Sunday, January 1, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் அண்ணாச்சி

ஒரு வருடம் முடிவுக்கு வரும் போது அதை ஒரு ‘பார்வை’ பார்த்து வழி அனுப்பி வைப்பது நமது வழக்கம்.
 
பத்திரிகையாளர்களில் பலபேர் 2011 ஐ ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருக்க, டிசம்பர் 31 அன்று, என்னால் மட்டும் அது  முடியாமல் போய்விட்டது.
 
காரணம் அன்று மாலை 8 மணி அளவில்  என் கண்  கண்ணாடி எங்கேயோ தொலைந்துவிட்டது.
 
 இனி பழைய டாக்டர் சீட்டைத் தேடிக்கண்டுபிடித்து புது கண்ணாடி வாங்க ஒரு மூன்று நாட்களாவது ஆகும்.அந்த மூன்று நாட்களும்
எதுவும் எழுதவோ, படிக்கவோ முடியாது என்று ஒரு நண்பரிடம் புலம்பிக்கொண்டிருந்தேன்.
 
’’என்னமோ முல்லைப்பெரியாறு பிரச்சி்னைக்கு தலையங்கம் எழுத முடியாம போன மாதிரி ரொம்ப ஃபீல் பண்றீங்களே பிரதர். உங்க சினிமா பிட்டுகளை ரெண்டு நாளைக்கு விட்டு வச்சாத்தான் என்னவாம்’? இருந்தாலும் உங்களைப் பாத்தா பாவமா இருக்கு , இப்படியே நேரா கிளம்பி சரவணா ஸ்டோர்ஸ் போங்க. அங்க மலிவு விலையில கண்ணாடி கிடைக்கும்’’ என்றார்.
 
 
சரவணா ஸ்டோர்ஸில் மூக்குக்கண்ணாடியுமா என்று வாயைப்பிளந்த என்னிடம், மூக்குக்கண்ணாடி சமாச்சாரத்துக்கு நியாயமா மூக்கைத்தான் பிளக்கணும், வாயை ஏன் பிளக்குறீங்க என்று மரண கடி கடித்து அனுப்பி வைத்தார்.
 
சரி 2011ன் இறுதி மணித்துளிகள் நமக்கு கொஞ்சம் உக்கிரமாகத்தான் இருக்கிறது என்று நினைத்தபடி, உடனே வேறொரு நண்பருடன் சரவணா ஸ்டோர்ஸ் கிளம்பினேன்.
 
ரங்கநாதன் தெருவில்‘ பல கடைகளுக்கு அரசு சீல் வைத்திருந்த போதும் மூச்சுத்திணற நடந்து கொண்டிருந்த கூட்டம் எதுவும் குறைந்தபாடாய் தெரியவில்லை. ஒருவேளை பழைய பழக்கதோசத்தில் ரங்கநாதன் தெருவில் தினமும் ஒரு முறையாவது நடந்து பார்க்கிறார்களோ? இருக்கலாம் யார் கண்டது?.
 
சரி அது கிடக்கட்டும், நான் மலிவு விலையில் கண்ணாடி வாங்கிய கதைக்கு வருகிறேன்.
 
கண்ணாடி செக்சன் சரவணா ஸ்டோர்ஸின் முதல் மாடியில் இருந்தது. பழைய டாக்டர் சீட்டு இருக்கிறதா என்று கேட்க நான் இல்லை என, கவுண்டர்ல போயி டோக்கன் வாங்கிட்டு கியூவுல வெயிட் பண்ணுங்க என்றார்கள்.’அட பரவாயில்லையே டாக்டர வச்சி டெஸ்ட் பண்ணிட்டுதான் கண்ணாடியே குடுப்பாங்க போல என்று நினைத்தபடி கவுண்டரில் போய் டோக்கனுக்கு நின்றால் டோக்கனுக்கு வெறும் பத்து ரூபாய் மட்டும் கேட்டார்கள்.
 
இது என்னடா சைக்கிள் டோக்கனை விட மலிவா இருக்கே, டாக்டரும் இங்க மலிவு விலைதானா என்று யோசித்தபடி,கியூவில் அமர்ந்து உள்ளே போனால் ...,உடனே அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கவேண்டிய தோற்றத்தில், தனுஷில் கால்வாசியாக ஒரு பெண் அமர்ந்திருந்தார்.
 
 பத்து ரூபாய்க்கு  டோக்கன் எப்படி தரமுடிகிறது அந்தப்பெண்ணைப் பார்த்தவுடன் புரிந்துகொண்டேன். வாரத்துக்கு ஒரு இட்லி கொடுத்தாலே அந்தப்பெண்ணுக்கு வயிறு ஃபுல்லாகிவிடும் எனும்போது டோக்கனுக்கு பத்து ரூபாயே ஜாஸ்திதான். அவரது எதிரில் மெஷின் போல ஒன்று இருந்தது.
 
போலிஸ் ட்ரெயினிங்கில் சுடும்போது கண்ணில் மாட்டிவிடுவார்களே அது போன்ற ஒன்றை மாட்டி விட்டு, பல்வேறு டிசைன்களில் சில பல எழுத்துக்களை காட்டினார்.சரியான டுபாக்கூர் கண்ணாடித்தான் நமக்கு கிடைக்கப்போகிறது என்று உறுதியாக தெரிந்த நிலையில்,’இந்த லென்ஸ்ல நல்லாத்தெரியுது என்று ஒன்றை ஓக்கே பண்ணி கவுண்டருக்கு போனபோது 160 ரூபாய்க்கு ஒன்றும் அதைவிட மலிவாக 100 ரூபாய்க்கு ஒன்றும் காட்டினார்கள். கண் சமாச்சாரமாச்சே ரொம்ப மலிவாகப் போகவேண்டாம் என்று நினைத்து 160 ரூபாய்  டுபாக்கூரை வாங்கி வந்து அதை மாட்டிக்கொண்டுதான் இதை அடிக்கிறேன்.
 
புத்தாண்டை ஒட்டி சரக்கடித்தது போல் நான் திரும்புகிற திசையெல்லாம் கம்ப்யூட்டரும் திரும்புகிறது.
..
 

இப்படியாக அண்ணாச்சியின் மலிவு விலை கண்ணாடியோடு எனது 2012 துவங்கியிருக்கிறது. இதை ஒட்டி இந்த ஆண்டு என்ன பாடு படப்போகிறேனோ என்று நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.

2 comments:

  1. பத்து ரூபாய்க்கு டோக்கன் எப்படி தரமுடிகிறது அந்தப்பெண்ணைப் பார்த்தவுடன் புரிந்துகொண்டேன். வாரத்துக்கு ஒரு இட்லி கொடுத்தாலே அந்தப்பெண்ணுக்கு வயிறு ஃபுல்லாகிவிடும் எனும்போது டோக்கனுக்கு பத்து ரூபாயே ஜாஸ்திதான். அவரது எதிரில் மெஷின் போல ஒன்று இருந்தது.
    அண்ணே...நீங்களே,.கண்ணாடி இல்லாம போயி என்னத்த பார்த்தீங்க,...?

    ReplyDelete
  2. அநியாயத்துக்கு காமெடியா இருக்கு சார். இருந்தாலும் உங்க நிலைமை கொஞ்சம் கஷ்டந்தான். 160 ரூபாய்க்கு இந்த போதை கொஞ்சம் சீப்தான் இல்லையா?

    ReplyDelete