Sunday, March 18, 2012

என் பெயர் முத்துராமலிங்கம். எனக்கு ஏம்மா இந்தப்பேரை வச்சே?


இந்தப்பதிவை எழுதலாமா, வேண்டாமா என்று ஓராயிரம் முறை யோசித்திருப்பேன்.எனக்கு சாதியத்தில் எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை.ஆனால்....?

‘தெரியுமா.., அந்த முத்துராமலிங்கம் நம்ம சாதி கிடையாதுடா., இவ்வளவு காலமா நல்லா நாம  ஏமாந்துக்கிட்டு இருந்திருக்கோம்.'

-இப்படிப்பொருள்படும் வார்த்தைகளை, நான் எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்தே ,தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில், நான் மதிக்கும் பெரியபெரிய மனிதர்களிடமிருந்து  கூட கேட்டிருக்கிறேன். 

நாம் அவர்களிடம் நான் முத்துராமலிங்கம் என்று மட்டும் தானே அறிமுகமானோம். நடுவில் எங்கிருந்து சாதி வந்தது? என்று யாரையும் நான் கோவித்துக்கொள்ள முடியாது ? ஏனெனில் எனது இந்தப்பெயரை தேவர் சமூகத்தினர் தவிர யாரும் வைத்ததாக நானும் கேள்விப்பட்டதில்லை.

எனது கிராமத்தில் 5வது படிக்கும் வரை இந்தப்பெயர் குறித்து எந்தப்பிரச்சினையையும் நான் சந்தித்ததாக நினைவில்லை.

ஆனால் 6 வது படிக்க அண்டை கிராமமான சத்திரரெட்டியபட்டிக்கு போன உடனே,அந்த பள்ளியில் நூற்றுக்கு பத்து முத்துராமலிங்கங்கள் இருந்தார்கள். நான் படித்த ‘பி’ செக்‌ஷனில் மட்டுமே என்னையும் சேர்த்து நாலு முத்துராமலிங்கங்கள்.எங்கள் ஒவ்வொருவரையும், இனிஷியலோடு சேர்த்த  பட்டப்பெயர் வைத்தே மற்ற மாணவர்கள் அழைத்தார்கள்.

இங்கே தான் எனது பெயர்ப்பிரச்சினை ஆரம்பமானது. எதற்கான சண்டையாக அது துவங்கியிருந்தாலும், வேற சாதிப்பய நீ எப்பிடிடா,எங்க தேவரையா பேர வச்சிக்கலாம்? என்றே அந்த சண்டைகள் பெரும்பாலும் முடியும். என்ன இருந்தாலும் நாங்க அப்ப சின்னப்பசங்கதான?.

நான் வீட்டுக்குப்போனவுடன் அம்மாவின் புடவை முந்தானையைப்பிடித்தபடி’எனக்கு ஏம்மா முத்துராமலிங்கம்னு பேரு வச்சே? என ஓங்கி  அழ ஆரம்பித்துவிடுவேன்.

உடனே அம்மா நடுங்கும் குரலில்,’ தம்பி உனக்கு அந்தப்பேர வக்காமப்போயிருந்தா ஒரு வயசுலேயே உன்ன குழி தோண்டிப்புதைச்சிருப்பமப்பா’ என்ற அழுதபடி ஒரு கதை சொல்லத்துவங்குவார்.
என் தாய்க்கு நான் எட்டாவது கடைக்குட்டி.

அப்பா விருதுநகருக்கு அதிகாலை பால் சப்ளை செய்கிற ஒரு சிறு வேலையோடு முடித்துக்கொண்டு,அப்புறம் முழுநேர சீட்டுவிளையாட்டுக்கு போய்விடுவாராதலால், குடும்பத்தைதாங்கும் பெரும்பாரம் அம்மாவிடமே இருந்தது. இதனால், விவசாயம் போக வீட்டுவாசலிலேயே எங்களுக்கு ஒரு சிறு பெட்டிக்கடையும் இருந்தது.

அப்போது நான் ஒரு வயசுத்தொட்டில் குழந்தை.என்னைத்தொட்டிலில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தபோது, வெளியே கடைக்கு சாமான் வாங்க வந்த யாரோ சத்தம் போட்டு அழைக்க என் அம்மா தொட்டிலை சற்று இழுத்து ஆட்டிவிட்டுவிட்டு, கடைக்கு வியாபாரம் பார்க்க போய்விட்டார்கள்.

இழுத்து ஆட்டப்பட்ட தொட்டிலானது, சுவரிலிருந்த மாடக்குழியின் விளக்கை நலம் விசாரிக்க, நான் படுத்திருந்த காட்டன் சேலையில் தீப்பிடித்துக்கொண்டது.
என் அழுகுரல் அதிகரித்ததை நெருப்பு பற்றிக்கொண்டதோடு தொடர்பு படுத்தி அறிந்துகொள்ளமுடியாத அம்மா ,சற்று தாமதமாகவே வீட்டுக்குள் வர நான் கழுத்துக்கு கீழே வெந்து முடிந்திருந்தேன்.

