Monday, February 20, 2012

கூகுளில் குப்பண்ணாவைத் தேடிய நம்ம குண்டண்ணா...


கடந்த வெள்ளிக்கிழமை காலை என்று ஞாபகம். நண்பர் ஒருவருக்கு போன் செய்து,’ஆபிஸில் இருக்கிறீர்கள் என்றால் வருகிறேன்’ என்றேன்.

‘இங்கதான் இருப்பேன். எப்ப வேணும்னாலும் வாங்க’ என்றவர், ‘அண்ணே போனைக் கட் பண்ணிடாதீங்க. டி.நகர்ல கன்னையா தெரு எங்க வருதுன்னு தெரியுமா? என்றார்.


அவரது கேள்வியில் சற்றே பதட்டம் இருந்தது.

‘கன்னையா தெரு கேள்விப்பட்ட மாதிரி இருக்கு. ஆனா டக்குன்னு ஞாபகத்துக்கு வரலியே. நேர்ல வர்றப்பா சொன்னா போதுமா?’’

‘ஆங்..சரிங்கண்ணே’ என்றவர் பதிலில் 'இத்தனை வருஷமா மெட்ராஸ்ல இருந்து என்ன பிரயோசனம்?' என்பதுவும் சேர்ந்து இருந்தது போல் எனக்கு ஒரு மனப்பிராந்தி.

அடுத்த அரைமணி நேரத்தில் அவரது அலுவலகத்தை அடைந்தேன். வழியில் ஓரளவுக்கு யோசித்துப் பார்த்ததில் கன்னையா தெரு, எனக்கு நினைவில் வரும் அறிகுறி கூட தெரியவில்லை.

அவரும் வேறு யாரிடாமாவது இந்நேரம் கேட்டுத்தெரிந்துகொண்டிருப்பார் என்று நினைத்து உள்ளே நுழைந்தபோது, முகமெல்லாம் பிரகாஷமாக கன்னையா தெரு எங்க இருக்குன்னு ஞாபகம் வந்துடிச்சா? என்றார்.

‘’அட ஆண்டவா நீங்க வேற யாருகிட்டயாவது கேட்டிருப்பீங்கன்னு அசால்ட்டா இருந்துட்டேன்’’

அண்ணே, நீங்க ரொம்ப கேள்விப்பட்ட மாதிரி இருக்குன்னு சொன்னதால, நான் வேற யார்கிட்டயும் விசாரிக்காம விட்டுட்டேன்’’

அடுத்த சில நிமிடங்களுக்கு எங்களிடையே பலத்த மவுனம்.

சரிண்ணே விடுங்க, பிறகு தேடிக்கலாம்’ என்று நண்பர் சொல்ல, இப்போதைக்கு விட்டதுடா இம்சை என்றபடி வேறு வெட்டிக்கதைகள் பேசுவதில் கவனம் செலுத்தினோம்.

மறுநாள் அவருக்கு போன் அடிக்காமலே அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

நான் உள்ளே நுழைந்தது கூட தெரியாமல் கூகுள் மேப்பில் கன்னையா தெருவை கண்ணில் வெண்ணையை விட்டுத் தேடிக்கொண்டிருந்தார் நண்பர்.

எனக்கு பயங்கரமான குற்ற உணர்ச்சி தொற்றிக்கொண்டது. தனது தொழில் சம்பந்தமாக யாரையோ சந்திக்க வேண்டி நம்மை ஒரு பொருட்டாக மதித்து கேட்ட முக்கிய  விசயத்தை  மறந்துவிட்டோமே’ என்று மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ,’’அண்ணே ஓரளவுக்கு நெருக்கிக்கண்டுபுடிச்சுட்டேன்.அங்க பக்கத்துல போயி ஏதாவது ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட கேட்டுக்கலாம் வாங்க’ என்றபடி என்னையும் அழைத்துக்கொண்டு அவர் கிளம்ப, என்ன ஏது என்று கூட கேட்டுக்கொள்ளாமல் அவர் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

