
என் எல்.கே.ஜி. பொடியன் சந்தோஷ் தான் முதலில் கண்டுபிடித்தான். ‘ டேய் நந்து நம்ம டாடிக்கு என்னமோ ஆயிப்போச்சிடா. ஒரு ஐஸ்கிரீம் எக்ஸ்ட்ரா கேட்டதுக்கெல்லாம் ஓவரா கோபப்படுறாரு.நமக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தர்றதுக்கு தானடா அவங்க டாடி நம்ம டாடியைப் பெத்தாரு’
இந்தக்காலத்து சிறுசுகள் இப்படியெல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியப்படவேண்டும்.
என்னை அறைந்தது ஒரு பேயல்ல, நான் கடந்த பத்து நாட்களாக பார்த்த படங்களின் எண்ணிக்கையை வைத்து என்னை அறைந்த பேய்களின் எண்ணிக்கையை நீங்களே கூட்டிக்கழித்து பெருக்கிக்கொள்ளலாம்.
’ சூழ்நிலை’ என்று ஒரு படம். நமது சூழ்நிலை சரியில்லை என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அப்பட பி.ஆர்.ஓ. மேஜர்தாஸன் வற்புறுத்தி அழைத்துப்போய் தியேட்டருக்குள் நம்மை ஒரு இரண்டு மணி நேரத்துக்கு சூழ்நிலைக்கைதி ஆக்கினார்.வாழ்க்கை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் அப்பட இயக்குனர் செந்தூரன் போக்கினார்.

வடிவேலு காமெடியில் வரும் வாள மீன் கிடைக்குது, வஞ்சிர மீன் கிடைக்குது ஆனா ஜாமீன் மட்டும் கிடைக்கல மாதிரி கேரம் போர்டில் ஸ்கொயர் கட்டிங் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... சிசர்ஸ் கட்டிங் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... ஆனால் ஃபிலிம் கட்டிங் என்ற ஒன்றை மட்டும் சுத்தமாகக் கோட்டை விட்டுவிட்டார்கள்.
இதற்கு அடுத்து வெளியே சொன்னா வெக்கக்கேடு என்கிற மாதிரி’விருதுநகர் சந்திப்பு’ சிவகாசி மத்தாப்பு, ராஜபாளையம் கித்தாப்பு’ எண்று மேலும் நான்கு படங்கள். நான்கு படங்கள் என்றவுடன் ‘நான்கு சாரல் ஒரு மழை’ என்ற அருவா மனை படம் ஞாபகத்துக்கு வருகிறது.இந்தப்பட புரஜக்ஷன் போது ரீலுக்கு ஒருவராய் தலை தெறிக்க ஓடியவகையில் ஆறாவது ரீலில் ஆபரேட்டர் மட்டும் தனி ஆளாய் சாரலில் கண்ணீர் ஆறாய் ஓட நனைந்து கொண்டிருந்தார்.
இந்தக்கொடூரங்களுக்கு நடுவே, காட்டுப்புலி’ ஒன்றை வேட்டையாட வந்த அர்ஜுன் நடுக்காட்டில், வெரி பேட் ஸ்மல்’ வரும்படி ஒரு புளிக்குழம்பு மட்டுமே வத்துவிட்டுப்போனார்.
கடைசியாய் நம்மை கருணைக்கொலை செய்ய வந்த படம் ‘காதல் பாதை’. மன்சூர் அலிகான் படத்தில் நடித்திருப்பது தெரிந்திருந்தால் நான் அந்த தியேட்டர் இருக்கும் தெரு வழியே கூட போயிருக்க மாட்டேன்.விதி நம்மை சும்மா விடுமா?

இத்தனை அவஸ்தைகளையும் ஒத்தை ஆளாய் தாங்கிக்கொண்டு விமரிசனம்கிமரிசனம் என்று எதுவும் எழுதாமல் இருந்த நான், ரொம்ம்ம்ம்ப நல்லவன்ங்கிறதை நீங்க இப்பவாவது புரிஞ்சிக்கிட்டா சரி.