Friday, April 24, 2015

’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’

நட்சத்திர வேட்டை
’ரூபச்சித்திர மாமரக்கிளியே’
‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’
கதாநாயகி வயது 21-25. சிவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்லை.

அவரது இரு தோழிகள். அதே வயசு. ரேடியோ ஜாக்கிங்க மாதிரி வளவளன்னு பேசனும்.
ஒரு அம்மா கேரக்டர். கொஞ்சம் ஸ்போர்டிவான மம்மியா வேணும்.
ஒரு அக்கா. தம்பி எப்ப கேட்டாலும் முகம் சுழிக்காம நகையை கழட்டிக்கொடுக்கிற அக்கா.
செகண்ட் ஹீரோ 22-30 வயசுக்குள்ள. நகரத்து வெவரமான பையன்.
தன்னை இன்னும் யூத்துன்னு நம்பிக்கிட்டிருக்க ஒரு நாப்பது வயசு அங்கிள்.
ஒரு வில்லன் ரோல். போலீஸா இருந்து டிஸ்மிஸ் ஆகி பொறுக்கியா ஆனவரு.
இன்னொரு 20 வயசு இளம் ஹீரோ. பெங்களூர் பையன். கன்னடம் தெரிஞ்சிருந்தா நல்லது.
‘பழைய பன்னீர்ச்செல்வமா நீ வரனும்’ங்குற கெத்து காட்டுற 50 வயசு தெனாவெட்டு மனிதர்.
ஸ்டில் ஷூட், படப்பிடிப்பு தேதிகள் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும்...
Casting call for Tamil Feature Film
Title: Rooba Chithira Mamara Kizhiye
Production Banner: Movie Funding Network
Director: Muthuramalingan
Role#1: "Heroine", Female, Age around 21-25, to play an village based college girl who is very ambitious.

role 2and 3#and two friends charactor aged between 22- 25.
role4# one mother role expected around 35 -45.

role 5# and one sister role aged between 30-35.

Role#6: "2nd Hero". Male, Age 22-30, Fair, good looking guy needed for a "city raised" romantic hero role.

Role#7: Character role, Male, Age 40+, An middle aged, unmarried, man still living in his youth days, mingling with boys of 20s age group.

Role#8: "Cop Turned Pimp" Role, Male, Age 30-40, physically strong build, with some heavy hyderabadhi accent. Fluency in Telugu & Tamil is a plus.

Role#9: Character Role, Male, teenage looking boy, Age below 20, to play the dirty street smart kid. Banagalore based tamil boy is preferred. Should be able to speak kannada along with tamil.

Role#10: Character Role, Male, Above 50, we are looking someone who looks like and can perform like the legendary actor thilagan.

for contact;

movie.funding.network@gmail.com

muthuramalingam30@gmail.com

ohoproductionss@gmail.com

Friday, April 10, 2015

’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’



’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா?’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என்று சொல்கிற அளவுக்கு, எழுதுவதென்பது அவ்வளவு சோம்பலாய் இருக்கிறது.

தினமும் சகட்டுமேனிக்கு எழுதிக்குவிக்கிற நபர்களைப்பார்த்தால் கெட்ட கோபம் வருகிறது. ’எழுதுவியா எழுதுவியா தெனமும் எழுதுவியா?’ என்று அவர்களது நடுமண்டையில் நங்கு நங்கென்று நாலு குட்டு வைக்க கை துடியாய் துடிக்கிறது. வா.மணிகண்டன், அ.ராமசாமி போன்ற நண்பர்களும் அந்தப்பட்டியலில் இருப்பதால் அப்படிப்பட்ட செயலில் இப்போதைக்கு இறங்கமுடியாது.


சரி அதைப்பிறகு யோசிப்போம். ஒரு சிறிய ஸ்டார்ட்டிங் ட்ரபிளைக் கடந்து எனது அடுத்த படவேலைகளை இன்று முதல் தொடங்கிவிட்டேன் நண்பர்களே. கதை மற்ற விபரங்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிக்கிறேன்.

முதல் படம் போலவே இந்தப்படமும் ஏழ்மையான பட்ஜெட் என்றாலும் முதல் படத்தில் கற்றுக்கொண்ட பாடத்தால் அதை விட பலமடங்கு சிறப்பாக இப்படத்தை இயக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை.

இப்படம் தொடர்பாக நான் இனி தொடர்ந்து எழுதுவேன்.

இதில் என்னுடன் உதவி இயக்குநராக, தொழில் நுட்பக்கலைஞராக, நடிகர்களாக தோள் கொடுக்க விரும்புபவர்கள் எனது மெயில் ஐடிகளில் தொடர்பு கொள்ளுங்கள்.

புகைப்படங்களுடன் [பத்து வருஷத்துக்கு முந்தி எடுத்ததெல்லாம் அனுப்பினா இ.பி.கோ.செக்‌ஷன் 418-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனா இது எனக்குப் பொருந்தாது.] கூடுமானவரை உங்களைப்பற்றிய அதிக விபரங்களை அளித்து விண்ணப்பிக்கவும். நான் எனது அலைபேசி எண்ணை உங்களுக்குத் தரும்வரை போனில் தொடர்புகொள்ள முயலவேண்டாம்.

நாளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்

எனது மெயில் ஐடிகள்
muthuramalingam30@gmail.com
ohoproductionss@gmail.com
movie.funding.network@gmail.com



Monday, February 9, 2015

’ஸ்டார்ட் கட் கத்தரிக்காய்... ஸ்டார்ட் கட் வெண்டைக்காய்’


‘இனி யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம்
என்ன செய்கிறாய் என்று...
எனக்கொரு வேலை கிடைத்துவிட்டது’ 

இந்த அர்த்தம் தொனிக்க நீண்ட காலத்துக்கு முன்பு வண்ணதாசன்[?] ஒரு கவிதை எழுதியிருப்பார்.

இப்படிப்பட்ட கேள்விகளை, விசாரிப்புகளை நண்பர்களிடமிருந்து, நலம் விரும்பிகளிடமிருந்து, தெரிந்தவர்களிடமிருந்து, அன்றுதான் அறிந்தவர்களிடமிருந்து என்று பலமுனைகளில் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்டே ஆகவேண்டும்.கோப்பைகளுக்கு அடுத்தபடியாக  கேள்விகளால் நிரம்பியது வாழ்க்கை.’ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை?’ நான்’ என்ற எண்ணம் கொண்ட நம்பியார்கள் வாழ்ந்ததில்லை.

கடந்த ஒரு மாதமாய் அமைதியாய் இருந்தது தவிர்த்து, எனது இரண்டாவது பட நிலவரம் குறித்து தொடர்ந்து முகநூலிலும், இந்த ஓஹோவிலும் எழுதிவந்தாலும் போனிலும் நேரிலுமாய் நண்பர்களிடமிருந்து
நூற்றுக்கணக்கில் கேள்விகள் வருகின்றன. அதிக பட்சமாய் கேட்கப்படும் கேள்வி ‘எப்ப ஷூட்டிங். எனக்கு நடிக்க சான்ஸ் இருக்கா?தான். ‘இருக்கும்...இல்லாம எப்படி இருக்கும்?’- அப்போதைக்கு எனது பதில் இதுதான்.

படவேலைகள் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்து வருகின்றன. இனிமேல் கேள்விகளுக்கு இடமளிக்காத வண்ணம் என்ன நடக்கிறதென்று தொடர்ந்து எழுதியே தீருவேன். ஏனெனில் வேறு வழியின்றி, சில தினங்களுக்கு முன்பு, என்னையும் எழுத்தாளர்கள் பட்டியலில் நானே சேர்த்துக்கொண்டேன்.
[சினிமாக்காரன் சாலை... - 'நல்லா பாத்துக்கங்க, நானும் இப்போ ரவுடிதான்!'

Read more at: http://tamil.filmibeat.com/cinemaakkaran-saalai/cinemakkaran-salai-new-series-on-tamil-cinema-032839.html ]

மார்ச் 1 முதல் 24 மணிநேர சினிமா வேலைதான். உதவி இயக்குநர்கள், நடிக்கவிரும்புபவர்கள், மற்ற பங்களிப்பாளர்கள் யார் தொடர்புகொண்டாலும் உடனே ரெஸ்பாண்ட் பண்ணுவேன்.

முதலில் அந்த ஒரு மாத அமைதிக்கு விளக்கம் சொல்லிவிடுகிறேன்.

நமது’மூவிஃபண்டிங்’  அலுவலகத்தில் புழங்கும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து உணவுச்செலவு அதிகமானது. எங்களது இரண்டும் சிக்கன பட்ஜெட் படங்களாச்சே? அதுகுறித்து நானும் ஜெய்லானி சாரும் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியே சாப்பாடு எடுப்பதற்குப் பதில் நாமே ஒரு மெஸ் துவங்கினால் என்ன என்ற யோசனையை ஜெய்லானி சார் முன்வைக்க, சிலபல ஆலோசனைகளுக்குப்பிறகு ‘வீட்டுச்சாப்பாடுhttp://veettusappadu.com/  என்ற ஒரு ’கண்ணுக்குத்தெரியாத’ மெஸ் ஒன்றை

ஆரம்பித்தோம். அதற்கு முதல் கஸ்டமர்கள் நாங்கள்தான்.முதல் வெற்றியாக எங்கள் அலுவலக உணவுச்செலவு பாதியானது. அடுத்த வெற்றி முகநூல் நண்பர்கள் ஆதரவுடன், வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கு முன்பே,  அது மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிக்க, சிக்கன திட்டத்தின் பலிகடாவாக, கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல், கடந்த ஒரு மாதமும் என்னையே காய்கறிகள் வெட்டவைத்தார்கள்.


‘ஸ்டார்ட் கட்’ சொல்லவேண்டிய இந்தக்கைகள் கடந்த முப்பது நாளும்
‘ஸ்டார் கட் கத்தரிக்காய், ‘ஸ்டார்ட் கட் வெண்டைக்காய், ஸ்டாப் அடுத்து அவசரமா கட் வெங்காயம்’... என்று பெரும் அநீதியாக நடந்தது.

 ’எழுத்தாளர் வெங்காயம் நல்லாத்தான் வெட்றாரு’ என்று சமையல் அம்மணிகள் நக்கல் விட்டார்கள். விரல்கள் பத்தும் கதறி அழுதன. ’ஏலி ஏலி லாமா சபக்தானி’ என்று ஏசுவை அழைத்தேன். யாருக்கும் கேட்டுவிடாதபடி ‘தென்பாண்டிச்சீமையிலே’ வை மனசுக்குள் சன்னமாய்ப் பாடித்தேற்றிக்கொண்டேன்.  தினமும் குறைந்தது 20 கிலோ காய்கள். அதில் 5கிலோ வெங்காயம் வெட்டி, ஒரு ஏழை எழுத்தாளனாகிய நான் விட்ட கண்ணீருக்கு ஜெய்லானி சாரும் இந்த உலகமும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இப்போது ‘வீட்டுச்சாப்பாடு’ நன்கு சூடு பிடித்துவிட்ட நிலையில், காய் வெட்டும் வேலையிலிருந்து அனைத்து வேலைகளுக்கும் ஊழியர்கள் நியமித்து விட்டு, ‘வீட்டுச்சாப்பாடு’ தன் சொந்தக்காலில் நிற்க ஆரம்பிக்க, பட வேலைகளைத் துவங்கிவிட்டோம்.

