Thursday, February 9, 2012

நதிமூலம், ரிஷிமூலம், ஒரு நடிகையின் வாக்குமூலம்

அன்பு நண்பர்களே, எனது இணையதளத்துக்கு எழுதும் சினிமா விமரிசனங்களை ப்ளாக்கில் பயன்படுத்தக்கூடாது. இதற்காக தனியாக எழுதவேண்டும் என்ற பேராவல் இருக்கத்தான் செய்கிறது.ஏனெனில் இணியதளத்துக்கு இருக்கிற சில மனத்தடைகள் இங்கே இல்லை.இங்கே கேள்வி கேட்க ஆளில்லாத சுதந்திரப்பறவை நாம். ஆனால் இணையதளம் ஒரு அகோரப்பசி கொண்ட பிசாசு போல் எழுத எழுத கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
நடிகைகளின் கற்பு குறித்து பல மாதங்களுக்கு முன்பு தினமலருடன் சூர்யா,விவேக், குஷ்பூ,சுஹாசினி போன்றவர்கள் கண்டமேனிக்கு சண்டை போட்டார்கள்.
இப்போதோ,அவர்களது திரைத்துறையைச்சேர்ந்த ஒருவரே, நடிகைகள் எப்படியெல்லாம் கற்பை இழக்கிறார்கள் என்று படம் எடுத்து பாகங்களைக்குறித்திருக்கிறார்.
சுஹாசினிகள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? ************************************************ 
பிரபல நடிகையைக்
கற்பழிக்க முயற்சி
-
நாளிதழின் தலைப்பு
அழிக்க கற்பு அங்கு
இருந்ததா? வாசகன் வியப்பு
      -’கனவைத்தொலைத்தவர்கள்தொகுப்பில் , மகுடி.