விஷயம் ஊர்முழுக்கப்பரவி, வீட்டுமுன் திரண்டுவிட்டார்கள்.’புள்ள பொழக்கிறது கஷ்டம்’ என்று நினைத்து ஏறத்தாழ எல்லோரிடமிருந்தும் சாவுக்கான அழுகையே வந்திருக்கிறது.இருந்தாலும் மனசு கேட்காமல் மாட்டுவண்டி பூட்டிக்கொண்டு விருதுநகர் லைஸாண்டர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்கிறார்கள்.

நான் ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் டாக்டர் லைஸாண்டரைப் பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.கைராசியான டாக்டர் என்பார்களே அந்த வகையில் முக ராசியான டாக்டர் அவர். அவரைப்பார்த்த உடனேயே பல பேருக்கு நோய் போய்விடும். ஏழை விவசாயிகள் சிகிச்சைக்குபோனால், கையில எவ்வளவு வச்சிருக்க? என்று விசாரித்து, அதை நீயே வச்சிக்கோ’ என்றபடி சிலசமயங்களில் வழிச்செலவுக்கும் பணம் கொடுத்துவிடுவார்.

இதோ மருத்துமனைக்கு வந்துவிட்டேன். என்னைப்பார்த்த லைஸாண்டருக்கு நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை துளியும் வரவில்லை.என் அப்பாவையும் சகோதரர்களையும் பார்த்து சொந்தக்காரவங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பிடுங்க. முகம் தவிர எல்லாப்பாகமும் நல்லா வெந்துரிச்சி. ட்ரீட்மெண்ட் குடுக்கிறதால எந்த பிரயோசனமும் இல்லை என்று கையைவிரித்துவிட்டார்.

இப்போது இழுத்துக்கோ,பறிச்சிக்கோ’என்று கிடக்கும் எனது வெந்த உடலை வெளியே எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வருகிறார்கள்.
என் கூடப்பிறந்தவர்களே ஏழுபேர் எனும்போது அழுகுரல்களுக்கு கேட்கவா வேண்டும்.அதுவும் என் நாலு அக்காமர்களும் ஆளுக்கு கொஞ்ச நேரம் என்று தம்பியை சண்டை போட்டு வளர்த்தவர்கள்.

‘அதில் ஒரு அழுகை இப்படி இருந்தது. ‘’ஐயயோ முத்துராமலிங்கத்தேவர் இறந்த அன்னைக்கி பிறந்தன்னுதானடா ராசா உனக்கு அந்தப்பேரு வச்சோம்.பிறந்த ஒரு வருஷத்துல கொண்டுட்டுபோறதுக்கா அவரு பேர உனக்கு வச்சோம்.’’

கைராசியான டாக்டருன்னு நம்பி வந்தா பிள்ளைய உசுரோட கொண்டுட்டுப்போகச்சொல்றாரே... அய்யோ முத்துராமலிங்கம்.’’

அப்போது ஒரு கான்ஸ்டபிள் முத்துராமலிங்கம் ரூபத்தில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வருகிறார். அவர் கையில் தேவரின் பச்சை குத்தியிருக்கிறது. நான் அன்று சாகப்பிறந்தவனில்லை என்று அந்த சாதாரண கான்ஸ்டபிளுக்கு தெரிந்திருக்கிறது. ‘எல்லாரும் வழி விட்டு நில்லுங்க’ என்றபடி என் வெந்த உடலை வாங்கியபடி டாக்டரை நோக்கி நடக்கிறார்.
     [ தொடர்வேன்]

16 comments:

  1. இது எனக்குத் தெரியாது.. இதன் பின் நடந்தது எப்படி இருப்பினும்.. அந்த குழந்தையின் வேக்காட்டின் வேதனையை என்னால் உணர முடிகிறது சார்.. உங்களுக்கு எனது அன்புகள்..

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கு நன்றி அசிஸ்டண்ட் டைரக்டர்...

      Delete
  2. முத்து இதிலுமா இடைவேளை ..?

    ReplyDelete
    Replies
    1. இடைவேளைக்கு அப்புறம் படம் போட்டு முடிச்சாச்சே...?

      Delete
  3. டாக்டர் லைஸாண்டர் மிகவும் சிறந்த டாக்டர். என்னமோ தெரியவில்லை டாக்டர் லைஸாண்டரின் பெயரை அவரது மகன்கள் எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. சிறு வயதில் எனக்கும் மூன்று அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திய டாக்டர். அவரது கனிவான பேசினாலே பாதி நோய் குணப்படுத்தி விடுவார். கடைசியில் டாக்டர் லைஸாண்டர் வாகன விபத்தில் இறந்ததாக செய்தி.