என்றாவது ஒருநாள், என் சொந்தக்கதையை சினிமாவாக எடுக்கும்போது, இந்த அனுபவம் நல்ல காட்சிகளாக மாறி, அது சமூகத்துக்கு குறியீடுகளுடன் சில செய்திகளைச் சொல்லும் என்று இப்போதைக்கு ஆறுதல் அடைந்துகொண்டேன்.வேற வழி?

ஒருவழியாக பீர்க்கங்காய் கட்டிங்கிலிருந்து ஃபிலிம் கட்டிங்குக்கு ஷிஃப்ட் ஆயாச்சி. ALL IS WELL.

Wednesday, January 21, 2015

ப்ளீஸ் நோட் திஸ் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி

யாரை, என்னத்தை, எப்போ,எங்கே எப்படி, எதுக்கு எரிப்பார்கள் என்று தெரிந்துகொள்ளமுடியாத, வானத்துக்கு கீழே உள்ள அத்தனை கெட்ட கிரகங்களும் கூடியிருந்து கொட்டமடிக்கும் இடம் என்பதால் பெரும்பாலும் நான் புத்தக கண்காட்சிகள் பக்கம் போவதே இல்லை.

இன்னொரு காரணம் இல்லக்கியவாதிகள் கூடியிருக்கும் இடத்தில் நமக்கு கண்டிப்பாக வேலையில்லை. கல்லூரி நாட்களிலேயே தகுதிக்கு மீறி தாடிவளர்த்து, ஜோல்னா பையில் ஆத்மா நாம், ஆதவன், லா.ச.ரா, அசோகமித்திரன்,ஜி.நாகராஜன் மற்றும் ‘அன்னம் விடு தூதுகளுடன் டயர்டாகுற அளவுக்கு அலைஞ்சாச்சி.

இப்படி போவதில்லை என்று எழுத ஆரம்பிப்பதே போனதைப் பற்றி என்னத்தையோ எழுதத்தான் என்பது என்னத்தே கன்னையா உட்பட எல்லோருக்கும் தெரியும்.
இனியும் கொண்டுகொலையெடுக்காமல் மேட்டருக்கு வருகிறேன்...

கடந்த சனியன்று மாலை சுமார் ஏழு மணியளவில் புத்தகக்கண்காட்சிக்கு போயிருந்தேன்.

ஒரே நோக்கம் முகநூல் மூலம் பரிச்சயமான எழுத்தாளர் வா.மணிகண்டனை சந்திப்பது. அவரை முகநூலில் பார்க்கும்போதெல்லாம் ‘முந்தானை முடிச்சு’ பாக்கியராஜ் ஏன் என் நினைவுக்கு வருகிறார் என்று சொல்லத்தெரியவில்லை. ஒருவேளை இதற்கு தக்க பதில் மணிகண்டனிடம் இருக்கலாம்.

அவருடைய முகநூல் ஸ்டேட்டஸ்களையும், ‘நிசப்தம்’ ப்ளாக்கையும் ரெகுலராக வாசிப்பதுண்டு. அவரது அறக்கட்டளை குறித்தும் ஓரளவு அறிந்ததுண்டு.

நேரில் சந்தித்தது அதுதான் முதல்முறை. அவர் சொன்ன ஸ்டால் நம்பரை நோக்கி நடந்தபோது முதலில் என் பார்வையில் பட்டவர் இலக்கிய உலகின் வெடிகுண்டு முருகேஷன் என்று அழைக்கப்படும் வேடியப்பன். அவருக்குப் பக்கத்தில் வேஷ்டி சகிதமாக வெண் புன்னகையுடன் வரவேற்றார் மணிகண்டன்.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப்பின் அவரது சிறுகதைத்தொகுப்பான ‘லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்’ மற்றும் கட்டுரைத்தொகுப்பான ‘மசால்தோசை 38 ரூபாய்’ ஆகிய புத்தகங்களைத் தந்தார்.
காசு கொடுத்தபோது வாங்க மறுத்தார். ரொம்ப வற்புறுத்தி கொடுக்க நான் முனையவில்லை.காரணம் அன்று பர்ஸில் ஒரு குவார்ட்டர் மற்றும் சிகரட் பாக்கெட் வாங்கும் அளவுக்கே காசு இருந்தது. இன்னொரு காரணம் மணிகண்டன் சாஃப்ட்வேர் துறையில் சம்பாதித்துக்கொண்டே பார்ட் டைமாக எழுதுபவர். சாஃப்ட்வேர் எழுத்தாளர்கள் பற்றி ஹார்ட்வேர் அபிப்ராயம் கொண்டவன் நான்.[ ப்ளீஸ் நோட் இட் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி.]

அன்று இரவு சன் டி.வி விவாத மேடைக்கு ’வா’ என்று மணிகண்டனுக்கு திடீர் அழைப்பு வந்ததால் ‘இரவு வெளிய போகலாம்’ என்று அவர் சொல்லியிருந்த ’ரகசியத்திட்டம்’ தள்ளிப்போடப்பட்டு, ஸ்டாலை விட்டு விரைந்தே வெளியே வந்தேன்.

தோழர் ரேவதி தவிர அன்று இலக்கியவாதிகள் யார் கண்ணிலும் படாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணிய போது ‘ஆண்டவன் இருக்காண்டா கொமாரு’ என்று  சொல்லிக்கொண்டேன்.

மணிகண்டனை சந்திக்கச்சென்றதும், அவரது புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததும் ஒரு ‘காரணமாகத்தான்’.

மறுநாள் ஞாயிறன்று முழுமூச்சாக இரண்டு புத்தகங்களையும் வாசித்துமுடித்தவுடன் மணிகண்டனுக்கு நான் அனுப்பிய மெயில் இது...

அன்புள்ள மணிகண்டன்
நேற்று ‘மசால் தோசையும் இன்று ‘மாரியப்பனையும் வாசித்து முடித்தேன். மொத்த எழுத்துக்களையும் மனசுக்கு நெருக்கமாக உணரமுடிந்தது. இரண்டின் எல்லா எழுத்துக்களிலுமே நீங்கள் இருந்துகொண்டே இருப்பதால் உங்கள் ‘பயஃகிராபி’ படித்தது போல ஒரு உணர்வு. குறிப்பாக மசால்தோசை பதிவுகளை சிறுகதைகள் போலவே சொல்லியிருப்பது ஆச்சர்யமூட்டியது. எதையும் நீட்டி முழக்காமல் கொஞ்சமே கொஞ்சமாக எழுத வாய்த்திருப்பது வரம். சுஜாதா உங்களுக்குள் ஸ்ட்ராங்காக குடியிருக்கிறார்.

சமீப வருடங்களில் நான் வாசிக்கும் பழக்கத்தை ஏறத்தாழ துறந்திருந்தேன். ‘மானசரோவர்’ பாட்டிசைக்கும் பையன்கள்’ குட்டி இளவரசன்’ அந்நியன்’ ஜமீலா’ போன்ற சிலவற்றை அடிக்கடி படிப்பேன். மற்றபடி புது எழுத்துக்கள் அவ்வளவாக வாசிக்க முடியவில்லை அல்லது மனநிலை இடம் தரவில்லை என்றும் சொல்லலாம்.
உங்கள் இந்த புத்தகங்கள் ’காரணமாக’ வாசிக்க ஆரம்பித்தது. உங்கள் ப்ளாக் ரெகுலராக படித்திருந்தும் இவற்றை எப்படி மிஸ் பண்ணினேன். இப்படி எத்தனை சமீபத்திய நல்ல புத்தகங்களை படிக்காமல் விட்டிருக்கிறேன் என்றொரு மெல்லிய குற்ற உணர்வுக்கு ஆளானது உண்மை.
சரி, நம்ம கதைக்கு வருகிறேன். 

அது என்ன நம்ம கதை? புதுக்கதையால்ல இருக்கு?? என்கிற கேள்வி ஒன்று உங்களுக்கு இங்கே எழுந்தே ஆகவேண்டும்.

அதை நான் சொல்லமுடியாது. மணிகண்டன் சொல்லுவாரா என்று தெரியாது...

Friday, January 2, 2015

’குஷ்புவின் மனதை கொள்ளை அடித்தேனா?’

Anthanan Shanmugam குஷ்பு முன்னிலையில் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்ட அண்ணன் முத்துராமலிங்கனுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த கோடானு கோடி தொண்டர்கள் சார்பில் பாராட்டுகள். இனி எந்நேரமும் இதே கலர் துண்டுடன் அவர் நடமாட தீர்மானித்திருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை உண்டா என்பதை Elumalai Venaktesan அவர்கள் முத்துராமலிங்கனிடம் கேட்டு சொல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம்...




 Elumalai Venaktesan Anthanan Shanmugam குஷ்பு இளம்பெண்ணாக சென்னை வந்தபோது, Muthu Ramalingam ஒரு புகைப்பட கலைஞனாக குஷ்புவின் மனதை கொள்ளையடித்த கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது.. மைக்கேல்,மதன, காம, ராஜ் என நாலா பக்கமும் சம்பவங்கள் உள்ளதே, இதில் எதை எடுப்பேன்..Vetri Vel...  

Vetri Vel முத்து அண்ணன் விருது வாங்கம் போது, வேறு எங்கோ பார்வையை திருப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

Muthu Ramalingam Elumalai Venaktesan குஷ்பூ இளம்பெண்ணாக சென்னை வந்த போது ஐ யாம் ஸ்டடியிங் இன் ஒண்ணாங்கிளாஸ்.....ஹெஹே.. 

Elumalai Venaktesan தனிப்பதிவு தயாராகிட்டிருக்கு சார்.. ஏன் பொறக்கவே இல்லைன்னு சொல்லலாமே சார்... 

Elumalai Venaktesan Muthu Ramalingam நீங்க என்ன தில்லாலங்கடி வேலை காட்டினாலும் ஒரு காவியத்தை அரங்கேற்றாமல் விடப்போவதில்லை..
    •   
     
 ’புள்ள அடுத்த படத்தை இன்னும் கொஞ்சம் ‘வெவரமா’ எடுக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், மக்கள் தொடர்பாளர்கள் டயமண்ட் பாபு, சிங்காரவேலு, மவுனம் ரவி, ரியாஸ் ஆகியோர் வருடா வருடம் நடத்தும் 'V4' விழாவில் அடியேனுக்கு ‘சிநேகாவின் காதலர்கள்’க்காக 2014-ன் சிறந்த புதுமுக இயக்குநர்  விருது கொடுத்து கவுரவித்தார்கள்.

தற்செயலாக எனக்கு விருது வழங்குபவராக தங்கத்தலைவி குஷ்பூ அமைந்துவிட, நண்பர்கள் ஃபேஸ்புக்கில் சற்று முன்னர் துவங்கியிருக்கும் கச்சேரியின் துவக்க பீடிகைகள் தான் மேலே இருப்பவை.

மேற்படி நண்பர்கள்லாம் குஷ்புவின் காதலர்கள்ங்குறதை தாங்களே எக்ஸ்போஸ் பண்ணிக்கிறாங்க.

நான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவன்னு நம்ம சமூகத்துக்கு நல்லாவே தெரியும்...கமான் ...ஸ்டார்... ம்யூசிக்...

’மூவி ஃபண்டிங் நிகழ்ச்சியில கரு. பழனியப்பன் பேசுன வீடியோ தேடிப்பாத்தேன். கிடைக்கல’ என்று சில நண்பர்கள் போனில் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்கள்..

அதன் யூடுப் லிங்க் இதோ;



Wednesday, December 31, 2014

’அது ஒரு கோபக்கார பயபுள்ள...’ கரு.பழனியப்பன்


ஒருவழியாக, சிலமணி நேரங்களே மிச்சமிருக்கும், வருடக் கடைசிக்கு வந்தாச்சி.

தொடர்ந்து பல டெர்ரர்களையும், எர்ரர்களையும் மட்டுமே  அன்றாடம் சந்திப்போமென்பதால், கடந்த தினங்களை ரீவைண்ட் பண்ணிப்பார்க்கும் கெட்ட பழக்கம் எப்போதும் என்னிடம் இருந்ததில்லை.

புத்தாண்டு சபதங்களை ஒரு வாரத்துக்குக்கூட கடைப்பிடிக்க முடிவதில்லை ஆகையால் அப்படிப்பட்ட சங்கட்டமான சபதச் சனியன்களையும் எடுப்பதில்லை.


டந்த சில வாரங்களாக, மூவி ஃபண்டிங் குறித்து நிறைய எழுதி போரடிக்கிறேன்... என்று நினைப்பவர்கள்,  உடனே இந்தப்பதிவை விட்டுப் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடலாம்.

எனக்கு இது முக்கியமான பதிவு. ’இது நடக்க சாத்தியமேயில்லை’ என்று பலர் என் காது படவே பேசியபோது, ‘நல்ல நண்பர்கள் இருக்கும் போது எதுவுமே சாத்தியம்’ என்று முத்துவுக்கு கெத்து சேர்த்தவர்கள் நீங்கள்.

முதலில் ஜெய்லானி சார். அவர் இல்லாமல் இப்படி ஒரு திட்டம் குறித்து  எனக்கு கனவு காணக்கூட தெரிந்திருக்காது.

அடுத்து என் தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம், பிரபாகர்,பிரபாகர்,பிரபாகர், சூர்யா வடிவேல், மோகன்குமார், சுதர்சன் லிங்கம்,ஆல்ஃபி, குமாரராஜா,பொற்கோ, குழலி புருசோத்தமன், ஷாநவாஸ் ஐயா, இயக்குநர் மீரா கதிரவன், அடுத்து என் பெயர் சொல்லவேண்டாம் என்று உதவிய, உதவக்காத்திருக்கிற இருவர்.... இவர்களுக்கெல்லாம் வெறுமனே நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு நான் கடந்துபோய் விட முடியாது.

அப்புறம் என்னத்தைத்தான் சொல்லிட்டு கடந்துபோகப்போற? என்று ’கேட்டு’ போடாதீர்கள்.

நேற்று பிரசாத் லேப்பில் மூவி ஃபண்டிங் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். விழாவில் பேச யாரை அழைக்கலாம் என்பது குறித்து எந்த திட்டமும் எங்களிடம் இல்லை.

தற்செயலாக விஜய் டிவியின்  ’நீயா நானா’ நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குநர் கரு.பழனியப்பனுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.  நிகழ்ச்சி முடிந்து, அவரது காருக்குப் பின்னாலேயே போய் அவரது ஆபிசில் சாப்பிட்டுவிட்டு, ஒரு சின்ன தயக்கத்துடன் அழைப்பையும் விடுத்தேன்.

தயக்கத்துக்கு இருந்த காரணத்தையும் சொல்லிவிடவேண்டும்.

பழனி என் கல்லூரி ஜூனியர், நெருங்கிய நண்பர், உதவி இயக்குநராக நாங்கள் ஒன்றாக பணியாற்றிய காலங்களில் மதிய உணவுக்கு பலமுறை பாண்டிபஜார் பாலாஜி பவனில் டோக்கன் வாங்கி எங்கள் வயிற்றை நிரப்பியவர், என்னைப்பற்றி அநியாயத்துக்கு நல்ல அபிப்ராயங்கள் வைத்திருப்பவர், இப்படி எங்களுக்குள் நூறு பந்தங்கள் இருக்கிறது எனினும் ‘சிநேகாவின் காதலர்கள்’ இயக்க ஆரம்பித்த பிறகு அவரை சந்திக்க நேரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் விதவிதமாக ஒளிந்துகொண்டேன்.

இப்படி ஓடி ஒளிந்த விளையாட்டுக்கு, அவர் நியாயமாக, நிகழ்ச்சிக்கு வருவதை சாக்குபோக்கு சொல்லி தவிர்த்திருக்கவேண்டும்.

‘நினைவூட்டல்லாம் வேண்டியதில்ல பாஸ். 6.30க்கு பிரசாத்ல இருக்கனும் அவ்வளவுதான...நான் வந்துர்றேன்’.


எனக்கு மேடைப்பேச்சு என்றாலே லெஃப்ட், ரைட், செண்டர், பேஸ்மெண்ட் இப்படி சகலமும் ஆட்டம் காண ஆரம்பித்துவிடும்.

பழனியப்பன் நேரெதிர். கல்லூரி காலத்திலிருந்தே பேச்சுப்புலி. [அது என்ன புலி?’ மனுசனை உங்களுக்கு மனுசனாவே பாக்கத்தெரியாதா?என்பார் ]. ஆனாலும் கிரவுட் ஃபண்டிங் குறித்து என்னத்தைப்பேசிவிட முடியும்? என்றுதான் நான் நினைத்தேன்.

’அரைவட்டி,முக்கால் வட்டி புழங்கிய நாட்களில்,20 ஆயிரம் புரட்டி, புத்தகம் வெளியிடுவதற்காக  இரண்டு வட்டி தருகிறேன்’ என்று நண்பர்களிடம் நூறு ரூபாய்க்கு கையேந்தி கடிதம் எழுதிய மகாகவியை முதல் கிரவுட் ஃபண்ட் அழைப்பாளர் என்று நினைவூட்டி, கலங்கடித்தார்.

‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
 நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்’

என்று, கிரவுட் ஃபண்டிங் குறித்த குழப்பங்களுக்கு, அதே பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, ‘எதுவும் செய்ய விருப்பம் இல்லாட்டி சும்மா இருந்தாலே போதும்’ என்று ஆச்சரியமுடிச்சு போட்டார்.

அவரது பேச்சில், நானே மறந்து போன, எனது பழைய கதைகள் பலவந்துபோயின. ’ரொம்ப வருஷமாவே முத்துராமலிங்கம் ஒரு கோபக்கார பயபுள்ள’ என்றார். சில நிமிடங்கள் இருபது ஆண்டுகளுக்குப் பின்னால் போய், திரும்பவும் பிரசாத் லேப் இருக்கைக்கு திரும்புவதுமாக இருந்தேன்.

இளையராஜாவின் வெறிகொண்ட ரசிகர்களாய் நானும் நண்பன் தீஸ்மாஸ் டிசில்வாவும் நாளும் அலுக்காமல் பேசித்திரிந்த காலத்தை ரசிப்பதற்காகவே தானும் பலநாட்கள் தீஸ்மாஸின்  அச்சகத்துக்கு அடிக்கடி ஆஜரானதை நினைவு கூர்ந்தார்.

மொத்தத்தில் நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கினார்.  இதற்காகவே நேற்று இரவு நிகழ்வு முடிந்து பழனியப்பன் கிளம்பிப்போன நிமிடத்திலிருந்தே அவருக்கு நன்றி சொல்ல ஒரு போன் அடிக்கலாமா என்று யோசித்து, ஏனோ இந்த நிமிடம் வரை அதைச்செய்யவில்லை.

Wednesday, December 24, 2014

' மூவி ஃபண்டிங்கின் கிளைமாக்ஸ் வாரம்’

'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்... ஐயனே என் ஐயனே...’ தலைவரின்  பாடல் சதா மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க ...’மூவி ஃபண்டிங்’ தொடர்பான மூவிங்கில் மட்டுமே அலைந்த  இந்த இரண்டு மாதங்களும்,  ஒரு படப்பிடிப்பின் போது மனதில் நிலவும் லேசான படபடப்புடனேயே கழிந்தது.

பிரசாத் லேப்பில்கடந்த அக்டோபர் 16 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டு  துவங்கிய இந்தப்பயணம், ‘மூவி ஃபண்டிங்’ நடந்தது என்ன?’ என்ற அறிவிப்புடன், அதே பிரசாத் லேப்பில் வரும் டிசம்பர் 30 தேதி நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்புடன் நிறைவு அடைகிறது.


ஒரு நூலிழை தவறினாலும் தப்பான ஒரு தோற்றம் தந்துவிடக்கூடிய இத்திட்டத்தை, எங்கள் இருவர் மீது கொண்டிருந்த அன்பினாலும் நம்பிக்கையாலும் மக்களிடம் சரியாய்க் கொண்டுபோய்ச் சேர்த்த நண்பர்களுக்கு நன்றி கூறவும், இத்திட்டத்தில் இணைந்து எங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சக தயாரிப்பு சகோதரர்களை மேடையேற்றவும் திட்டம்.

ஏற்கனவே தெரிந்த நண்பர்களின் உதவியுடன் புதிய நண்பர்கள் சிலர் கரம் கோர்த்தது, ஆச்சரியத்தையும் பெரும் மன பலத்தையும் அளித்திருக்கிறது.

 தற்போது ஷூட்டிங் கிளம்ப நேரமாச்சி.  சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. நாளை எனது அண்ணன் ஒருவர் அளிக்கும் நான்கு லட்சம் ரூபாயுடன் சேர்த்து, மொத்த வரவு அறுபது லட்சமாக ஆகி, எனது’ரூபச்சித்திர மாமரக்கிளியே’  படத்துக்கான தேவை 85 சதவிகிதம் நிறைவுபெறுகிறது.

இன்னும் தேவை சரியாக பத்து லட்சம். இதை நான் ஏற்கனவே சொன்னபடி சிறு முதலீடுகளாக, அதாவது தலைக்கு பத்தாயிரம் வீதம் நூறு பேரிடம் பெற்று அவர்களையும் இணைத் தயாரிப்பாளர்களாக்கிக் கொள்ளத்திட்டம். 



