Saturday, February 18, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்’-டைரக்டர் குமார் ஸாரி நீங்க ரொம்ம்ம்ப சுமார்...

இந்தப்படம் நீண்ட நாட்களாகவே உதவி இயக்குனர்கள் மனதில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

காரணம், காரணம் சொல்லாமலேயே,படத்தின் இயக்குனரான விஜயைத்தூக்கிவிட்டு, தயாரிப்பாளரே இயக்க ஆரம்பித்தது.

பணம் கையிலிருந்தால், யார் வேண்டுமானாலும் டைரக்டராகிவிடலாம் என்று ஆகிவிட்டால் சினிமாவின் எதிர்காலம் என்னாவது என்ற நியாயமான கொந்தளிப்புதான் அது.

அவர்களின் கொந்தளிப்புக்கு திடீர் இயக்குனர் எல்ரெட் குமார் எந்தக் குறையும் வைக்கவில்லை.

இதே படத்தில் நடந்த இன்னொரு மோசடியை, எனக்கு நண்பர் ஆந்தை’குமார் செய்தியாக அனுப்பி இருந்தார்.படத்தின் கதையை எழுதியவர் மருத்துவர் வஸந்த செந்தில்.இவரது கதையை மட்டன் கைமா பண்ணிவிட்டு,கூட்டத்தோடு கோவிந்தாவாக, வசன உதவி என்று போட்டார்கள்.

கீழே என் இணையதளத்துக்காக நான் எழுதிய விமரிசனம்:

கோ’ விண்ணைத்தாண்டி வருவாயா’ படங்களைத் தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் தயாரிப்பில், இந்தமுறை தயாரிப்பாளரே இயக்கத்தையும் மேற்கொண்ட படம்.

சமீபத்தில் நடந்த இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரஸ்மீட்டில் பேசியஇப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான  எல்ரெட் குமார், ஒரு நிருபர் கேணத்தனமாக ( அந்த நிருபரே நான் தான் என்பதால் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டியதில்லை )  கேட்ட கேள்விக்கு பதில் கூறும்போது, இந்தப்படத்தை தெலுங்கு இந்தியில் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்போவதாக நிருபரை விட கோணத்தனமாக பதிலளித்தார்.
சரி, முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றை ஹாலிவுட்டுக்கு ரீமேக் பண்ணும் அளவுக்கு ஒரு எக்ஸ்ட்ராடினரி கதையுடன், எக்ஸ்ட்ராடினரி டைரக்டர் வந்து விட்டார் என்று நினைக்கத் தோன்றியிருக்கும், முப்பொழுதும் உன் கற்பனைகள்’ தியேட்டருக்குள் நுழைவதற்கு முன்பு வரை.
இதுவன்றி இன்னும் சில பஞ்சாயத்துகளும் இந்தப்படத்தைப்பற்றி இருக்கின்றன .எனினும் முதலில் கருமாந்திரம் பிடித்த கதை என்னவென்று பார்ப்போம்.

 ராம் [அதர்வா] ஒரு ஐ.டி. ஊழியர். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையில் வேலை பார்த்துவிட்டு, சனி, ஞாயிறுகளில் தன் காதலி சாரா[அமலாபால்]வை சந்திக்க பெங்களூரு வந்து விடுகிறார். இருவரும் அடிக்கடி கட்டிப்பிடித்து காதல் சொல்கிறார்கள். வயசுக்கோளாறா அல்லது இயக்குனரின் ஆர்வக் கோளாறா என்று சந்தேகப்படும் அளவுக்கு, அநியாயத்துக்கு, டி.வி.கிரிக்கெட்டில் தோனி சிக்சர் அடித்தால் கூட கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள்
.