    நன்றி

    மை.செய்யது
    விருதுநகர்

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் லைஸாண்டரின் புகைப்படம் வாங்குவதற்காக அவரது மகன் விமலேஷ் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் கடிதத்தையும் படித்திருப்பார் போல,...முன்பெல்லாம் மருத்துவமனையில் வெறுமனே லைஸாண்டர் மாதிரி ஒரு டாக்டர் இருந்தாலுமே போதுமானதாக இருந்தது.ஆனால் இப்போது அப்படியில்லையே..அல்ட்ரா மாடர்ன் கருவிகள் தேவைப்படுகின்றன..
      ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ மாதிரி... எங்க ஊர்ல லைஸாண்டர்னு ஒரு நல்ல டாக்டர் இருந்தார்னு நாம சொல்லிக்க வேண்டியதுதான்.

      Delete
    2. டாக்டர் லைஸாண்டர் மகன் டாக்டர் விமலேஷ் அவர்களை நான் குறைத்து மதிப்பிட்டதாக நினைதுவிட்டாரோ என்னமோ??? டாக்டர் மன்னிக்கவும். நான் கூறியதின் அர்த்தம்!!! அப்பா ( டாக்டர் லைஸாண்டர் )என்றால் சுத்துபட்டி அனைத்தும் எழுந்து நின்று மரியாதை செய்யும். எனது தங்கைக்கு ஆண் குழந்தை ஆஸ்பத்திரியில் தான் ( ஆபரேசன் செய்து ) பிறந்தது குழந்தைக்கு சதாம் உசேன் என்று பெயர் வையுங்கள் என்று உரிமையுடன் சொல்லிவிட்டு போய்விட்டார்கள். நாங்களும் சதாம் உசேன் என்று பெயர் வைத்துவிட்டோம். அந்த அளவுக்கு அன்யோநியமாக பழகுவார்கள். குறிப்பாக ஏழை எளியவர்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொள்வார்கள். இப்போது அப்படிப்பட்ட டாக்டர்களை பார்ப்பது மிகவும் அறிதாகிவிட்டதே என்ற ஆதங்கம் தான்.

      நன்றி
      மை.செய்யது
      விருதுநகர்

      Delete
  4. நீங்க ‘தொடரும்’ போட்டா ஒழுங்கா முடிக்கறதில்லையே? :-(

    ReplyDelete
  5. கிருஷ்ணா என் மீது இப்படி ஒரு பழிச்சொல்லா? இதை அப்படி விடமுடியுமா? நாளியே எழுதுகிறேன்.

    ReplyDelete
  6. மிக நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். படிப்பவர்களின் மனதை கவர்ந்து காலத்தினூடே பயணம் செய்ய வைத்து சம்பவங்களில் பங்கிடச் செய்து உணர்வுகளை தூண்டி இழுத்து பதித்து இருக்கிறீர்கள்.
    பகிர்வுக்கு நன்றி.
    தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. நன்றி நண்பரே விரைவில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  8. Super Story, Pls continue

    ReplyDelete
  9. கண்டிப்பா எழுதுறேன் .இன்னைக்கே எழுதவேண்டியது.பவர் ஷட் டவுன்.இன்னொரு காரணம்.அதை நாளைக்கு பதிவுலயே எழுதுறேன். நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  10. பொதுவா லைசாண்டர் வைத்தியம் முரட்டு வைத்தியமாக இருக்கும். காரணம் பழைய காலத்தில் எல்லாம் அப்படித்தான் மேலும கிராமபுற மக்களுக்கு அது தான் சரியாக இருக்கும். அப்படிபட்ட மருத்துவர் உங்களை முடியாது எனச் சொன்னால் அவர் கணிப்பில் 1 சதம் கூட நம்பிக்கை இல்லை என்று தான் அர்த்தம். கடவுள் கான்ஸ்டபிளாக வந்து டர்னிங் கொடுத்துள்ளார். உங்களை காப்பாற்றியது லைசாண்டரை பொறுத்தவரை மிகப் பெரிய அச்சீவ்மெண்ட் என்பதால் தான் அவர் இறந்த பின் கூட உங்களுடன் உரையாடிச் சென்றுள்ளார்.

    மேலும் வாழைபழ வைத்தியம் முதல் முறையாக கேள்விபடுகிறேன். வாழையிலையில் தான் சுற்றுவார்கள். இந்த முறையை இப்போது யாரும் பின்பற்றுகிறார்களா தெரியவில்லை. அதுவும் எந்தவித தழும்பும் இல்லை என்னும் போது அதன் மகாத்மியம் மட்டுமல்ல மருத்துவர் லைசாண்டரின் மதிநுட்பமும் வெளிப்படுகிறது.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete