Wednesday, January 11, 2012

முதலாளிமார் விரலெல்லாம் மோதிரங்கள், மனசெல்லாம் தந்திரங்கள்’ -என் கதை 6*****ஞாபக மறதி என்று எதுவும் கிடையாது. எல்லா ஞாபகங்களும் பதுங்கிப்பாய காத்திருக்கும் புலிகளே
..எழுத்தாளர் மெளனி.

நான் ப்ளாக் எழுத ஆரம்பித்தபோது, இவ்வளவு மட்டமான ஞாபக சக்தியை வைத்துக்கொண்டு என்னத்த எழுதி கிழிக்கப்போறோம் என்றுதான் என் குலதெய்வம் அக்கம்மா அழகம்மா மேல் சத்தியமாய் நினைத்தேன்.

ஆனால்  கம்ப்யூட்டரின் எதிரே அமர்ந்தவுடன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து சகலமும் ஞாபகத்தில் வந்து தொலைக்கின்றன.

பழையபடி ‘தஞ்சை ஒயின்ஸுக்குள் போவோம். ஆசிரியர் துரை, கவிஞர் அண்ணாச்சி விக்ரமாதித்யன் மற்றும் நானும் குடித்துக்கொண்டிருந்த இடத்தில் ,இரண்டாவது பீரைத்தொட்ட இடத்தில் நேற்று விட்டிருந்தேன்.

ஒரு நிருபரைக் கட்டி வைத்து அடித்த கதையை துரை சொன்னவுடன் கொஞ்சம் வெலவெலத்துதான் போனேன்.

நிருபர்கள் ‘கவர்’ வாங்கும் மேட்டரை நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருந்தேனே தவிர, எனக்கு அதற்கு அப்படி ஒரு வாய்ப்பு வாய்த்திருக்கவில்லை.

மும்பையில் நான் வேலை செய்த ‘போல்டு இந்தியாவில் ரிப்போர்ட்டிங் போகும் நிருபர்களே கிடையாது.டெஸ்கில் உட்கார்ந்து யூ.என்.ஐ. பி.டி.ஐ. நிறுவனங்கள் அனுப்பும் செய்திகளை முழிபெயர்த்து போடுவதோடு எங்கள் வேலை முடிந்தது.

சில சமயங்களில் தமிழ்ச்சங்கங்களிலிருந்து கூட்ட நிகழ்ச்சி நியூஸ் போடச்சொல்லி சில நண்பர்கள் வருவார்கள். அவர்கள் சாப்பிடும் டீக்கும் பாவ்பாஜிக்கும் பெரும்பாலும் நாம் தான் பே பண்ண வேண்டி வரும்.

சரி தஞ்சை ஒயின்ஸுக்கு வருகிறேன்.

அண்ணாச்சிக்கு சுதி நன்றாக ஏற ஆரம்பித்துவிட்டால் கவிதையை அருவியாய்க்கொட்டுவார் என்று சற்று நேரத்திலேயே தெரிந்துகொண்டேன்.

இவரைப்பற்றி எழுத  மட்டுமே  தனியாக ஏழெட்டு சாப்டர்கள் வேண்டும். அதில் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லி இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

நக்கீரன் இன்னும் சரியாக பிக்கப் ஆகாத சமயத்தில், அண்ணாச்சி தான் எழுதிய கவிதைகள் புத்தகமாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால் குவார்ட்டருக்கே கோபாலை எதிர்பார்த்து க்காத்திருக்க வேண்டிய நிலை. இது நடந்த சமயத்தில் எல்லாம் நான் கோபாலின் சொந்தத்தம்பியை ஓவர்டேக் பண்ணி பந்தத்தம்பியாகிவிட்டேன்.

எனவே என்னையும் துரையையும் அண்ணாச்சி கவிதைத்தொகுப்பு தொடர்பாக நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்.

‘அண்ணன் பத்திரிகை நடத்தவே காசில்லாம கஷ்டப்படுறாரு, இதுல கவிதைத்தொகுப்பு ஒரு கேடா? என்று நினைத்தபடி கோபாலிடம் தலையைச்சொறிந்தோம்.

கோபால் தன்னை எப்போதுமே ஒரு புரவலராக ஃபீல் பண்ணிக்கொண்டே இருப்பவர். கவிதைத்தொகுப்புக்கு கைவிரித்தால் புரவலர் போஸ்டிங் போய்விடும் என்று நினைத்தோ என்னவோ உடனே கவிதைத்தொகுப்பு வெளிவர உதவி செய்வதாக ஒப்புக்கொண்டு ஒரு வாரத்திற்குள் தொகுப்பையும் கொண்டுவந்து விட்டார்.

நக்கீரனுக்கு தலைப்பு கொடுக்கும்போதாகட்டும், ஏதாவது செய்திகள் தரும்போதாகட்டும் அதைப்படித்துப்பார்க்கிற பழக்கம் கோபாலுக்கு  இருந்தது கிடையாது.

அவ்வாறே கவிதைத்தொகுப்பையும் படிக்காமல் ‘ஆகாசம் நீல நிறம்’ என்ற விக்கிரமாதித்யனின் முதல் தொகுப்பை  அண்ணன் கோபால்  ரெடி பண்ணி கொண்டு வந்துவிட்டார்.

 கவிதைத்தொகுப்பை கையில் வாங்கி  இரண்டாம் பக்கத்தை பிரித்தபோது, கோபால் உட்பட எங்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

தொகுப்பின் முதல் கவிதையே புரவலரை வசமாய் பதம் பார்த்தது.

‘முதலாளிமார் விரலெல்லாம் மோதிரங்கள், மனசெல்லாம் தந்திரங்கள்’ இதுதான் அந்தக்கவிதை.

எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் இரண்டு கைகளிலும் சேர்த்து சுமார் ஐந்து மோதிரங்களாவது அணியும் கோபால் ,அந்தக்கவிதையைப்படித்தவுடன் மோதிரங்கள் அணிவதையே நிறுத்திவிட்டார் என்றுதான் நான் முடிப்பேன் என்று நினைத்திருப்பீர்களேயானால்.....[தொடர்வேன்]

3 comments:

  1. மாலன் மேட்டர் தொடக்கி நக்கீரன் மேட்டர் வரை எல்லாமே செம சூப்பர்.. அனுபவங்களை விட சுவாரஸ்யமான விஷயம் எதுவும் இல்லைங்கிறத உங்க பதிவுகள் நிருபிக்குறது.. கலக்கல்.. சீக்கிரம் அடுத்த போஸ்ட்ட போடுங்க தலைவா. மாலன் மேட்டர் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.. ஹி.. ஹி

    ReplyDelete
  2. அட// மாலன் க்தையையும் கண்டினியூ பண்ணூங்க் முத்து

    ReplyDelete
  3. விக்ரமாதித்யனின் முதல் கவிதைத் தொகுப்பு ஆகாசம் நீல நிறம் அன்னம் நவ கவிதை வரிசையில் 1982ல் வெளியானது. தகவலுக்காக.

    ReplyDelete