Saturday, February 25, 2012

‘தில்லானா மோகனாம்பாள்’ ரீமேக்- சிக்கல் சண்முகசுந்தரமாக சேரன்

 

கடந்த வாரம் நடந்த  புதிய தொழில் நுட்ப வடிவிலான ‘கர்ணன்’ ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகரும்,இயக்குனருமான சேரன், வழக்கம் போலவே உணர்ச்சியால் உந்தப்பட்டு,’’ஐயா தயாரிப்பாளர்களே,தெய்வமகன்,நவராத்திரி’ தில்லானா மோகனாம்பாள்’ போன்ற காவியங்களை யாரும் ரீமேக் பண்ணி விடாமல் தடை விதித்து விடுங்கள். தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி வாசித்த நாதஸ்வரத்தை, இன்றைக்கு இருக்கிற நடிகர்கள் வாயில் வைத்து வாசிப்பது போன்று என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை.அப்படியே யாராவது வாசிக்க நினைத்தாலும், அந்த நாதஸ்வரம் வாய்விட்டு அழுது விடும்’ என்றார்.

சேரனின் இந்த காமெடிப்பேச்சை பார்வையாளர்கள் பெரிதும் ரசிக்கவே, தன்னிலை மறந்த சேரன், அடுத்த கட்டமாக, இனிமேல்எடுக்கப்படும்  படங்களுக்கு கூட எம்.ஜி.ஆர், சிவாஜி படத்தலைப்புகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஒரு சேரனின் படத்துக்கே, ‘ராமன் தேடிய சீதை’ என்று எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டிருந்ததே? என்று யோசித்தபோதுதான், அப்படத்தின் இயக்குனர் ஜெகன், சில இணையதளங்களுக்கு சேரனை தோலுரித்து பேட்டி கொடுத்தார்.

இயக்குனர் ஜெகன், தன்னை வற்புறுத்தி,அப்படி ஒரு தலைப்பை வைத்ததே சேரன் தான் என்று சொன்னதோடு நில்லாமல், ‘’கையில நீங்க ஒரு கோடி ரூபாய் எடுத்துட்டுப்போய், படத்தோட தலைப்பு, ‘குற்றாலத்தில் ஒரு குரங்கு’ அந்தக்குரங்கு நீங்கதான்னு சொன்னாலும், எனக்கு எத்தனை டூயட்டு, ஜோடிக்குரங்கு யாருன்னு கேட்டுட்டு உடனே ஒத்துக்குவாரு’ என்று சேரனின் வெட்டி வீராப்புக்கு விளக்கம் கொடுத்தார்.

உடனே குரங்கு கிரங்குன்னு ஏன் ரொம்ப இறங்கிப்போகனும் என்று யோசித்து, பேசாம ‘தில்லானா மோகனாம்பாளையே’ ரீமேக் பண்ணினா என்ன என்ற முடிவுடன் ,பெட்டியில் ஒரு கோடி அட்வான்ஸுடன்,களி மண்பாண்டம் ஃபிலிம்ஸ் உரிமையாளர் கேனப்பன் அவர்களை சேரனிடம் அனுப்பி வைத்தோம்.

இனி நடக்கப்போவது கேனப்பன் பாடு சேரன் பாடு. நீங்க படப்போறீங்க படாத பாடு.

சேரன் அலுவலக ரிஷப்சன்.உதவி இயக்குனர் ஒருவர் சாப்பிட்டு ஒரு வாரம் ஆன அசதியில்,நிற்பதுவா, அமர்வதுவா என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்.

உள்ளே நுழையும் திரு.கேனப்பன் தான் சேரனைப்பாக்க வந்த விசயத்தை அந்த உதவி இயக்குனரிடம் சொல்ல...

உ.இ: சார் ரொம்ப பிஸியா இருக்காங்களே இப்ப பாக்க முடியாதே..

கேனப்பன்: கடைசியா உனக்கு அவர் கடலமிட்டாய் வாங்க காசு குடுத்தே ஆறு வாரமாச்சி. ஓவரா பில்டப் பண்ணாத . ஓடிப்போயி அவரக்கூப்பிட்டுட்டு வந்துட்டா உனக்கும் நல்லது.அவருக்கும் நல்லது.