இந்தத்தொகையை, சிரமமில்லாமல், உதவக்கூடிய நண்பர்களது பட்டியலை நான் எழுதத்துவங்கியபோது சுமார் 70 பேர் வரை மட்டுமே தேறியிருக்கிறது என்பதால், புதிதாய் இந்தத்திட்டத்தில் இணையும் நண்பர்கள் சிலரையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ‘ஓஹோபுரடக்‌ஷன்ஸை’ ரெகுலராக வாசிக்கும் நேசிக்கும் நண்பர்களிடமிருந்து.

இந்தப்பணத்தை  திரும்ப கொடுப்பது பெரும்பொறுப்பு என்பது மட்டுமின்றி, நீங்கள் இந்த சமயத்தில் செய்த உதவியை எப்படியெல்லாம் கவுரப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் கவுரப்படுத்த, என் உழைப்பை செலுத்துவேன்.

நீங்கள்  உதவ அவகாசம் கொடுக்கும் வகையில் மூவி ஃபண்டிங்கில் எனது படத்துக்கான கெடு தேதியை மேலும் 5 நாட்கள் அதிகரித்திருக்கிறோம்.

கேள்விகள், சந்தேகங்களுக்கு, உதவுவதற்கு எனது அலைபேசி எண் 98409 14026,  மெயில் ஐடி [muthuramalingam30@gmail.com] மற்றும் கமெண்ட் பெட்டி வழியாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த ஐந்து நாட்களும் உங்களுக்காகவே காத்திருக்கிறேன்.


Monday, December 22, 2014

’இப்ப திடீர்னு என்னத்துக்கு இவ்வளவு ஃபீலிங்ஸ்?’

வடிவேல் சூர்யா Surya Vadivel சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர். கொஞ்சம் நடிப்பு ஆர்வம். நான் ‘சிநேகாவின் காதலர்கள்’ படம் இயக்குவது அறிந்து அவ்வப்போது வாய்ப்புக்கேட்டு மிக நாசூக்காக தொடர்புகொண்டேயிருந்தார். ’வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன்’ என்பது தாண்டி நான் அவருக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை.

இந்நிலையில் படம் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து பெண்டிங் விழுந்துகொண்டிருந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளை வடிவேல் சூர்யா அவர்களின் சொந்த ஊரான ஈரோடு அரச்சலூரிலேயே எடுத்துவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் அவரை ‘அவசரத்துக்காக தொடர்புகொண்டு, அவர் தந்த வார்த்தைகளை நம்பி, ஈரோடு கிளம்பி 11,12,13 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டேன்.


அவரும், அவரது நண்பர்களும் மற்றும் கிராம மக்களும் காட்டிய பாசத்தையும், ஒத்த்ழைப்பையும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.


உங்களுக்கு வெறுமனே தேங்க்ஸ் மட்டும் சொல்லி தப்பிச்சிடமுடியாது சூர்யா சார்.


வயலட் கலர் சட்டையில் வடிவேல் சூர்யா சார்.




[ஃபேஸ்புக்கில் கடந்த ஆண்டில் நான் எழுதியிருந்த பதிவு இது]

ன் நண்பர்கள் எண்ணிக்கை குறித்து எப்போதுமே எனக்கு எப்போதுமே அளவு கடந்த கர்வம் உண்டு.

நான் பிறந்த நல்லமநாயக்கன்பட்டியில் துவங்கி, பத்தாம் வகுப்பு வரை படித்த சத்திரரெட்டியபட்டி, ப்ளஸ்டூ படித்த விருதுநகர் கே.வி.எஸ், ஆங்கில இலக்கியம் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரி, ‘போல்டு இந்தியா’ நாளிதழில் வேலைபார்த்த மும்பை, அடுத்து சென்னையில் நான் தொடர்ந்து குப்பை கொட்டிய’ நக்கீரன்’ சத்திரியன்’ ’நெற்றிக்கண்’ ‘சினிமாடுடே’ ஸ்டார்’ ‘குமுதம்’ நான் வேலை பார்த்த சினிமா நிறுவனங்களில் சந்தித்தவர்கள் என்று எங்கும் என் நண்பர்கள் எண்ணிக்கை, ஆகப்பெரிய அண்டாவில் போட்டாலும் நிரம்பி வழியக்கூடியது.

இவர்களில் பலபேருக்கு நான் சவலைப்பிள்ளை போல. மரத்துக்கு மரம் தாவும் குட்டிக்குரங்கு போல, ஒரு இடத்தில் ஒரு உருப்படியான வேலையில் நீடித்ததில்லை என்பதால், என் நலம் குறித்து, எப்போதும்  அக்கரையுடன் விசாரித்தபடியே இருப்பார்கள்.

சற்றே சோர்ந்திருக்கும் வேலைகளில் ‘டேய் முத்து நல்லாருக்கியாடா?’ என்று விசாரிப்பு வந்தாலே போதும் நான் யானை பலம் பெற்று எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கடந்த ஒரு ஆண்டு பழக்கத்திலேயே அப்படிப்பட்ட என் நண்பர்களில் ஒருவராகிப்போனவர்தான் இந்த வடிவேல் சூர்யா.


’சிநேகாவின் காதலர்களில்’ நடித்த நூறுபேர்களில் ஒருவரல்ல சூர்யா.

படம் ரிலீஸாகி, மற்ற ஊர்களைப் போலவே ஈரோட்டிலும் தியேட்டர் கிடைக்காமல் போனபோது, அவர் துடித்த துடிப்பை சென்னையிலிருந்தபடியே நான் அனுபவித்தேன்.

ஒரு பொறுப்பான குடும்பத்தலைவர், ஆசிரியர், ஓவிய ஆசிரியர், ‘தினமலர்’ நிருபர், விளம்பர ஏஜெண்ட், சுயதொழில் முனைவர், சமூக சேவகர் என்று ஏகப்பட்ட முகங்களுண்டு சூர்யாவுக்கு.

 காலை எழுந்தவுடன், கைவசம் இருக்கும் வேலைகளை நினைத்து, ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்று இருப்பதை 48 மணி நேரமாக ஆக்கக்கூடாதா?’ என்று தவித்துக் கொண்டிருப்பவர். [ இந்த டிபார்ட்மெண்டுக்கு இன்சார்ஜ் யாருன்னு தெரிஞ்சா அப்பிடியே பண்ணிரலாம் ஐயா. நாங்களும் எட்டு மணி நேரத்துக்குப் பதிலா 16 மணிநேரம் தூங்கினா மாதிரி இருக்கும்]

மூவிஃபண்டிங் குறித்து நானும் ஜெய்லானிசாரும் பேசிமுடித்தவுடன், நான் முதன்முதலாக ‘இது சாத்தியமாகுமா?’ என்று இவரிடம் முதல் ஆளாக, விசாரித்தபோது, ‘ஐயா என் பங்களிப்பு எவ்வளவு வேண்டும்’ என்று பதில்கேள்வி கேட்டவர்.  அவ்வாறே ஒரு நல்ல பங்களிப்பையும் செய்திருக்கிறார்.
’இப்ப திடீர்னு சூர்யாவப்பத்தி இவ்வளவு ஃபீலிங்ஸ்?’
இன்று இந்த இனிய மனிதருக்குப் பிறந்தநாள்.
எல்லா வளங்களும் பெற்று, எனது அடுத்த படத்துக்கு தனித்தயாரிப்பாளராகும் அளவுக்கு செல்வங்களும் செழிக்க வாழ்த்துகிறேன் சூர்யா ஐயா. அவ்வ்வ்வ்வ்வ்.......

’அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா மேட்டருக்கு கனகச்சிதமா வந்து சேந்துர்றான்யா’

Saturday, December 20, 2014

’ஸோலோ வில்லன் கேரக்டர் இருந்தா சொல்லி அனுப்புங்க சார்’


சிங்கப்பூர் பயணத்துக்கு பத்து தினங்கள் முந்தி, வழக்கம்போல் முகநூல் சாட்டிங் மூலம் நண்பரானவர் தான் குமாரராஜா.

‘சார் நான் ‘ஓஹோ’வுக்கு ரெகுலர் வாசகர். நீங்க இப்ப சிங்கப்பூர் வர்ற பயணத்துக்கான விசா, டிக்கெட் செலவுகள் தொடங்கி, மூவி ஃபண்டிங்குக்கும் என்னால முடிஞ்ச உதவிகள் செய்றேன். ஆனா என் பெயர் வெளியில தெரிய வேண்டாம்.’

’எதாவது இன்கம் டாக்ஸ் பிரச்சினை வரும்னு பயப்படுறீங்களா?’

‘அய்யய்யோ அதெல்லாம் இல்ல சார். நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல சார்’

’அப்புறம் ?’

‘அது வந்து... நான் எதாவது சொல்லிட்டு பண்ணுனா அது பலிக்க மாட்டேங்குது சார்’

’பாத்தா ரொம்ப நல்ல மனுசனாட்டம் தெரியிறீங்க. உங்களுக்குள்ள இப்பிடி ஒரு மூடநம்பிக்கையா?’

பாதி சவுண்டும், மீதி மைண்ட்வாய்ஸுமாக குமாரராஜாவை மெல்ல பற்றிக்கொண்டேன்.


சிங்கப்பூரில் அவரை சந்தித்த கதை தனிக்கதை. அதை அப்புறம் பார்ப்போம்.

கடந்த பதிவில் ஒரு கெடா வெட்டுக்கு உற்சாகமாய்க் கிளம்பிப்போனேனே அது இவர் வீட்டு விஷேசம்தான்.

‘என் உறவினர்கள் சுமார் 50 பேர்வரை வருகிறார்கள். நண்பர் என்று பார்த்தால் நீங்கள் ஒருவர் மட்டும்தான். தங்குறதுக்கு பெரிய வசதியெல்லாம் இருக்காது. கோவில் பக்கத்துலயே ஒரு கொட்டாய் போடச்சொல்லியிருக்கேன். நீங்க வேணும்னா, நாம போற கார்ல படுத்து தூங்கிக்கலாம்’.

‘பாஸ் நாங்கள்லாம் ஹாஸ்டல்ல  சுவரேறி குதிச்சி, செகண்ட் ஷோ பாத்துட்டு, ‘தினத்தந்தி’ பேப்பர்ல மதுரை பஸ் ஸ்டாண்டுல பல நாட்கள்  தூங்கி பழக்கப்பட்டவங்கதான். அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. கெடாவெட்டி சோறுபோடுற வேலையை மட்டும் பாருங்க’.

யில் பயணம் என்றால் மனது றெக்கை கட்டிப்பறக்க ஆரம்பித்துவிடும் என்பதால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸின் 17 மணிநேரப்பயணம் கொஞ்சமும் அலுக்கவில்லை.

அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்திலிருந்து உற்றார் உறவினர் சூழ குமாரராஜா என்னை திருச்செந்தூரில் பிக்-அப் பண்ணும் வரை , நான் ஒரு பரவசமான பயணதுக்குப்போகிறேன் என்பது எனக்கு தெரியாது.

