தோடே இருப்பவர்.அவருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டம் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை?

      Delete
  4. ஒஹோ சார்,

    மிகவும் வருத்தமடைய செய்யும் செய்தி, ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும் குமுதம் சுருட்டல் விவகாரங்களுக்கு பிறகு ,அப்பத்திரிக்கை மீதும், அதில் வேலை செய்பவர்கள் மீதும் அவ நம்பிக்கையும்,எரிச்சலுமே எனக்கு வரும், இந்நேரத்தில் உங்கள் மூலமாக கிருஷ்ணா டாவின்சி அதில் இருந்து மாறுபட்ட நல்ல மனிதர் என அறிய நேர்ந்தது மிகவும் நன்றி.ஏன் எனில் உங்கள் பதிவைப்படிக்கவில்லை எனில் செய்திக்கேள்விப்பட்டாலும் இவரும் அப்படித்தான் என்ற எதிர்மறையான எண்ணத்துடன் கடந்தே சென்று இருப்பேன்.வாசகன் என்றளவில் வெளி வட்டத்தில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாதல்லவா.

    ReplyDelete