நடு நடுவே அதர்வா ஒரு சைக்கோவாக மாறி பெரும் பொருட்செலவில் கிராஃபிக்ஸ் உத்திகளின் உட்சபட்ச உதவியுடன் அந்தரந்தில் அடிக்கடி நின்றுகொண்டு  கொலைகள் செய்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்து சென்னை வரும் இன்னொரு அமலாபால் அதர்வாவைப்பார்த்து ஆச்சரியம் கொள்கிறார். பதிலுக்கு அதர்வாவுக்கு எதுவும் ஆவதில்லை. தன் மாமாவும் டாக்டருமான ஜெயப்பிரகாஷின் உதவியோடு, அமலா அதர்வாவைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட.. இன்னொரு அமலா இருப்பதாக அதர்வா ‘ இல்யூஷனில் வாழ்வதாக கதையில் ஒரு  பொல்யூசனைப் புகுத்தி கடைசியில் கதைக்கு ஒரு சொல்யூஷன்  தரமுடியாமல் தவிக்கிறார் எல்ரெட் குமார்.

மெடிக்கல் த்ரில்லர் என சொல்லப்படும் இந்தக்கதையை மருத்துவர் வஸந்த் செந்தில் என்பவர் எழுதியதாகவும், அவர் பெயரை டைட்டிலில் கூட போடாமல் அவர் டாக்டர் என்பதால் கருணைக்கொலையும், கதைக்கொலையும் புரியப்பட்டதாக
ஒரு பஞ்சாயத்து.

மற்றொன்று படத்தை ஆரம்பத்தில் இயக்கிவந்த விஜய் என்பவரை நீக்கிவிட்டு தயாரிப்பாளரே ..ஸ்டார்ட் ..கட்.. சொல்லி படத்தை இயக்கியது. [இவை இரண்டுமே விரைவில் தனிக்கட்டுரைகளாய்]
அதர்வா பாலா படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே இப்படியா என்று ஆச்சரியப்படும் வகையில் சைக்கோவாக நடித்துகொடுத்திருக்கிறார்,

அமலா பால் ஒரு பாலா இரண்டு பால்களா என்று ரசிகர்களைக் குழப்புவதில், தானும் குழம்பிப்போய் இருப்பது போல் திரண்டு போன பாலாய் மிரண்டு முழிக்கிறார்.

சந்தானம் நாலைந்து காட்சிகளில் வந்து வழக்கம்போல் கலாய்க்கிறார். ‘நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கி முழைச்ச ஐ.டி. பசங்களே...’ என்று கம்ப்யூட்டர் பசங்களைக் கலாய்ப்பதிலும், ஏங்க என்ன அடிச்சதே..அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க 25 டாக்டர்களா...’என்று டாக்டர்களைக் கலாய்ப்பதிலும் சந்தானம் சத்தான’ ம் தான்.

சைனாவுக்கெல்லாம் போய் டியூன்களைக் கம்போஸ் பண்ணிவிட்டு வந்தார் என்று பிரஸ்மீட்களில் பெருமை அடிக்கப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்குமார் அங்கு போய் பாம்பு ஷூப் குடிப்பதிலேயே பல மணி நேரங்களை செலவிட்டிருப்பார் போல தெரிகிறது. பாடல்களும்,பின்னணி இசையும் பர்மா பஜார் பாம்பு ஷூப்பையும் விட  பரிதாபம்..

படத்தின் ஒரே உருப்படியான அம்சம் ரேணிகுண்டா’ சக்தியின் ஒளிப்பதிவு. நல்ல வண்ண ஞானம் இவரிடம் இருக்கிறது.மிக விரைவில் நல்லவண்ணம் வருவார்.

இன்னொருத்தர் கதையை சுட்டு’ இயக்கியதாலோ என்னவோ, நமக்கு மட்டுமல்ல படத்தின் இயக்குனருக்கே கதை புரிந்ததா என்பது புரியவில்லை.

பாடல், சண்டைக்காட்சிகள் வரும்போதெல்லாம் தலைவலி மாத்திரைகள் தேடித்தவிக்கிறது நம் மனசு.

முப்பொழுதும் உன் கற்பனைகள்’ தயாரிப்பாளரும்,இயக்குனருமான எல்ரெட்குமார், தன் சொந்தச்செலவில் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூன்யமே என்று சொல்லவைக்கும், பெரும் செலவில் கற்றுக்கொண்ட வீண் படிப்பினைகள்.

மிஸ்டர் குமார்!  ஸாரி, நீங்க ரொம்ம்ம்ம்ப சுமார்!


No comments:

Post a Comment