திருச்செந்தூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலிருக்கும் காயாமொழி கிராமத்துக்கு எங்கள் வாகனங்கள் பறந்தன.  அதுவரை குமாரராஜா வீட்டு விஷேசம்  மட்டுமே என்று நினைத்திருந்த எனக்கு, வருடா வருடம் நடக்கும் ஒரு பெரிய திருவிழாவுக்கு ஆஜராகியிருக்கிறோம் என்பது தெரியாது.

விழாவின் பெயர் கற்குவேல் அய்யனார்  கள்ளர்வெட்டுத்திருவிழா.

முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளைக் கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கமாம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தாராம்.

வருடா வருடம் கார்த்திகை மாதம் ஆறுநாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் ஐந்துநாட்கள் சைவ விஷேசங்களும் கடைசி நாள் கிடாவெட்டுமாக லட்சக்கணக்கில் ஜனங்கள் திரளுவார்களாம்.

நாங்கள் இறங்கியிருந்தது கிடாவெட்டுக்கு முந்தினநாள். ஜனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும். 
நம்ம குமாரராஜா போட்டிருந்த கொட்டாய் போல் பல நூறு தற்காலிக கொட்டாய்கள் அந்த திருவிழாவுக்காகவே ஆங்காங்கே முளைத்திருந்தன. 

கோயிலையும், அங்கிருந்த ஒன்றிரண்டு கட்டிடங்களையும் தவிர்த்துப் பார்த்தால் அது ஒரு பெரும் செம்மண் பொட்டல்காடு. பக்தர்கள் குளிக்க ஒன்றிரண்டு இடங்களில் தொட்டிகள் இருந்தன.
பெரும் மழை பெய்தால் ஒரு சில நூறுபேர் மட்டுமே ஒதுங்குவதற்கு வசதியுள்ள அங்கே லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தது பெரும் வியப்பானதாயிருந்தது.

திருச்செந்தூரில் வண்டி கிளம்பியதிலிருந்தே  ‘‘கள்ளர்வெட்டை’ மிஸ் பண்ணிடக்கூடாது சார்’ என்று குமாரராஜா கூறிக்கொண்டே இருந்ததால் எனக்கும் அதன் மேல் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியிருந்தது. [கூட்டத்தை ஸ்டில் எடுக்கத்தவறி விட்டேன். வீடியோ மட்டும் இருக்கிறது. யாராவது விரும்பிக்கேட்டால் இணைக்கிறேன்]

கோவிலுக்குப் பின்புறம் ஏறத்தாழ ரத்தச்சிவப்பில் மண்மேடு. நாங்கள் போவதற்கு முன்பே அந்த இடம் லட்சத்திற்கும் மேற்பட்ட ஜனங்களின் பாதம் பட்டு மேலும் சிவந்திருந்தது.


படத்தில் காணப்படும் கெட்டப்பில் இருந்த பெருசுகள்’கள்ளர் வெட்டு’ நடைபெற இருந்த இடத்திற்கு உள்ளே வரவர ஆரவாரங்களும், குலவைச்சத்தங்களும் விண்ணைக்கிழித்தன.

இந்த ஆண்டு கள்ளர்வெட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியவர் உள்ளே வந்து, தான் நின்ற இடத்திலிருந்து மூன்று சுற்று சுற்றி விட்டு ஒரு இளநீரை வெட்டிவிட்டு ஓட, மிகவும் சக்தி வாய்ந்தது என்று கருதப்படும் அந்த இளநீரின் ஒரு துணுக்கையாவது கைப்பற்றிவிட, கூட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பாய, அங்கிருந்த பெருசுகளும் போலீஸாரும் தலைதெறிக்க தப்பி ஓடியது கண்கொள்ளாக்காட்சி. இளநீரின் பாகங்கள் கிடக்காதவர்கள் அங்கிருக்கும் செம்மண்ணையே பிரசாதமாக பயபக்தியுடன் எடுத்து முடிந்துகொள்கிறார்கள்.

ஒருவழியாக கள்ளர்வெட்டு பரபரப்பிலிருந்து கடாவெட்டு மூடுக்கு மாறி கூடு திரும்பினோம்.



மறுநாள். மிட்நைட் 5 மணிக்கே எழுப்பப்பட்டு,  பலநாள் தரிசிக்க மறந்த அதிகாலை தரிசனத்துடன், திறந்தவெளி நடைப்பயணம், திறந்தவெளி குளியல்களுடன் மூன்று கைதேர்ந்த சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ஆகச்சிறந்த மட்டன் சாப்பாடுடன் என் பொழுது இனிதே  கழிந்தது. [ விலா எழும்பு கடித்ததையெல்லாம் விலாவாரியாக எழுதி, யாருடைய வயித்தெரிச்சலையும் கிளப்பவேண்டாமே என்றுதான் இதை சுருக்கமாக முடிக்கிறேன்.

இங்கிருந்த இரண்டு தினங்களுமே செல்ஃபோன் டவர் சுத்தமாக வேலை செய்யாமலிருந்தது சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்த்த விசயம். 
 
 அன்று மாலையே, குமாரராஜா மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் நோக்கி கார் மற்றும் வேன்களில் விரைய, அதே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் பிடித்து
மீண்டும் சென்னை பயணித்தேன்.

பொதுவாக தயாரிப்பாளரை படம் முடியும் தறுவாயில்தான் மொட்டை போடுவார்கள். ஆனால் நாம், எப்போதும் போல் விஷேசமாக படம் துவங்குமுன்பே போட்டுவிட்டிருக்கிறோம்.

நண்பர் குமாரராஜா என் படத்துக்காக மூவிஃபண்டிங்குக்கு அளித்த தொகை விபரம் நமது இணையத்தில் இடம்பெற்றுள்ளது.

‘சரி என் படத்துக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. எதாவது ஒரு வில்லன் கேரக்டர்ல நடிக்கிறீங்களா ராஜா?’என்றேன் கிளம்புகையில்.
’படத்துல நாலைஞ்சி வில்லன்கள் இருக்காங்கங்குறீங்க. ஸோலோ வில்லன் கதை பண்றப்ப சொல்லி அனுப்புங்க சார்’ 



Sunday, December 14, 2014

‘சார் மொட்டை போட்டாச்சி. காது குத்தியாச்சி.. கிடா எப்ப சார் வெட்டுவீங்க...?

தமிழகம் வந்திருக்கும் சிங்கப்பூர் நண்பர் ஒருவரிடமிருந்து நேற்று ஒரு அழைப்பு.

’‘சார் ஊர்ல, கோயில்ல ஒரு விஷேசம் வச்சிருக்கோம். வந்தா சந்தோசம்’’

‘’கெடா வெட்டு இருக்குங்களா?’’

‘ஆமா சார்.அது இல்லாம நாங்க  எந்த விஷேசமும் வைக்கிற வழக்கமில்ல’’

‘ஏங்க நான் ஏற்கனவே கிளம்பி பாதி தூரத்துல வந்துக்கிட்டிருக்கேன். அப்புறம் வந்தா சந்தோசம்  வரலைன்னா தோஷம்னுக்கிட்டு’’

நீண்ட நாட்களுக்கு அப்புறம் உற்சாகமான கிடாவெட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு நாளை, திருச்செந்தூர் நோக்கி பயணம்.  வந்ததும் துள்ளலான ஒன்றிரண்டு பதிவுகள்  உறுதி.

’நெனப்புதான் பொழப்பைக்கெடுக்குமாம்னு சும்மாவா சொல்லிவச்சாங்க’


சிங்கப்பூர், மலேசியப்பயணம் குறித்து சென்னை வந்து சேர்ந்தவுடன் பதிவிடமுடியவில்லை.  எழுத நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டது பற்றி   இப்போதும் கூட எழுதப்போவதில்லை.  

சிங்கையில் இருந்த 4 நாட்களும், மலேசியாவில் இருந்த 3 நாட்களும், ஒருநாள் இரவு கேசினோ போனது தவிர்த்து,  நண்பர்களை சந்தித்து உரையாடியதிலேயே  பெரும்பொழுது கழிந்தது.

முகநூல் மூலம் நாங்கள் விடுத்திருந்த சந்திப்புக்கு  வெகுசில நண்பர்களே வந்திருந்தனர். அது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.  ஆர்டர் செய்த சில உணவுப்பொருட்கள் வீணாகப்போக இருப்பதை ஜெய்லானியின் நண்பர்கள் இருவர் கவலையோடு பார்த்தனர்.
’என் படத்துல நீங்க ஹீரோ உங்க படத்துல நான் வில்லன் டீல் ஓகேவா?”  

‘உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்முத்துராமலிங்கம்’ என்றபடி என்னைத்தனியே அழைத்துப்போனார்கள் இருவரும்.

ஆச்சரியங்கள் என்றும் இழுபறியாக நடப்பன அல்ல. அவை சட்டென நிகழ்ந்து விடும்.

‘ஜெய்லானி புராஜக்டுக்கு இன்னும் எவ்வளவு தேவைப்படுதோ.அவ்வளையும் நாங்களே முதலீடு செய்றோம்’ என்றனர்.

எனக்கு அவர்கள் அதைச்சொன்ன விதத்தில், அவர்கள் மேல் நூறுசதவிகிதம் நம்பிக்கை இருந்தது. நான் அதை சற்றுநேரத்தில் ஜெய்லானியிடம் சொன்னபோது, கொஞ்சம் நம்பத்தயங்கி பின்னர் ரொம்பவே நெகிழ்ந்தார்.

இந்த நிகழ்வுகளின் பின்னணி நாயகன் ஜெய்லானியின் மனதுக்கு நெருக்கமான நண்பர் குழலி புருஷோத்தமன்.   பயணம் முழுக்க அத்தனை அக்கரையுடன் எங்களை அரவணைத்துக்கொண்டார்.

குழலி த கிரேட்  

அவருடன் முகநூல் மூலமாக சாட் செய்தது தவிர்த்து, ஒரே ஒருமுறை, அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே, சென்னையில் சந்தித்திருக்கிறேன்.

சரியான நடைமன்னன். நல்ல மீட்டிங் ஹால் புக் பண்ணுவதற்காக மனிதர் நடந்தார் பாருங்கள்...யப்பப்பா கூடவே அழுதுகொண்டே நடந்தேன்.

பலரையும் போல் எனது  ‘சிநேகாவின் காதலர்கள்’  படத்தை அவரும் பார்த்திருக்கவில்லை.  பார்த்திருந்தால் ஒருவேளை இவ்வளவு பாசம் காட்டியிருக்கமாட்டாரோ என்னவோ?