உடனே இண்டர்காமில் கால் வருகிறது.சேரன்: டேய் முட்டாள் ஒரு தெய்வம் நம்மளை தேடி வந்திருக்கு.ரிஷப்சன்ல நிக்க வச்சிப்பேசிக்கிட்டிருக்கியே. அதனாலதான் நீ டைரக்டரா ஆக முடியாம எங்கிட்ட குப்பை கொட்டிக்கிட்டு இருக்க. முட்டாள் முட்டாள்  மனசு மாறுறதுக்குள்ள  சீக்கிரம் அவர மேல கூப்பிட்டுட்டு வாடா.

சேரன் அறை.


சேரன்
: நீங்க வர்ற மேட்டரை அண்ணன் புரடக்‌ஷன் பொன்னுச்சாமி எங்கிட்ட சொன்னாரு.நான் சத்யம் தியேட்டர்ல பேசினப்ப தெறிச்ச எச்சில் கூட இன்னும் காஞ்சிருக்காது. அதுக்குள்ள தில்லானா மோகானாம்பாள்ல நடிச்சா சரியா இருக்குமா? அட சரியா தான் இருக்கும். சரியா இருக்காதுன்னு தெரிஞ்சிருந்தா நீங்க எங்கிட்ட அட்வான்ஸோட வந்திருப்பீங்களா? அமெளண்ட் எல்லாம் சரியா இருக்குங்களா ..ஏன்னா நாள் இன்னைக்கே நல்லா இருக்கு. பசங்கள கூப்பிட்டுட்டு டிஸ்கசன் கிளம்பிடுவேன்.

கேனப்பன்:[மைண்ட் வாய்சில்] ...ங்கொய்யால ஜெகன் சொன்னது சரிதான். நீ காசு குடுத்தா குற்றாலத்துல வெறும் குரங்கா இல்ல, சிரங்கு வந்த குரங்கா கூட நடிப்ப போல இருக்கு.

சேரன்
:[வழிந்தபடி]: அண்ணே கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்ட வேலை பாத்த காலத்துலருந்தே நான் மைண்ட் வாய்சை கேட்ச் பண்றதுல கெட்டி.நீங்க மனசுல நினைச்சதுல தப்பு என்னண்ணே இருக்கு. கொஞ்சம் க்ரீம் தடவி நடிச்சிட்டு அருவியில குளிச்சிட்டாபோதும்ணே...

கேனப்பன்
:அட ஆண்டவா அத விடுங்க தம்பி.நம்மளையும் விட மாட்டாங்களா அந்த குரங்குங்க கோவிச்சுக்கும். நடிப்புல நீங்க சிக்கல் சண்முகசுந்தரமா பாக்குறவங்களை விக்கல் எடுக்க வச்சிருவீங்க. அதுல எனக்கு சந்தேகமே இல்ல. ஆனா அந்த நாதஸ்வரத்தை எப்பிடி சிவாஜி மாதிரி தத்ரூபமா வாசிக்கப்போறீங்கன்னுதான் புரியலை.

சேரன்
: அட போங்கண்ணே  ஆலமரத்து இலையில பீப்பீ செஞ்சி ஊதுறதுல மேலூர் ஏரியாவுல என்ன அடிச்சிக்க ஆளே இல்ல.. காதை கிட்டத்துல கொண்டு வாங்க இன்னொரு ரகஸியம் சொல்றேன்.ஆக்சுவலா நம்ம ஸ்கிரிப்ட்ல நாதஸ்வரத்தை பீப்பீ யாதான் மாத்தப்போறேன். ஒருவேளை பழையபடி, சிவாஜியே எழுந்திரிச்சி வந்து, தில்லானா மோகனாம்பாள் பார்ட்-3 ல நடிச்சாக்கூட பீப்பீ வாசிக்கிறதுல என்னய பீட் பண்ண முடியாது.

இவிங்கள திருத்தவே முடியாது என்ற நினைப்புடன் திரு.கேனப்பனிடமிருந்து சேரனுக்கு ஒரு கோடி கைமாற மறுநாள் உதவியாளர்களுடன் டிஸ்கசன்.

