Wednesday, January 4, 2012

குமுதத்தில் மாலனின் கடைசி லஞ்ச்-ம் என் முதல் லஞ்ச்-ம்

 இப்படி ப்ளாக்’ எழுத ஆரம்பித்ததில் நான் கண்ட ஒரே நன்மை
என்னோடு பணியாற்றிய பெரும்பாலான நண்பர்கள் மீண்டும்
தொடர்பு எல்லைக்குள் வர ஆரம்பித்திருப்பது.

 நான் யாருடனும் சண்டை போடுகிற ரகமில்லை எனினும் காரணமே இல்லாமல்  ஏதோ ஒரு இடைவெளி விழுந்திருக்கிறது. இந்த இடைவெளியை சரி
செய்த ப்ளாக்’கே நீ வாழி. 

 உங்களிடம்
 இரண்டு விசயங்களுக்காக சாஷ்டாங்க மன்னிப்பு கோருகிறேன்.முதலில் இந்த சப்ப’ மேட்டர் மூனு சாப்டர் வரை இழுவையானதற்காக.இதை நானே எதிர்பார்க்கவில்லை.

 இரண்டாவது இந்தக் க ட்டுரைக்கு நான் பயன்படுத்தியிருக்கும் ஸ்டில்.

சரி, குமுதம் ஆபிஸை கேட்டைத்தாண்டி யாரும் பார்த்திருக்கமாட்டார்களே, அதனால் எடிட்டோரியல் அல்லது புத்தகம் பிரிண்ட் ஆகிற ஏரியா,அட்லீஸ்ட் மதியம் சாப்பிட்டவுடன் சுகமான தூக்கம் வருமே அந்த கேண்டீனின் போட்டோவையாவது போட்டுவிடலாம் என்று கூகுளில் தேடுகிறேன்.அபிராமி தியேட்டருக்கு அந்தப்பக்கம் அப்படி எதுவும் தென்படவில்லை.

சரி தற்செயலாக கிடைத்த வேறு ஒரு ஸ்டில்லைப் போட்டுவிடுவோமே என்று போட்டேனே,தவிர குமுதம் எடிட்டோரியலுக்கும் இந்த ஸ்டில்லுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

சரி, நம்ம மேட்டருக்கு வருகிறேன்.ஆசிரியர் மாலன் அறையை விட்டு வெளியே வந்ததும் கொலவெறியுடன் மணாவைத்தேடிக்கொண்டிருந்தேன். ஒரு சிவத்த நண்பர் தன்னை நோக்கி என்னை அழைத்தார்.[ அவர் பெயர் எஸ்.எஸ்.என்பதும் அந்த ஆபீஸிலேயேகள்ளம்கபடம் இல்லாத ஒரே ஜீவன் அவர்தான் என்பதும் பின்னர் தெரிந்துகொண்டேன்]

.எடிட்டோரியல் உதவியாளராகப்பணியாற்றி வந்த எஸ்.எஸ்.ஸிடம்’ தான் [புள்ள புடிக்கிற வேலையாக]  வெளியே போய்விட்டு மதிய உணவுக்குத்தான் திரும்புவேன் என்றும் அதுவரை ‘நால்வர் அணியை’ ஒவ்வொருவராக நான் சந்திக்க வேண்டும் என்றும் மணா தகவல் சொல்லிவிட்டுப்போயிருப்பது தெரிந்தது.

நான் ஏற்கனவே சொன்னதுபோல், ரொம்ப லேட்டாக வந்திருக்கவேண்டிய குமுதம்’ ஆபிஸுக்கு சீக்கிரமே வந்துவிட்டதால், மாலன் மேட்டரோடு குமுதம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டு பின்னர் வருகிறேன்.

 அப்படி வரும்போது, george orwellன்’ animal farm’ நாவல் ஸ்டைலில் குமுதம் அனுபவத்தை எழுத ஆசை. பார்க்கலாம்.

 நால்வர் அணியை சந்தித்து விட்டு லஞ்ச் க்கு தயாராகும்போது சரியாக மணா வந்து சேர்ந்தார்.எந்த புண்ணியவான் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.குமுதம் எடிட்டோரியலுக்கு எப்போதும் லஞ்ச் இலவசமாக போட்டார்கள்.

 அதை சாப்பிடும் மூடெல்லாம் எனக்கு இல்லை.ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தவனை மாலன் முன்னால் நிறுத்தி அவமானப்படுத்திவிட்டாரே இந்த மணா என்பது மட்டும்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.’’ மணா உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்’’ என்று அழைத்தேன்.

இப்போது அபிராமி தியேட்டர் வளாகம் அடியோடு மாறிவிட்டது என்று சொன்னார்கள். நான் சொல்கிற சமயத்தில் எங்கள் ரகசிய மீட்டிங் எல்லாமே அபிராமி தியேட்டர் கேண்டீனில் வைத்தே நடக்கும்.

இன்று யாரை குமுதத்தை விட்டு அனுப்பப்போகிறார்கள் என்ற தகவல் சம்பந்தப்பட்டவருக்கு முன்பே அபிராமி கேண்டீனில் வேலை செய்கிறவருக்கு தெரிந்துவிடும்.

 மணா என்னை அங்கே அழைத்துப்போய் அப்படி ஒரு தகவலைத்தான் சொன்னார்.உங்க அப்பாயின்மெண்ட் ஆர்டர் ஏற்கனவே ரெடி ஆயிடுச்சி.மாலன் பேசுனதை மனசுல வச்சிக்காதீங்க. அவரு இன்னைக்கு லஞ்சோட வீட்டுக்கு அனுப்புறாங்க.எதையும் தெரிஞ்சமாதிரி காட்டிக்காம வந்து சாப்பிடுங்க’ என்றபடி என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுபோய் சக எடிட்டோரியல் நண்பர்களுடன் உட்காரவைத்தார் மணா.

‘இவன கிளம்பச்சொல்லி ஒரு மணி நேரம் ஆச்சி.இப்படி தெனாவட்டா லஞ்ச்சுக்கு வந்து உட்கார்ந்திருக்கான்’ என்பது போல இருந்தது என் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலனின் பார்வை.

நானோ மவனே நீ கிளம்ப ஒரு மணி நேரம் தான் இருக்கு.கடைசி லஞ்ச நல்லபடியா முடிச்சிக்கோ’ என்று மனதில் நினைத்தபடி சாப்பிட ஆரம்பித்தேன்.


மதியம் 2மணிக்கு வேலையை விட்டுப்போகப்போகிறவருக்கு,அதுவும் பத்திரிகையின் எடிட்டருக்கு,அவர் வேலையை விட்டுப்போகப்போகிற தகவலை 1.59 வரை ரகசியமாய் வைத்திருந்து எப்படி ரெண்டு மணிக்கு திடீரென்று அனுப்பிவிடமுடியும் என்றெல்லாம் எனக்கு அப்போது யோசிக்கத்தோணவில்லை.

சிங்கங்களும், புலிகளும் சிறுத்தைகளும், குரங்குகளும் வாழும் குமுதம் அலுவலகத்தில் நானும் முத்துராமலிங்கன் என்ற குரங்காய் முதல் நாள் அடியெடுத்துவைத்தேன். [ இந்தக்கதையை பின்னர் தொடர்வேன்]

No comments:

Post a Comment