அடுத்த முக்கியமான சந்திப்பு எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களுடனானது.  முகநூல் நட்பு ஒருவர்தான், ‘ ஷாநவாஸ் அவர்களையும் சந்தித்து விட்டு வாருங்கள். எதாவது ஒரு சரியான சந்தர்ப்பத்தில்  உங்களுக்கு உதவுவார்’ என்று எனக்குச்சொல்லியிருந்தார்.
உணவுக்கலைஞர் ஷாநவாஸ்

என்னையும், ஜெய்லானியையும் அவ்வளவு நட்புடன் ஏந்திக்கொண்டார்.  தொழில்முறையாக ரெஸ்டாரெண்ட் நடத்திக்கொண்டிருந்தாலும், அவர் இதயத்துடிப்பு இலக்கியமாகவே இருக்கிறது.

இன்னொரு முக்கியத்தம்பி, எனக்கு ஃப்ளைட் டிக்கட் போட்டவரே அவர்தான். ‘உங்க அடுத்த படத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் சார். ஆனா அதைப்பத்தி எழுதாதீங்க’ என்று லிங்கா அணை கட்டியிருக்கிறார்.
அந்த அணையை விரைவில் உடைப்போம்.

இப்போதைய நிலவரப்படி, மூவிஃபண்டிங் தேதிகள் முடிவடைய இன்னும் பதினோரு நாட்களே உள்ள நிலையில், எனக்கு உதவ சம்மதித்திருக்கும் மேலும் ஐந்து பேரையும் அவர்கள் தொகையையும் அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு அறிவித்து விட்டு, மொத்த  பட்ஜெட் தொகையை எப்படியும் எட்டிவிடுவதற்கு இரண்டு வழிகளை யோசித்திருக்கிறேன்.

ஒன்று ஃபேஸ்புக், ட்விட்டர்,வாட்ஸ்-அப் போன்ற சமாச்சாரங்களின் வாசனையே தெரியாமல் நடமாடுகிற சில உறவினர் நண்பர்களை சந்திப்பது.

இரண்டாவது, எனக்கு தகவல் கூட சொல்லாமல் அமெரிக்காவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் போட்டாரே, எனது கல்லூரி சீனியர் ஆல்ஃபி, அவரைப்போல் நூறு பேரைப்பிடிப்பது.

சிரமம் ஏதுமின்றி, என் படத்துக்கு 10,000 ரூபாய் உதவி, என் இரண்டாவது படத்தை கரைசேர்க்கக்கூடிய நண்பர்கள் நூறுபேர்  எனக்கு கண்டிப்பாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அனைவர் பெயரும் இணைத்தயாரிப்பாளர்கள் என்று டைட்டிலில் இடம்பெறும்.

நேற்று புதிதாக வாங்கிய, 2015-ம் ஆண்டு டைரியில், அவர்கள் பெயரைப்பட்டியலாக சேகரிக்க ஆரம்பித்தும் விட்டேன்....

நான் உங்களுக்குப் பண்ணுகிற அடுத்த போன் ‘அந்த பத்தாயிரம்’ குறித்தே இருக்கும்.

பதட்டப்பட்டு  இன்னைக்கே போனை ’ஸ்விட்ச் ஆஃப்’ பண்ணாதீங்க. கிடா வெட்டுக்குப் போயிட்டு வந்துதான் போன் பண்றதா உத்தேசம்.

‘சார் மொட்டை போட்டாச்சி. காது குத்தியாச்சி.. கிடா எப்ப சார் வெட்டுவீங்க...?








Thursday, December 11, 2014

விகடன்.காமில் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’

பயணக்கட்டுரை எழுதி பயமுறுத்தமாட்டேன் என்று ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக இல்லை. ஆனால் போனகாரியம் என்ன ஆனது என்று எழுதியாகவேண்டுமே?

நாளை அதை பதிவிடுகிறேன்.

இது சற்றுமுன் விகடன்.காமில் வந்த நமது பேட்டி. 

கூடவே வேடியப்பனின் பேட்டியும் வந்திருந்தது.  அவரது அனுமதியின்றி அதைப்பிரசுரித்தால் காப்பிரைட்ஸ் சிக்கல் எதுவும் வந்து வேடியப்பன் நமக்கு வெடியப்பனாக மாறிவிடாமல் இருக்க, அதை கட் பண்ணி அவருக்கு மட்டும் தனியாக  மெயிலில் அனுப்பிவிட்டேன்,


 

Sunday, November 23, 2014

' ஒரு முரட்டு மனிதனின் வறட்டு பயணக்கட்டுரை’



’அண்ணன் அடுத்த வாரம் மலேசியா, சிங்கப்பூர் பயணம் போறாரு. திரும்பி வந்தவுடனே ‘ஓஹோ’வுல கண்டிப்பா பயணக்கட்டுரைகளை எழுதி நம்ம எல்லாரையும்  இம்சை பண்ணுவாரு’.

’சும்மாவே தையா தக்கான்னு ஆடுற மனுசன்... கால்ல தங்கச்சலங்கையைக் கட்டிவிட்டா?’

பயணம் உறுதியானதை அறிவித்ததிலிருந்தே, இப்படியான சில மைண்ட் வாய்ஸ்கள் எனது இடது வலது, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பக்கங்களில் வலம் வந்துகொண்டிருப்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். [அலோ தங்கச்சங்கிலியக்கட்டிவிட்டா நாங்க ஆடமாட்டோம். உடனே ஓடிப்போய் அடமானம்தான் வைப்போம்ங்கிறதை அவை அடக்கத்தோடு தெரியப்படுத்துகிறேன்]

அச்சம் வேண்டாம். சத்தியமாக எனக்கு பயணக்கட்டுரைகள் எழுதவராது.  அப்படியே எழுதினாலும், முன்குறிப்பாக ‘எச்சரிக்கை. இது முரட்டு மனிதன் ஒருவனின் வறட்டு பயணக்கட்டுரை.  இந்த ப.க.படிப்பதை அலர்ஜியாக உணருபவர்கள்  இந்தக்கட்டுரைக்குள் பயணிக்கவேண்டாம்’ -இப்படி ஒன்றை எழுதிவைத்துவிடுகிறேன். ஓ.கே.வா?’.

தொடர்ந்து எழுதாமல் நான் தான் சொதப்புகிறேனே ஒழிய, ’ஓஹோ’ நண்பர்கள்  பலரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள்.  உதாரணத்துக்கு, ஒரு நான்கு தினங்கள் முன்பு, சிங்கப்பூர், மலேசிய பயணம் குறித்து, ‘பாஸ்போர்ட் இங்கே பயணம் எங்கே?’ என்று  ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டேன்.

அப்பதிவை இட்ட இரண்டாவது நிமிடம், என் இன்பாக்ஸுக்குள் வந்த சிங்கப்பூர் செந்தமிழர் ஒருவர் ’என் பெயரை இப்போதைக்கு குறிப்பிடவேண்டாம்’  என்ற அன்புக் கட்டளையுடன் எனது வருகை, செல்கை டிக்கட் மற்றும் விசா செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, அதை அடுத்தநாளே செய்துமுடித்து டிக்கட்டுகளையும் எனக்கு மெயில் செய்துவிட்டார்.

சரி மேட்டருக்கு வருகிறேன்.

வரும் புதன் இரவு ஃப்ளைட்டில் நானும், வியாழன் இரவு ஃப்ளைட்டில் நண்பர் ஜெய்லானியுமாக https://www.facebook.com/mjailani    சிங்கப்பூர் வருகிறோம். வெள்ளி,சனிகளில் சிங்கப்பூரிலும், ஞாயிறு, திங்கள்களில் மலேசியாவிலும் நடமாட உத்தேசம்.

உண்மையில் சிங்கப்பூர், மலேசியாவைப் பொறுத்தவரை நான் இப்போதைக்கு ‘நேக்கு இங்க யாரைத்தெரியும்?’ கேஸ்தான்.

’படியில் நின்று அடம்பிடித்தாவது உங்க மடியில் இடம்பிடிப்பேன்’

பயணத்தின் முக்கிய நோக்கம் மூவிஃபண்டிங்  http://www.moviefunding.in/ தொடர்பாக ஏற்கனவே போனில் பேசிய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்களை சந்திப்பதுதான்.

நடிக்க விருப்பமுள்ளவர்கள், அல்லது   சினிமாவில் வேறெதாவது ஒரு பிரிவில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் எங்களோடு தங்களை இதில் இணைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் பங்கெடுத்துக்கொண்ட அடுத்த நிமிடத்திலிருந்து, எங்கள் செயல்பாடுகள் அனைத்தும், உங்களுக்கு வெளிப்படையாக தொடர்ந்து பகிரப்படும்.

இதுகுறித்து விரிவாக பேச விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்...
என் மெயில் ஐ.டி. muthuramalingam30@gmail.com.     mobile no; 98409 14026 .

அதெல்லாம் ஓகே.... இந்த ஆண்ட்டிகளுக்கு இங்கே என்ன வேலை? என்ற சின்ன குழப்பம் உங்களுக்கு வரத்தான் செய்யும். 

நான் புதனன்று ஏறக்கூடிய ஃப்ளைட்டில் இந்த ஆண்ட்டிகள் ஏர்ஹோஸ்டஸ்களாக வந்தால்தான் நான் ஃப்ளைட்டில் ஏறுவேன். அதுவரை படிக்கட்டில் நின்று அடம்பிடிப்பேன் என்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.


Monday, November 17, 2014

’மோகன்குமார் என்றொரு சாஃப்ட்வேர் சமையல் கலைஞன்’

கையெழுத்துப்போடுகிற வேலை ஒன்றை தவிர்த்து, காகிதத்தில் எழுதுகிற பழக்கம் நின்று,  அநேகமாக  4 வருடங்கள் ஓடிவிட்டது.  எனினும் சட்டைப்பையில் பேனா இல்லாமல் ஒருநாளும் வெளியே போனதில்லை.

சுமார் முப்பதாண்டுகாலப் பழக்கம். மும்பை ‘போல்டு இண்டியா’ லே-அவுட் வேலைகளுக்காக வாங்கி சொருகிக்கொள்ள ஆரம்பித்த  வெள்ளை நிற மைக்ரோ டிப் பேனாக்கள்,  இன்று வரை என் சட்டைப்பையை விட்டு இறங்கவில்லை.  அன்று 86, 87-களில் இரண்டு அல்லது  மூன்று ரூபாய்க்கு வாங்கிய பேனா இன்று 40 ரூபாய்.

அது ஒரு காலம்,  நண்பர்களுக்கு மாதத்தில் நூறு கடிதங்களுக்கும் மேல் எழுதிய நட்புக்காலம்.  நைட் ஷிஃப்ட் முடிந்து அதிகாலை 4 மணிக்கு கூட கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது.  [ஆனால் அவற்றில் ஒன்றுகூட காதல் கடிதம் இல்லை. அப்போதெல்லாம் பார்க்க படு ஸ்மார்ட்டாக ‘தம்பிக்கு எந்த ஊரு’ ரஜினி ஸ்டைலில்  இருப்பேன். ஆனால் எவளுக்கும் காதல் கடிதம் எழுதும் பாக்கியம் எனக்கு கிட்டியதில்லை.] எனக்கும் ’போல்டு இந்தியா’ அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து கடிதங்களாவது வந்த வண்ணம் இருக்கும். அனைத்தும் வெட்டிக்கதைகள் பேசும்  வருத்தமில்லா வாலிபர் சங்கக்கடிதங்கள்.