படித்து பல ஆண்டுகள் ஆன இந்தக்கவிதை போன்ற ஒன்றை ஞாபகத்துக்குக் கொண்டுவந்த புண்ணியமோ பாவமோ எதுவாக இருந்தாலும் ,அது ஒரு நடிகையின் வாக்குமூலம்படத்தையே சேரும்.
 இது சோனியா அகர்வாலின் சொந்தக்கதை. படத்தில் செல்வராகவன் மாதிரியே, இவரை ஏமாற்றிய ஒரு டைரக்டர் முக்கிய பாத்திரமாக வருகிறார் என்று கொஞ்ச நாட்களுக்கு கிசுகிசு எழுதப்பயன்பட்ட படம். அந்தக்கிசுகிசு உண்மையுமல்ல, அதே சமயம் பொய்யுமல்ல.
இந்தக்குழப்பமான மூடிலேயே படத்தின் கதையைப் பார்த்து விடுவோம்.
நடிகை அஞ்சலி [சோனியாவின் கதைப்பெயர்] ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். வேளாவேளைக்கு குக் பண்ணி சாப்பிடமுடியாத அளவுக்கு வறுமை குடும்பத்தில் அகோர தாண்டவம் ஆடுகிறது.உடனே சாதாரண அஞ்சலியை ஏஞ்சலினா ஜோலி ஆக்கிக்காட்டுகிறேன் என்று அவரது ஆத்தா சபதம் பூண்டு சென்னைக்கு வந்து சினிமாக்கம்பெனிகளில் ஏறி இறங்குகிறார்கள்.நடிகை ஆக வேண்டுமானால் கொஞ்சம்இறங்கிதான் போக வேண்டும் என்பதைப்புரிந்து கொண்டு அறிமுகப்படுத்தும் இயக்குனருடன் படுக்கையைப்பகிர்ந்து கொள்ளும் அஞ்சலிக்கு அதுவே அரசியல்வாதிகள், புரடியூசர், ஃபைனான்சியர் என்று  ஒரு தொடர்கதை ஆவதை தொடர்ந்து விரக்தி அடைகிறார்.
தன் தாய், உடன்பிறப்புகள், தன்னால் முதல்பட வாய்ப்பைப்பெறும் இயக்குனர் உட்பட  அனைவருக்குமே தனது உடம்பு மட்டுமே வேண்டும், அதைவிற்று சொத்து சேர்த்துக்கொள்வதிலேயே அனைவரும் குறியாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு சந்நியாசினியாகி விடுகிறார் அஞ்சலி .
இந்த சந்நியாசினி நடிகையைத்தேடிப்போய் தனது டி.வி.சேனலில் தொடர் போட விரும்பும் பெண் நிருபரிடம், அஞ்சலி தனது டைரியைத்தந்து படிக்கச்சொல்ல அது கதையாக விரிகிறது.அந்தக்கதையை சேனலில் போட்டால் போர் நிகழ்ச்சியாகி  டி.ஆர்.பி. ரேட்டிங் குறைந்து விடுமோ என்று பயந்து படமாக்கி நம் தலையில் கட்டியிருக்கிறார்கள்.
இயக்குனர் ராஜ்கிருஷ்ணா படத்தின் துவக்கத்தில் இது கற்பனைக் கதைதான் என்று ஒரு கார்டு போட்டாலும், உண்மைச்சம்பவம் போலவே சித்தரிக்க முயன்றிருக்கிறார். படத்திற்கு பேசாமல்ஒரு நடிகையின் சதைஎன்றே பெயர் வைத்திருக்கலாம்.படத்தின் மொத்த நோக்கமும் அது ஒன்றாகவே இருக்கிறது.
அரசியல்வாதிகளிடம் நடிகைகள்  படுக்கநேர்வது எப்படி, நடிகையின் அம்மாக்காரிகள் சொந்த மகளையே எந்த விதமாக ப்ளாக்மெயில் செய்கிறார்கள், அஞ்சலியைக்காதலிக்கும் உதவி இயக்குனன் தனக்கு படம் கிடைப்பதற்காக எப்படி காதலியையே கூட்டிக்கொடுக்கத் தயாராகிறான் என்பது போன்ற காரசாரமான விவகாரங்களை பின் விளைவுகள் பற்றி துளியும் கவலைப்படாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
புன்னகைகாரர்கீதா
படத்தில் கதை சொல்லும் நிருபராக தயாரிப்பாளர்புன்னகைப்பூகீதா நடித்திருக்கிறார். இப்படி ஒரு பெயர் வைத்ததற்காக சதா புன்னகைக்கிறாரா அல்லது சதா புன்னகைத்துக்கொண்டிருப்பதால் அவருக்கு இப்படி ஒரு காரணப்பெயர் வைத்தார்களா என்று கேட்டு எனக்கு தகவல் தருபவர்களுக்கு, அவரிடமிருந்து ஒரு பிரத்யேக புன்னகை வாங்கித்தருகிறேன்.                               படத்தில் சோனியாவின் மம்மியாக வரும் பொம்மி வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவர் என்று சொல்லிக்கொள்ள எப்படித்தான் இயக்குனருக்கு மனசு வந்ததோ? ஒரு நாளைக்கு பதினாறு வேளைக்கு கொட்டிக்கொண்டமாதிரி அவ்வளவு புஷ்டியாக இருக்கிறார்.மகள் முன்னேற்றத்துக்காக இவரையும் சில டைரக்டர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள் என்று சொல்லும்போது, அவ்வளவு வறுமையில் வாடும் அந்த டைரக்டர்களின் பெயர்களை தெரிந்து கொள்ள மனசு பிடிவாதம் பிடிக்கிறது.
நடிப்பிலும் சரி, தோற்றத்திலும் சரி , சோனியா படத்தில் போனதுபோல் சந்நியாசம் போய்விடுவதே மேல் என்று நினைக்கும் அளவுக்கு சோர்ந்து காணப்படுகிறார்.
ஒரு நடிகையை அப்பாவியாகக்காட்டுகிறேன் என்பதற்காக இந்த அளவுக்கு அப்ப்பப்பாவியாக காட்டியிருக்க வேண்டியதில்லை. அதிலும் முதல்முறையாக மகளை ஒரு டைரக்டரிடம் அம்மாஅனுப்பும் காட்சிக்கு அடேயப்பா எவ்வளவு பில்டப். சோனியா கை மம்மி கையை விட்டு பிரிய மறுக்கிறதாம். இரண்டு கைகளுக்கும் எத்தனை க்ளோசப் ?
மற்றபடி ,டெக்னிக்கலாக பார்த்தால் எல்லா அம்சங்களிலும் ஒரு நடிகையின் வாக்குமூலம்சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட பழைய வாக்குமூலமாகவே இருக்கிறது.
நதிமூலம், ரிஷிமூலம், 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள்,அதோடு இந்த நடிகையின் வாக்குமூலத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான்.
  
பி.கு:இந்த பின் குறிப்பு அரிப்பு என்று எதுவும் எழுதக்கூடாது என்றுதான் பார்க்கிறேன்.ஆனால் சனியன் ஏதாவது வந்து மாட்டிக்கொள்கிறது
மேல குறிப்பிடப்பட்டுள்ளகனவைத்தொலைத்தவர்கள்கவிதைத்தொகுப்பு, நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது வெளியிடப்பட்டது. ஒரு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி வைத்து வெளியிடப்பட்டு , தடபுடலாக விற்பனையாகி, மிக விரைவிலேயே பழைய புத்தகக்கடைகளில் தஞ்சம் புகுந்துகொண்ட பெருமை இந்தத்தொகுப்புக்கு உண்டுஎன்னிடம் இருக்கும் ஒரு பிரதி விருதுநகரில் ஒரு பழைய புத்தகக்கடையில் வாங்கியதுதான்.
 நான் இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய இந்தப்புத்தகத்தை ஒரு பத்துப்பைசா அதிகம் தருவதாக இருந்தால் கூட நான் விற்கத்தயார்.
 அல்லது யூ.டி.வி. ஜெமினி ஃபிலிம் சர்கியூட் மாதிரி பெரிய கம்பெனிகள் வாங்குவதாக இருந்தால், விற்பனை உரிமையில் பாதிக்குப்பாதி என்ற அடிப்படையில் இந்தியா முழுக்க ரிலீஸ் பண்ணலாம்.

       


No comments:

Post a Comment