இடத்தை விசாரித்து  நெருங்கும்போது, அட கன்னையா தெரு, டைரக்டர் ஷங்கர் ஆபிஸ் இருக்க தெருவாச்சே. இங்க எத்தனை தடவ வந்திருக்கோம். இதுகூட மறந்து போச்சே’ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர் வண்டியைக்கொண்டுபோய் நிறுத்திய இடத்தைப் பார்த்தபோது, ’அட தின்னிப் பண்டாரமே, இதுக்குத்தான் கன்னையா தெரு அட்ரஸைக்கேட்டு என் வெண்ணைய எடுத்தியா ‘ என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டதை வெளியில் சொல்ல முடியவில்லை.

வண்டியை அவர் பார்க் பண்ணிய இடம் அன்றைக்கு முந்திய நாள் புதிதாக துவங்கப்பட்டிருந்த ‘ஜூனியர் குப்பண்ணா’ ஹோட்டல்.

‘’பாத்திங்களா பேருக்கு ஏத்தமாதிரி வாசனை எப்பிடி குப்புன்னு தூக்குது. இவங்க ஈரோட்டுல ரொம்ப ஃபேமஸ். ஒரு தடவ இவங்க ஹோட்டல்ல சாப்பிடுறதுக்காகவே பஸ் புடிச்சி ஈரோடு போயிருக்கேன்.’

நான் அடைந்த அதிர்ச்சி, மிரட்சி போன்ற எவற்றுக்கும் ஒரு க்ளோஸப் கூட போடாமல், கொஞ்சம் லேட்டாகப்போனால் எல்லாமே காலியாகிவிடும் பீதியில் குப்பண்ணாவை நோக்கி  நடக்க ஆரம்பித்தார் நம்ம குண்டண்ணா.

அவ்வளவு நாளும் அவர் ஒரு நல்ல சாப்பாட்டுப்பிரியர் என்பது தெரியும். ஆனால் கூகுளுக்குள் எல்லாம் போய் குப்பண்ணாவைத் தேடுகிற அளவுக்கு சாப்பாட்டு வெறியர் என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.

எப்படியிருந்தாலும் பில்லைத்தரப்போகிற புரவலர் அவர்தான் என்பதால் இதை எல்லாம் நான் மனசுக்குள் நினைப்பது கூட தப்புதான்.

நம்ம தின்னிப்பண்டார அண்ணாவின் அட்ராசிட்டியை ஜீரணித்துக்கொள்ளுமுன்பே, உள்ளே எனக்கு வேறொரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

நான் சாப்பாட்டு விசயத்தில் மிகவும் பரிதாபப்பட வேண்டிய ஆள் என்றாலும் கூட அதைப்பற்றிப் படிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவன்.

அந்த அதிர்ச்சிக்குக்காரணம், பிரபல ப்ளாக்கர் கேபிள்சங்கர். இவரது ப்ளாக்கில் ’சாப்பாட்டுக்கடை’க்கு எப்போதுமே பெரும் முக்கியத்துவம் இருக்கும். அண்ணன் வெரைட்டியான ஹோட்டல்களில் வெரட்டிவெரட்டி சாப்பிட்டுவிட்டு, அதைப்பற்றி ப்ளாக்கில் சப்புக்கொட்டி எழுதி  படிப்பவர்களை எச்சில் முழுங்க வைத்து வில்லங்கமாகச் சிரிப்பார்.

ஹோட்டலின் முதல் கேபினிலேயே ஒரு விஸ்தாரமான இலைக்கு முன்னால் பல அயிட்டங்களுடன் அமர்ந்திருந்தார் ’கேபின்’சங்கர்.

ஒரே ஒருமுறை தான் சந்தித்திருக்கிறோம் என்பதால் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

மட்டன், சிக்கன் அயிட்டங்களை தனது இலையைச்சுற்றி ரவுண்டு டிராலி போட்டு அவர் ரவுண்டு கட்டிக்கொண்டிருந்ததால் சின்னதாய் ஒரு வணக்கம் வைத்து கூட  நான் அவரைத்தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

என்னை அழைத்து வந்த நண்பரைப்போலவே ஏகப்பட்ட சாப்பாட்டு ராமன்கள் ஹோட்டல் முழுக்க நிரம்பி வழிந்தார்கள்.