எதாவது ஒரு சங்கதிக்கு பீடிகை போட ஆரம்பிக்கும்போது, அதை சுருக்’கென முடித்துக்கொள்ள முடிவதில்லை. கிழவனாகிக்கொண்டிருப்பதன் முதல் அறிகுறி இதுவென நினைக்கிறேன்.

இன்று நான் சொல்லவந்த சங்கதிக்கும், மேற்படி பீடிகைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை ஆனாலும் இருக்கிறது.

ரொம்ப காலத்திற்குப் பிறகு, ஒரு பதிவை, காகிதத்தில் எழுதிப்பார்த்து, பின்னர் தட்டச்சு செய்கிறேன்.

காகிதத்தில் எழுதிப்பார்க்கும் ஆசை என்பதை விட, இந்தப்பதிவில் நான் எழுதப்போகும் நண்பர் மோகன்குமாரை   @mohan kumar,  இவ்விதமின்றி,  நான் வேறு எப்படி கவுரப்படுத்தி விடமுடியும் என்று தோன்றவில்லை.

www.moviefunding.in க்கு அவர் உதவ முன்வந்த விதம் அத்தனை 'சுவையான' ஒன்று.
மோகன்குமார்

இத்தனைக்கும்,  ஃபேஸ்புக் சாட்டில் ஒன்றிரண்டுமுறை ‘ஹாய் ஹலோ’ கடந்த ஒரு வாரத்துக்கு நாட்களுக்கு முன்பு,  சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் சுமார் ஒருமணி நேர சந்திப்பு தாண்டி இந்த மோகன்குமாரை எனக்கு முன்னப்பின்ன சத்தியமாக தெரியாது.

செய்திக்கு வருகிறேன்.

மூவி ஃபண்டிங் திட்டத்தின் வெற்றியை,  நானும் ஜெய்லானியும்,  அவ்வளவு சுலபமான நிகழும் என்றெல்லாம் கணிக்கவில்லை. நாங்கள் இழுக்க விரும்பிய தேர் எத்தகைய அசுரத்தனமானது என்பதை நாங்கள் அறிந்தே இறங்கினோம்.  அதை எதிர்கொள்ள வெறும் பலம் மட்டும் போதாது, சில உபாயங்களும் இருந்தால்தான் வெற்றியை எட்டமுடியும் என்று தோன்றியது.

அதை ஒட்டிதான் படத்திற்கு தேவையான ஒவ்வொரு அம்சத்தையும் பிரித்து  உதவிகள் கேட்பது என்று தீர்மானிக்கப்பட்டது. [ஓ இதுதான் பிரிச்சி மேயுறதுங்குறதா?]  முதல் முத்திரையாக மேளதாளம் முழங்க  ‘சவுண்டு பார்ட்டி’ சுதர்ஷன் லிங்கம் வந்தார். [ விபரம் அவரது பதிவில் படிங்க]  அவருக்காக எழுதிய பதிவின் இறுதியில் நாசூக்காக ’படப்பிடிப்புக்குழுவுக்கு அன்னமிட யாராவது முன்வருகிறீர்களா?’ என்று வேண்டுகோள் வைத்திருந்தோம்.

அதைப்படித்த அடுத்த நிமிடம்,  என் எண்ணை சாட்டில் பெற்றுக்கொண்டு அலைபேசியில் வந்தார் ,பெங்களூரில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் மோகன்குமார்.

‘நாளை என் அலுவலக வேலையாக சென்னை வருகிறேன். க்ரீன் பார்க் ஹோட்டலில்தான் தங்கியிருப்பேன். வாங்க சந்திக்கலாம். இரண்டு படங்களுக்குமான உணவுச்செலவு எவ்வளவு ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒரு படத்துக்காவது என்னால் உதவமுடியும் என்று நினைக்கிறேன்’

பார்ட்னர் ஜெய்லானிக்கு அன்று பாண்டிச்சேரியில் மூவிஃபண்டிங் தொடர்பான முக்கிய சந்திப்பு இருந்ததால் நான் மட்டுமே மோகன்குமாரை சந்தித்தேன்.

சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே இருபட உணவு பட்ஜெட்களையும் பார்த்துவிட்டு,  ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ படத்துக்கான மொத்த உணவுச்செலவு 2 லட்சத்து 50 ஆயிரத்தை, தான் பதிலுக்கு எதையும் எதிர்பாராமல்,  ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டே மற்ற உரையாடல்கள் தொடர்ந்தது.

சாப்ளின் குமார்
அந்த உரையாடலில், இருப்பது சாஃப்ட்வேர் துறையில் என்றாலும் மோகன்குமாரை

இசையும்,சினிமாவுமே அதிகம் ஆட்கொண்டிருப்பது அறிந்துகொள்ள முடிந்தது.  தெரியாதது குறித்து கேட்கும்போது ஒரு குழந்தையாகவே மாறி  கேள்விகள் கேட்பவராக இருந்தார்.  சார்லி சாப்ளின் குறித்து நீங்கள் நல்லவிதமாய் நாலுவரிகள் பேசிவிட்டால் அவரிடமிருந்து சில பீர்களையும் டின்னரையும் கரெக்ட் பண்ணிவிடமுடியும் என்று சுலபமாய் யூகிக்க முடிந்தது.

இந்த சந்திப்பு நடந்த அடுத்த ஐந்தாவது  நாள்,  அதாவது கடந்த வெள்ளியன்று, தான் ஏற்றுக்கொண்ட தொகையில் ஐந்தில் நான்குபங்கை வங்கியில் நெட் பரிமாற்றம் செய்தார்.[ மீதி ஆன் த வே.]

தாய்மனசுடன் மோகன் செய்த நெட் பணப்பரிமாற்றம், என் படத்தின் முதல் நாள்  தொடங்கி ‘பேக் அப்’சொல்லும் இறுதிநாள் வரை, அவர் பெயரால் நடக்கும் உணவுப்பரிமாற்றமாகவே இருக்கும்.

கிரீன் பார்க்கிலிருந்து கிளம்பும்போது, ‘ஒருசின்ன கேரக்டர்லயாவது தலையக்காட்டுங்களேன் சார்’ என்றபோது, ‘நமக்கு நடிப்பு வேண்டாம் சார். கதை விவாதம், ஷூட்டிங் சமயங்கள்ல வேணா கூப்பிடுங்க சார். என்னால முடிஞ்ச ஒத்தாசையை செய்யிறேன். எனக்கு சமையல்லயும் நல்ல இண்ட்ரஸ்ட். ஒரு நாளைக்கு உங்க யூனிட்டுக்கு கூட சமைச்சுப்போடுறேன்’ என்றார் சிரித்தபடி.

ஆச்சரியமாக இருந்தது.  ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர்  சினிமா ஷூட்டிங்கில், அடர்ந்த காட்டுப்பகுதியில், விறகு அடுப்பில்,  யூனிட் மக்களுக்காக சமைப்பதை கற்பனை செய்து பார்த்தேன். செம ரகளையான வொர்க்கிங் ஷாட்ஸ் உறுதி.

‘எனக்கும் சமைக்கப்பிடிக்கும். அப்ப உங்களுக்கும் எனக்கும் ஒருநாள்  ஷூட்டிங் ஸ்பாட்ல சமையல் போட்டி இருக்கு சார்’ என்றபடி, நன்றி கூறி விடைபெற்றேன்.

இன்னொரு நாலைந்து மோகன்குமார்கள் முன்வந்தால்... இந்த இரண்டு படங்கள் என்ன...எதுவும் எட்டிவிடும் தூரம்தான்.

‘சவுண்டு கேமரா ஆக்‌ஷன்’  பட உணவு பட்ஜெட்டும் ஏறத்தாழ இதுதான்.  நீங்க கால் பண்னுனா நாங்க டீடெய்ல்ஸ் மெயில் பண்ணுறோம்.
www.moviefunding.in 9840914026 9500092255 support@moviefunding.in

Saturday, November 8, 2014

’இசைஞானி என்னைப்பாட அழைப்பாரா?’


’சுதர்சன லிங்கம்’ என்கிற இந்தப்பெயரை இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்களுக்குத் தெரியாது.
மூவிஃபண்டிங் தொடர்பாக நாம் அறிவித்த இரண்டாவது நாளில் முகநூலில் சாட்டிங்கில் வந்தார்.https://www.facebook.com/soundpartistudios
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, மிகக்குறைவாகவே சில சந்தேகங்கள் கேட்டார்.

‘இது ஒரு பிரமாதமான முயற்சி. என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நானும் இதில் பங்குதாரராக இணைகிறேன்’.
அடுத்த ஒரு மணிநேரத்தில் நாங்கள் அசோக் நகரிலுள்ள சுதர்சன லிங்கத்தின் ‘சவுண்ட் பார்ட்டி’ ஸ்டுடியோவில் ஆஜர்.

சுமார் ஒருமணிநேர உரையாடலில் அவரது இன்னொருமுகம் தெரிந்தது. ஐ.டி நிறுவனம் ஒன்றில் வருமானத்துக்காக வேலை பார்த்துக்கொண்டே, தனது சினிமாவை கனவை, பொத்திப்பாதுகாக்க தனது சவுண்டு பார்ட்டியை நடத்தி வருகிறார் என்பது புரிந்தது. பணத்தில் கெடுபிடி காட்டாத கலைஞனாக இருந்ததால், குறும்பட இயக்குநர்களின் வேடந்தாங்கலாக சுதர்சனின் ஸ்டியோ இருப்பதை சற்றுநேரத்திலேயே புரிந்துகொள்ளமுடிந்தது.

‘உண்மையில் நான் பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்து இந்த திட்டம் வெற்றிபெற உதவவேண்டும் என்றே விரும்பினேன். ஏனெனில்சில ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர்களுடன் சிலருடன் இணைந்து இது போன்றதொரு முயற்சியில் ஈடுபட்டு பெரும் வலியுடன் தோற்றுப்போனோம். உங்கள் முயற்சி அப்படி ஆகக்கூடாது. நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்’- சுதர்சன்.

’உங்கள் சூழல் எங்களுக்குத்தெரியாது. உணர்வு பூர்வமான உங்கள் ஆதரவே எங்களுக்கு மாபெரும் உந்து சக்தி’. நீங்கள் எந்த ரூபத்தில் உதவினாலும் ஏற்றுக்கொள்கிறோம்’ -இது நாங்கள்.


அதிகம் யோசிக்காமல் சுதர்சன் தனது பரந்த மனதைத் திறந்தார்.

இசையமைப்பாளர் உங்கள் விருப்பம். மற்றபடி, உங்கள் இரு படங்களுக்குமான பின்னணி இசைக்கோர்ப்பு, பாடல்கள் ,பாடகர்கள், இசைக்கலைஞர்கள், எஃபெக்ட்ஸ் தொடங்கி ஃபைனல் மிக்ஸிங் வரை அனைத்துக்குமான பட்ஜெட்டை கொடுங்கள். என் தியேட்டர் வாடகை உட்பட அவை அத்தனையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ - தனது பெருந்தன்மையை வார்த்தைகளாக கொட்டினார் சுதர்சன்.

