Tuesday, January 10, 2012

முதல் நாளே ஒயின்ஷாப் அழைத்துப்போன ஆசிரியர் -என் கதை 6

 
வாசலில் தயங்கி நின்ற என்னை கோபால் பார்த்துவிட்டு வேகமாக வெளியே வந்தார்.
 இப்போதைய நக்கீரன் அலுவலகம் போல் கூர்க்கா கீர்க்கா யாரும் கிடையாது. வெறும் 8 க்கு8 சைசில் ரெண்டே அறைகளைக் கொண்டதுதான் ஆரம்பகால நக்கீரன் அலுவலகம்.
அதனாலே வாசலில் நின்ற என்னைப்பார்த்துவிட்டு கோபால் வேகமாக ஓடி வந்தார்.
அருப்புக்கோட்டையில் சந்தித்த போதே ஒரு மிகச்சிறிய பின்னணியுடன் தான் பத்திரிகையை துவங்கியிருக்கிறேன் என்று அவர் சொல்லியிருந்ததால், அலுவலகத்தைப்பற்றி பெரிய கற்பனை இல்லாமல்தான் வந்திருந்தேன்.[ என் மும்பை தினசரி அலுவலகமோ ‘நாயகனாக்கப்பட்ட வரதராஜ முதலியாரெல்லாம் வந்து போகிற அளவுக்கு பெரிய இடம்]
அலுவலகம் எவ்வளவு சின்னதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்...
ஆனால் யாரையோ அடித்துக்கொண்டிருக்கிறார்களே?
‘’தம்பி அந்த நாயப்பத்தி பிறகு சொல்றேன். முதல்ல நம்ம ஆளுங்க கிட்ட அறிமுகம் ஆயிக்கோங்க’’ என்றபடி ஆசிரியர் துரையில் துவங்கி கோபாலின் தம்பி குருசாமி வரை அறிமுகப்படுத்தி வைத்தார். பெரும் ஆச்சரியமாக அங்கிருந்த எந்த முகமுமே எனக்கு அந்நியமாகத்தெரியவில்லை. நீண்ட நாள் பழகிய நண்பர்கள் போலவே தெரிந்தார்கள்.
ஏறத்தாழ பேச்சிலர் அறையைப்போலவே காணப்பட்ட அலுவலகத்தில் சேர், டேபிள் கூட இல்லை. அங்கேயே சமையலும் நடந்தது.
 நடுவே என்னை துரை டீ சாப்பிட கூப்பிட்டுப்போன கேப்பில், அடிவாங்கியிருந்தவரை எங்கோ அனுப்பிவிட்டிருந்தார்கள்.
 அவர்களாகவே சொல்லும்வரை அதுகுறித்து வாயைத்திறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.
பேச்சு பொதுவாக என் கல்லூரிப்படிப்பு, தமிழில் இவ்வளவு ஆர்வம் இருக்கும்போது எதற்காக ஆங்கில இலக்கியம் படித்தேன்,’ஜூனியர்விகடன்’ செளபாவை எப்படித்தெரியும் என்கிற மாதிரியே போய்க்கொண்டிருந்தது.
என்னை வரவேற்று துரையிடம் ஒப்படைத்த பிறகு, கோபாலை நான் பார்க்கவில்லை.மாலை நெருங்கவே ஊருக்குக்கிளம்பலாமா’ என்று துரையிடம் கேட்டபோது, அண்ணன் பிரஸ்ஸுக்கு போயிருக்கார்.இருந்துட்டு நாளைக்குப்போகலாம்யா. அதுசரி உனக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கா? என்றார் துரை.
 ரொம்ப தயங்கி, பீர் மட்டும் சாப்பிடுவேன்’ என்றேன்.அருகிலிருந்த அண்ணாச்சி கவிஞர் விக்கிரமாதித்யன் என்கிற நம்பிராஜன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
’நமக்கு பீர் சாப்பிடுற பழக்கம் இருந்தா இவர் முகத்துல ஏன் லைட் எரியனும் என்று அப்போது விளங்கவில்லை.
சுமார் இரவு 8 மணி அளவில் வந்து சேர்ந்த கோபால், நாங்கள் எத்தனை பேர் நிற்கிறோம் என்று எண்ணிப்பார்த்து விட்டு துரையின் கையில் பணத்தைத்திணித்தார்.
 நக்கீரனுக்கு அப்போதைக்கு இருந்த ஒரே சொத்தான ஆட்டோவில் நாங்கள் அமர்ந்ததும், ‘’வண்டிய தஞ்சை ஒயின்ஸுக்கு விடு மோகன்’ என்றார் துரை.’’ஆமாப்பா சீக்கிரம் போ கடையப்பூட்டிறப்போறான்’’ என்று சற்று பதட்டம் காட்டினார் அண்ணாச்சி. அந்தப்பதட்டம் ஒரு சரித்திரப்பிரசித்தி வாய்ந்தது. அது குறித்து பிறகு பேசுவோம்.
அன்று எனக்கு கிடைத்த அனுபவம் எதுவும் முதல் நாள் போலவே தெரியவில்லை.
ஒரு பத்திரிகை முதலாளி என்னைக்கேட்காமலே, நான் மறுநாள் ஊருக்குப்போகலாம் என்று முடிவெடுக்கிறார்.
 ஒரு பத்திரிகையின் ஆசிரியர் சந்தித்த முதல் நாளிலேயே உரிமையுடன் தோளில் கைபோட்டு ஒயின்ஷாப் அழைத்துப்போகிறார்.
ஆக ஒரு அருமையான டீமிடம்தான் செளபா நம்மை அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
முதல் பீர் முடிந்து ரெண்டாவது பீரை குடிக்க ஆரம்பித்தபோது,சற்று தைரியம் வந்து துரையிடம் கேட்டேன்,’’ காலையில நான் வர்றப்ப ஒருத்தர அடிச்சிட்டிருந்தீங்களே?
‘’அதுவா அந்த நாய்க்கு ஏரியா ரிப்போர்ட்டர் கார்டு குடுத்திருந்தோம்.நியூஸ் போடுறேன்னு சொல்லி ஒரு கட்சிக்காரன்கிட்ட கைநீட்டி காசு வாங்கியிருக்கான்.அதுக்குதான் ரெண்டு சாத்துசாத்தி ஐ.டி கார்டை புடுங்கி அனுப்பிட்டோம்’.
 அவர் சொல்லச்சொல்ல எனது பீர் போதை இறங்க ஆரம்பித்தது.[ தொடர்வேன்]

1 comment:

  1. கவிஞர் விக்கிரமாதித்யன் நக்கீரனில் என்ன செய்தார் என்று கொஞ்சம் டீடையலா எழுதுங்க அண்ணாச்சி.

    ReplyDelete