எதையுமே தப்பண்ணா என்று சொல்லிவிடமுடியாதபடி, அசைவ அயிட்டங்கள், இப்போது மேட்டரை அடித்துக்கொண்டிருக்கும்போது கூட  எச்சில் ஊறுகிற அளவுக்கு சுவையோ சுவை.

சக ஹோட்டலாளர்களின் வயிதெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொள்ளும் லட்சணம் ஹோட்டல்  நுழைந்ததுமே  தெரிந்தது. அதிலும் பாசத்துடன் பரிமாறுவதுதான் ஒரு ஹோட்டலின் வெற்றிக்கு முதல்மந்திரம் என்பதைத்தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே ஆர்டர் எடுக்க வந்திருந்த பையனின் கையிலிருந்த ‘ஒன்று’ என்னை ’கேளுடா பரவாயில்லை’ என்று தொந்தரவு பண்ணிக்கொண்டேயிருந்தது. கடைசியில் கேட்டே விட்டேன்.

ஆர்டரெடுக்கிற பையன்கள் கையில் ஒரு அல்ட்ரா மாடர்ன் செல்போன் போன்று ஒன்று வைத்திருந்தார்கள்.

 அதற்குப் பேர் ஐ பாட்’டாம். நாம் ஆர்டர் சொன்னவுடன், அதில் அவர் அந்த ஆர்டரின் ‘செண்ட்’ பட்டனைத்தட்டினால் அது கிச்சன் மாஸ்டர், ஆர்டர் டெலிவரி தர வேண்டிய பையன், மற்றும் கல்லாவில் அமர்ந்திருப்பவருக்கு என்று மூன்று இடங்களுக்கும் போய்விடுமாம்.

அந்த ஐ-பாட்-ஐ முதலில் பார்த்த போதே எனது டப்பா செல்போனை தூக்கி பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒளித்துவைத்துக்கொண்டேன்.

பேசாமல் ப்ளாக்’ எழுதுவதை, ஒரு ரெண்டு மாசத்துக்கு நிறுத்திவைத்துவிட்டு, குப்பண்ணாவில் வேலைக்குச்சேர்ந்து அந்த ஐ பாட்-டோடு எஸ்கேப்பாக முடியுமா என்றுதான் கடந்த ரெண்டு நாளாக என் சிந்தனை ஓடுகிறது.

அண்ணா உங்கள்ல யாராவது என்ன குப்பண்ணா கிட்ட வேலைக்கு சேர்த்துவிடமுடியுமா பாருங்க.

3 comments:

 1. அண்ணே நீங்கதானா அது... ஆனால் இது ரொம்ப அநியாயம்ணே.. ஒரே ஒரு நாட்டுக்கோழி பிச்சி போட்டதை ஆர்டர் பண்ணதை எம்பூட்டு அயிட்டத்தோட போட்டோ போட்டிருக்கீயளே..? அவ்வ்வ.. சரி நீங்க ஒரு நா எனக்கு புரவலரா இருந்தா எலலத்தையும் ஒரு கட்டு கட்டிர வேண்டியதுதான்.:))

  ReplyDelete
 2. ஐ ஆம் ...ஒநேர் ஒப் ஹோட்டல் ..ஸ்பீகிங்...யு ஆர் அப்போயன்ட்டேட்..

  ReplyDelete
 3. இன்னைக்கு மத்தியானம் குப்பண்ணாவில்தான் சாப்பிட்டோம். ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லையே? :-(

  ஆர்டர் எடுக்க ஐபாட் வைத்திருக்கிறார்கள். ஆனா பில்லுக்கு கார்ட் அப்செட் பண்ணலை. கவனிச்சீங்களா?

  ReplyDelete