அலுவலகம் வந்து இருபடங்களுக்குமான தோராய செலவினங்களை பட்டியலிட்டபோது மொத்தம் ஒன்பது லட்சமாக வந்து நின்றது.
மெயில் அனுப்பிக் காத்திருந்தால்,...

அடுத்த பத்துநிமிடங்களில்..

‘இரண்டு படங்களுக்குமான மேற்படி செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒப்பந்தத்தை தயார் செய்து வையுங்கள் உங்கள் அலுவலகம் வந்தே கையெழுத்திடுகிறேன்’ என்று பதில் வந்தது. இன்று அவரது ஸ்டுடியோவுக்கு சென்றே கையெழுத்திட்டோம்.

நமது சங்கத்துக்கு சுதர்சன லிங்கம் என்ற சொக்கத்தங்கம் வந்த கதை இது.

அடுத்த தேடல், நம் இரு படங்களுக்குமான உணவுச்செலவுகளை ஏற்றுக்கொள்ள ஒரு அன்னலட்சுமியோ அல்லது அன்னலட்சுமணனையோ உள்ளே கொண்டுவர முயல்வது.... ஏய்ய்ய்ய் செல்ஃபி புள்ள  அன்னலட்சுமி நீ எங்க இருக்க?’


www.moviefunding.in

பி.குறிப்பு; கடைசி ஸ்டில்லைப் பார்த்து ’ஐயகோ இந்த மனுசன் பாடவும் ஆரம்பிச்சாட்டானா?’ என்று யாரும் பீதியடையவேண்டாம். இது ச்சும்மா மைக் டெஸ்டிங்...ஒன் ,...டூ... த்ரீ தான்.
இசைஞானியைத்தவிர வேறு யார் இசையமைப்பிலும் பாடுவதில்லை என்று சின்னவயசில் செய்துகொண்ட சத்தியத்தில் எப்போதும் போலவே உறுதியாக இருக்கிறேன்.

Monday, November 3, 2014

'சவுண்ட் கேமரா ஆக்‌ஷன்’

’பட ரிலீஸுக்கு அப்புறம் உங்க புரடியூசரை மீட் பண்ணீங்களா?’
இயக்குநர்களைப் பார்த்து, மிக சாதாரணமாக, சக சினிமாக்காரர்கள் கேட்கும் கேள்வியில் எத்தனை அர்த்தங்கள் உண்டென்று இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
நானும் இந்தக்கேள்வியை ‘சிநேகாவின் காதலர்கள்’ ரிலீஸுக்குப் பின்னர் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன்.
‘எப்பிடியும் கட்டி உருண்டிருப்பாங்க’ கேள்வியாளர்களின் மைண்ட்வாய்ஸ் பெரும்பாலும் இதுதான் என்பதையும் நான் அறிவேன்.
இந்தப்பதிவு அவர்களுக்கான பதிலாகவும், அத்தோடு நமது மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கிற்கான (www.moviefunding.in) அடுத்த முக்கிய நிகழ்வை அறிவிப்பதாகவும் இருப்பதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.
உண்மையில் இத்திட்டம் குறித்து நானும் நண்பர் ஜெய்லானியும் முதலில் பகிர்ந்துகொண்டது எனது முதல்பட தயாரிப்பாளரும், தமிழன் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. கலைக்கோட்டுதயத்திடம் தான்.

சொல்லி முடிக்குமுன் அவர் கேட்ட முதல்கேள்வியே, ’இத்திட்டத்திற்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?’ என்பதுதான். பதிலுக்கு நான் வைத்த கோரிக்கை குறித்து ஒருகணமும் யோசிக்காமல் உதவ முன்வந்தார். நான் அவரிடம் வைத்த கோரிக்கை ஒரு படத்தை எடுத்து முடிக்க அடிப்படையான கேமரா மற்றும் அது தொடர்பான அனைத்து உபகரணங்களும் [முழுவிபரங்களை இந்த லிங்க்-ல் பாருங்கள்: http://www.soundcameraaction.com/blackmagic-4k-camera-comp…/ ]
பணமாக பதினைந்து லட்சம் கேட்டு என் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ படபட்ஜெட்டில் மேலும் ஒரு இருபது சதவிகிதவருவாயை உயர்த்தியிருக்கமுடியும்.
அதைவிட எனக்கு இது இன்னும் உகந்ததாக பட்டது. முதல்படியாக நண்பர் ஜெய்லானியின் ‘சவுண்ட் கேமரா ஆக்‌ஷன்’ படத்திற்கு, இந்த கேமரா உட்பட்ட உபகரணங்கள் முழுமையாய் பயன்படுத்த திரு.கலை அனுமதித்திருக்கிறார்.
நாளை நமது நண்பர்கள் சிலருக்கும் பாதி தள்ளுபடி வாடகைக்கு தர பயன்படலாம் போன்ற பல உத்தேசங்களுடனேயே நான் கேமராவாக வேண்டுகோளை வைத்தேன்.
அந்த வகையில் எனது படத்திற்கு கேமரா உள்ளிட்ட உபகரணங்களின் வாடகையாக ரூ 5 லட்சத்தை கலை அவர்களின் பங்களிப்பாகவும், நண்பர் ஜெய்லானியின் படத்திற்கு ரூ 4 லட்சத்தையும் ஏற்றுக்கொண்டு, பெரும் உதவிக்கரம் நீட்டியமைக்காக நன்றி தெரிவிக்கிறோம்.
இத்திட்டத்தின் உற்றதோழனாய் எங்களுடன் பயணித்து, தேவைப்பட்டால் இனியும் உதவிக்கரம் நீட்டத்தயாராய் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

Thursday, October 30, 2014

பிரபாகர் முதல் பிரபாகர் வரை

ஃபேஸ்புக்கில் இடுவதற்காக எழுத ஆரம்பித்த பதிவு, சற்றே நீளமாகி,கொஞ்சம் ஆழமாகவும் ஆகிவிட்டதால் ஓஹோவுக்கும் வந்து சேர்ந்துவிட்டது. பிரபாகர் என்கிற பெயரில் எனக்கு மொத்தம் ஐந்து நண்பர்கள். ஒருவன் மிக இளம் வயதிலேயே தவறிவிட்டான். அடுத்த பிரபாகர் எஸ்.கே. முருகனின் நண்பராக இருந்து எனக்கு நண்பரானவர்.81-ல் துவங்கி 33 கால நட்பு. அடுத்த பிரபாகர், நான் படித்த கே.வி.எஸ்சில் தான் படித்தவர் என்றாலும் சந்திப்பு நடந்ததென்னவோ அமெரிக்கன் கல்லூரியில்தான்.82-ல் துவங்கி, என் ‘சிநேகாவின் காதலர்கள்’ படத்துக்கு இசையமைத்தது வரை மனதுக்கு மிக நெருக்கமான நட்பு.இன்றும் மதுரை செல்லும்போதெல்லாம் என் சொந்த வீட்டுக்குச் செல்லும் உரிமையுடன் செல்லும் வீடு ப்ரபாவுடையது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் அவரது துணைவியார் மல்லிகா. அவர்களது காதலின் துவக்கப்புள்ளியிலிருந்து நானும் ஒரு பார்வையாளன் என்பதால், மல்லிகாவால் என்னை ஒருநாளும் அந்நியன் போல் பாவிக்கமுடியவில்லை என்று அனுமானிக்கிறேன். அடுத்த பிரபாகர், மேற்படி ப்ரபாவால் எனக்கு அறிமுகமானவர். பிரபாகர்களை இனம் பிரிக்க, குள்ள பிரபாகர் என்று எங்களால் செல்லமாக அழைக்கபடும் அவரும் 90 களின் மத்தியில் அறிமுகமானார். அந்த சமயத்தில் அவர் வைத்திருந்த கதைகளையும், சொன்ன விதங்களையும் பார்த்து வியந்து, இவரெல்லாம் இன்னும் ஆறே மாதத்தில் இயக்குநராகிவிடுவார் என்று அவ்வளவு உறுதியாக நம்பினேன்.[கோர்வையாக கதை சொல்லத்தெரியாத நானே கூட ஒரு படம் இயக்கிவிட்டேன். அவருக்கு நடந்த காலக்கொடுமையை என்னவென்று சொல்ல?] இந்த பிரபாகர் மூலம் அறிமுகமானவர், இந்த பதிவின் நாயகன் ஐந்தாவது பிரபாகர். நான் சந்தித்த சமயத்தில் HCL நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவர் HCLபிரபாகர். இவரும்90 களின் மத்தியிலிருந்து மிக நெருக்கமான நண்பர். இவர் குறித்து ஒரு தகவல் சொல்கிறேன். அதை சினிமாவில் ஒரு சீனாக வைத்தாலும் நம்ப மாட்டீர்கள். அந்த சமயத்தில் வள்ளுவர் கோட்டத்தில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். எனக்கு தங்குவதற்கு தனி அறை இருந்தாலும்,பெரும்பாலும் புழங்குவது இங்கேதான். பிரபாகர் அப்போது பெரிய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். சம்பளம் வாங்கியதும் அதைக்கொண்டு வந்து, பூட்டாத சூட்கேஸில் அப்படியே வைத்துவிடுவார். நாங்கள் எடுத்து செலவு செய்துகொண்டே இருப்போம். பிறகு அடுத்த மாச சம்பளம்,அதற்கடுத்த மாச சம்பளம். அந்த வீடு அப்படித்தான் இயங்கிக்கொண்டிருந்தது. இதை பெரும்பாலானோர் நம்பப்போவதில்லை. ஆனால் சத்தியம். சமீப காலங்களில் இவர் செய்து வந்த உதவிகளை பட்டியலிட முடியாது. அடுத்த படம் நண்பர்களின் உதவியுடம் கிரவுட் ஃபண்டிங் [http://www.moviefunding.in/]முறையில் முயற்சிக்கலாம் என்று முடிவு செய்தபோது நூறு ரூபாயாக இருந்தாலும் முதல் பணம் பிரபாவுடையதாக இருக்குவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று என் பிறந்தநாள் பரிசாக ஒரு சட்டையுடன் வரவேண்டியவர், என் படத்தின் பட்ஜெட்டில் பத்து சதவிகிதத்தை[ஏழு லட்சத்துஐம்பதினாயிரம்] செக்காக வழங்கி என்னை நெகிழ்வித்தார். இப்படி ஒரு பரவசமான பிறந்தநாள் பரிசை நான் சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு ஸ்டில்லுக்கு நிற்பதற்காக படாத பாடு படுத்துபவர் என்பதால், படத்தில் நடிக்கும் ஆசை அவர்க்கு துளியும் இல்லை. ’இங்கிவரை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ பாடுவதைத்தவிர வேறொன்றறியேன் பராபரமே.