சேரன்:அசிஸ்டெண்ட்ஸ் நல்லா கவனிங்க, ஒரு ரிஸ்கான சப்ஜெக்டை நல்ல சமூக நோக்கத்தோட கையில எடுத்திருக்கோம்.உங்க கிட்ட கேக்காமயே நான் கதைப்படி வர்ற நாதஸ்வரத்தை பீப்பீயா மாத்திட்டேன்.அப்ப பத்மினி அம்மா ஆடுன பரதநாட்டியத்தை இப்ப என்னவா மாத்தலாம்? ஹீரோயினா யார் சூட் ஆவாங்க ? கதையில வேற என்ன மாத்தலாம்? கமான் ஒவ்வொருத்தரா எடுத்துவிடுங்க.

மிஸ்டர் பழையபாரதி
: [மைண்ட் வாய்சில்] கதையில முதல்ல உங்களத்தான் மாத்தனும் நாகேஷ்  நடிச்ச வைத்தி கேரக்டருக்குத்தான்  நீங்க எல்லாவகையிலயும்  ரொம்ப பொருத்தமாஇருப்பீங்க.

சேரன்: முதல்ல மைண்ட் வாய்சை வைண்ட் அப் பண்ணுங்க.பேட்டா வேணும்னு நினைக்கிறவங்க நீட்டா பேசுங்க.

குகன்
: சார் ஏற்கனவே விஜயோட குச்சிப்புடி ஆடுன அனுபவம் இருக்கிறதால.,,பரத நாட்டியத்தை குச்சிப்புடியா மாத்திட்டு, த்ரிஷாவ அம்பாளா அப்பாயிண்ட் பண்ணிட்டோமுன்னா படத்தோட டைட்டிலை,’தில்லானா த்ரிஷாம்பாள்’னு மாத்திட்டு கலெக்‌ஷனை அள்ளிறலாம் சார்.

மற்ற இரு உதவி இயக்குனர்கள்;
[ ஒரே குரலில்] சார் த்ரிஷா சார். இல்லைன்னா அட்லீஸ்ட் சிநேகா சார்..

சேரன்: த்ரிஷா இப்பல்லாம் ரொம்ப திகட்ட ஆரம்பிச்சிட்டாங்க. சிநேகா அநேகமா பிரசன்னாவைக்கட்டிக்கிட்டு ரிடையர் ஆகப்போறாங்க. ஏன் நவ்யாவப்போட்டா ஜனங்க வேண்டான்னா சொல்லப்போறாங்களா?. அவங்க ஏற்கனவே டான்ஸ்ல ஏகப்பட்ட டாக்டர் பட்டம் வாங்குனவங்க.படத்துக்கு டைட்டிலைக்கூட,’தில்லானா நவ்யாம்பாள்’னு வச்சிட்டாப்போச்சி.

[அறையின் வெளியிலிருந்து புரடக்‌ஷன் பொன்னுச்சாமி]:
நவ்யான்னா நண்டு சூப் கேட்டே என்ன பெண்டு எடுப்பாங்க சார்.

சேரன்; சீனியர்னு ஒரு மரியாதைக்காக வேலைக்கு வச்சா, நம்ம தலை மேல ஏறி உட்கார்ந்துக்கிட்டு பேன் பாக்க ஆரம்பிச்சுடுவாங்க.

பழையபாரதி[மீண்டும் மைண்ட்வாய்சில்
] அப்பிடி பேன் பாத்தா நல்லதுதான சார்.நமக்கு ஷாம்பு செலவு மிச்சம்.

சேரன் டென்சனாகி, இன்னைக்கி டிஸ்கஷன் பேக்கப். நாளைக்கி புது அசிஸ்டெண்ட்ஸை வச்சி ஷூட்டிங் டேக் ஆஃப்’ என்ற படி விருட்டென்று கிளம்புகிறார்.

1 comment:

  1. சேரனுக்கு நன்றாக சீவி முடித்து சிங்காரித்து சிவந்த உதட்டில் நாதஸ்வரம் தந்த நண்பர் கமாலுக்கு ஒரு SMAAl நன்றி.

    ReplyDelete