Sunday, February 19, 2012

காதலில் சொதப்புவது எப்படி? 'பட்டய’ கிளப்புகிறது இப்படி..

ந்தப்படம் மேற்படி தலைப்பில் குறும்படமாக வந்து,பெரும்படமாக மாறியகதை, தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும் என்பதால்,அதைப்பற்றி எழுதி சொதப்பாமல் நேராக மேட்டருக்கு வருகிறேன்.

வயது வந்தவர்களுக்கு மட்டும் மாதிரி, காதலில் தோற்றவர்களுக்கும் கல்லூரியைக் ‘கட்’ அடிப்பவர்களுக்கும் மட்டும்’ என்று ஒரு சப்-டைட்டிலே போட்டிருக்கலாமோ என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு முழுக்க முழுக்க காதலால் நொந்துபோனவர்களுக்காக வாசிக்கப்பட்ட நையாண்டி மேளம்தான் இந்த கா.சொ.எ’?

சரி, க்ளைமேக்ஸில் அதற்கு தீர்வாக ஏதாவது சொல்வார்களா என்று பார்த்தால், காதல் என்றால் சொதப்பல் இருக்கத்தான் செய்யும். அப்படி சொதப்பல் எதுவும் நடக்காமல் இருந்தால், நீங்கள் பண்ணுவது காதலாக இருக்காது என்று 
காதல் சப்ஜெக்டில் பி.ஹெச்.டி. படித்தவர் போல தத்துவம் சொல்கிறார் டைரக்டர்  பாலாஜி மோகன்.

காதலர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக காதலர்கள் அமலாபாலும், சித்தார்த்தும் பேட்டி கொடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது...

டி.வி. நிருபர் : சரி சொல்லுங்க ...ரெண்டுபேரும் முதமுதல்ல எப்ப எங்க சந்திச்சீங்க?

அமலா :
முதல்ல நீ சொல்லுப்பா.

சித்தார்த் :
இல்ல முதல்ல நீ சொல்லுப்பா..

அமலா[ சற்றே கோபமாக]
அதான் முதல்ல நீ சொல்லுங்கிறேன்ல..

சித்தார்த்: முதல்ல காலேஜ் கேண்ட்டீன்ல சந்திச்சோம். இவங்க அப்ப ’சப்பியா’ குண்டா இருந்தாங்க

அமலா:[கடுப்புடன் ] நான் எப்ப’சப்பிய’ குண்டா இருந்தேன்?

சித்தார்த்: இல்லப்பா அப்ப நீ கொஞ்சம் குண்டா அழகா இருந்த. அந்த குண்டுதான் உன்னோட அழகே..

அமலா;அப்ப இப்ப நான் அழகா இல்லைங்கிறீயா?

இந்த உரையாடல் ஒரு பெரும் சண்டையாக மாறி கையில் இருக்கும் கண்ணாடி கிளாஸை வீசி சித்தார்த்தின் மண்டையை உடைக்கிறார் அமலா.

இப்படியே இன்னுமொரு முப்பது காட்சிகளையும்,அதன் தொடர்ச்சியாய் அவர்கள் சமாதானமாகி பின்  மறுபடியும் சண்டை போடுவதையும் சேர்த்துக்கொண்டால்,’காதலில் சொதப்புவது எப்படி? படத்தின் முழுக்கதையும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

 ...பொண்ணுங்க ஒரு பெயிண்டிங் மாதிரி, அவங்க எங்க பாத்தாலும் அது நம்மள பாக்குற மாதிரியே இருக்கும்..அது ஒரு இல்லுயூஷன்’...

...பாசத்தையும் சரி,வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்டுற அளவுக்கு பசங்களால என்னைக்குமே காட்டமுடியாது...

..பார்வதியை நான் லவ் பண்றதுக்கு முந்தின நிமிஷம் வரை நாலு பசங்களோட நல்லா சிரிச்சி பேசிக்கிட்டிருந்தேன். ..

அவளை லவ் பண்ணின பின்னாடி என் வாழ்க்கை நாசமாப்போகப்போகுதுங்கிறது அந்த நிமிஷம் வரைக்கும் எனக்குத்தெரியாது...

அவ எடுத்து என் மண்டையை உடைக்கிறதுக்கு முந்தின நிமிஷம் வரை நம்மளோட காலேஜ் கேண்ட்டீன்ல ஏன் கூல்ட்ரிங்ஸை பேப்பர் கப்ல குடுக்காம கண்ணாடி கிளாஸ்ல குடுக்கிறாங்கன்னு யோசிச்சதில்லை...

அவ கிட்ட கடைசிய கண்ணாடி கிளாஸ் அடி வாங்குனதிலிருந்து நான் ஒரு ‘அஃபிஷியல் லவ் ஃபெயிலியர் கேஸ்’...

...இப்படி படம் முழுக்க பட்டய கிளப்பும் வசனங்கள், தத்துவங்கள், மொக்கைகள் சீன் பை சீன் கொட்டிக்கிடக்கின்றன.

சித்தார்த் லவ் ஃபெயிலியர் கேஸாக அசத்தியிருக்கிறார்.

ஆனால் அமலாபாலை காலேஜ் பொண்ணாக ,ஏன் பலவருஷம் அட்டெம்ப்ட்’ அடித்த பொண்ணாகக்கூட மனசு ஏற்க மறுக்கிறது.

இவர்களைத்தவிர படத்தில்அசத்தும்  மற்ற அனைவருமே குறும்படத்தில் நடித்தவர்கள்.

கதையை சற்று வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட அமலாவின் அம்மா-அப்பா விவாகரத்து விவகாரமும், பின்னர் அது ரத்தாகி அவர்கள் காதலில் விழுந்து, பின்னணியில் சத்யா’பட ‘வளையோசை கலகலவென’ பாடலும் டைரக்டர் முதுகைத் தேட வைக்கின்றன, சபாஷ் என்று தட்டிக்கொடுப்பதற்காக.

தமன் இசை, படத்தின் தரத்துக்கு இல்லையென்றாலும் ஓகே.

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு துல்லியம். மொக்கை ஃபிகர்கள் இவர் கேமராவில் தேவதைகளாய் தெரிகிறார்கள்.

முதல் படம் வாங்குவதற்குள், பல சொதப்பல்களை சந்திக்க நேரும் புதிய இயக்குனர்களுக்கு இப்படியும் ஒரு ரூட் இருக்கிறது என்று காட்டி அதை பெரிய திரையிலும் சாதித்துக்காட்டிய பாலாஜி மோகனின்’ காதலில் சொதப்புவது எப்படி? பட்டய கிளப்புகிறது இப்படி.
No comments:

Post a Comment